தமிழராக இருந்தால் மட்டும் போதுமா?- கமலா ஹரிஷ் முதல் கல்யாண சுந்தரம் வரை

அமெரிக்க உப ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹரிஷ் தமிழர் சார்பான வம்சாவளி என்பதனால் தமிழர்களுக்கு இனி விடிவு கிடைத்துவிடும் என்பது போல பேச்சுக்கள் அடிபடுகின்றது. மேலும் கமலா ஹரிஷ் தமது செயலக முதன்மை அதிகாரியாக ரோகிணி லக்சுமி ரவீந்திரன் என்னும் தமிழ் பெண்ணை நியமித்துள்ளார். முதன்முறையாக இரண்டு தமிழ் பெண்மணிகள் வெள்ளை மாளிகையில் பதவி வகிக்கின்றனர். ஆகவே தமிழர்களின் சிக்கல்களுக்கு நிச்சயமாக சார்பான ஒரு  தீர்வு கிடைக்கும் என பகல் கனவு காண்கின்றனர் சிலர். தமிழர் ஒருவர் உலகத்தில் எங்கேனும் அதிகாரத்தில் வந்தால் அவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுவது தமிழ் மக்களின் வாடிக்கையாகிப் போய்விட்டது. தமிழர் ஒருவர் அல்லது தமிழ் வம்சாவழியில் வந்த  ஒருவர் பதவிக்கோ அல்லது ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் மட்டும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்ந்துவிடப் போவதில்லை.

தெற்காசியா தொடர்பான நிலைப்பாடு – மற்றும் அமெரிக்காவினுள்  வசிக்கும் கறுப்பு மற்றும் ஆசியா இன மக்களின் தொடர்பான கமலா ஹரிஸின் நிலைப்பாடு விமர்சனத்திற்குரியது. இது தவிர ஜன நாயகக் கட்சியின் வெளியுறவுக்கொள்கையினையே அவர் பின்பற்றுவார் தவிர தமிழர்களுக்காக தமது காட்சியின் வெளியுறவுக் கொள்கையினை அவர் மாற்றப்போவதில்லை. ஆகவே இவ்வாறான அரசியல் நிலைப்பாடு கொண்டவர் தமிழர் என்பதனால் தமிழர் சார்பான அரசியல் மாற்றம் வரும் என எதிர் பார்ப்பது முட்டாள்தனம். ஒரு காலத்திலும்  கமலா ஹரிசினால் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. இது புரியாமல் கமலா ஹரிஷ் தமிழர்களின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் எனக் கூறும் சம்பந்தன் ஐயாவின் அரசியல் ‘சாணக்கியத்தை’ ஏமாற்று பேச்சு என்றுதான் சொல்ல முடியும்.

ஒருவேளை கமலா ஹரிஷ் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க விருப்பம் கொண்ட நபராக இருந்தாலும், கமலா ஹரிசால் தாம் நினைத்தது போல அமெரிக்க வெளியுறவுக் கொள்கையினை மாற்ற முடியாது. ஏனெனில் ஜனநாயக் கட்சியின் வெளியுறவுக்கொள்கையினை , அமெரிக்க அரசின் வெளியுறவுக்கொள்கையினை ஒருவர் தாம்  நினைத்தது போல மாற்ற முடியாது. அமெரிக்க அரசானது தமது அரசியல் பொருளாதார நலன்களுக்கேற்றவாறு தமது வெளியுறவுக்கொள்கையினில் மாற்றம் செய்யுமே தவிர தமிழர்களுக்கென தமது வெளியுறவுக்கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆகவே கமலா ஹரிஷ் அல்ல விமலா, மாலா என் யார் உப ஜனாதிபதியாக வந்தாலும் அவர்களால் அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கையில் தாகத்தை ஏற்படுத்தி தமிழர் சிக்கல்களை தீர்க்க முடியாது. முற்று முழுதான வேறு அரசியல் கொள்கையுடன் ஆட்சி அமையும் போது மட்டுமே சில மாற்றங்கள் சாத்தியமாகலாம். கமலாவுக்கு பதில் பேர்னி சாண்டர்ஸ் ஆட்சி அமைத்திருந்தால் எமக்கு வந்திருக்க கூடிய நலன்கள் அதிகமாக இருந்திருக்கும். கொள்கை நிலைப்பாடுதான் எமது நலன்களை தீர்மானிக்குமே தவிர ஒருவரின் இன மற்றும் எந்த அடையாளமும் அல்ல.

மேலும் தமிழர் என்ற அடிப்படையில் கமலா ஹரிசுக்கான தமிழர் அமைப்பு என ஒன்று உருவாக்கப்படுமானால் அதனைப் போல் ஒரு வீண் வேலை எதுவும் கிடையாது. அதிக பட்சம் அவ் அமைப்புகளின் கூட்டங்களுக்கு அவர் வருகை தந்து தனக்கான ஆதரவுத் தளத்தை பெருகிக் கொள்வரே தவிர தமிழ் மக்கள் சார்பான ஆக்கபூர்வமான முயற்சிகள் எதனையும் மேற்கொள்ள மாட்டார். கடந்த காலங்களில் கிளிண்டனுக்கான தமிழர் அமைப்பு, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, ட்ரம்ப்புக்கான தமிழர் என பல்வேறு அமைப்புகள் தோன்றின. இவர்களால் உருப்படியான காரியம் எதையும் சாதிக்க முடியவில்லை. அந்தவகையில் வீணாப் போன ஒரு அமைப்பாகவே கமலா ஹரிசுக்கான அமைப்பும்  காணப்படும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. ஏற்கனவே பெரும் சொல்வந்தர்களாக இருப்பவர்களுக்கு தேர்தல் வேலைக்கு காசு சேர்த்து கொடுக்கும் வேலை மட்டுமே இது.

ஒருவர் தமிழராக இருந்தால் தமிழ் மக்களுக்கு சார்பாகத்தான் இயங்குவார் என எண்ணுவது மடத்தனம். சம்பந்தன் ஐயாவும் தமிழர்தான் , கதிர்காமரும் தமிழர்தான். அது தவிர இலங்கைப் பாராளுமன்றத்தில் எத்தனையோ தமிழர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள்,இருந்திருக் கிறார்கள் . இவர்களால் தமிழர்களின் சிக்கல்களைத் தீர்க்க முடிந்ததா? கடந்த வருடம் இலங்கை அரசுடன் கூட்டணி அமைத்து நல்லாட்சி செய்த கூட்டமைப்பு உறுப்பினர்களும் தமிழர்தான். அவர்களால் தமிழ் மக்களின் சிக்கல்ககளை தீர்க்க முடிந்ததா? இல்லையே. ஆகவே யார் அதிகாரத்திற்கு வருகிறார்கள் என்பதை விட அதிகாரத்தில் இருப்பவர்கள்  என்ன கொள்கையினை முன்வைக்கிறார்கள் என்பதே முக்கியம். இங்கு கொள்கைதான் முக்கியமே தவிர அவர் தமிழரா சிங்களவரா முஸ்லிமா என்பது முக்கியம் அல்ல. தமிழ் மக்களுக்கு சார்பான கொள்கைகளை முன்னெடுக்கும் சிங்கள தலைமைகளும் உண்டு, சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு  ஆதரவாக  இயங்கும் தமிழ் தலைமைகளும் உண்டு. ஆகவே அரசியல் களத்தில் கொள்கைதான் முக்கியமே தவிர எந்த இனத்தைச் சார்ந்தவர் என்பது முக்கியம் அல்ல

தமிழர் ஒருவர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதனால் தமிழர்களின்  சிக்கல்கள் தீர்ந்துவிடும் என எதிர்பார்ப்பது நாம் தமிழர் கட்சியினால் ஏற்பட்ட தாக்கமாகக் கூட இருக்கலாம். கடந்த பதினொரு வருடமாக தமிழர் அதிகாரத்தைக் கைப்பற்றினால்தான் தமிழ் நாட்டிற்கு விடிவு கிடைக்கும் என உணர்ச்சி ததும்ப பேசிய கல்யாண சுந்தரம்,  நாடி நரம்பெல்லாம் துடிக்க தமிழர்தான் அதிகாரத்திற்கு வரவேண்டும், தெலுங்கர் வரக்கூடாது என வீர வசனம் பேசிய கல்யாண சுந்தரம், அதிமுகாவிற்கு என்று சாவு மணி அடிக்கிறோமமோ அன்றுதான் தமிழ்நாட்டில் புதிய அரசியல் பிறக்கும் என நரம்பு புடைக்க கத்திய கல்யாண சுந்தரம், இன்று அதையெல்லாம் புறம்தள்ளி விட்டு அதிமுகாவில் ஐக்கியமாகியுள்ளார். தமிழர் அதிகாரத்திற்கு வந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்ற இவர்களின் கொள்கை கண் முன்னே பொய்த்துப் போகின்றதைக் காணாலாம்.  தமிழரோ தெலுங்கரோ யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பது முக்கியமில்லை. என்ன கொள்கையை முன்வைக்கிறார்கள் என்பதே முக்கியமாகும் என்பதை இதனால்தான் நாம் அழுத்திச் சொல்கிறோம்.

கமலா ஹரிஷ் இந்தியர் என்பதனால் இந்திய நலன் சார்ந்து இயங்குவார் எனக் கருதுவது, அதிலும் குறிப்பாக தமிழர் என்பதனால் தமிழர் நலன் சார்ந்து இயங்குவர் என எனக் கருதுவது தவறு. கமலா ஹரிஷ் முதல் கல்யாண சுந்தரம் வரையான எவரும் தனிபட்ட தமது  அடையாளம் சார்ந்து இயங்கப் போவதில்லை, மாறாக எந்தக் கட்சியுடன் தம்மை பிணைத்துக் கொண்டுள்ளனரோ அதன் கொள்கையைத்தான் பிரதிபலிக்கப் போகிறார்கள். அது மக்கள் விரோதக் கொள்கையாக இருந்தாலும் கூட அதைதான் பிரதிபலிப்பார்கள். ஆகவே தமிழ் மக்களின், சிறுபான்மை மக்களின், ஒடுக்கப்படும் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கான முயற்சிக்கும் ஒருவர் அல்லது ஒரு தலைமை அல்லது கட்சி அம் மக்களின் இனமாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை மாறாக அவர்கள்  மக்கள் நலன் சார்ந்த கொள்கையை முன்னெடுப்பதே முக்கியமாகும்.

கஜன்