அதிகார சமநிலையை அசைத்த விஜய் அலை

Views: 7

அதிகார சமநிலையை அசைத்த விஜய் அலை

23.04.2026 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், மாநில அரசியல் அமைப்பையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புதிதாக களமிறங்கிய TVK (தமிழக வெற்றி கழகம்), நடிகர் ஜோசப் விஜய் தலைமையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சுமார் 35% வாக்குகளை கைப்பற்றியது. இந்த தேர்தல் முடிவுகள் அரசியல் விமர்சகர்களின் கணிப்புகளையும், எக்சிட் போல் கணிப்புகளையும் முற்றிலும் தவறாக நிரூபித்தன.இது தமிழக அரசியலில் எதிர்பாராத அதிர்வலையை உருவாக்கியுள்ளது. எனினும், ஆட்சியை தனிப்பட்ட முறையில் அமைக்க தேவையான முழு பெரும்பான்மை அவர்களுக்கு கிடைக்கவில்லை. 

ஆறு தசாப்தங்களாக தமிழ்நாட்டை ஆதிக்கம் செய்த இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகளும் தோல்வியைச் சந்தித்தன. ஆட்சியில் இருந்த DMK (திராவிட முன்னேற்றக் கழகம்) வெறும் 59 இடங்களை (24%) மட்டுமே பெற்றது. முக்கிய எதிர்க்கட்சியான AIADMK (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) 47 இடங்களை (21%) கைப்பற்றியது. DMK கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் VCK (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) தலா 2 இடங்களை வென்றன. காங்கிரஸ் 5 இடங்களை (3.3%) பெற்றது. BJP (பாரதிய ஜனதா கட்சி) மிகக் குறைந்த வித்தியாசத்தில் ஒரு இடத்தை மட்டும் வென்றது; அதன் வாக்கு விகிதம் 2.9% ஆக இருந்தது.

DMK-வின் தேர்தல் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள், VCK மற்றும் காங்கிரஸ் ஆகியவை, “அரசியலமைப்பு நெருக்கடியையும் குடியரசுத் தலைவரின் ஆட்சியையும் தவிர்க்கவும்”, மேலும் “பின்வாசல் வழியாக BJP நுழைவதைத் தடுக்கவும்” என்ற காரணங்களை முன்வைத்து, TVK அரசு அமைக்க நிபந்தனையற்ற ஆதரவை வழங்கின. கம்யூனிஸ்ட் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடும் தேர்தல் சந்தர்ப்பவாதமும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளிலும் நன்கு அறியப்பட்டவையே.மேற்கு வங்காளத்தில் அவர்கள் எதிர்கொண்ட கடுமையான சரிவிற்கு, தொடர்ச்சியான அரசியல் தோல்விகளும் மக்களிடையே நம்பிக்கையை இழந்ததுமே முக்கிய காரணங்களாக அமைந்தன. இன்று BJP மேற்கு வங்காளத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று, மாநில அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. அதற்கு அவர்கள் பொறுப்பெடுக்க தயாராக இல்லை. 

தேர்தல் பின்னணியில் நடைபெற்ற அரசியல் நகர்வுகளில், விஜயை ஆட்சியில் இருந்து தடுக்க எதிர்க்கட்சியான AIADMK-உடன் ஒப்பந்தம் செய்வதைப் பற்றி DMK ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகின. இது, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள DMK எந்த அளவுக்கு செல்லத் தயாராக இருந்தது என்பதையும் அதன் அரசியல் சந்தர்ப்பவாதத்தையும் வெளிப்படுத்தியது.

AIADMK இந்தத் தேர்தலில் BJP-யுடன் கூட்டணியில் போட்டியிட்டிருந்தது. அந்தக் கூட்டணிக்கு ஆதரவு வழங்குவது VCK மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மிகுதியான ஒரு அரசியல் சமரசமாக இருந்தது. இருந்தபோதிலும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அப்போது பதவியில் இருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தங்களின் தொடர்ந்த ஆதரவை உறுதியளித்தன. ஆனால் காங்கிரஸ் முழுமையாக தனது நிலைப்பாட்டை மாற்றி, TVK-வுடன் கூட்டணியில் இணைந்தது. விஜயின் வெற்றியை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், ராகுல் காந்தி கூட விழாவில் பங்கேற்க வந்தார். 

இந்த அரசியல் சதி மற்றும் பின்னணி ஒப்பந்தங்களையே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நிராகரித்தனர். வாக்களித்த இளைஞர்களில் சுமார் 21% பேர் முதல் முறையாக வாக்களித்தவர்கள். குழந்தைகள் உட்பட பல இளைஞர்கள், தங்கள் பெற்றோர்களையும் குடும்ப மூத்தவர்களையும் TVK-க்கு வாக்களிக்க அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை திராவிடக் கட்சிகளின் அரசியல்வாதிகள் “அரசியல் அறிவில்லாதது”, “குழந்தைத்தனமானது” என்று அலட்சியப்படுத்தினர். இளைஞர் வாக்காளர்களை குறிவைத்து விமர்சனங்களும் அவமதிப்புகளும் தொடர்ந்து நடத்தப்பட்டன. ஆனால் தேர்தலுக்கு முன்பும் தேர்தல் பிரசார காலத்திலும் விஜய் மற்றும் TVK மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், எதிர்பாராத விதமாக வாக்காளர்களை மேலும் ஒன்றிணைத்தன. அதன் விளைவாக, தமிழ்நாடு தேர்தல் வரலாற்றிலேயே சாதனை அளவான 84.69% வாக்குப்பதிவு பதிவானது.

இந்த “புதிய” இளைஞர் வாக்காளர்கள், அரசியல் அமைப்பின் பார்வையில் “அரசியல் நுண்ணறிவு அற்றவர்கள்” ஆக இருக்கலாம். ஆனால் அவர்கள் வெறுத்து போயிருந்தனர். அவர்கள் மாற்றத்தை விரும்பினர். மாநிலம் வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருந்தபோதிலும் அவர்களின் பார்வையில், இரண்டு திராவிடக் கட்சிகளுக்கிடையேயான நீண்டகால அரசியல் முட்டுக்கட்டை, தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கை நிலை உருவாக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தியிருந்தது 

தமிழ்நாட்டின் மாநில உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 11% முதல் 13% வரை பதிவாகியிருந்தது; இது உலகிலேயே மிக உயர்ந்த வளர்ச்சி விகிதங்களில் ஒன்றாகும். வெளிநாட்டு முதலீடுகள் (FDI) அதிக அளவில் வந்ததும், மாநிலத்தில் உருவான ஏராளமான தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டை இந்தியாவின் முக்கிய தொழில்துறை மையமாக மாற்றின. அதே நேரத்தில், மாநிலம் உருவாக்கும் பெருமளவான பட்டதாரிகள் மலிவான திறமையான தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டனர்.

தமிழ்நாடு அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள், மருத்துவர்கள், மற்றும் ஆராய்ச்சியாளர்களை உருவாக்குகிறது. இவர்களில் பலர் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா போன்ற நாடுகளில் வேலை செய்தும் உலகம் முழுவதும் பயணித்தும் உள்ளனர். சமூக ஊடகங்கள் மூலம், இந்த பொருளாதார வளர்ச்சியால் எவ்வாறான வாழ்க்கை சாத்தியமாக இருக்க முடியும் என்பதையும் இளம் தலைமுறை நெருக்கமாகக் கண்டது. அந்த வளர்ச்சியில் தங்களுக்கும் ஒரு பங்கு வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் ஒரு கோடி பெயர்கள் நீக்கப்பட்டதும் வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது தேர்தல் மோசடிகளைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டது. இதன் விளைவாக, முந்தைய தேர்தலை ஒப்பிடுகையில் தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. பலர் இதை, திராவிடக் கட்சிகளின் தாக்கத்தை குறைக்க BJP தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட அரசியல் நடவடிக்கையாகக் கண்டனர்.

அதேவேளை, பணம் கொடுத்து வாக்குகளை பெறுவது போன்ற பழைய தேர்தல் முறைகேடுகள் முழுவதுமாக மறைந்துவிடவில்லை. ஆனால் முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை அவை கணிசமாக குறைந்திருந்தன. இந்திய தேர்தல் அரசியலில் இத்தகைய நடைமுறைகள் தொடர்ந்து ஒரு பங்காற்றிக்கொண்டே இருந்தன. ஆனால் விஜயின் வெற்றியை வெறும் தேர்தல் கணக்கீடுகள் அல்லது பாரம்பரிய அரசியல் பகுப்பாய்வுகள் மூலம் மட்டும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. உலகம் முழுவதும் பாரம்பரிய அரசியல் கட்சிகள் வேகமாக பலவீனமடைந்து வருகின்றன; அதே நேரத்தில் மக்கள் ஆதரவை மையமாகக் கொண்ட பொபுலிச அரசியல் சக்திகள் எழுச்சி பெற்று வருகின்றன.

அதிகரித்து வரும் சமூகப் பிளவுகளும், சுரண்டல்மிக்க ஜனநாயக விரோத முதலாளித்துவக் கொள்கைகளும், புதிய தலைமுறையின் பெரிய பகுதியை ஓரங்கட்டியுள்ளன. இதனால் எதிர்காலம் குறித்த நம்பிக்கை பல இளைஞர்களிடம் சிதைந்துள்ளது. பல வளர்ந்து வரும் நாடுகளில் குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல், மற்றும் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய கோபம் காணப்படுகிறது. பாரம்பரிய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புகளின் மீது நம்பிக்கை இழப்பு என்பது இன்று உலகளாவிய ஒரு பொதுவான நிகழ்வாக மாறியுள்ளது. இதனுடன் தமிழ்நாட்டு அரசியலில் சினிமாவின் தாக்கத்தையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். பல்வேறு தருணங்களில் பாரம்பரிய அரசியல் கட்சிகள், தங்களின் புகழை அரசியல் மூலதனமாக மாற்றக்கூடிய பிரபலங்களிடம் தனது செல்வாக்கை இழந்துள்ளன.

நேபாளத்தில் ராப்பர் அரசியல்வாதியாக மாறிய பலேந்திர ஷா (பாலன்), மிக வேகமான எழுச்சியைப் பெற்று, 35 வயதிலேயே மிகப்பெரிய வெற்றியுடன் பிரதமராக உயர்ந்தார்.இது தென் ஆசியாவிலும் குறிப்பாக இந்தியாவிலும் புதிதான ஒன்று அல்ல. திரைப்பட நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.), DMK-யிலிருந்து பிரிந்து AIADMK-வை உருவாக்கி, 1977ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார். அதன் மூலம் நீண்டகால அரசியல் ஆதிக்கத்திற்குத் தொடக்கம் வைத்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது நெருங்கிய தோழியும் திரைப்பட இணை நட்சத்திரமுமான ஜெ. ஜெயலலிதா, தனது மரணம் வரை தமிழ்நாட்டு அரசியலை ஆட்சி செய்தார்.

இரு திராவிடக் கட்சிகளும் தங்களின் அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பல்வேறு கலாச்சார ஊடகங்களை — குறிப்பாக சினிமா மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றை — தொடர்ந்து பயன்படுத்தி வந்தன. கடந்த காலங்களில் சினிமா நட்சத்திரங்களின் அரசியல் எழுச்சி, பெரும்பாலும் மக்கள் ஆதரவை மையமாகக் கொண்ட அல்லது முற்போக்கான, இடதுசாரி சாயல் கொண்ட கொள்கைகளுடன் இணைந்திருந்தது. ஆனால் விஜயின் எழுச்சி வேறுபட்ட ஒன்றாகத் தோன்றுகிறது.

ஒரு வாக்காளர் கூறியதுபோல் வாக்களிப்பது என்பது ஒரு கச்சேரிக்குச் செல்வது அல்லது சினிமாவுக்குப் போவது போல நடத்தப்பட்டது. புதிய தலைமுறையினரிடம் பாரம்பரிய ஊடகங்களை விட சமூக ஊடக “இன்ஃப்ளூயன்சர்கள்” அதிக செல்வாக்கைப் பெற்றிருப்பது, அரசியல் அமைப்பினரால் “டிஜிட்டல் ரவுடித்தனம்” என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் இளைஞர் வாக்காளர்களையும் இளம் பெண்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்தபோதெல்லாம், அந்தப் பிரிவினரின் அரசியல் திரளாக்கமும் மேலும் வலுப்பெற்றது.

தேர்தல் காலத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் தடைசெய்யப்பட்டதும், எதிர்பார்த்த விளைவைக் கொடுக்கவில்லை; மாறாக அது விஜய்க்கு ஆதரவான உணர்வுகளை மேலும் தூண்டியது. “அவர்கள் அனைவரும் என்னை மட்டும் குறிவைத்து தாக்குகிறார்கள். அதற்குப் பின்னால் என்ன காரணம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று விஜய் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “ஏனெனில் அவர்கள் அனைவரும் ஒரே அரசியல் கட்சியில் இருக்கிறார்கள் ” என்று பதிலளித்தார். மேலும், “நான் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கிறேன் — அது ஒரு தவறா?” என்றும் அவர் வலியுறுத்தினார்.

DMK மற்றும் AIADMK இரு திராவிடக் கட்சிகளின் பல வேட்பாளர்கள் கடந்த காலத்தில் பல ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்பது மறைக்கப்பட்ட விஷயம் அல்ல. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற DMK/AIADMK வேட்பாளர்களில் 90% க்கும் அதிகமானோர் கோடீஸ்வரர்கள் எனவும், சுமார் 70% பேர் தங்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் இருப்பதாக தெரியவருகிறது. மேலும், இந்த வேட்பாளர்களின் நடுத்தர வயது 57 முதல் 59 வரை இருக்கின்றனர். 

DMK கட்சி கருணாநிதி குடும்பத்தின் தலைமையிலேயே நீண்ட காலமாக இயங்கி வருகிறது: மு.க. ஸ்டாலின் அவரது மகன். மற்றும் அவரது மகன் உதயநிதி சட்டமன்றத்தில் முக்கியமான அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார்; அவர் முன்பு தனது தந்தையால் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.இத்தகைய குடும்ப ஆதிக்க அரசியல் (nepotism) காங்கிரஸ் உட்பட முக்கிய கட்சிகள் அனைத்திலும் காணப்படுகிறது. இது பரவலான மக்கள் அதிருப்திக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இந்தக் குடும்பம் நாட்டின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த அரசியல் குடும்பங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

DMK கட்சி “குடும்ப விசுவாசத்தை” (family loyalty) கவனமாக உருவாக்கி வளர்த்ததாகவும் கூறப்படுகிறது; அக் குடும்ப வட்டத்துக்கு வெளியே உள்ளவர்கள், அழுத்தம், கைது நடவடிக்கைகள் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருந்தது. சுத்திகரிப்பு தொழிலாளர்கள் தங்களின் வேலைநிலைகள் மற்றும் ஊதிய உயர்வுக்காக நடத்திய போராட்டங்களை ஒடுக்கிய சம்பவங்கள், தொழிலாளர்கள் கோரிக்கைகளுக்கு எதிரான கட்சியின் அணுகுமுறையை வெளிப்படுத்தியதாக இருந்தது.

வாரிசு அரசியல் (ஒரே குடும்பம் அரசியலில் தொடர்ந்து அதிகாரம் பெறுவது) மற்றும் ஊழல் என்பது பல காலமாக இருந்து வரும் விஷயங்கள். ஆனால் இப்போது மாற்றமாக, மக்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர், எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், இந்த மறுப்பு நேரடியாக TVK-க்கு ஒருங்கிணைந்த ஆதரவாக மாறியது என்று கூற முடியாது. TVK கட்சி உருவாகி வெறும் இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், அதன் பின்னால் இருந்த முக்கிய சக்தி விஜயின் ரசிகர் அடிப்படை மட்டுமே ஆகும். இந்த ரசிகர் வலையமைப்பு தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் இலங்கை மற்றும் வெளிநாட்டு தமிழர் புலம்பெயர்ந்த சமூகங்களிலும் பரவியுள்ளது. ரசிகர் சங்கங்களை அரசியல் அமைப்புகளாக மாற்றுவது மற்றும் பெரும் “மக்கள் கூட்டங்களை” ஒருங்கிணைப்பது TVK-வின் முக்கிய அரசியல் உத்தியாக இருந்தது. ஆனால் அதனைத் தாண்டி தெளிவான கொள்கைத் திட்டங்கள், தொடர்ச்சியான மக்கள் நல அடிப்படையிலான அரசியல் நிலைப்பாடுகள், அல்லது வழக்கமான பத்திரிகையாளர் சந்திப்புகள், கடுமையான அரசியல் உரைகள் போன்றவை எதுவும் கணிசமாக உருவாக்கப்படவில்லை.

அதற்கு பதிலாக, சமூக ஊடகங்கள் இந்த இயக்கத்தின் முக்கிய கருவியாக செயல்பட்டன. இளைஞர்கள் மட்டுமல்லாமல் சிறுவர்கள் கூட, தங்கள் பெற்றோர்களை TVK-க்கு வாக்களிக்க ஊக்குவிக்கும் அளவிற்கு ஒரு உணர்ச்சி சார்ந்த அரசியல் அலை உருவாக்கப்பட்டது. இதன் மூலம் உருவான பெரும்பாலான அரசியல் “உணர்வு”, பாரம்பரிய கொள்கை விவாதங்களை விட அதிகமாக சமூக ஊடகப் பரப்புரையிலேயே நிலைநிறுத்தப்பட்டது. TVK தலைமையிலான அரசின் ஒரு கற்பனை மற்றும் எதிர்பார்ப்பு கூட பெரும்பாலும் விஜயின் திரைப்படப் படிமங்களின் வழியாகவே மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனால், இது ஒரு வழக்கமான அரசியல் இயக்கமாக அல்லாமல், கலாச்சாரம், புகழ் மற்றும் சமூக ஊடக உந்துதல் ஆகியவற்றின் கலவையாகவே உருவெடுத்தது.

தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட திட்டங்களில், விகிதாசார தேர்தல் முறை (proportional electoral system) அறிமுகம், மோடியின் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” கொள்கைக்கு எதிர்ப்பு, முதியோருக்கு ரூ.3,000 (சுமார் £30) உதவித்தொகை, ஒவ்வொரு குடும்பத்திலுள்ள பெண்களுக்கு ரூ.2,500 (சுமார் £25) வழங்குதல், அரை மில்லியன் AI நிபுணர்களை பயிற்றுவிப்பதற்கான நிதி ஒதுக்கீடு, மற்றும் ஒரு சிறப்பு AI நகரம் அமைத்தல் போன்றவை முக்கியமாக குறிப்பிடப்பட்டன.

எனினும், இந்தக் கொள்கைகள் முழுமையாக புதியவை அல்ல. ஆட்சியில் இருந்த DMK கூட இதே போன்ற பல திட்டங்களை முன்பே அறிவித்திருந்தது. உண்மையில், மற்ற எந்தக் கட்சியையும் விட DMK அதிக மக்கள் நலவாத (populist) வாக்குறுதிகளை வழங்கியதாகவும் கூறலாம்; இதுவே கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்தக் கூட்டணியில் தொடர்ந்ததற்கான முக்கிய காரணமாகவும் விளக்கப்படுகிறது.

மற்ற கட்சிகளும் இதே போன்ற மக்கள் கவர்ச்சி வாக்குறுதிகளை முன்வைத்தன. NTK (Naam Tamilar Katchi – நாம் தமிழர் கட்சி), இந்த தேர்தலில் 3.9% வாக்குகளுக்கு குறைந்து போனாலும், கடுமையான தமிழ்த் தேசியவாதத்துடன் கூடிய நீண்ட மக்கள் நலத் திட்ட பட்டியலை முன்வைத்தது. அதேபோல், BJP உடன் கூட்டணியில் போட்டியிட்ட முக்கிய எதிர்க்கட்சியான AIADMK-வும் பல்வேறு மக்கள் நல வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்ட பிரசாரத்தையே நடத்தியது.

ஆனால் TVK, DMK கொள்கைகளுக்கு நேரடியான மற்றும் தெளிவான எதிர்ப்பை முன்வைத்தது என்று கூற முடியாது. தேர்தல் காலத்தில் அதன் ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் “உணர்ச்சி சார்ந்த” ஆதரவையே வெளிப்படுத்தினர். விஜயை நேரில் காண பெருமளவில் திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தாங்கள் எதை ஆதரிக்கிறோம் என்பதை தெளிவாக விளக்க முடியாத நிலையில் இருந்தனர்; அவர்கள் வெறுமனே விஜய் முதல்வராக வேண்டும் என்ற விருப்பத்தையே வெளிப்படுத்தினர். அவர்களுக்கு இது ஒரு புதிய தொடக்கம் போலவும், அதன் மூலம் தங்களின் இருப்பையும் செல்வாக்கையும் வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும் இருந்தது. TVK-வில் தெளிவான அரசியல் நிலைப்பாடுகளை விளக்கும் தலைவர் அமைப்பு அல்லது நீடித்த கொள்கை விளக்கம் அளிக்கும் தலைமைகள் இல்லாததும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இந்த விமர்சனங்கள் ஒரு அளவிற்கு நியாயமானவை என்றாலும், இதே நிலை மற்ற கட்சிகளின் தலைமை மற்றும் ஆதரவாளர்களிடமும் காணப்படுகிறது. இதனை சிலர் “அரசியலற்ற அரசியல் வெளிப்பாடு” (non-political political expression) என்று வரையறுத்தனர். ஆனால் இதை முற்றிலும் அரசியலற்றது என்று கூற முடியாது. சில அரசியல் ஆய்வாளர்கள் கூறும் வகையில், இது ஒரு புதிய வகை அரசியல் வெளிப்பாடு மட்டுமே ஆகும்.

அரசு புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே மிகக் குறைந்த வறுமை விகிதம் உள்ளது (சுமார் 1.5% முதல் 4.5% வரை) என்று தெரிவிக்கப்படுகிறது. வறுமை விகிதம் குறைந்திருக்கிறது என்பதைக் மட்டும் பார்த்து, எல்லா தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பட்டுவிட்டது அல்லது சம்பளம் உயர்ந்துவிட்டது என்று சொல்ல முடியாது. பலரின் வருமானம் இன்னும் குறைவாகவே இருக்கிறது – அல்லது வாழ்க்கைத் தரத்தில் பெரிய மாற்றம் இல்லை. குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் பணியாளர்கள் இதில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும், பொது வாழ்க்கைச் செலவினங்களின் அதிகரிப்பும் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் முக்கிய துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதற்கேற்ற வருமான உயர்வைப் பெறவில்லை. சேவைத் துறைகளில் பணிபுரிபவர்களின் சராசரி ஊதியம் மாதம் £40 முதல் £2500 வரை மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் அதிகபட்சமாக £250 வரை மட்டுமே கிடைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தூய்மை பணியாளர்கள் பல ஆண்டுகளாக தங்களின் ஊதியம், வேலைநிலை மற்றும் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகளுக்காக போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் நடத்தி வந்துள்ளனர். கையால் மலக்கழிவு அகற்றுதல் ( manual scavenging) இன்னும் சில பகுதிகளில் தொடர்கிறது. அரசு இந்த துறைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கை எடுப்பதையே தீர்வாக முன்வைத்தது.  அது தொழிலாளர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டதை அறிவோம். இந்த சூழலில், ஸ்டாலின் தலைமையிலான அரசு தொழிலாளர்களின் போராட்டங்களில் ஈடுபட்ட பலரை கைது செய்த, அதே நேரத்தில் தனியார்மயமாக்கல் கொள்கைகளை முன்னெடுத்தது. தேர்தல் காலத்தில் விஜய், இந்த தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக நிற்பதாக வாக்குறுதி அளித்தது, இதனால் இந்தத் தொழிலாளர் சமூகத்தின் ஒரு முக்கிய பகுதியின் கவனம் TVK பக்கம் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், ஆசிரியர்கள் நீண்ட காலமாக நல்ல ஊதியம், வேலைநிலை மேம்பாடு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக தீவிரமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். TVK இந்த கோரிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தது. இதுபோன்ற வாக்குறுதிகள், DMK அரசுக்கு எதிராக போராடி வந்த பல்வேறு சமூகக் குழுக்களிடமும் வழங்கப்பட்டது.

விஜய் தலைமையிலான அரசு இந்தக் கொள்கைகளை உண்மையில் நடைமுறைப்படுத்துமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தனது முதல் உரையில் அவர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நேரம் வேண்டும் என்று கூறியதோடு, மாநிலத்தின் நிதி நிலை (வருமானம், செலவுகள், கடன் போன்றவை) பற்றி முழுமையாக தெளிவாகவும் உறுதியாகவும் தெரியவில்லை என்று கூறினார். அதனால், அரசின் கையிருப்பில் என்ன உள்ளது, என்ன இல்லை என்பதை தெளிவுபடுத்த ஒரு வெள்ளை அறிக்கை (white paper) வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். ஆனால் பொதுச் சேவைகளில் பெரும் முதலீட்டை அதிகரித்து, ஊதியங்களை உயர்த்தி, தனியார்மயமாக்கலை நிறுத்தும் அளவிற்கு கொள்கை மாற்றங்களைச் செய்ய முடியுமா என்பது இன்னும் தெளிவாக இல்லை. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் எடுத்த நடவடிக்கைகளில், எதிர்பார்க்கப்பட்ட பெரிய மாற்றம் அல்லது தெளிவான முன்னேற்றம் இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை. மேலும், TVK சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 30% க்கும் அதிகமானோர் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக ஒரு அறிக்கை குறிப்பிடுகிறது. இது புதிய அரசின் நிர்வாக நம்பகத்தன்மை மற்றும் அரசியல் ஒழுங்கு குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. 

கம்யூனிஸ்ட் கட்சிகள் (CPI மற்றும் CPI(M)) ஆதிக்கம் செலுத்தும் இடதுசாரி சக்திகள், தொழிலாளர்களுக்கான சுயாதீன அரசியல் பிரதிநிதித்துவத்தை உருவாக்கும் நோக்கத்தில் செயல்படவில்லை. தேர்தலுக்கு முன்பு, “பாஜக மற்றும் இந்துத்துவ சக்திகளைத் தடுக்க தமிழ்நாட்டில் DMK தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்” என அவர்கள் வாதிட்டனர். ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, DMK தோல்வியைத் தொடர்ந்து TVK-க்கு ஆதரவு தெரிவித்தனர்; இதன் நோக்கம் BJP “பின்னால் வழியாக” அதிகாரத்தில் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்பதாக கூறப்பட்டது. மேற்கு வங்காளத்தில், TMC அரசுக்கு எதிரான வலுவான எதிர்ப்பு அலை (anti-incumbency) காரணமாக அதன் தோல்வியை அவர்கள் விளக்கினர். தற்போது அவர்கள் கட்சி Politburo மற்றும் Central Committee ஒரு முழுமையான ஆய்வை மேற்கொண்டு எதிர்கால நடவடிக்கை திட்டத்தை உருவாக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் அந்த “புதிய திட்டம்” மீண்டும் காங்கிரஸை ஆதரிப்பதாகவே இருக்கும் என்று பலரும் அறிவர்; இதன் நோக்கம் “பாசிசத்தைத் தடுக்க” என்பதாக அவர்கள் விளக்கம் தருவர்.

அவர்கள் ஆய்வுகளில், தொழிலாளர்கள் ஏன் ஊழல் மற்றும் முதலாளித்துவ அடிப்படையிலான பிராந்தியக் கட்சிகளையே தொடர்ந்து ஆதரிக்க கூடாது என்ற அடிப்படை கேள்விகள் இடம்பெறாது . தேர்தல் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். வர்க்கத்தை ஒருங்கமைப்பது, போராட்டத்தை கட்டமைப்பது, மற்றும் சுயாதீன அரசியல் மாற்றத்தை உருவாக்குவது ஆகியவை அவர்களின் செயல்திட்டத்தில் முக்கிய இடம் பெறவில்லை. பெரும் வாக்குப்பதிவு நடந்திருந்தபோதிலும், பல தொழிலாளர்கள் மாற்று அரசியல் வழிகளைத் தேடிக் கொண்டிருப்பதை பார்க்காலாம். கடந்த தேர்தலில் NOTA (None of the Above) 0.4% வாக்குகளைப் பெற்றது; இது CPI மற்றும் CPI(M) கட்சிகள் பெற்ற 0.6% வாக்குகளுக்கு மிகவும் அருகிலானதாகும். 

விஜயின் வெற்றி, இந்தியாவில் தேர்தல்கள் கட்டாயமாக கூட்டணிகளின் மூலமே நடத்தப்பட வேண்டும் என்ற கம்யூனிஸ்ட் கட்சிகளின் நீண்டகால வாதத்தையும் சவால் செய்கிறது. ஆட்சிக் கூட்டணியில் இருந்தபோது, தொழிலாளர் நலன்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு அவர்கள் வெளிப்படையாக எதிர்ப்பை பதிவு செய்யவில்லை; சில சமயங்களில் முதலமைச்சரிடம் வேண்டுகோள் வைப்பதிலும், போராட்டங்களுக்கு “ஆதரவு போல” நடிப்பதிலும் மட்டுமே ஈடுபட்டனர்.

ஆனால் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைந்த அமைப்பாக செயல்பட்டு, உண்மையான போராட்ட சக்தியை உருவாக்கவில்லை. பெரிய தொழிற்சங்கங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், பரவலான மக்கள் ஆதரவு இருப்பதாகவும் அவர்கள் கூறினாலும், அதை ஒரு வர்க்க அடிப்படையிலான போராட்டமாக மாற்ற பயன்படுத்தவில்லை. இதன் விளைவாக, அவர்கள் பழைய சமூக ஜனநாயகக் கட்சிகளின் பலவீனமான பிரதிபலிப்பாக மாறி, தங்களின் கொள்கை மற்றும் அரசியல் பார்வையை வெறும் தேர்தல் இலாபத்திற்கே குறைத்துவிட்டனர்.

“பாஜக தனது அரசியல் சக்தியை வலுப்படுத்த பிரிவினை உருவாக்கும் முறைகளை பயன்படுத்துகிறது என்பது உண்மை. ஆர்.எஸ்.எஸ்.-இன் பாசிசமையம் இன்னும் தமிழ்நாட்டில் சில வேர்களை கொண்டுள்ளது. TVK உட்படஅனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும், தங்களை மதச்சார்பற்றவை (secular) என்று அறிவித்து, சனாதனத்தை எதிர்க்கின்றன. இந்த அரசியல் மரபு இதுவரை மத அடிப்படைவாத கருத்துகள் பெரிதாக வேரூன்றாமல் தடுப்பதில் ஒரு பங்காற்றியுள்ளது.

எனினும், இந்து மத அடிப்படைவாதம் (Hindu fundamentalism) என்பது வெறும் BJP வழியாக மட்டுமே விரிவடையும் ஒன்றல்ல. அது, வறுமை, ஊழல், வாரிசு அரசியல் (nepotism), மற்றும் பிராந்திய முதலாளித்துவ பிரதிநிதிகள் மூலம் ஏழை மக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள் ஆகியவை மக்கள் மத்தியில் கோபத்தையும் எதிர்ப்பையும் உருவாக்கும் சூழல்களிலும் வேரூன்றக்கூடும். அத்தகைய சூழலில், பரந்த அளவிலான தொழிலாளர் தலைமையிலான போராட்ட சக்தி இல்லாமை ஒரு முக்கிய குறையாக உள்ளது. அனைத்து வகையான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியாக ஒரு தளத்தை வழங்கும் அமைப்பு இல்லாததால், BJP மற்றும் அதன் மத-முதலாளித்துவ ஆதரவாளர்களை தோற்கடிப்பதை மேலும் கடினமாக்குகிறது.

சில சிறிய இடதுசாரி மற்றும் முன்னாள் மாவோயிஸ்ட் அமைப்புகள் தேர்தலில் TVK-க்கு ஆதரவு வழங்கின. அவர்கள், இது கொள்கை அடிப்படையில் அல்லாமல், இளைய தலைமுறையை ஈர்க்கும் ஒரு புதிய சக்தி என்ற காரணத்தினால் ஆதரிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டனர். ஆனால் இத்தகைய அணுகுமுறை, ஸ்டாலினிஸ்ட் மற்றும் மாவோயிஸ்ட் அமைப்புகள் நீண்ட காலமாக பின்பற்றி வரும் கூட்டணி அரசியலில் (coalitionist trap) மக்களை முடக்கி விடுகிறது. “சிறந்த தீமை” (lesser evilism) என்ற கருத்தே, இறுதியில் எதிர்வினை அரசியல் சக்திகள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கான பின்னணிக் கதவைத் திறந்து விடுகிறது. 

விஜய், சிறந்த எதிர்காலத்தை விரும்பும் புதிய தலைமுறை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற போவதில்லை. முந்தைய அரசின் “திராவிட பொருளாதாரம்” பெரும்பாலும் ஒரு பிரச்சாரமாகவே இருந்தது; நடைமுறையில் அது லாபத்தை மையமாகக் கொண்ட, சுரண்டல்மிக்க முதலாளித்துவ மாதிரியாகவே செயல்பட்டது. அதேபோல், விஜய் தலைமையிலான அரசின் பொருளாதாரக் கொள்கைகளும் அதிலிருந்து அடிப்படையாக வேறுபடாது. எனவே, இதை மாற்றுவதற்காக மார்க்சிஸ்ட்கள் மற்றும் பிற இடதுசாரி செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து அமைப்பாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இடதுசாரி இயக்கத்தில் உள்ள அனைத்து செயற்பாட்டாளர்களும், சமூக மாற்றத்தின் அவசரத் தேவையை உணர்ந்து, சுயாதீனமான மற்றும் ஜனநாயகமாக இயங்கும் ஒரு போராட்ட மேடையை உருவாக்க முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறோம்.

 

கஜன்