தமிழ்நாடு தேர்தல் – மார்க்சியர் எடுக்கவேண்டிய நிலைப்பாடு என்ன?

பொதுவுடைமை இயக்கத்தின் அறிக்கை – சென்னை

(புதிய சோஷலிச மாற்று)

தொடர்புகளுக்கு : pothuvudamaiiyakam@gmail.com

  1. வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. தமிழ் நாட்டின் 39   மாவட்டங்களில் 234 தொகுதிகளுக்கான தேர்தலில் 25க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்குபெற இருக்கின்றன. இருப்பினும் பெரும்பான்மைக் கட்சிகள் இரு திராவிட கட்சிகளுடனான கூட்டனியாகவே பங்குபற்றுகின்றன. தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இயங்கும்- திராவிட முன்னேற்றக் கழகம் (தி மு க) தலைமையில் ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி’ (இந்திய அளவில்N.D.I.A. கூட்டணி) ஓன்று. இவர்கள் கடந்த தேர்தலில் 45.38% வாக்குகளை பெற்று 159 தொகுதிகளை கைப்பற்றி இருந்தார்கள். மற்றது -எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் இயங்கும் அண்ணா திராவிட்ட முன்னேற்றக் கழகம் (அ தி மு க) தலைமையில் இயங்கும் ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’. இவர்கள் கடந்த தேர்தலில் 39.72% வாக்குகளைப் பெற்று 75 தொகுதிகளை கைப்பற்றி இருந்தார்கள். இவை தவிர சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி (கடந்த தேர்தலில் 6.58% வாக்குகள்), நடிகர் விஜய் தலமையில் இயங்கும் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுகின்றன.

 

  1. இந்த தேர்தலில் தமிழக தொழிலாளர், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் அனைத்து ஒடுக்கப்படும் மக்களும் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? இவர்களின் பிரதிநிதிகளாக இயங்குவதாக சொல்லும் மார்க்கசிய கட்சிகள் எந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் ? தொழிலாளர் வர்க்கம் சார்ந்த நிலைப்பாடு என்ன?

 

  1. வழக்கம் போலவே யாருடன் யார் கூட்டுச்சேர்ந்து இயங்குவது என்ற உரையாடல்தான் மேலோங்கி உள்ளது. இரண்டு அடிப்படை கருத்துநிலை சார்ந்து இந்த உரையாடல்கள் மற்றும் தமது நிலைப்பாடுகளை நியாயப்படுத்தல் நிகழ்கிறது. ஓன்று மித தீமை வாதம், மற்றது நடைமுறை வாதம்.

 

  1. மக்களுக்கு முன் இருக்கும் தேர்வில் எது மித தீமையான தேர்வோ அதற்கு ஆதரவு தருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற வாதத்தை ‘குறை தீமை’ வாதம் (ஆங்கிலத்தில் Lesser Evilism ) எனக் குறிப்பிடுவர். அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடிய பக்கம்தான் நிற்க வேண்டும் – அதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கும் கட்சிகளுக்கு வாக்கு வழங்குவது வீணாகப் போய் விடும் அல்லது குறை தீமைக் கட்சி அதிகாரத்தைப் பிடிக்க உதவி விடும் என வாதிக்கப் படுகிறது. அத்தோடு சிறு கட்சிகள் அதிகாரம் பற்றி பேசுவது நடைமுறைக்கு சாத்தியம் அற்றது என நடைமுறை வாதமும் இணைந்து கொள்கிறது. எது சாத்தியம் என்பது முதன்மைப் படவேண்டும், அதன் அடிப்படையில் சாதிக்க கூடியவைகளை – அல்லது அதன் மூலம் பெறக்கூடியவைகளை பெற்றுக் கொள்வதுதான் நடைமுறைக்கு சாத்தியான விசயம் எனச் சொல்லப்படுகிறது.

 

  1. இத்தகைய வாதங்கள் பிரதான படுவதற்கான காரணங்களில், தேர்தல் முறை, சரியான மாற்று இன்மை ஆகிய காரணிகள் முக்கிய பங்களிக்கின்றன. விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை (பல குறைபாடுகள் உள்ள பொழுதும்) சிறிய கட்சிகளுக்கு தமது குரலை பலபடுத்த, கூடிய வாய்ப்பை வழங்குகிறது. மாறாக பெரும்பான்மை வாக்கு பிரதிநிதித்துவ முறை சிறிய கட்சிகளின் குரல்களை முடக்கி விடுகிறது. தொழிலாளர்களுக்கும், ஒடுக்கப்படும் மக்களுக்குமான சரியான அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத வெற்றிடத்தில் – அதாவது தெளிவான தேர்வு அவர்களுக்கு இல்லாத இடத்தில்தான் ‘குறை தீமை’ வாதம் நுழைகிறது. எவர் குறைந்த தீமை என பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது – அதுவே நடைமுறைக்கு சாத்தியமான ஓன்று என வாதிக்கப்படுகிறது.

 

  1. புரட்சிகர கட்சிகள் சில சமயங்களில் தனித்து இயங்காமல் பொதுவான கூட்டு நோக்கி செல்லும் தேவைக்கு உள்ளாக்கப் படுவதுண்டு. சரியான மாற்று இல்லாத இடத்தில் அதி மிகையான தீமை தரும் போக்குகளை (– உ+ம் பாசிச கட்சிகள் – )எதிர்க்க அனைத்து எதிர்ப்பு சக்திகளையும் இணைக்க – அதாவது குறை தீமை அமைப்புக்கள்/ கட்சிகளுடன் இணைய வேண்டிய தேவை ஏற்படுகிறது. முழுமையான மாற்று என்ற நிலை இல்லாத பொழுது –  அதை நோக்கி நகரும் வாய்ப்பு இருக்கும் நிலையில் – அத்தைகைய கொள்கைகளை ஆதரிக்கும் முறையிலும் சில கட்சிகளை சார்ந்து இயங்கும் நிலை ஏற்படுகிறது. தவிர சில கட்சிகளுக்கு ‘நிபந்தனைகளுடனான’ ஆதரவு வழங்கும் நிலையும் சில சந்தர்பங்களில் ஏற்பட்டு விடுகிறது. குறிப்பாக தொழிலாளர் நலன்களைக் காப்பாற்ற – மோசமான வன்முறை முடக்கும் நடவடிக்கைகளை முறியடிக்க இத்தகைய ‘கூட்டு’ திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டி ஏற்படுகிறது. தொழிலாளர் சார்ந்த திட்டமிடல் என்பது எல்லா நேரத்துக்கும் பொருந்தும் என முன்கூட்டி எழுதிவைக்கப்பட்ட சூத்திரம் அல்ல. மாறாக நெகிழ்வுத் தன்மை கொண்டதே. ஆனால் இந்த திட்டமிடல்களை வழிநடத்தும் அடிப்படை, சமரசமற்ற முறையில் தெழிலாளர் நலன்களை முதன்மைப்படுத்தும் அரசியல் கொள்கை சார்ந்ததாக இருக்க வேண்டும்.

 

  1. ஆனால் கொள்கை பின்னோக்கி தள்ளப்பட்டு தேர்தலில் வாக்குகளை வெல்லுதல்தான் இன்று முதன்மைப்பட்டுள்ளது. அதற்காக கொள்கைகள் திரிபு செய்யப்பட்டு – கூட்டணி தீர்மானங்கள் எடுக்கப்படுகிறன. இவை தொளிளலார்/ ஒடுக்கப்படுவோர் நலன்களை முதன்மைப்படுத்துவதற்காக நிகழவில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் இந்து மத வலதுசாரிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியை (பா ஐ, க) பாசிச கட்சி என வர்ணிப்பது தேர்தல் நோக்கத்துக்காக மட்டுமே செய்யபடுகிறது. இந்தியாவில் பாசிசம் ஆட்சியில் இருக்கிறது என்றால் இந்தியாவில் இருக்கும் இடதுசாரிகள் உட்பட, தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இருக்கும் அனைத்து முற்போக்கு சக்திகளும் முன்னெடுக்க வேண்டிய திட்டமிடல் தீவிர பாசிச எதிர்ப்பு போராட்டத்தை முன்வைப்பதாக இருக்க வேண்டும். எந்த ஒரு நாட்டில் பாசிச அதிகாரம் உருவாகினாலும் அதை எதிர்க்க, நாடு கடந்த திட்டமிடல் – வேலைத்திட்டம் தேவைப்படும். மாறாக தேர்தல் கூட்டணிகளை உருவாக்க மட்டும் ‘பாசிச’ வாதம் பயன்படுத்தப்படுகிறது. இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின் பொழுது இதே ‘பாசிச’ அரசின் ஆதரவாளர்களாக அனைவரும் இந்திய தேசியத்தின் பின் திரண்டதை நாம் பார்த்தோம். அவர்கள் சொல்லும் ‘பாசிச’ அரசின் கருவிகளாக இயங்குவதை ஏன் செய்கிறார்கள்? பல தருணங்களில் அவர்கள் சொல்லும் ‘பாசிசத்தை’ காத்துக் கொண்டு பாசிச எதிர்ப்புச் செய்யும் போலித்தனத்தைத்தான் நாம் பார்க்ககூடியாதாக இருக்கிறது.

 

  1. தமிழக அரசியல் சூழலில் இயங்கும் பெருமான்மை இடதுசாரி கட்சிகள் – கம்யுனிச கட்சிகள், ஸ்டாலினிச கொள்கையை, மாவோயிச கொள்கையை பின்பற்றி இயங்கும் பலரும் – தமது தேர்தல் நிலைப்பாட்டை நியாயப்படுத்த ஒரு கருத்தினையே முன்வைக்கிறார்கள். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-விற்கு ஆதரவு அளிக்காவிட்டால் பாசிச பா.ஜ.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடும் என்பதே அக்கருத்தாகும். முந்தைய தேர்தல்களில் நோட்டாவிற்கு வாக்கு செலுத்த வேண்டும் (அதாவது எவருக்கும் வாக்கு வேண்டாம் என்ற புறக்கணிப்பு நிலைப்பாடு) போன்ற நிலைப்பாடுகளை எடுத்த பலரும்கூட இந்த வாதத்தை நோக்கி நகர்ந்து வந்துவிட்டனர். பா.ஜ.க-வை பாசிச சக்தி என்று வரையறுப்பதும், பாசிசத்தை ஒழித்துக்கட்ட தி.மு.க-வின் ஆதரவைத் தவிர வேறு வழி இல்லை என்று பேசுவதன் மூலமும் தங்களின் கூட்டணி ஒப்பந்தத்திற்கு நியாயம் தேடுகின்றனர்.

 

  1. தி. மு. க மற்றும் அ. தி. மு. க கட்சிகள் பிராந்திய முதலாளித்துவ கட்சிகள். அவற்றை சமூக சனநாயக கட்சிகள் என்றுகூட வரையறுக்க முடியாது. தமிழக பொருளாதாரம் முன்னேறுவதற்கு காரணம் ‘திராவிட மாடல்’ பொருளாதாரம் என பெருமை பாராட்டப்படுகிறது. தி மு க. முதலாளிகளுக்கு பெரும் இலாபம் ஈட்டும் முதலாளித்துவக் கட்சியே. தமிழ் நாட்டில் மட்டும் 12 டாலர் பில்லியனர்கள் இருக்கிறார்கள். பில்லினியர்களின் எண்ணிக்கை உயரும் அளவு உழைக்கும் மக்களின் ஊதியத்தில் உயர்வு இருப்பது இல்லை. உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லாமல் இன்றளவும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் கடும் பணி சுமைகளுக்கு மத்தியில் தான் தங்கள் வாழ்கையைக் கடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆண்டுகள் போகப்போக ஊதிய பாகுபாடு கூடிக்கொண்டு வருகிறதேயொழிய குறைந்த பாடு இல்லை. திராவிட மாடல் என்பது முதலளித்துவ விதிகளை மீறிய ஒன்றோ – லாபத்தை நியாயமாக பங்கு போடும் மாடலோ அல்ல. திராவிட கட்சிகளின் தோற்றத்தின் போது முன்வைக்கப்பட்ட சமூக சீர்திருத்த கருத்துக்களை நடைமுறைக்குக் கொண்டுவரும் எந்த நோக்மும் இருக்கும் இந்த கட்சிகளுக்கு கிடையாது. இருப்பினும் முற்போக்கு முலாம் பூசிய பிரச்சாரங்கள் செய்வது – ஆதரவை தக்க வைக்க ஒரு சில திட்டங்களை அமுல் படுத்துவது என இயங்கி வருகிறது தி மு க.

 

  1. ஊடகத்தில் இருந்து சினிமா வரை பல துறைகளிலும் தி மு க முதன்மைக் குடும்பத்தின் ஆதிக்கமே அதிகமாக இருப்பதை அனைவரும் அறிவர். இதை அவர்கள் தம் தேர்தல் லாபத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பெரியாரியம் முற்போக்கு என சிலர் பேசிய போதும் அவர்கள் சாதி கட்டமைப்பை உடைத்தல் – போலிஸ் வன்முறை எதிர்த்தல் – ஊழல் மறுப்புச் செய்தல் – சனநாயக மறுப்பை எதிர்த்தல் போன்ற பல அவசியமான நடைமுறைகளை முதன்மைப் படுத்துவதில்லை. தொழிலாளர் போராட்டங்களை முடக்குதல் – ஒடுக்கப்படும் மக்களின் குறைந்த பட்ச கோரிக்கைகைள் ஏற்க மறுத்தல் செய்துவரும் இக்கட்சி சமூக நீதியை நிலைநாட்ட பாடுபடும் கட்சி அல்ல. பல முற்போக்கு கருத்துக்களை தமது தேர்தல் லாபத்திற்கு பயன்படுத்துவதே அவர்களின் தலையாய நோக்கமாக இருக்கிறது.

 

  1. இந்த கட்சிகள், பி ஜே பி உடன் கூட்டு வைக்க மறுப்பது கொள்கை அடிப்படையிலானதோ/ மக்கள் நலன் சர்ந்த்ததோ அல்ல. மாறாக தேர்தலில் வெல்லுவது சார்ந்த நிலைபாடு. தமிழக மக்களின் மத்தியில் பி ஜே பி க்கு இருக்கும் எதிர்ப்பு – மற்றும் சீர்திருத்த கொள்கை மற்றும் தமிழ் தேசிய கருத்துக்களுக்கு இன்றும் இருக்கும் ஆதரவு பி ஜே பி யின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வந்திருக்கிறது. பெரியாரிய சுயமரியாதை இயக்கம் தொடங்கி வைத்த – பின்பு திராவிட கட்சி பலப்படுத்திய – சீர்திருத்த கொள்கைகள் இன்றும் தமிழக கலாச்சாரத்தில் வேரோடி இருக்கிறது. அந்த கொள்கைகளில் இருந்து பெருமளவு விலகி விட்ட பொழுதும், தேர்தலில் வெல்வதற்காக, பழைய வரல்லாற்று பெருமையில் நின்று கொண்டுதான் இன்றும் திராவிட கட்சிகள் சவாரி செய்கின்றன. தமிழக பொருளாதாரம் வளர்ச்சி அடையும் தருனத்தில் – அ தி மு க சரியான தலைமை அற்று மிகவும் பலவீனமடையும் தருணத்தில் தி மு க தலைமைக்கு வந்த ஸ்டாலின் மற்றும் அவரது உதவியாளர்கள் தமது ஆதரவை நிலைநாட்டிக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். தம்மை முற்போக்கு சக்தியாக காட்டிக் கொள்வதும் – அதற்கமைய முற்போக்கு சக்திகளை தமக்கு ஆதரவாக திரட்டுவதும் அதில் ஓன்று.

 

 

  1. முற்போக்கு சக்திகள் எனக் கருதப்படும் இடதுசாரிய கட்சிகள் – சாதிய கொடுமைக்கு எதிரான அமைப்புக்கள் – தனிப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் பல புத்தி ஜீவிகள் ஆகியோர் கொள்கை அடிப்படையில் தி மு க பக்கம் திரண்டனர் எனக் கருதுவது தவறு. குறை தீமை நிலைப்பாடும், தேர்தலில் வாக்கு பெறும் நோக்கமும், பொருளாதார இலாபம் நோக்கங்களுமே இதற்கு முதற் காரணங்கள். அ தி மு க வின் மேலதிக அரசியல் சீரழிவு இதற்கு மேலும் உதவியது என்பது மிகையில்லை. சசிகலா குடும்ப ஊழல், அதன் பின் வந்த இரு தலைவர்கள் மத்தியில் நிகழ்ந்த சிறுபிள்ளைத்தனமான  அதிகார போட்டிகள், என அக்கட்சி சரியத் தொடங்கி விட்டது. அவர்களின் பா ஐ க உடனான கூட்டணி அவர்களில் இருந்து பல முக்கியமான சக்திகளை அன்னியப்படுத்தியது. பா ஐ க வின் பல்வேறு கொள்கைகள் தமிழகத்தில் கடும் எதிர்பை சந்தித்து வந்திருக்கிறது. குறிப்பாக மதம்சார் பிரிவினை கொள்கைகள், பிரச்சாரங்கள், மொழித் திணிப்பு, முதலியன கடும் எதிர்ப்பை சந்தித்து வந்திருக்கின்றன. பொங்கி எழுந்த ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட், விவசாயிகள் போரட்டம், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் உதாரணம். இந்த நிலையில் தி மு க குறை தீமை என அதற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுப்பது ‘பொது அறிவாக’ முன்வைக்கப் படுகிறது.

 

  1. தவிர பா ஐ க தமிழ்நாட்டில் பலப்படக் கூடாது என்ற கருத்தும் பல இடங்களில் பலபட்டு இருக்கிறது. அமித்ஷா முறையில் மத பிரிவினை வாத நடவடிக்கைளை முன்னெடுத்து பா ஐ க தனது ஆதரவை பலப்படுத்தி வருகிறது என்ற கணிப்பும் பலருக்கு உண்டு. கேரளா மகாராஷ்டிரா முதலிய மாநிலங்களில் எவ்வாறு பா ஐ க தன்னை பலப்படுத்தி வருகிறது என்பதையும் இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால் மாநில ஆட்சியில் இருப்பவர்களின் கொள்கைகளும் பா ஐ க வளருவதற்கு காரணம் என்பதை நாம் அவதானிக்க வேண்டும். ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டு, வாழ்வாதாரத்துக்காக திண்டாடும் நிலையில் விடப்பட்டுள்ள மக்கள் மத்தியில் அவர்களை தமது பக்கம் திரட்ட பிரிவினை கருத்துக்களை பா ஐ க பரப்பி வருகிறது. உண்மையில் பா ஐ க வை எதிர்க்க வேண்டுமானால் மக்களின் நலன்களில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் நலன்சார் கொள்கைகளை கைவிட்டு அவர்கள் மத்தியில் பிற்போக்கு கொள்கைகள் வளர்வதை தடுக்க முடியாது. எந்த கொள்கைகளுக்கு பாடு படுவது – எந்த கொள்கை அடிப்படையில் கூட்டு வைப்பது என்பதை சிந்திப்பது பிற்போக்கு சக்திகள் வளர்வதை எதிர்பதற்கு உதவும். இந்த அடிப்படையில் தேர்தல் கூட்டணிகள் நிகழவில்லை. யாருக்கு எத்தனை சீட்டு யார் யார் எந்த தொகுதியில் நிற்பது என்ற உரையாடல்தான் முதன்மை வகிக்கிறது. பணப் பெட்டி கை மாறுவதும் தேர்தல் கூட்டணியை தீர்மானிக்கிறது எனவும் மக்கள் நம்பி வருகிறார்கள்.

 

  1. எந்த கட்சிகள் மீதும் மக்களுக்கு முழுமையான நம்பிக்கை கிடையாது. தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் நிலைப்பாடு – சினிமா மேலான கவர்ச்சி, சாதியக் கட்சி சார்ந்து நிற்றல் போன்ற அடிப்படைகளில் வாக்குச் சாவடி முடிவுகள் நிகழ்கின்றது. இவற்றில் குறை தீமைக்கு வாக்களித்தல் முதன்மைப் படுகிறது. இதனால் தி மு க மீண்டும் தேர்தலில் வெல்வதற்கான வாய்ப்பே அதிகம். தி மு க வரலாற்றில் 1967 பின் 1972 என்று தொடர்ந்து இரண்டு முறை வென்று சாதித்தது அதற்கு பின் கருணாநிதி அவர்களால் கூட தொடர்ந்து இரண்டு முறை திமுக வை வெல்ல வைக்க முடியவில்லை முன்னாள் தலைவர் மு கருணாநிதி சாதிக்காத விசயத்தை அவரது மகன் ஸ்டாலின் சாதிக்கும் நிலைதான் உண்டு. தொடர்ந்து இரண்டாவது தடவை தேர்தலில் தி மு க வெற்றி பெறும் சாத்தியமே அதிகம். இந்நிலையில் இடதுசாரியக் கட்சிகள் என சொல்லிக் கொள்ளும் கட்சிகள் தி மு க வின் பக்கம் திரண்டு நின்று அதன்மூலம் தேர்தல் லாபத்தை அடைய வேலை செய்து வருகிறார்கள். தி மு க விற்கு இவர்கள் ஆதரவு கொடுக்காவிட்டாலும் அது தேர்தலில் வெற்றி பெறப் போகிறது என்ற நிலையிலும்கூட, இடதுசாரி கட்சிகள் தமது கொள்கைகளுக்கு பலம் சேர்க்கும் வேலையை செய்யவில்லை. மாறாக கூட்டனி அரசியல் செய்வதே அவர்களின் முதன்மை ‘கொள்கையாக’ இருக்கிறது.

 

  1. தமிழகத்தில் இன்று இருக்கும் நிலையில் பலர் ஏன் தி மு க விற்கு வாக்களிப்பர் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. வாக்குச் சாவடியில் வாக்களிக்க தயாராக நிற்கும் ஒருவருக்கு என்ன நடைமுறை தேர்வு உண்டு? மாற்று இல்லாத நிலையில் வாகளிப்பதை புறக்கணியுங்கள் என்ற வாதத்தை முன்வைப்பதும் தவறு. வாக்கு வழங்க மறுக்கும் அனைவரும் அணியாக திரளக் கூடிய – அமைப்பாக வளரக் கூடிய – சரியான கொள்கை நிலைப்பாடு சார்ந்து வளரும் நிலை இருக்குமானால் வாக்கு புறக்கணிப்பு கோரிக்கையில் நியாயம் இருக்க முடியும். குறை தீமை அடிப்படையிலோ – வேறு வழியில்லை என்ற நிலையிலோ – தி மு க விற்கு வாக்கு வழங்குவதை நாம் புரிந்து கொள்கிறோம். பி ஜே பி போன்ற பிற்போக்கு கட்சிகளுக்கோ அல்லது எந்தக் கொள்கைகளுமே இல்லாத வெற்று ‘கவர்ச்சி’ கட்சிகளுக்கோ உங்கள் வாக்கை வழங்காதீர்கள் என்று கோரும் நாம் தி மு க விற்கு வாக்கு வழங்குவதை ‘புரிந்து கொள்ள கூடியதாக’ இருக்கிறது எனச் சொல்வது அதற்கான ஆதரவை திரட்டும் நோக்கில் அல்ல. மாறாக மாற்றுச் சக்தி இல்லாத நிலையில் மக்கள் எவ்வாறு குறை தீமை நோக்கி நகர்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வது மட்டுமே. ஒரு மார்க்சிய கட்சி – புரட்சிகர கட்சி – இந்த சமயத்தில் செய்ய வேண்டிய வேலை என்ன என்பது வேறு விடயம்.

 

  1. தொழிலாளர் நலன்களை முன்னெடுத்துச் செல்வது வெறும் தேர்தல் நடவடிக்கையாக முடங்கி விடக் கூடாது. சனநாயகம் என்பதை வெறும் தேர்தலாகவும் அந்தத் தேர்தலில் எத்தனை பேர் பங்கு பெறுகிறார்கள் என்பதாகவும் குறுக்கி விடும் முதலளித்துவ சக்திகள், தமது அதிகாரத்தை தக்க வைக்கும் நடவடிக்கையாகவே அதை பாவித்து வருகிறார்கள். மக்கள் தேர்தல் சமயத்தில் செய்யும் பங்களிப்பு அவர்களின் அபிலாசைகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடு அல்ல – அது ஒரு சிறு குறுக்குவெட்டு முகத்தை மட்டுமே காட்டுகிறது. இது மக்களின் எதிர்பார்ப்பை முழுமையான தேர்வைப் பதிவு செய்யும் முறை அல்ல. அத்தகைய சனநாயக நடைமுறைக்காக – அதாவது மக்கள் தமது முழுமையான சனநாயக உரிமைகள் மற்றும் நலன்களை பெறும் நடவடிக்கைக்காக பாடுபடுவது தங்களை முற்போக்கு சக்திகள் எனக் கூறிக் கொள்பவர்கள் செய்ய வேண்டிய அடிப்படை வேலை. புரட்சிகர சக்திகள் அதையும் தாண்டி தொழிலாளர்களையும் அனைத்து ஒடுக்கப்படும் மக்களையும் புரட்சிகர சத்தியாக திரட்டுவதற்காக வேலை செய்ய வேண்டும். முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்காக புரட்சிகர கட்சியைக் கட்டும் அதே தருணம் போராட்ட சக்திகள் திரளக் கூடிய பரந்த தளத்தை சமரசமின்றி கட்டுவது அவசியம். தொழிலாளர் சார் கொள்கைகளுக்கான பிரச்சாரம் செய்வது – அவற்றை வெல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது – மற்றும் அந்த கொள்கை அடிப்படையில் தொழிலாளர்களை அமைப்பாகத் திரட்டுவதும் நமது கடமை. இவ்வாறு முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராக கட்டப்படும் அமைப்பு அந்த சக்திகளை பலப்படுத்தும் விதத்தில் – அல்லது முதலாளித்துவ சக்திகளுக்கு மீண்டும் வாய்ப்பை வழங்கும் நடவடிக்கைகளை செய்ய முடியாது/ செய்யக்கூடாது. அப்படிச் செய்வது முதலளித்துவ சக்திகளைத்தான் மேலும் மேலும் பலப்படுத்தும். தொழிலாளர் அமைப்பின் தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். தனித்துவத்தை பேணுவது என்பது தனித்து நிற்பதல்ல. புரட்சிகர சக்திகள் தமக்குள் இருக்கும் முரண்பாடுகளுடன் சில உடன்பாடுகளுக்கு வர முடியும். தொழிலாளர் உரிமைக்கான போராட்ட நடவடிக்கைகள், உரிமை போராட்டங்கள் முதற்கொண்டு தேர்தலுக்கான தளத்திலும் ஒன்றுபட்டு நிற்க உடன்பட முடியும். அத்தகைய சனநாயக முறையில் கட்டப்படும் ஐக்கிய முன்னணி அவசியம். அது ஒடுக்கப்படும் அனைவருக்கும் சரியான மாற்று பிரதிநிதித்துவமாக வளர முடியும்.

 

  1. ஐக்கிய முன்னணியை உருவாக்குதற்காண முயற்சி எடுத்தல், தமிழ் நாட்டில் மட்டும் அல்ல இந்தியா வாரியாக கட்டப்படுவது சாத்தியமே. இரு பெரும் கம்யுனிச கட்சிகள் – அவற்றை சார்ந்து இயங்கும் பெரும் தொழிற் சங்கங்கள் – அரசியல் நீரோட்டத்திற்கு வெளியே விரட்டப்பட்டு போராடிக் கொண்டிருக்கும் சக்திகள் – பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக திரளத் தயாராக இருப்பவர்கள் என அனைவரும் ஒரு சக்தியாக ஒன்றுகூடும் வாய்ப்பு உண்டு. இதை கம்யுனிச கட்சிகள் முன்னெடுத்திருக்க வேண்டும். அவர்கள் தமது திரட்சி பலத்தை தொழிலாளர் பலத்தை கட்ட பாவித்திருக்க வேண்டும். மாறாக அவர்கள் தம்மை தாமே தேர்தல் இலாபம் நோக்கிற்காக புதைத்துக் கொண்டார்கள். புரட்சிகர கொள்கை தெளிவு இல்லாமை மற்றும் மார்ச்கிய கொள்கை தெளிவு – திட்டமிடல் இல்லாது தேர்தல் சக்தியாக குறுகி நிற்கிறார்கள் இந்த கம்யுனிச கட்சிகள். இவ்வாறுதான் அவர்கள் தமது பலத்தை இழந்து வருகிறார்கள். இந்த இடைவெளி பா ஐ க வளர்வதற்கு உதவி வருவதை பல மாநிலங்களில் நாம் பார்க்க கூடியதாக இருக்கிறது. மார்க்சியம் – புரட்சி – தொழிலாளர் என்ற சொற்களை பயன்படுத்தி கொண்டே அதற்கும் இந்த கட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற நிலைதான் உருவாகி வருகிறது. தேர்தல் கூட்டணி அரசியல் மூலம் தமது பலத்தையும் தொழிலாளர் பலத்தையும் நொறுக்கும் வேலையைத்தான் இவர்கள் செய்து வருகிறார்கள். தேர்தல் கூட்டணி தாண்டி – தமது கட்டுப்பாட்டில் இருக்கும் தொழிற்சங்கங்கள் தாண்டி சொந்தமாக – தனித்துவமாக நிற்கும் பலம் இவர்களிடம் இல்லை. பெரும்பான்மை முதலாளித்துவ கட்சிகளின் நிழலில் குளிர் காய்வதன் மூலம் பலமான கட்சிகளாக தம்மை காட்டிக் கொள்ளும் இவர்கள் – இதே முதலாளித்துவ சக்திகள் தமது தேவை முடிந்து எட்டி உதைக்கும் பொழுது சிதறி சின்னாபின்னமாகி காணாமற் போய்விடுவார்கள். இது இவர்கள் தொளிலாலர்களுக்கு செய்யும் பெரும் துரோகம்.

 

  1. சிறு கட்சியாக இருந்தாலும் இத்தகைய தவறான பாதையை புரட்சிகர கட்சிகள் தேர்ந்தெடுக்க முடியாது. நம்மிடம் இருக்கும் எண்ணிக்கை, நமது பலம் போன்றவை நமது கொள்கை நிலைப்பாட்டை தீர்மானிக்க முடியாது. புரட்சிகர கொள்கையை அகநிலை விருப்பத்திற்காக மாற்றிக் கொள்ள முடியாது. தொழிலாளர்களுக்கான மாற்றைக் கட்டுவது தற்போது நடைமுறைக்கு சாத்தியமற்றது என தோன்றினாலும் அதற்கான வேலைத் திட்டத்தைக் கைவிட முடியாது. சோஷலிச மாற்றுக்கான போராட்டம் என்பது முதலாளித்துவம் மேலான அகநிலை வெறுப்பால் கட்டப்படுவதல்ல. மாறாக முதாளித்துவ அமைப்பு எவ்வாறு தோன்றியது – இயங்குகிறது என்ற அறிதலில் இருந்தும் – அந்த அமைப்பு முறை தொழிலாளர் வர்க்கத்தால் முடிவுக்கு கொண்டுவரப்பாடாமல் அதன் கொடூரங்களை முறியடிக்க முடியாது என்ற அறிதலில் இருந்தும் பிறக்கிறது. தொழிலாளர்களுக்கான தனிப்பட்ட பிரதிநிதித்துவக்கான கோரிக்கையும் இதில் இருந்தே பிறக்கிறது.

 

  1. நாம் சிறு அமைப்பாக இருந்தாலும் முதலாளித்துவ அழுத்தங்களுக்கும் தேர்தல் இலாபம் நோக்கங்களுக்கும் அடிபணிய மறுக்கிறோம். தொழிலாளர் வர்க்கம் தனது தனிப்பட்ட பிரதிநித்துவத்தை கட்ட முன்வர வேண்டும் என்பதே நம் கோரிக்கை. இதுவே தேர்தல் சமயத்தில் நாம் செய்யும் முக்கிய விழிப்புணர்வு பிரச்சாரமாக இருக்கிறது. மார்ச்சியர்கள் இந்த நிலைப்பாட்டையே எடுக்க வேண்டும். மாற்று இல்லை என்பதற்காக குறை தீமைக்கு அடிபணியாமல் சரியான மாற்றை உருவாக்க பாடுபடுவதே நம் செயற்பாடாக இருக்கவேண்டும். இந்த நிலைப்பாடு உள்ள அனைத்து சக்திகளும் ஒன்றாக திரளுவது பற்றி சிந்திக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றோம். தொழிலாளர்களும் – தொழிற்சங்கம் முதலான அவர்தம் அமைப்புக்களும் – அனைத்து ஒடுக்கப்படும் மக்களும் இத்தகைய திட்டமிடல் நோக்கி நகர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். தொடக்க நிலையில் இருந்தாலும் இந்த செயற்பாட்டை தொடர்ந்து பலப்படுத்த வேலை செய்ய முன்வருவோம். அத்தகைய நோக்கம் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து அதற்கான போராட்டத்தை பலப்படுத்த முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

 

 

குறிப்பு:

Lesser Evilism என்ற ஆங்கில வார்த்தை இங்கு குறை தீமை என மொழியாக்கம் செய்யபட்டுள்ளது. இது முற்றிலும் சரியான நேரடி மொழிபெயர்ப்பல்ல. அதன் அர்த்தத்தை வெளிப்படுத்தும் நோக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.