ஸ்பெயினின் பொடிமாஸும் – இலங்கையின் அரகலியவும்

284 . Views .

“கோத்தா வீட்டுக்குச் செல்லுங்கள்” என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் ஒரு புதிய வெகுஜனப் போராட்ட அலை தொடங்கியது பின்னர் மாபெரும் மக்கள் எழுச்சியாக வளர்ச்சியடைந்தது. ஜூலை 2022க்குள் நாடு முழுவதும் பரவிய அப்போராட்டத்தினால் இறுதியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு மட்டுமல்லாமல் முழு ராஜபக்ச அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த மக்கள் எழுச்சி இலங்கையின் அரசியல் நிலவரத்தை மாற்றியது. அதிலும் குறிப்பாக அனைத்து பாரம்பரிய அரசியல் கட்சிகளின் வீழ்ச்சியும் முக்கிய மாற்றங்களில் ஒன்றாகும். ராஜபக்சேவின் ஆளும் கட்சி மட்டுமல்ல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (SLFP) எதிர்க்கட்சியான முதலாளித்துவக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய தமிழ், முஸ்லிம் பாரம்பரிய அரசியல் கட்சிகளும் தமது வரலாற்றில் மிகப்பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. இந்தச் சூழலில்தான் நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற முழக்கம் எழுந்துள்ளது. இது சாதாரண உழைக்கும் மக்களிடையே பொதுவான முழக்கமாகிவிட்டது. தொழிலாள வர்க்கத்தினர் மற்றும் இளைஞர்கள் வெகுஜனப் போராட்டத்திற்குப் பின்னர் உருவாகியுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப அரசியல் ரீதியாக புதிய வழிகளைத் தேடுகின்றனர் என்பதை இந்தப் புதிய நிலைமை தெளிவாகக் காட்டுகிறது.

பெரும்பான்மையான மக்கள் பாரம்பரிய அரசியல் கட்சிகளால் சலிப்படைந்திருந்தாலும், அவர்கள் இன்னும் தேர்தல் செயல்பாட்டில் நம்பிக்கையுடன் உள்ளனர். எவ்வாறாயினும், அவர்கள் ஏற்கனவே உருவாக்கப்பாட்ட கட்சிகளில் இருந்து விலகி தேசிய மக்கள் இயக்கம் (NPP) என்றழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி – ‘மக்கள் விடுதலை முன்னணி’) தலைமையிலான ஒரு புதிய மக்கள் அமைப்பை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். இதற்கு முக்கியக் காரணம், நாட்டில் வேறு சாத்தியமான வெகுஜன மாற்று எதுவும் இல்லை என்பதே ஆகும். 

கடந்த வெகுஜனப் போராட்டத்தின் போது ஜே.வி.பி தீவிரமாக அணிதிரட்டும் பாத்திரத்தை வகிக்கவில்லை. அவர்கள் போராட்டத்தை வேடிக்கை பார்ப்பவர்களாகவும், ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்பவோ அல்லது முன்னோக்கி செல்வதற்கான முன்னோக்கை முன்வைக்கவோ அவர்கள் ஒருபோதும் ஆர்வத்துடன் அதில் ஈடுபடவில்லை. உண்மையில், ஜே.வி.பி, தொழிலாளர்களின் போராட்டத்தை பின்னோக்கி இழுத்ததே தவிர முன்னோக்கி கொண்டு செல்லவில்லை.

வெகுஜனப் போராட்டம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த நாளில் (9 மே 2022), ஜே.வி.பி போக்குவரத்து வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து, அது கொழும்பில் வெகுஜனக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்குத் தடையாக இருந்தது. மற்ற தொழிற்சங்கங்கள் மற்றும் சோசலிஸ்டுகளின் கடுமையான அழுத்தம் காரணமாக அவர்கள் அதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் வேலைநிறுத்தம் ஒரு பொது வேலைநிறுத்தமாக வளர்ந்தபோது, ​​​​பல போர்க்குணமிக்க தொழிற்சங்கங்கள் வெகுஜன இயக்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் வேகத்தைத் தொடரவும் வேலைநிறுத்தத்தைத் தொடரத் தயாராக இருந்தன. ஆனால் ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொழிற்சங்கங்கள் மூலம் அவர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட நேர்ந்தது. ஆக, மற்றைய பழைமைவாத கட்சிகளை போல  போராட்டத்தை ஒடுக்கும் ஒரு நடவடிக்கையைத்தான் ஜே.வி.பியும் செய்திருந்தது. 

தேசிய மக்கள் இயக்கமும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்புக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லை என்பதையும், அவை சமூக-பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக முதலாளித்துவ அமைப்பின் பாதுகாவலர்களாக மாறிவிட்டன என்பதையும் அவர்களின் சொந்த அறிக்கைகளிலிருந்து முடிவு செய்யலாம். ஜே.வி.பி புதிய தாராளமயக் கொள்கையை முன்னெடுப்பதற்காக ஏகாதிபத்தியங்களுடன் சமரசம் செய்து கொண்டது தெளிவாகிறது. அக்கட்சியின் தலைவர்கள் அமெரிக்க மற்றும் பிரித்தானிய தூதுவர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் இருந்து இது மேலும் தெளிவாகிறது. இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, முதலாளித்துவ நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் ஜே.வி.பியின் தீவிரப் பேச்சுக்களுக்கு ஏமாறாமல், முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறிந்து சோசலிச மாற்று சக்தியைக் கட்டியெழுப்பப் போராடுவதைத் தவிர வேறு குறுக்குவழிகள் இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.

இவ்விடத்தில், ஸ்பெயினில் தீவிர இடதுசாரி சக்தியான PODEMOS இன் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைப் பார்ப்பது ஜே.வி.பி.யின் வீழ்ச்சியைப் புரிந்து கொள்ள உதவும். ஸ்பெயின் 1982 முதல், ஆளும் பழமைவாத பார்டிடோ பாப்புலர் (PP) மற்றும் அதன் இடதுசாரி எதிர்க்கட்சியான பார்டிடோ சோசலிஸ்டா ஒப்ரெரோ எஸ்பானோல் (PSOE) இரண்டு கட்சிகளால் மட்டுமே ஆளப்பட்டு வந்தது. 

2014 இல், PODEMOS (நம்மால் முடியும்) உருவாக்கப்பட்டபோது, ​​ஸ்பெயினில் பாரம்பரியக் கட்சிகளுக்கு ஒரு தீவிர அரசியல் நெருக்கடி தொடங்கியது. மட்ரிட்டின் மத்திய சதுக்கமான புவேர்டா டெல் சோலில் ஆயிரக்கணக்கான இளம் ஸ்பானியர்கள் முகாமிட்டு போராடிய 2011 காலப்பகுதியில் இந்த இயக்கம் தொடங்கியது. இது லண்டன் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் “ஆக்கிரமிப்பு” உள்ளிருப்புப் போராட்டங்களைத் தூண்டியது.

ஸ்பெயினில் பலரைக் கோபப்படுத்திய செலவினக் குறைப்புக்கள் மற்றும் ஊழல்களுக்கு எதிராக  PODEMOS களமிறங்கியது. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பொது சேவைகளில் நிதியை குறைப்பதற்கு எதிரான தீவிரமான மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தது. முக்கிய அரசாங்க முடிவுகளை வாக்கெடுப்புகளுக்கு வைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது. அத்துடன் வேலையின்மையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை  வீட்டு உரிமையாளர்கள் வெளியேற்றுவது நிறுத்தப்பட வேண்டும். குடும்பங்களுக்கு நலன்புரி உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன் வைத்தது.

நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள், ஸ்பெயினின் பொதுத் தேர்தலில் PODEMOS மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இதன் விளைவாக ஆளும் பழமைவாத பாப்புலர் கட்சி (PP) அதன் பெரும்பான்மையை இழந்தது. எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக இல்லாவிட்டாலும், ஸ்பெயினின் பொருளாதார நெருக்கடியின் போது உருவான இயக்கத்தில் இருந்து பிறந்த கட்சிக்கு மக்களின் ஆதரவு பலமாக இருந்தது. மேலும், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஐந்து இடங்களைப் பெற்று ஊழலுக்கு எதிரான சமரசமற்ற போக்குடன் முன்னேறியது பொடிமஸ்.

வேலையின்மை விகிதங்கள் 21% ஆகவும், அதிலும் குறிப்பாக  இளைஞர்களின் வேலையின்மை கிட்டத்தட்ட 50% ஆகவும் இருந்தது. இவ்வாறு உருவாக்கப்பட்ட ஸ்பெயினின் பொருளாதார நெருக்கடி, நாட்டின் நிதி மற்றும் அரசியல் உயரடுக்கின் ஒரு மோசடி என்று கூறியது PODEMOS. இது ஸ்பெயினுக்கு மட்டுமல்ல இன்றைய இலங்கைக்கும் சாலப் பொருந்தும் ஒரு வாதமாகும். எனினும் பிற்காலத்தில் கட்டலோனிய மக்களின் சுயநிர்ணய உரிமையை அவர்கள் ஏற்கவில்லை, இரு தரப்பினரின் விருப்பத்திற்கேற்ப தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே அவர்களின் உறுதியான நிலைப்பாடாக இருந்தது. இந்த நிலை அக்கட்சியின் வீழ்ச்சியின் முக்கிய காரணியாக அமைந்தது.

பொடிமோஸின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியில் இருந்து இலங்கை போன்ற நாடுகளின் மக்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. உங்கள் சொந்தக் கொள்கைகளைக் கைவிட்டு, அதிகப் புகழைப் பெறும் நோக்கில் முதலாளித்துவச் சார்புக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பது ஒருபோதும் வெற்றிக்கு வழிவகுக்காது என்பதை பொடிமாஸ் இயக்கத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். எனினும் மக்களுக்கான கோரிக்கையை முன்வைத்து தமது அரசியல் பயணத்தை தொடங்கிய பொடிமஸ், அரகலிய போன்ற மக்கள் அமைப்புகளே இன்றைய உடனடித் தேவைகளாக உள்ளது.