இலங்கையின் நெருக்கடிகளுக்கு ஒரு மார்க்சிய மாற்று
www.socialistworld.net வெளியாகிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு
வரலாற்றில் முதல் முறையாக ‘இடதுசாரி’ பின்னணியை கொண்ட கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகி இருக்கிறார். அனுர குமார திஸ்ஸநாயக்காவை ஒரு இடதுசாரி தலைவராக சர்வதேச ஊடகங்கள் சித்தரித்த போதிலும் அதில் உண்மையில்லை. அவர் பதவிக்கு வந்த ஆரம்ப வாரங்களில் இருந்து அவரது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்ட எதார்த்தத்தையே வெளிப்படுத்துகின்றது. ஒரு காலத்தில் பேச்சளவில் இடதுசாரிய ஆதரவாக இருந்த ஜனதா விமுக்தி பெரமுனாவின் (JVP) ஜெனரஞ்சக முன்னணியான தேசிய மக்கள் சக்தி (NPP) இலங்கையின் ஜனாதிபதி பதவியை கைப்பற்றியதில் இருந்து வியக்கத்தக்க முறையில் வலது பக்கம் திரும்பி இருக்கின்றது. அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் சுமாரான முற்போக்கான சீர்திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டவை . இது கூட முந்தைய ஆட்சிகள் செயல்படுத்திய நவ தாராளவாத நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சிக்கு ஆதரவாக விரைவாக கைவிடப்பட்டிருக்கின்றது.
இந்த காட்டிக் கொடுப்பால் NPP க்குள் உள்ளக முரண்பாடுகள் தோன்றியிருக்கின்றது. அரசியலில் மாற்று என நிறுவுவதற்காக நாடு முழுவதிலும் இருந்து பிரபலமான தனி நபர்கள் மற்றும் குழுக்களை உள்ளிழுப்பத்தன் மூலம் அரசியலில் நாம் மாற்று சக்தி என்று காட்ட எடுத்த முயற்சி ஜேவிபியின் NPP கூட்டணிக்குள் இருந்த இடதுசாரி எதிர்ப்பு பிரிவுக்கு அதிகாரத்தை அளித்து இருக்கின்றது. சமூக ஜனநாயக அரசியலில் மட்டும் ஊறி கிடக்கும் – குட்டி முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவத்தின் பல பிரிவுகளின் ஆதரவால் உற்சாகமடைந்து இருக்கின்ற இந்தப் பிரிவு சோசிலிசம் அல்லது இடதுசாரிய அரசியல் என்ற தீவிர நிலைப்பாட்டில் இருந்து NPP யை மாற்றிவிட்டது. இது பல சாப்தங்களாக நாட்டை பாதித்த அதே முதலாளித்துவ கொள்கைகளை NPP இப்போது ஆதரிக்கும் நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இது தொழிலாளர் வர்க்கத்தின் நெருக்கடியை அதிகப்படுத்தி இருக்கின்றது.
சீர்திருத்தவாதத்திலிருந்து புதிய தாராளமயம் வரை
தேர்தலுக்கு முன், NPP இன் மேடையில் IMF இன் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு (DSA) மறுபேச்சு, அதானி குழுமத்துடனான ஊழல் ஒப்பந்தங்களை ரத்து செய்தல், மற்றும் தொலைத்தொடர்பு, பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட முக்கியமான துறைகளின் தனியார்மயமாக்கலை நிறுத்துதல் போன்ற திட்டங்கள் இருந்தன. இந்தக் கொள்கைகள், போதாவையாக இருந்தபோதிலும், குறைந்தபட்சம் கொள்கையளவிலாவது, நவதாராளவாத மரபுவழிக்கு ஒரு சாதாரண சவாலை அளித்தன. ஆனாலும், அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றவுடன், இந்த வாக்குறுதிகள் விரைவாக நிராகரிக்கப்பட்டன. அரசாங்கத்தின் அணுகுமுறை இப்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைகளையே பிரதிபலிக்கிறது – இது சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய நவதாராளவாதத்தின் முழுமையான மற்றும் விமர்சனமற்ற தொடர்ச்சியாகும்.
இந்த காட்டிக்கொடுப்பு NPPக்கு அப்பாலும் நீண்டுள்ளது. இலங்கையின் ஏனைய இடதுசாரிக் கட்சிகளும் தள்ளாடியுள்ளன. முன்னணி சோசலிஸ்ட் கட்சி (FSP), புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி (NDMLP), மற்றும் சோசலிஸ்ட் மக்கள் முன்னணி (SPF) ஆகியவை “அரகலயா” இயக்கத்தின் செயல்பாட்டாளர்களுடன் இணைந்து மக்கள் போராட்டக் கூட்டணியை (PSA) உருவாக்கின. எவ்வாறாயினும், இணக்கமான அரசியல் உடன்பாடு இல்லாமல்,பொதுமக்களுக்கு ஒரு தெளிவான மாற்றீட்டை முன்வைக்க இயலாது இந்த கூட்டணி முரண்பாடுகளால் நிறைந்துள்ளது, மேலும் தொழிலாள வர்க்கம் அல்லது பரந்த போராட்டங்களுடன் அர்த்தமுள்ள வகையில் இவர்களால் ஈடுபட முடியவில்லை. இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் மற்ற ஒவ்வொரு பிரிவினரும் குறைதீமை வாதத்தின் அடிப்படையில் NPP உடன் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.
தெளிவான மார்க்சிய வேலைத்திட்டத்தை முன்வைப்பதில் இந்தக் குழுக்களின் கூட்டுத் தோல்வியானது இலங்கையின் இடதுசாரி அரசியலுக்குள் ஆபத்தான அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றிடமானது, பொதுமக்கள் மீது தாக்குதலை தொடுக்கும் புதிய தாராளமயக் கொள்கைகளைத் தொடர்ந்து திணிக்க வழி வகுத்துள்ளது. இதன் எதிரொலியாக ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி (USP) எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.ஒப்பீட்டளவில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரங்களை மேற்கொண்டு சிறிய சோர்வு இருந்த போதிலும் இந்த இடைவெளியை உண்மையான மார்க்சிச மாற்றுடன் நிரப்புவது எங்கள் புரட்சிகர கடமை என்று நாங்கள் நம்புகிறோம்.
புதிய தாராளவாதத்தை சவால் செய்ய ஒரு மார்க்சிய திட்டம்
சர்வதேச நாணய நிதியத்தின் நவதாராளவாத நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கையில் நடைமுறை, மார்க்சிய மாற்றீட்டை வழங்கும் ஒரே கட்சி USP ஆகும். நெருக்கடியின் வேர்களைத் தீர்க்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையான தீர்வுகளை வழங்கும் பல முக்கிய தூண்களில் அடிப்படையில் எங்கள் தளம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
1. கடன் திருப்பிச் செலுத்த செலுத்த மறுப்பு மற்றும் கடன் ரத்து
எங்கள் திட்டத்தின் மையத்தில் அனைத்து கடன்களையும் செலுத்த மறுப்பது உள்ளது. வெறுக்கத்தக்க கடன், காலநிலை மாற்றத்துக்கான நீதி மற்றும் காலனித்துவ கொள்ளைக்கான இழப்பீடு போன்ற கொள்கைகளின் அடிப்படையில், உடனடியாக கடன் ரத்து செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.இலங்கையின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 99.83% ஆக உள்ளது, இது கொள்ளையடிக்கப்பட்ட கடனின் விளைபொருளாகும். ஊழலற்ற தலைமைத்துவத்தையும், நாட்டின் நிதிநிலையின் நிலைத்தன்மையற்ற தன்மையையும் முழுமையாக அறிந்த சர்வதேச நிதி நிறுவனங்கள் இந்தக் கடன் பொறியை உருவாக்கின. இதன் விளைவு பேரழிவு. வாங்கப்பட்ட கடன்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குப் பதிலாக, சொகுசு வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் மற்றும் நில மீட்புத் திட்டங்கள் போன்ற வீணான திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டன. இதற்கிடையில், சுகாதாரம், கல்வி மற்றும் பொது உள்கட்டமைப்பு போன்ற அத்தியாவசியத் துறைகள் நிதியில்லாமல் திட்டவட்டமாக பட்டினி கிடக்கின்றன.
இலங்கையின் COVID-19 பெருந்தொற்று இந்த தோல்விகளை எடுத்துக்காட்டியது. அடிப்படை மருத்துவப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாமல் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன, ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி நிலையங்கள் வீழ்ச்சியடைந்தது,இதனால் மில்லியன் கணக்கான மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியாமல் போகிறார்கள், மேலும் நமது பல்கலைக்கழகங்களால் உயர் கல்விக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இன்று, அதிக தினசரி வேலை தொடர்பான மன அழுத்தத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னிடத்தில் உள்ளது, மேலும் மலிவு விலையில் வீடுகள் இல்லாதது இளம் தொழிலாளருக்கு மிகப்பெரிய சுமையாக இருக்கின்றது. எல்லா நேரங்களிலும், IMF இன்னும் சிக்கனத்தைக் கோருகிறது, இது இது பொது சேவைகளுக்கான நிதி குறைப்பு மற்றும் கடனின் தீய சுழற்சியை மட்டுமே நிலைநிறுத்துகிறது.
இந்தப் போக்கை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். கடனைத் திருப்பிச் செலுத்தும் பாதை நெருக்கடியை மேலும் மோசமாக்கும். அதற்குப் பதிலாக, நாங்கள் கடன் நீதி மற்றும் ரத்துசெய்தலுக்கு ஆதரவாக நிற்கிறோம், இதேபோல் சர்வதேச நிதிச் சுரண்டலின் வலையில் சிக்கியுள்ள மற்ற தென் உலகநாடுகளின் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் எங்கள் போராட்டத்தை இணைக்கிறோம்.
2. திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் முக்கிய வளங்களை தேசியமயமாக்குதல்
இலங்கை மக்களை முதலாளித்துவம் சந்தேகத்திற்கு இடமின்றி தோல்வியடையச் செய்துள்ளது. எங்களின் மாற்றீடு திட்டமிடப்பட்ட பொருளாதாரம் ஆகும், இங்கு முக்கிய சமூக நலன் வளங்கள் வங்கிகள், தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து ஆகியவை ஜனநாயக தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும். இது தனியார் லாபத்துக்கான அரசவுடமை அல்ல. மாறாக இந்த முக்கிய துறைகள் பொது நலனுக்காக சேவை செய்வதை உறுதி செய்வதற்கான வழிமுறையாகும்.
“முதலீட்டாளர்கள்” என்று அழைக்கப்படுபவர்கள் மற்றும் முதலாளிகள் சுரண்டப்படும் தொழிலாள வர்க்கத்தால் உற்பத்தி செய்யப்படும் செல்வத்தை வெளியேற்றுவதைத் தடுப்பதற்கு மூலதனக் கட்டுப்பாடுகள் அவசியம். இந்த வணிக உயரடுக்குகள் வரி மானியங்கள் மற்றும் பிற தேசிய வளங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, சாமானிய மக்களை சுரண்டி தனது லாபத்தை அறுவடை செய்கின்றனர்.
ஒரு திட்டமிட்ட பொருளாதாரம் பொதுத்துறையை விரிவுபடுத்துவதற்கு உதவும்,இது பலவீனமான இலங்கை முதலாளித்துவ வர்க்கம் வழங்கத் தவறிய வேலைகளை உருவாக்குகிறது. மேலும், அரிசி, சினி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையை முதலாளிகள் செயற்கையாக உயர்த்துவதைத் தடுக்க விலைக் கட்டுப்பாடுகள் இயற்றப்பட வேண்டும். இலங்கையின் தன்னலக்குழுக்கள் இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி விலைகளை உயர்த்தி, நாட்டைப் பணயக்கைதியாக வைத்து இலாபம் ஈட்டும் திட்டங்களுக்குச் சென்றுள்ளனர். ஒரு திட்டமிடப்பட்ட பொருளாதாரமானது வளங்கள் சந்தையின் விருப்பத்துக்கு அல்லாமல், தேவையின் அடிப்படையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது.
3. வாழ்க்கைச் செலவு நெருக்கடியைத் தீர்க்க விரைவான நடவடிக்கை
தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடிபொதுமக்களின் கழுத்தை நெரிக்கிறது. உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பான வேலைவாய்ப்புக்கான அணுகலை உறுதிசெய்து, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு உடனடி ஆதரவை எங்கள் திட்டம் கோருகிறது. இலங்கையின் சனத்தொகையில் 24.8% க்கும் அதிகமானோர் தற்போது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். தொழிலாள வர்க்கம், குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள், சுழலும் பணவீக்கத்தின் சுமையின் கீழ் உயிர்வாழ போராடி வருகின்றனர். இந்த நெருக்கடியை நேரடியான தலையீட்டின் மூலம் தணிக்க- யாரும் பின் தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
4. IMF க்கு மறுப்பு – சர்வதேச தொழிலாளர் ஒற்றுமையை கட்டி எழுப்புவோம்
IMF மற்றும் அதன் சிக்கன நடவடிக்கைகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். IMF என்பது உலக மூலதனத்தின் ஒரு கருவியாகும், இது இலாப வெறியர்களை வளப்படுத்த செல்வத்தை பிரித்தெடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அது சுமத்துகின்ற நவதாராளவாத சீர்திருத்தங்கள் – சமூக சேவைகளை வெட்டுதல், அரசு சொத்துக்களை தனியார்மயமாக்குதல் மற்றும் ஊதியங்களைக் குறைத்தல் – ஆகியன சாதாரண மக்களின் நெருக்கடிகளை மேலும் ஆழமாக்குகின்றன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல, மாறாக தெற்குலக நாடுகளை பாதிக்கும் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு பகுதியாகும். பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் வரை, மாலைதீவு முதல் லெபனான் வரை, கடன் சார்ந்து ஏகாதிபத்திய சுரண்டலின் அதே வடிவங்கள் காணப்படுகின்றன. சர்வதேச சொலிடாரிட்டியை கட்டியெழுப்புவதில் எமது தீர்வு உள்ளது. கடன் ரத்து, இழப்பீடு மற்றும் புதிய, நியாயமான பொருளாதார ஒழுங்கைக் கோருவதற்கு இதேபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் மற்ற நாடுகளில் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கிய முன்னணியை உருவாக்க நாங்கள் முன்மொழிகிறோம்.
5. வளங்களைப் பகிர்தல் மற்றும் பொருளாதார நீதி
முதலாளித்துவ வர்க்கம் பொதுமக்களைச் சுரண்டுவதன் மூலம் பணக்காரர்களாக வளர்ந்துள்ளனர்,பொதுச் சேவைகளான வீட்டு வசதி, சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை மீண்டும் கட்டியெழுப்பப் பயன்படுத்தப்படும் வருமானத்தை எடுக்க, பணக்கார தனிநபர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் மீது வருடாந்திர செல்வ வரியை நாங்கள் முன்மொழிகிறோம். இது தொண்டு அல்ல; அது நீதி. மில்லியன் கணக்கானவர்களை வறுமையில் ஆழ்த்திய ஒரு அமைப்பிலிருந்து செல்வந்தர்கள் இலாபம் அடைந்துள்ளனர். இப்போது அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
கூடுதலாக, கடுமையான வரிச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம், இது பெரிய நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் தங்கள் கடமைகளைத் தவிர்க்கும் வரிகளை மீட்டெடுப்பதை உறுதி செய்கிறது.
அவசரகால பொருளாதார நடவடிக்கையாக வரி சீர்திருத்தம் ஓரளவு நிவாரணம் அளிக்கலாம் என்றாலும், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் ஏழைகள் எதிர்கொள்ளும் நீண்ட கால பிரச்சனைகளை இது மட்டும் தீர்க்காது. முதலாளித்துவத்தின் கோரமான பிடியில் இருந்து வெகுஜனங்களை விடுவிக்க, தொழிலாளர் சார்பு கொள்கைகளை, சோசலிச கொள்கைகளை நாம் செயல்படுத்த வேண்டும். இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்த தொழிலாளர்கள் தலைமையிலான அரசு அமைப்பது அவசியம்.
- தேசியக் கோரிக்கை
இலங்கையின் தேசிய இன பிரச்சனையின் தீர்வாக மார்க்சிச நிலைப்பாட்டை நாங்கள் தொடர்ச்சியாக நிலை நிறுத்தி வருகின்றோம். அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகளையும் பாதுகாக்கும் அதே வேளையில் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் வாதிடுகிறோம். ஜே.வி.பி/என்.பி.பி தேசியப் பிரச்சினையை மறுக்கும் அதே வேளையில், ஒற்றையாட்சி அரசின் கீழ் சுயராஜ்யத்தை மட்டுமே PSA தெளிவற்ற முறையில் முன்மொழிகிறது, எங்கள் அணுகுமுறை தெளிவாக உள்ளது. ஐக்கிய வர்க்கப் போராட்டத்தை கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாக தேசிய ஒடுக்குமுறைக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். தேசிய உரிமைகள் உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளையும் வழங்குவதை இலக்காகக் கொண்ட வர்க்கப் போராட்டத்தை கட்டியெழுப்ப தொழிலாளர்களின் ஒற்றுமையை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
முடிவு: முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் புரட்சிக்கான தேவை
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது வெறும் நிதி நெருக்கடி மட்டுமல்ல; அது முதலாளித்துவத்தின் நெருக்கடி. பல தசாப்தங்களாக, தெற்குலகின் பெரும்பகுதியைப் போலவே, நாடும் கடனால் தூண்டப்பட்ட நவதாராளவாத சுரண்டல் அமைப்பில் சிக்கியுள்ளது. இதன் விளைவாக ஒரு மனிதாபிமான பேரழிவு ஏற்பட்டுள்ளது, மில்லியன் கணக்கானவர்கள் வறுமையில் ஆழமாக தள்ளப்பட்டனர், அதே நேரத்தில் முதலாளித்துவ வர்க்கம் தொடர்ந்து லாபம் ஈட்டுகிறது.
எங்களின் தீர்வு தெளிவானது: முதலாளித்துவ பேராசைக்கு மாற்றாக கடன் மற்றும் ஏகாதிபத்தியத்தின் தர்க்கத்தை நிராகரிக்கும் மார்க்சிச வேலைத்திட்டம்,இது மனித தேவையின் அடிப்படையிலான ஒரு சமூகத்தை கட்டமைக்கிறது. நாங்கள் நடத்தும் போராட்டம் இலங்கைக்கு மட்டுமல்ல, உலக முதலாளித்துவத்தின் மூலம் நசுக்கப்படும் உழைக்கும் அனைத்து நாடுகளுக்கும் ஆகும்.
தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து முற்போக்கு சக்திகளையும் இந்தப் போராட்டத்தில் எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம். நாம் ஒன்றிணைந்து, சோசலிச இலங்கையையும், சோசலிச தெற்காசிய கூட்டமைப்பையும், சோசலிச உலகத்தையும் கட்டியெழுப்ப முடியும்.