Views: 0
தமிழ்த் தேசிய அரசியலில் ஒலித்த ஒரு குரல் ஓய்ந்தது – எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி!

தமிழ்த் தேசிய அரசியலில் நீண்டகாலமாகச் செயற்பட்டு வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம், தனது 69ஆவது வயதில் நவம்பர் 14ஆம் திகதி காலமானார். அவரது மறைவு தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ஒரு நீண்டகாலப் போராட்ட அரசியல் செயற்பாட்டாளரின் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ (TELO) அமைப்பின் ஊடாக அரசியலில் ஈடுபட்டார். 2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவான அவர், பின்னர் வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும் செயற்பட்டார்.
நாடாளுமன்ற அரசியலுடன் மாத்திரம் தன்னை மட்டுப்படுத்திக்கொள்ளாமல், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் நினைவுகூரும் உரிமை போன்ற பிரச்சினைகளிலும் தொடர்ந்து குரல் எழுப்பினார்.
குறிப்பாக, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர், தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையைப் பாதுகாப்பதற்காக அவர் முன்னெடுத்த செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கவை. அரசின் தடைகளையும் அழுத்தங்களையும் எதிர்கொண்டு நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியலில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
அதேவேளை, சிவாஜிலிங்கத்தின் அரசியல் பங்களிப்பை மதிப்பிடும்போது, அவர் சார்ந்திருந்த தமிழ்த் தேசிய அரசியலின் வரம்புகளையும் விமர்சனபூர்வமாக அணுக வேண்டியுள்ளது. பல தசாப்தங்களாகத் தொடரும் தமிழ் மக்களின் தேசிய உரிமைப் போராட்டம் இன்னமும் தீர்வின்றித் தொடர்கிறது. நாடாளுமன்ற அரசியல், தேர்தல் கூட்டணிகள் மற்றும் சர்வதேச அரசுகளின் தலையீடுகளை நம்பிய அரசியல் அணுகுமுறைகளின் போதாமையும் தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது.
அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக சிவாஜிலிங்கம் வெளிப்படுத்திய துணிச்சலையும் தொடர்ச்சியான செயற்பாடுகளையும் அங்கீகரிக்க வேண்டியது அவசியமாகும்.
“ஒரு அரசியல் ஆளுமையின் மறைவுடன் அவர் எழுப்பிய அரசியல் கேள்விகள் மறைந்துவிடுவதில்லை. அவற்றுக்கான தீர்வுகளைத் தேடும் பொறுப்பு அடுத்த தலைமுறையினரிடமும் தொடர்கிறது.”
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல், இராணுவமயமாக்கலுக்கு எதிரான போராட்டம், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஆகிய கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இந்த உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் போராட்டங்கள் தனிநபர்களைக் கடந்து தொடர வேண்டியவை.
எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல் தோழர்கள் அனைவருக்கும் எதிர் ஊடகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
தன்னலமற்று தமிழ் பேசும் மக்களின் அரசியல் விடுதலைக்காக போராடிய எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு தமிழ் சொலிடாரிட்டியின் அஞ்சலிகள்.