இருட்டில் அழித்து, இருட்டில் பேச்சு வார்த்தை, மாணவர் போராட்ட வெற்றி..

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கபட்டு 3வது நாளில் அதே இடத்தில் மீண்டும் தூபி கட்ட யாழ் துணைவேந்தர் மூலமாக அனுமதி வழங்கப் பட்டிருக்கின்றது.

இதன் பின்னணியாக இருந்த போராட்டம் – மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம்,  அந்த போராட்டத்தை பலப்படுத்தும் வகையில் , அதற்கு ஆதரவாக இருந்த இலங்கை வடபகுதி பல்கலைகளக மாணவர்கள் , வடகிழக்கு முஸ்லீம் மக்கள் , தெற்கில் சிங்களமொழி பேசும் மாணவர்கள் –தமிழக மக்கள் – மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் என ஆகியனவே இந்த முடிவை நோக்கி நிர்வாகத்தை தள்ளி இருந்தது.

நடந்தது என்ன?

8-1-2021 நள்ளிரவில் துணைவேந்தர் உத்தரவில் தூபி உடைகபட்டது. இராணுவம் குவிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள்  வெளியே நிற்க இராணுவம் உள்ளே நினறு தடைகள் போட்டது. மாணவர் போராட்டத்தைக் கையில்

எடுத்தார்கள். நீதிக்காக உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்கள். ” இராணுவம் கையில் துப்பாக்கி, மாணவர் கையில் அகிம்சை” என்ற கோசம் எழுந்தது.

உடனடி தீர்வு வரும்வரை நாம் உண்ணாவிரதத்தைக் கைவிடப்படபோவதில்லை என்ற உணவு தவிர்ப்பு போராட்டம்  3 நாள்வரை சென்றது. 3வது நாள் வடகிழக்கு பகுதிகளில் கதவடைப்பு போராட்டமும் நடைபெற்றது. வழமை போல் தமிழ் அரசியல் தலைவர்கள் களத்தில் முகம்காட்டி விட்டு வீடு செல்வது மட்டும் மாறவில்லை.   3ம் நாள் இரவு 3 மணிக்கு மாணவர்கள் சோர்வுற்ற நிலையில் மருத்துவ பரிசோதனை செய்யபட்டது. குலுக்கோஸ் ஏற்றுவதற்கு மாணவர்கள் மறுத்துவிட்டார்கள். தமக்கு நீதிகிடைக்கும் வரை எதையும் எடுத்து கொள்ளமாட்டோம் என்ற உணர்வுடன் போராட்டத்தை நிறுத்தவில்லை. 3வது நாள் இரவு 4 மணிக்கு துணைவேந்தர் களத்தில் சென்று உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என கோரி – அதே இடத்தில் காலை 7மணிக்கு அடிக்கல் தானே நாட்டிவைப்பதாக உறுதி கூறினார்… அதே போல் அடிக்கல் அவரே நாட்டி வைத்தார். ஆணால் உடனடியாக தூபியினை கட்டுவதற்குரிய வேலையை தொடங்குவதற்கு மறுக்கபட்டிருக்கிறது.

மாணவர்களும் தாம் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக கூறினார்கள். அதே போல் கதவடைப்பு போராட்டம் அதே திகதியில் நடைபெறவேண்டும்  என்பதை மாணவர் ஒன்றியம் வலியுறுத்தி இருக்கின்றது.

 

இந்தப் போராட்டம் தொடர்பாக பிரித்தானியா தமிழ் சொலிடாரிட்டி இளைஞர்கள் அமைப்பு பின்வரும் அறிக்கையை மாணவர்களுக்கு அனுப்பி இருந்தது.

யாழ் பல்கலைக் கழக மாணவர்களுக்கு,

நினைவுச் சின்னம் என்பது வெறும் நினைவு மட்டுமல்ல என்பது நீங்கள் அறிந்ததே. இத்தகைய அழிவு நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம், மறக்க மாட்டோம் என்பதும் – அந்த அழிவுக்கு எதிரான நியாயத்தைக் கோருவதும் நினைவு கூறலின் பகுதியாக இருக்கிறது. அதே சமயம் அழிவுகர அதிகாரத்துக்கு எதிரான எமது பலத்தை கட்டுவது அவசியம்.

மாணவர்கள் எதிர்கால சமுதாயத்தின் வரலாற்றைத் தீர்மானிக்கும் சக்தி உடையவர்கள் என்றும் யாழ் பல்கலைக் கழகம் முந்திய போராட்ட வரலாற்றில் எத்தகைய பங்கு வகித்திருக்கிறது என்றும் பல்கலைக் கழக நிர்வாகத்துக்கும் – அரசுக்கும் நன்றாகத் தெரிந்தே விசயமே.

பழைய போராட்ட வரலாறுகளை முற்று முழுதாக மறந்த –அல்லது அந்த வரலாற்றை மோசமான காலகட்டமாக பார்க்கின்ற சமூகத்தை கட்டமைக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். அழிவை வெற்றியாக கொண்டாட வேண்டும் என்ற அவர்களின் நோக்கமும் – நினைவை சுமப்பவர்களை ‘தீவிர’ வாதிகள் என பெயர் சூட்டி முடக்குவதும் அதனால்தான் நடக்கிறது.

இதற்கு அடிபணிந்து போகாமல் இருப்பதாயின் போராட்ட வரலாற்றை நினைவு கொண்டு – அது தந்த அனுபவங்களில் கற்றுக் கொண்ட அமைப்பாக நாம் திரளவேண்டும். மீண்டும் ஒரு போராட்ட சக்தி திரள்வதுதான் அசைக்க முடியா நினைவுச் சின்னமாக இருக்கும். அதை நோக்கி மாணவர்கள் நகர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

அத்தகைய சக்தி என்ன – தற்போது என்ன திட்டமிடல்கள் தேவை என்ற உரையாடல்கள் அவசியம். சரியான திட்டமிடல் அற்ற எந்த ஒரு போராட்டமும்  இறுதியில் அதிகார சக்திகளால் முடக்கப் பட்டு விடும் என்பதை அறிவோம்.

எவ்வித ஆதரவுமின்றி நிராயுதபாணியாக நிற்கும் மாணவர்களை சிறிதளவு இராணுவத்தைக் கொண்டும் நிர்வாகத்தைக் கொண்டும் முடக்குவது அவர்களுக்கு சிரமமான காரியமில்லை. கொரோனா கால விதிகள் தொடங்கி பல்வேறு காரணங்களைக் காட்டி அவர்கள் போராட முன்வரும் மாணவர்களை உடைப்பார்கள். இதே பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மற்றைய மாணவர்களை எதிராக திருப்பி மாணவர்கள் இடையே உடைவைக் கொண்டுவர முயற்சிப்பார்கள்.

மாணவர் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை தெரிந்த தேர்தல் கட்சி அரசியல் வாதிகளும் இந்தச் சந்தர்பத்தை தமக்கு சார்பாக பாவிக்க முன் வருவார்களே தவிர அவர்கள் சரியான திட்டமிடல் நோக்கி மாணவர்களுடன் இணையப் போவதில்லை. தமது வாக்குப் பலத்தை வளர்க்க மட்டும் அவர்கள் ஆதரவு செய்துவிட்டு – போராட்ட முனைப்பு ஓய காணாமற் போய் விடுவார்கள். அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவர்களுக்கு பின்னால் இழுபட்டு ஒரு ‘தீர்வு’ வரும் என கனவு காண்பது தவறு.

மாணவர்கள் மத்தியில் இன, மத மற்றும் பிற அடையாளங்களை முன் வைத்தது அவர்தம் ஒற்றுமையை உடைக்காத முறையில் காத்துக் கொள்வது முதற் பணி. பல்கலைக் கழகத்தில் இருக்கும் சிங்கள முஸ்லிம் மானவர்களின் ஆதரவையும் நாம் இணைக்க வேண்டும். எமது கோரிக்கைகள் மற்றர்களை எதிர்ப்பவை அல்ல – மாறாக எமது உரிமைகளைக் கோருபவை. அடக்குமுறை செய்யும் அதிகார சக்திகளே எமது எதிரி.

எதிர்காலத்தில் இவ்வகையான பிரச்சனை வந்தால்  மாணவர்கள் தனிமையாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஏனைய பகுதிகளில் இருக்கும் மாணவர் சங்கங்களுடன் இணைந்து இந்த வேலையைச் செய்ய முடியும். அதுவே பாதுகாப்பும்.

எதிர்காலங்களில் யாழ் மாணவர்கள் அகில இலங்கை மாணவர் சங்கத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்தி –இணைந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மாணவர்களின் கல்விக் கொள்கைக்கு எதிராக தெற்கிலும் ஏனைய பகுதிகளிலும் நடக்கும் மாணவர் போராட்டங்களுடன் இணைந்து உங்கள் போராட்டத்தை பலப்படுத்த நீங்கள் முன்வர வேண்டும். தனித்துவமான தூர நோக்குள்ள அமைப்பாக திரண்டு கொண்டுகூட இந்த வேலையைச் செய்ய முடியும். அதற்கான உரையாடல்கள் இப்பவே ஆரம்பிக்க வேண்டும். இதே போல் புலம்பெயர் பல்கலைக் கழக மாணவர் சங்கங்களுடன் உறவை ஏற்படுத்தி உரிமைக்கான போராட்டம் பரந்து பலப்பட நாம் முயற்சி செய்ய வேண்டும்.அதேபோல் சமூகத்தில் இருக்கும் பலமான தொழிலாளர் சங்கங்கள் – மற்றும் முற்போக்கு அமைப்புக்களின் ஆதரவையும் மாணவர்கள் கோர வேண்டும்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை தனிமைப்படுத்தி வேட்டையாட நாம் விட்டு விடக் கூடாது. ஆனால் இணைவை ஏற்படுத்துவதும் – சேர்ந்து போராட்ட சக்தியாக நிற்பதும் இலகுவான காரியமில்லைத்தான். தேசியம் சார்ந்து உடைந்து கிடக்கும் சமூகத்தில் இருந்து வரும் இந்த மாணவர்கள் மத்தியில் பல்வேறு பிற்போக்குத் தனங்கள் – பிளவுகள் இருக்கத்தான் செய்யும். இதையும் தாண்டி நாம் ஒரு போராட்ட சக்தியாக – பலரது ஆதரவையும் பெற்று நிற்பதனால் எமது கோரிக்கைகள், மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொலைதூரப் பார்வை உடையதாக இருக்க வேண்டிது அவசியம். சமூகம் சார் தெளிவுடன் தூர நோக்குள்ள அரசியல் – மற்றும் திட்டமிடல் நோக்கி நாம் நகர்வதுதான் எதிர்காலத்தில் எம்மை பலமுள்ள சக்தியாக நிறுத்தும்.

இதற்கான பணிகள் எதுவானாலும் அதைச் செய்ய நாம் தயாராக இருக்கிறோம். அதற்கான உரையாடலை செய்ய விரும்பும் இளையோர்/மாணவர்கள் எம்மோடு உரையாடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

 

தமிழ் சொலிடாரிட்டி  மற்றும்  சொலிடாரிட்டியின் புரட்சிகர இளையோர்