
புதைக்கப்படாத உண்மைகள்:
செம்மணியில் உள்ள பாரிய மனித புதைகுழிகள் இலங்கை அரசின் தொடர்ச்சியான இன அழிப்பின் இன்னொரு சாட்சி.
-ராகவன், தமிழ் சொலிடாரிட்டி
செம்மணியில் அதிகமான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது, தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் இனப்படுகொலைப் போரின் கொடூரமான மரபை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மயானத்தை ஒட்டிய இலங்கை இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் – ஒரு குழந்தையின் எச்சங்கள் உட்பட எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்புகள் தொல்பொருள் ஆராட்ச்சிகான எச்சங்கள் அல்ல. அல்லது வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயத்தின் நினைவுச்சின்னங்கள் மட்டுமல்ல. அவை அங்கீகரிக்கப்படாத, தண்டிக்கப்படாத மற்றும் இலங்கை அரசால் தீவிரமாக மறைக்கப்பட்ட முறையான அட்டூழியங்களுக்கான அப்பட்டமான, மறுக்க முடியாத சான்றுகள் ஆகும்.
சமீபத்திய எச்சங்களில் ஒரு குழந்தையின் சிறிய எலும்புக்கூடு இருந்தது- அது ஒரு வயதானவருடன் புதைக்கப்பட்டு இருந்தது. இந்தக் குழந்தை யார்? அது தனது தாயுடன் கொல்லப்பட்டு புதைக்கப்படாதா? அவர்களின் மரணத்திற்கு என்ன காரணம்? இந்தக் கேள்விகள் எங்களுக்குள் எழுகின்றது. இதற்கான பதில்கள் எவ்வளவு பயங்கரமானதாக இருந்தாலும் அது ஒரு மர்மம் அல்ல. 1998 ஆம் ஆண்டில், பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு விசாரணையின் போது, இலங்கை இராணுவத்தால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு, வெகுஜன புதைகுழிகளில் வீசப்பட்டதாக இந்த கொலை வழக்கின் குற்றவாளி லான்ஸ் கோப்ரல் ஆர். டிவேஜ் சோமரத்ன ராஜபக்ஷ சாட்சியமளித்தார். “இந்த நிலத்தில் 300 முதல் 400 உடல்கள் உள்ளன,”. “கிட்டத்தட்ட ஒவ்வொரு மாலையும், இறந்த உடல்கள் அங்கு கொண்டு வரப்பட்டு, அவற்றை அடக்கம் செய்யுமாறு இராணுவ சிப்பாய்கள் பணிக்கப்படடார்கள்” என்று அவர் செம்மணி குறித்து கூறினார்.
ஆனாலும், இந்த மோசமான சாட்சியத்தை எதிர்கொள்வதற்குப் பதிலாக, இலங்கை அரசு மௌனம், குழப்பம் மற்றும் மறுப்பைத் தேர்ந்தெடுத்தது. படுகொலைக்குக் குற்றம் சாட்டப்பட்ட அதே இராணுவத்திடம் தன்னைத்தானே விசாரிக்கும் பணி வழங்கப்பட்டது.1999 ஆம் ஆண்டில், தடயவியல் அகழ்வாராய்ச்சிகள் செம்மணியில் மனித புதைகுழிகளை உறுதிப்படுத்தின, 15 உடல்களைக் கண்டுபிடித்த பின் – முன்பு கூறப்படும் 300–400 இல் எதுவும் இல்லை என்று சொல்லப்பட்டது. ஏழு இராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், இரண்டு பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். அரசியல் அழுத்தங்களால் மேலதிக விசாரணைகள் தடைப்பட்டன.
இந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் புதைக்கப்பட்ட மனித எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டு எரியூட்டப்படுவதாக அப்பொழுது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை, விசாரணைகள் முடங்கின, ஆதாரங்கள் இழக்கப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன, மேலும் உயிர் பிழைத்தவர்கள் மௌனத்தின் நிழலில் வாழவேண்டியிருந்தது. அந்த புதை களத்துக்குள் சாட்சியங்களையும் தடயங்களையும் மீண்டும் புதைத்துவிட்டு இராணுவ ஆக்கிரமிப்பின் அடுத்த அழிவுக்கு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையிலான அரசு தயாராகியது.
மன்னார் முதல் முல்லைத்தீவு வரை, கிளிநொச்சி முதல் திருகோணமலை வரை 25 ஆண்டுகளுக்கும் மேலாகியும், கொன்று புதைக்கப்படட தமிழர்களின் எலும்புகள் இன்னும் மண்ணிலிருந்து தோண்டி எடுக்கப்படுகின்றன. தமிழ் ஈழத்தின் புவியியல் வெகுஜன புதைகுழிகளால் சூழப்பட்டுள்ளது – கடத்தல், காணாமல் போதல் மற்றும் படுகொலைகள் என்பன அரசின் இனவழிப்பின் ஊமை சாடசியங்களாக வெளிப்படையாக இருக்கின்றது. ஆயினும்கூட, இந்த பாரிய கொலைகளுக்கு ஒரு இலங்கை அதிகாரி கூட பொறுப்பேற்கப்படவில்லை.
2009 கொடூரத யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியோ, கொக்குத்தொடுவாய் போன்ற எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களை கொன்று புதைக்கப்பட்டதாக நம்பப்படும் இடங்களலில் உள்ள தடயங்கள், பாதுகாக்கபடாமலும் அல்லது விசாரிக்க எந்த முயற்சியும் இல்லாமல் அழுகிப்போயுள்ளன. கட்டற்ற வன்முறை நிகழ்ந்த பிற நாடுகளான கம்போடியா, ருவாண்டா, போஸ்னியா போன்ற நாடுகளில், அட்டூழியத்தின் இடங்கள் நினைவுச் சின்னங்களாகவும் தடயவியல் சான்றுகளாகவும் பாதுகாக்கப்பட்டுள்ளன. இலங்கையில், அவை அழிக்கப்படுகின்றன அத்தோடு இல்லாமல் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்களின் புதைகுழிகளின் மேல் இராணுவ வெற்றி சின்னங்கள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.
வடக்கு கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு மனித புதைகுழிகளில் மேலதிக விசாரணைகள் நடத்துவதற்குரிய நிதியினை இலங்கை அரசின் நீதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்யாமல் அந்தப் பகுதிகளில் மேலதிக தடையவியல் சோதனைகள் நடத்தப்பட முடியாமல் நிறுத்தப்பட்டிருக்கின்றது. இது தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான வேண்டுமென்றே செய்யப்பட்ட உத்தி. இந்த வெகுஜன புதைகுழிகளை அம்பலப்படுத்தி பாதுகாப்பற்றதாக விட்டுவிடுவதன் மூலம், இலங்கை அரசு முக்கிய தடயவியல் சான்றுகள் மோசமடைவதை உறுதிசெய்கிறது, இது பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதை மேலும் மேலும் கடினமாக்குகிறது. மற்றும் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூறலில் இருந்து பாதுகாக்கிறது. இந்த தடய அழிப்பு தற்செயலானது அல்ல. இது உண்மையை நாசப்படுத்தவும், நீதியைத் தடுப்பதற்கான ஒரு தீவிர முயற்சியாகும், இது இந்தக் குற்றங்களை அங்கீகரித்து செயல்படுத்திய கட்டளைச் சங்கிலியைப் பாதுகாக்க தீர்க்கமாக வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இலங்கை இராணுவ முகாம்களுக்கு அருகில் மீண்டும் மீண்டும் காணப்படும் புதைகுழிகள், அரசின் அனுமதியுடன் நடத்தப்படும் வன்முறையின் திட்டமிட்ட வடிவத்தைக் குறிக்கின்றன. இன்று தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துள்ள முகாம்கள், உயிருள்ளவர்களை அடக்குதல், மற்றும் இறந்தவர்களுக்கு எதிராக செய்யப்பட்ட குற்றங்களை மறைத்தல் என்ற இரட்டைச் செயல்பாட்டைத் தொடர்ந்து செய்கின்றன. தமிழர் தாயகத்தின் இராணுவமயமாக்கல் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கு ஒரு கட்டமைப்புத் தடையாகவே உள்ளது. இதனாலேயே நாம் வடக்கு கிழக்கு பகுதியில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்பதை கோருகின்றோம் .
இலங்கையின் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார ஒத்தோடிகள் “நல்லிணக்கம்” பற்றி தமிழர்களுக்கு பாடம் எடுக்கின்றார்கள். ஆனால், அடுத்தடுத்த ஆட்சிகளின் கீழ், இலங்கை அரசு பொறுப்புக்கூறலைத் தொடர அதன் முழுமையான விருப்பமின்மையையும் இயலாமையையும் நிரூபித்துள்ளது. உள்நாட்டு புலனாய்வு வழிமுறைகள் ஆழமாக சமரசம் செய்யப்படுவது மட்டுமல்லாமல், முற்றிலும் செயல்திறன் அற்றதாகவும் இருக்கின்றது. நடைபெறும் தடயவியல் விசாரணைகள் மேலோட்டமானவை, அவை அரசால் கட்டுப்படுத்தப்பட்டவை மற்றும் பெரும்பாலும் சுயாதீன மேற்பார்வை இல்லாதவை. பகுப்பாய்வுக்காக சான்றுகள் எடுக்கப்படுகின்றன, அவை ஒருபோதும் திரும்பப் பெறப்படுவதில்லை. வழக்குகள் உறைந்து போகின்றன. குடும்பங்கள் காத்திருக்கின்றன. குற்றவாளிகள் பதவி உயர்வு பெறுகிறார்கள்.
இத்தகைய சூழலில், உள் வழிமுறைகள் மூலம் நீதி வழங்க முடியும் என்று நம்புவது அப்பாவித்தனமானது – ஆபத்தானது – ஆகும். காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மற்றும் சர்வதேச உரிமைகள் குழுக்கள் நீண்ட காலமாக வாதிட்டு வருவது போல,சுயாதீன சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை உள்வாங்கிய விராசரனை மட்டுமே பொறுப்புக்கூறலை உறுதி செய்ய முடியும். இதை இவர்கள் தாமாக கூற மாட்டார்கள்- செய்ய மாட்டார்கள். உலகம் எங்கிலும் இருக்கின்ற புலம்பெயர் தமிழ் மக்கள் இதற்குரிய அழுத்தத்தினை வீரியமாக வழங்க வேண்டும்.
செம்மணி மற்றும் பிற பகுதிகளில் கண்டு பிடிக்கபட்ட மனிதப் புதைகுழி, அரசுகள் எவ்வாறு வெகுஜனக் கொலைகளை நடத்தி, அதே நேரத்தில் ஆதாரங்களை அழித்து பொறுப்புக்கூறலைத் தவிர்க்க முடியும் என்பதைக் காட்டுகிறது. ஈழதமிழர் பிரச்சினை உலகளாவிய மனித உரிமைகள் தரநிலைகளின் ஒரு முக்கியமான சோதனையாக செயல்படுகிறது, ஏனெனில் இந்தப் புதைகுழிகளைப் புறக்கணிப்பது என்பது ஒடுக்கப்பட்ட நாடுகளிலிருந்து அரச வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், மறக்கப்பட்ட புதைகுழிகளில் மறைந்து போக அனுமதிக்கிறது, அதே நேரத்தில் சர்வதேச சட்ட அமுலாக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவே உள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. செம்மணியிலிருந்து திருகோணமலை வரை பரவியுள்ள மனிதப் புதைகுழிகள் அரசு குற்றங்களின் தளங்களாக இருக்கின்றது, அதே நேரத்தில் கடத்தல் மற்றும் காணாமல் போதல், இராணுவத் தளங்களுக்கு அருகில் கொலைகள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட அரசாங்கத்தால் நடத்தப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த ஆதாரங்களாகவும் செயல்படுகின்றன.
● புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் முன்னர் புறக்கணிக்கப்பட்ட அனைத்துப் புதைகுழிகளின் உடனடி மற்றும் சுயாதீனமான தடயவியல் விசாரணைகள் நடந்த அனுமதி.
● புதைகுழிகளை குற்றச் சம்பவங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களாகப் பாதுகாத்தல் வேண்டும். இலங்கை அரசால் சேதப்படுத்துதல், அழித்தல் அல்லது குறியீட்டு கையகப்படுத்துதலைத் தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
● வெளிப்படையான நீதித்துறை செயல்முறை முடியும் வரை, இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய இலங்கை இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களை தனிமைப்படுத்துதல் வேண்டும்.
● வழக்குத் தொடுக்கும் அதிகாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பங்கேற்பை உள்ளடக்கிய – இலங்கை அரசின் செல்வாக்கிற்கு வெளியே – ஒரு விரிவான சுயாதீன சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு ஆதரவு வழங்கு.
• உடனடியாக அனைத்து இராணுவ தளங்களையும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து அகற்று.
ஒவ்வொரு புதிய பாரிய புதைகுழி கண்டுபிடிப்புக்கும் அதற்கான நீதியை பெறுவதற்கான தீர்க்கமான நடவடிக்கை தேவைப்படுகிறது,