தமிழ் இளையோர்களும்  புதிய அரசியலின் தேடலும்

Views: 3

தமிழ் இளையோர்களும்  புதிய அரசியலின் தேடலும்

தமிழ் இளையோர்கள் அரசியலில் எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்வி இன்று முக்கியமானதாக மாறியுள்ளது. குறிப்பாக 2009க்குப் பின்னர் வளர்ந்த தலைமுறையைப் பார்க்கும்போது, பாரம்பரிய தமிழ் அரசியல் கட்சிகளுடனான அவர்களின் உறவு மிகவும் பலவீனமாகத் தெரிகிறது. தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் வெளியில் தோன்றும் இளையோர்கள், அதன் பின்னர் மீண்டும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பிவிடுகின்றனர். இதனை வெறுமனே இளையோர்களுக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்று விளக்குவது மிகவும் எளிதான பதில். உண்மையில் கேட்க வேண்டிய கேள்வி வேறு: இளையோர்கள் அரசியல் தலைமுறையாக உருவாகக்கூடிய அரசியல் வெளியை தமிழ் சமூகம் உருவாக்கியிருக்கிறதா?

2009இல் போர் முடிந்தது. ஆனால் போருக்குப் பின்னரான அமைதி தமிழ் சமூகத்திற்கு அரசியல் சுதந்திரம், பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூக நம்பிக்கையை தானாகக் கொண்டு வரவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் இன்னும் நீதிக்காகப் போராடுகின்றன. நிலம், இராணுவமயமாக்கல், வேலைவாய்ப்பின்மை, கல்வி, இடம்பெயர்வு, வறுமை போன்ற கேள்விகள் தொடர்கின்றன. இவற்றுடன், ஆயிரக்கணக்கான இளையோர்களின் எதிர்காலக் கற்பனை வெளிநாட்டை நோக்கியதாக மாறியுள்ளது. நாட்டில் தமக்கான எதிர்காலம் குறித்த நம்பிக்கை இல்லாதபோது, அரசியல் அமைப்புகளை உருவாக்குவதற்கு பதிலாக வெளியேறுவதே பலருக்கு நடைமுறைத் தீர்வாகிறது.

இதனால் இளையோர்களின் அரசியல் விலகலை அவர்களின் தனிப்பட்ட குறையாக பார்க்க முடியாது. அது சமூகத்தின் அரசியல் நிலைமையின் பிரதிபலிப்பும்கூட. உலக வங்கியின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, அடுத்த பத்தாண்டில் இலங்கையின் தொழில்சந்தையில் சுமார் ஒரு மில்லியன் இளையோர்கள் நுழைய உள்ளனர்; ஆனால் தற்போதைய போக்கில் சுமார் 300,000 முறையான வேலைகள் மட்டுமே உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள், இன்றைய இளையோர்களின்  வாழ்க்கையில் வேலைவாய்ப்பு, பொருளாதார பாதுகாப்பு மற்றும் இடம்பெயர்வு ஆகியவை மிகப்பெரிய அரசியல் கேள்விகளாக மாறியுள்ளன.

அப்படியானால் இளையோர்களை அரசியலுக்கு எவ்வாறு கொண்டு வருவது?

முதலில், இளையோர்களை பழைய அரசியலின் பார்வையாளர்களாக அல்ல, அரசியலை உருவாக்குபவர்களாக பார்க்க வேண்டும். தேர்தல் காலங்களில் கூட்டங்களுக்கு ஆட்களைத் திரட்டுவதற்கும், சுவரொட்டிகள் ஒட்டுவதற்கும், சமூக ஊடகப் பிரச்சாரங்களை நடத்துவதற்கும் இளைஞர்களை பயன்படுத்துவது அரசியல் பங்கேற்பு அல்ல. அரசியல் முடிவுகளை எடுப்பதிலும், கொள்கைகளை உருவாக்குவதிலும், அமைப்புகளை நடத்துவதிலும், போராட்டங்களை முன்னெடுப்பதிலும் அவர்களுக்கு அதிகாரமும் பொறுப்பும் வழங்கப்பட வேண்டும்.

இளையோர்கள் அரசியலைக் கற்றுக்கொண்ட பின்னரே அரசியலுக்குள் வர வேண்டும் என்பதும் தவறான அணுகுமுறை. அரசியல் என்பது வகுப்பறையில் மட்டும் கற்றுக்கொள்ளப்படுவதில்லை. மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து கேள்விகளை எழுப்பி, அவற்றை மற்றவர்களுடன் இணைத்து, கூட்டு நடவடிக்கையில் ஈடுபடும்போதுதான் அரசியல் புரிதல் வளர்கிறது. வேலை இல்லாத இளைஞனின் அல்லது பிரச்சினை தனிப்பட்ட தோல்வி அல்ல; அது பொருளாதார அமைப்பின் கேள்வி என்பதைப் புரிந்துகொள்வதும் அரசியல் கல்வியே. ஒரு குடும்பத்தின் காணாமல் போன உறவினரைப் பற்றிய போராட்டம் தனிப்பட்ட துயரம் மட்டுமல்ல; அது அரசின் பொறுப்பு மற்றும் நீதியின் கேள்வி என்பதைப் புரிந்துகொள்வதும் அரசியல் கல்வியே.

இதனால் தமிழ் இளையோர்களுக்கு தேவையானது பழைய கோஷங்களை மனப்பாடம் செய்வது அல்ல; கேள்வி கேட்கும் அரசியல் கலாச்சாரம். முன்னோர்கள் கூறியவற்றை வரலாற்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்; ஆனால் அவற்றை இன்றைய தலைமுறையின் அரசியல் சிந்தனைக்கு மாற்றாகப் பயன்படுத்த முடியாது. புதிய தலைமுறை தங்களுடைய காலத்தின் பிரச்சினைகளிலிருந்து தங்களுடைய அரசியலை உருவாக்க வேண்டும்.

அந்த அரசியல் தமிழ் தேசிய உரிமையையும் சமூக விடுதலை மற்றும் பொருளாளதார நலன்கள் ஆகியவற்றை  ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கக்கூடாது. தேசிய உரிமை என்பது வெறும் அரசியல் எல்லை பற்றிய கேள்வி அல்ல. ஒரு இளைஞனுக்கு வேலை இருக்கிறதா? ஒரு விவசாயி தனது நிலத்தில் பாதுகாப்பாக விவசாயம் செய்ய முடியுமா? ஒரு மீனவர் தனது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முடியுமா? பெண்கள் சம உரிமையுடன் வாழ முடியுமா? சாதி ஒடுக்குமுறையிலிருந்து விடுபட முடியுமா? கல்வியும் சுகாதாரமும் அனைவருக்கும் கிடைக்கிறதா? இவையும் தேசிய அரசியலின் கேள்விகளே.

இதேபோன்று புலம்பெயர் தமிழ் சமூகத்தையும் புதிய பார்வையில் அணுக வேண்டும். புலம்பெயர் மக்கள் வழங்கும் பொருளாதார உதவிகள், கல்வி மற்றும் மருத்துவ ஆதரவுகள், சர்வதேச அரசியல் தொடர்புகள் ஆகியவை தமிழ் சமூகத்திற்கு முக்கியமான வளங்கள். ஆனால் அவை தாயக மக்களின் சொந்த அரசியல் செயற்பாட்டிற்கு மாற்றாக இருக்க முடியாது. புலம்பெயர் சமூகத்தின் பங்கு தாயகத்தில் ஜனநாயகமான, கீழ்மட்டத்திலிருந்து உருவாகும் அரசியல் சக்தியை வளர்ப்பதாக இருக்க வேண்டும். உதவி பெறும் மக்களை நிரந்தரமாக உதவி பெறுபவர்களாக வைத்திருப்பது அல்ல; அவர்கள் தங்களுடைய எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் அரசியல் சக்தியாக மாறுவதற்கான சூழலை உருவாக்குவதே முக்கியம்.

தமிழ் இளையோர்களின் அரசியல் எதிர்காலம் இதனால் வெறும் தமிழ் தேசியக் கட்சிகளின் எதிர்காலத்துடன் இணைந்திருக்க வேண்டியதில்லை. புதிய அரசியல் வெளியை உருவாக்குவதற்கான அவசியம் இங்கே உருவாகிறது. மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களுடைய பிரச்சினைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பேசும் இடங்கள் தேவை. திறந்த அரசியல் விவாதங்கள் தேவை. ஒருவருடைய கருத்தை ஒருவர் கேள்வி கேட்கக்கூடிய ஜனநாயக கலாச்சாரம் தேவை.

தமிழ் Solidarity தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் முக்கியமான அரசியல் கருத்தும் இதுதான்: இளையோர் எதிர்காலத்தில் அரசியலுக்கு வர வேண்டியவர்கள் அல்ல; இப்போதே அரசியல் பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள். அவர்களுக்கான அரசியல் இடத்தை உருவாக்குவதுடன் நிறுத்தாமல், முடிவெடுக்கும் பொறுப்பையும் அவர்களிடம் மாற்ற வேண்டும். அதேவேளை தமிழ் மக்களின் தேசிய உரிமைக்கான போராட்டத்தை தொழிலாளர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக, சமூக மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான போராட்டத்துடன் இணைக்க வேண்டும்.

இது எளிதான பாதை அல்ல. ஆனால் பழைய அரசியல் வடிவங்கள் தொடர்ந்து இளையோர்களை ஈர்க்கத் தவறுகின்றன என்றால், பிரச்சினை இளையோர்களிடம் மட்டுமில்லை. அரசியலின் வடிவத்திலும் இருக்கிறது.

ஒரு புதிய தலைமுறை உருவாக வேண்டுமெனில், அதற்கு புதிய அரசியல் கற்பனையும் புதிய அமைப்புகளும் தேவை. கடந்த காலத்தை நினைவில் வைத்திருப்பது அவசியம்; ஆனால் எதிர்காலத்தை கடந்த காலத்தின் மொழியில் மட்டும் உருவாக்க முடியாது.

தமிழ் இளையோர்களை எங்கே என்று தேடுவதற்கு பதிலாக, அவர்கள் தங்களுடைய அரசியலை உருவாக்கக்கூடிய இடங்களை உருவாக்குவோம்.

அதுவே தமிழ் அரசியலின் அடுத்த தலைமுறைக்கான உண்மையான சவால்.