யாழ் பல்கலைக்கழகத்தில் இனவாதிகளின் அராஜகம்.

நேற்றைய தினம் 8-1-21 இரவு வேளையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை இரவோடு இரவாக திருட்டுத்தனமாக மாணவர்களுக்கு முன்னறிவிப்பு இன்றி இடித்து அழித்துவிட்டார்கள். இளைஞர்கள் மக்கள் ஒன்று கூடி அதை நிறுத்த முயற்சித்த போது அவர்கள் கடும் எதிர்ப்பை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. இதை தொடர்ந்து  இராணுவத்தை வரவழைத்து  துப்பாக்கி முனையில் மக்களையும், பல்கலைகழக மாணவர்களையும், இளைஞர்களையும் மிரட்டி வெளியேற்றி  பல்கலைக்கழகத்தை முற்றுமுழுதாக இராணுவ கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அதேவேளை நியாயத்தை கேட்டு போராட முயற்சித்த 2 மாணவர்களை கைது செய்தனர். இவர்கள் பின்னர் பிணையில் விடிவிக்கபட்டனர். அதேவேளை தூபியை உடைக்கும் போது  அதை தடுக்க முற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் மீது வக்கோ இயந்திரத்தை ஏற்றும்மாறு யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார் எனவும் அங்கு கிடைக்கும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வகையான இனவாத அராஜகத்தை கண்டித்தும் மற்றும் அந்த தூபியை மீண்டும் கட்டிகொடுக்க வேண்டும் அல்லது இதற்கான தீர்வை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் மாணவர்கள் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.   மாணவர்களால் உண்ணாவிரத போராட்டங்களும் நடைபெறுகின்றன. அதே வேளை மறுநாள் அதிகாலையில் மக்கள் அணிதிரண்டு பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு இராணுவமே வெளியேறு என்ற கோசத்துடன் எழுச்சி போராட்டம் நடத்தி உள்ளனர். இவ்வாறான  மக்கள் எதிர்ப்பை நிறுத்துவதற்காக உங்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்வோம் -மற்றும் தனிமைபடுத்தலை மேற்கொள்வோம் என மிரட்டி அவர்களின் போராட்டத்தை முடக்குகின்றனர் பொலிஸ் அதிகாரிகள். கொரோனா காலத்தில் பிளாக் லைவ் மேட்டர் (black lives matter) என்ற போராட்டம்  பல்லாயிரக்கணக்கானோர் இணைந்து உலகளாவியரீதியில் நடைபெற்றது அறிவோம்.  அதே போல் அநீதிக்கு எதிராக எதிர்வரும் 11ம் திகதி வடக்கு-கிழக்கில் பூரண கதவடைப்பு போராட்டம் நடைபெற இருக்கின்றது.

இந்த தூபியானது முள்ளிவாய்காலில் இறந்த மக்களை நினைவுகூரும் வகையில் நிர்மானிக்கப்பட்ட ஒன்று. 2018ல் கட்டுமான நடவடிக்கைகள் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் நினைவுத்தூபி அமைப்பதற்கு எதிராக உயர் மட்ட அரசியல் தரப்பினரின் அழுத்தம் கொடுத்த காரணத்தால்- பல்கலைக்கழக நிர்வாகத்தின் மூலமாக தடங்கல் ஏற்பட்டது. அதன் பின்னர் பல்கலைக்கழக நிர்வாக உயர்மட்டத்தினருக்கும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையே  பேச்சுவார்த்தை நடாத்தி  அதை கட்டி முடித்தனர். அதன்பின்னர்  முள்ளிவாய்க்கால் நினைவுதினத்திங்களில் வருடாவருடம் பொதுமக்கள் நினைவு கூர்ந்தார்கள்.

இவ்வாறான நிகழ்வை தடைசெய்வதற்கு  தற்போதைய கோத்தபாய அரசாங்கம் பல அழுத்தத்தினை பிரயோகித்து வந்தது. இதை நாம் மக்கள்விரோத செயலாகவும் பேரினவாத நடவடிக்கைகளாகவுமே பார்க்க முடியும். இது பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல இலங்கையில் அதிகமான தமிழர் பிரதேசங்களில் நினைவுகூரும் இடங்களையும் பாதித்திருந்தது. கோத்தபாய ஆட்சிக்கு பின்னர் சிறுபான்மை மக்களுக்கென்றே புதிய தடைகளையும் உருவாக்கியிருந்தார். மக்கள் தமது உறவினர்களை அஞ்சலி கூறுவதை தடுப்பது மிகவும் மோசமான இனவாத நடவடிக்கையென பல்வேறுபட்ட விவாதங்களில் தமிழ்சொலிடாரிட்டி அமைப்பு கூறிவந்துள்ளது. இலங்கை அரசாங்கமானது இந்த தூபி வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானதென கூறுகிறது. ஆனால் தமிழர் பிரதேசங்களில் இராணுவம் ஆக்கிரமிப்புகளும், இராணுவ யுத்த வெற்றி தூபிகளும், இராணுவக் கொண்டாட்டங்களும் நடைபெற்றுகொண்டுதான் இருக்கின்றது. பல்கலைக்கலகத்துக்குளும் அவர்கள் தமது வெற்றி சின்னங்களைத்தான் நிரப்பி வருகிறார்கள். அவர்களது வெற்றி சின்னங்கள் எமது மக்களின் பிணத்தின் மேல் நின்று சிரிக்கும் செயற்பாடுகள்.

போர்குற்றத்தில் ஈடுபட்ட அரசாங்கம் தனது குற்றங்களை மறைப்பதற்கும், வரலாற்றை மாற்றி அமைப்பதற்கும் இவ்வாறான பல்வேறு நினைவு சின்னங்கள், தடயங்கள், தூபிகள் என தொடர்ச்சியாக அழித்துவருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது.

இத்தகைய நெருக்கடியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து தமது உரிமைகளை அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்கு ஐக்கியப்படவேண்டும்.

இந்த போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் நாம் முன்வைக்கும் கோரிக்கைகளாவன.

  • பல்கலைக்கழக வளாகங்களிலோ அல்லது மாணவர் எதிர்ப்பு போராட்டகளை நடத்தும் இடங்களிலோ இராணுவ தலையீடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • உடைக்கப்பட்ட தூபி மீண்டும் கட்டப் படுவதற்கான வசதிகள் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
  • யுத்தத்தால் இறந்த மக்களது உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் நினைவுகூறுவதை அனுமதிக்கவேண்டும்.
  • மாணவர்கள் தமக்கான சங்கம் அமைப்பதற்கும் அது முழுமையான சுதந்திரத்துடன் இயங்குவதற்கும் இருக்கும் உரிமைகள் வழங்கப் படவேண்டும்.
  • அரசியற் காரணங்களுக்காக மாணவர்களை துன்புறுத்துவது – கைது செய்வது – தாக்குவது முதலியன உடனடியாக நிறுத்தப் படவேண்டும். மாணவர்கள் மேலான மிரட்டல் – வனுமுறை சொல்லாடல்கள் – அதிகாரம் செலுத்துதல் உடனடியாக நிறுத்தப் படவேண்டும்.
  • மாணவர்கள் ஒன்றிணைந்து சர்வதேச மாணவர்களுடன் அரசியல் வேலைதிட்டங்களையும் பிரச்சாரங்களையும் ஜனநாயக முறையில் மேற்கொள்ள முன்வரவேண்டும்.