இலங்கையில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய சோசலிச கட்சியின் சார்பாக போட்டியிடும் தோழர் ஸ்ரீதூங்க ஜெயசூரிய அவர்களுக்கு வாக்களிக்குமாறு கோரி ஐக்கிய சோசலிச கட்சி வெளியிட்டு இருக்கும் தேர்தல் பிரச்சார அறிக்கை
2024 ஜனாதிபதித் தேர்தல்
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்”
ஒவ்வொரு தேர்தலிலும் ஏமாறுவதற்கா வாக்களிக்க வேண்டும்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது மிகவும் நெருக்கடியான காலப்பகுதியில் நடைபெறவுள்ளது. போலிச் சுதந்திரம் கிடைத்து 76 ஆண்டுகள் கடந்து விட்டது. இன்றுவரை தேசியப் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்க கூடிய நோக்கமும் ஆற்றலும் நாட்டை இதுவரை ஆண்ட எந்தவொரு அரசியல் கட்சிக்கோ கூட்டு அரசாங்கத்திற்கோ இருக்கவில்லை. மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை வழங்கும் நிலைப்பாட்டை எந்த முதலாளித்துவ அரசியற் கட்சியும் இனிவரும் காலங்களிலும் முன்னெடுக்கப் போவதில்லை என்பதே எமது புரிதலாகும்.
2009ல் யுத்தம் முடிவுற்ற பின்னர் கொழும்பு அரசாங்கங்கள் மற்றும் அரச கட்சிகள் தமிழ் பேசும் மக்களுக்கு தேசியப்பிரச்சினை இல்லை என்ற மனப்பாங்குடனேயே செயற்பட்டு வருகின்றன. தமிழ் மக்களின் நெஞ்சங்களில் குமுறிக் கொண்டிருக்கின்ற தேசியப் பிரச்சினைக்கு சில்லறைத்தனமான தற்காலிகத் தீர்வுகளை வழங்குவதனூடாக அவர்களை ஏமாற்றி விடலாம் என்பதே தென்னிலங்கை முதலாளித்துவ மற்றும் சிறு முதலாளித்துவ கட்சிகளின் தலைவர்களின் சிந்தனையாக உள்ளது. 30 ஆண்டுகால யுத்தத்தின் அழிவிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாத இந்த தலைவர்களின் செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததே.
அதேவேளை வட பகுதி அரசியற் கட்சிகள், தொடர்ந்தும் தென்னிலங்கை முதலாளித்துவ அரசியற்கட்சிகளுக்கும் அவற்றை அண்டிய குழுக்களுக்கும் ஆதரவினை அளித்து வருவதையே செய்து வருகின்றன. இதனூடாக தேசியப் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கும் அதனுடன் தொடர்புடைய காணிப் பிரச்சினை- அரசியல் கைதிகள் விடுதலை- காணாமற்போனோர் பிரச்சினை மற்றும் வடக்கில் படையினர் வெளியேற்றம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண முடியும் என்றும் பலர் நம்பினர். வட பகுதி தமிழ் தலைவர்கள் தெற்கில் பதவிக்கு கொண்டு வந்த தலைவர்கள் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளதே நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதிபலன் ஆக உள்ளது.
இன்று நாட்டில் இனவாதம் முன்னரை விட தீவிரமடைந்துள்ளது. பௌத்த சமூகத்தினைச் சேர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த தேரர்கள் உட்பட பெரும்பான்மை தேரர்கள் முழுமையாக நேரடி அரசியலில் ஈடுபடும் நிலைமை உருவாகியுள்ளது. இவ்வாறான சூழலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த முதலாளித்துவ தரப்பு வெற்றி ஈட்டினாலும் அத் தரப்பு சிங்கள பௌத்த சக்திகளுக்கு அடிபணிந்து ஆட்சியினை முன்னெடுக்க வேண்டிய நிலைமையே உருவாகப் போகின்றது என்பதனை அனுமானித்துக் கொள்ள முடியும். இது ரணில் மட்டும் அன்றி சஜித் பிரேமதாசவுக்கும் அனுரகுமார பொருந்தக் கூடியது.
இந்த பயங்கரமான இனவாத எழுச்சிப் போக்கினை நாம் முடியடிக்க வேண்டும். அந்த நோக்கிலேயே ஐக்கிய சோசலிச கட்சி தேர்தலில் போட்டி இடுகிறது. அதனால்தான் எமக்கு வாக்களிக்க வேண்டும் என உரிமையுடன் கேட்கிறோம்.
தென்னிலங்கையின் சிங்கள பௌத்த இளைஞர்களை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமே ஜே.வி.பி. பிரதான அரசியல் நீரோட்டத்திலிருந்து விலகி நிற்பதாகக் காட்டிக் கொள்ளும் ஜே.வி.பி (அவர்களின் ஆரம்பகால தலைவர் விஜேவீர காலப்பகுதியிலிருந்து) எந்தப் பிரச்சினைக்கும் சரியான தீர்வை முன் வைக்கத் தயாரில்லை. தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை சார்ந்த விசயத்தில் இவர்களுக்கும் இனவாதிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
13வது அரசியலமைப்புத் திருத்தம் முன்வைக்கப்பட்ட தருணத்தில் அதற்கு எதிராக தேசப்பற்று இயக்கம் என்ற பெயரில் இனவாதக் கிளர்ச்சியினை ஏற்பாடு செய்தவர்கள் அவர்கள். அதிகாரப் பரவலாக்கத்திற்கு கடும் எதிர்ப்பை தெற்கு மக்கள் மத்தியில் திரட்டும் வேலை செய்தவர்கள். இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தினையும் கட்டியெழுப்புவது தொடர்பான பிரச்சினையே அனுரகுமாரவின் கருத்தின்படி இன்று நாட்டின் தலையாய பிரச்சினையாக இருக்கின்றது. தேசியப்பிரச்சினைக்கு தீர்வினைக் காண்பதற்கு அடிப்படையாக அமைகின்ற தமிழ் மக்களை தனி இனமாக அங்கீகரிப்பதற்கான சிந்தனையை ஜே.வி.பி போன்ற சிறு முதலாளித்துவ தரப்பினரால் சிங்கள மக்கள் மத்தியில் ஒருபோதும் ஏற்படுத்த முடியாது.
நீதிமன்றம் சென்று வாதாடி வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றுபட்டு இருக்க கூடாது என இந்த மாகாணங்களை உடைத்த வரலாறு ஜே வி பிக்கு உண்டு. அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாட யாரும் முன்வராத போது ஐக்கிய சோஷலிச கட்சி மட்டுமே அந்த நடவடிக்கையை முன்னெடுத்தது. இந்த லட்சணத்தில் இவர்கள் ஒற்றுமை பற்றி எப்படி பேச முடியும்? தமிழ் மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்யும் இவர்கள் வடக்கு கிழக்கு பற்றிய தமது உண்மை நிலைப்பாடு என்ன என இன்றுவரை கூற மறுப்பது ஏன்?
யுத்தம் நடைபெற்ற மிகவும் இக்கட்டான காலகட்டத்திலும் – அதற்கு முன்பும் இருந்து இன்றுவரை சளைக்காமல் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுத்து – அதற்காக முன்னின்று போராடி வருகின்ற ஓர் கட்சியாகவே நாங்கள் உங்கள் முன்னிற்கின்றோம். மலையக மக்கள் நீண்ட காலமாக போராடி வரும் ஊதிய உயர்வு மற்றும் நிலா உரிமைகளுக்ககாக நாம் தொடர்ந்து போராடி வருகிறோம். சந்ததி சந்ததியாக மோசமான நிலையிலும் – இன்றுவரை இரண்டாம்தரப் பிரஜைகளாகவும் வாழப் பணிக்கப்பட்டிருக்கும் மலையாக மக்கள் போராட்ட அரசியலில் இணைந்து தமது எதிர்ப்பு குரலை வெளிக்கொண்டு வராமல் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. மலையாக மக்களின் வாக்குகளுக்கா மட்டும் பொய் உறுதிமொழிகள் வழங்கப்படுகிறது. இந்தே நிலையை மாற்ற போராட்ட செயற்பாட்டோடு இணைந்து உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய கோருகிறோம். முஸ்லிம் மக்கள் இனவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு எதிராக பல போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். மிக மோசமான தீவிர வெறுப்பு செய்யும் இனப்வாத சக்திகளை ஊக்குவிக்கும் அதே வேலை தம்மை முஸ்லிம்களின் பிரதி நிதிகளாக காட்டிக் கொண்டு வாக்கு கேட்கும் அனைவரையும் மக்கள் நிராகரிக்க வேண்டும்.
தற்போது நாள் குறிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தல் இன்னும் சில வாரங்களில் முடிவடைந்து விடும். அது முடிந்த பிறகு மீண்டும் அடக்குமுறை அரசியல்தான் தொடரும். எந்த முதலாளித்துவப் பிரதிநிதி வென்றாலும் தொடரப்போவது அடக்குமுறை மட்டுமே. அதற்குப் பின் கட்டப்பட வேண்டிய போராட்டமே எங்களின் முதன்மை அக்கறை. அந்தப் போராட்ட களத்தில் நாம் ஒன்றுபட்டு நிற்கத்தான் போகிறோம். அதற்கான தயாரிப்பை இப்பவவே ஆரம்பிக்க வேண்டும் என்றே எம்மோடு ஒன்றுபடுங்கள் என கேட்கிறோம். உங்கள் வாக்குரிமையை வீணாக்காதீர்கள். உங்கள் எதிர்ப்பை எமக்கு வாக்கு வழங்கி பதிவு செய்யுங்கள்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கொள்கைபூர்வமான உறுதியான நிலைப்பாட்டின் அடிப்படையில் சிங்கள இனவாதத்திற்கு ஒருபோதும் அடிபணியாத முதலாளித்துவ விரோத சோசலிச வேலைத்திட்டத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய சோசலிசக் கட்சியின் வேட்பாளர் தோழர் சிறிதுங்க ஜயசூரியவுக்கு உங்கள் ஆதரவினை வழங்க முன்வருமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம்.
எமது ஒன்றுபட்ட எதிர்ப்பை கட்ட இன்றே முன்வாருங்கள்.
முச்சக்கர வண்டிக்கு வாக்களிப்போம்.
.