இலங்கையில் தமிழ் மக்களின் பிரிந்து செல்லக்கூடிய சுயநிர்ணய உரிமை உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளையும் ஆதரிக்கின்ற இடதுசாரி அமைப்பான ஐக்கிய சோசலிச கட்சி இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட உள்ள வெகுஜன ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்கும் ஒலி – ஒளிபரப்பு அதிகார சபைக்கான சட்டமூலத்தை முறியடிப்பதற்கு அனைவரையும் ஒன்று திரளுமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றது. ஐக்கிய சோசலிச கட்சி சார்பாக அதன் பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீதுங்க ஜெயசூரிய அவர்கள் வெளியிட்டு இருக்கும் கோரிக்கை.
வெகுஜன ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்கும் ஒலி- ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலத்தை முறியடிப்போம்.
ஜனநாயகத்தின் இருப்புக்கு மக்களின் தகவல் அறியும் உரிமை ஓர் இன்றியமையாத காரணியாகும். அதேவேளை அதன் முக்கிய ஆதாரம் சுதந்திர ஊடகமாகும். இதனால் ஒரு நாட்டில் இருக்க வேண்டிய ஊடக சுதந்திரம் குறித்து பலரும் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி வருகின்றனர் .சிலர் இந்த சுதந்திரத்தை தனிப்பட்ட முறையில் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டனர். மேலும் நாட்டை ஆள்பவர்களுக்கு ஊடக சுதந்திரம் என்பது சாபக்கேடு போன்றது
எமது நாட்டில் தற்பொழுது ஆட்சியில் இருக்கும் ரணில் – ராஜபக்ஷ அரசியல் இரட்டையருக்கு ஊடகங்கள் பெரும் தலையிடியாகும் சியத தொலைகாட்சி (Siyatha TV) அலை வரிசையில் ஒளிபரப்பான ஒரு செய்தி ஆட்சியாளர்களை புண்படுத்தியமையால் அதன் பொறுப்பாளர்களை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவில் முன்னிலைப்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வா தலைமையிலான சிறப்புரிமை குழுவின் பரிந்துரையின் படி சியத தொலைகாட்சி தொடர்ந்து இயங்க வேண்டுமாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்று தொலை தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக் குழுவிடம் அது முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு தகவல்களையும் கருத்துக்களையும் மேற்படி ஊடகங்கள் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகின்றன. ரணில் – ராஜபக்ஷ அரசாங்கம் மேற்படி ஊடகங்களை வன்மையாக கண்டித்து வருகின்றது.
எனவே ஒலி – ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு ரணில் ராஜபக்ச அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதுள்ள நிலைமையில் முன்மொழிக்கப்பட்ட உத்தேச சட்டம் மிகவும் பயங்கரமானது. சுதந்திர ஊடகங்கள் இதன் மூலம் முற்றிலும் முடக்கப்படும். அமைச்சர்கள் என்ன தான் கூறினாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ரணில் – ராஜபக்ஷ அரசினால் தீர்வு காண முடியாது.
ரணில் – ராஜபக்ஷ அரசு தொடர்ந்து எப்படியோ ஆட்சியில் இருக்கவே விரும்புகின்றது. அரசுக்கு எதிராக அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பை நிர்மூலமாக்க அடக்குமுறை சட்டங்களை அறிமுகப்படுத்துவது ரனில் ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் ஆகும். இதற்கு முன்னர் மிகவும் ஆபத்தான புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தைக் கொண்டுவர ரணில் ராஜபக்சே முயற்சித்த போது, மக்களின் பெரும் எதிர்ப்பினால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற வேண்டியதாயிற்று.
ரணில் அரசாங்கம் புதிய வெகுஜன ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை தற்பொழுது அறிமுகப்படுத்துவதற்கு முயற்சித்துள்ளது. ஜனநாயகம் நிலைத்திருக்க சுதந்திர ஊடகம் இன்றியமையாதது என்று முழு உலகமும் ஏற்றுக் கொண்ட கோட்பாடாகும். ஒழுங்கான மரியாதைக்குரிய ஊழலற்ற பொது நிர்வாகமும் அத்தகைய ஆட்சிக்காக போராடும் மக்கள் இயக்கங்களும் இருப்பதற்கு சுதந்திர ஊடகமும் பெரும் உதவியாக அமையும். இதன் காரணமாக வெகுஜன ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தமக்கு ஏற்படும் மோசமான விளைவுகளை ராஜபக்ஷ நிர்வாகம் நன்கு உணர்ந்துள்ளது. இதன் பின்னணியில் நமது நாட்டின் ஊடக சுதந்திரத்தை இல்லாத ஒழிக்க முயலும் ரணில் ராஜபக்ஷ அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் முறியடிக்க இந்த நாட்டின் உழைக்கும் வர்க்கம் உட்பட்ட அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ரணில் – ராஜபக்ச அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட அடக்குமுறை சட்டங்களை குழிதோண்டி புதைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு ஒன்றுறிணைந்த நடவடிக்கைகளை எடுக்க முன்வருமாறு ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து சக்திகளையும் ஐக்கிய சோசலிச கட்சி கேட்டுக்கொள்கின்றது. என்று அந்த செய்தி குறிப்பு தெரிவித்து இருக்கின்றது.