செம்மணியை மறக்கவில்லை: லண்டனில் அணிதிரண்ட பிரித்தானியத் தமிழர்கள்

Views: 1

செம்மணியை மறக்கவில்லை: லண்டனில் அணிதிரண்ட பிரித்தானியத் தமிழர்கள்

உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி Primrose Hill-ல் போராட்டம் – அடையாள நடவடிக்கைகளைத் தாண்டி அரசியல் அழுத்தத்தை உருவாக்க வேண்டும் என தமிழ் சொலிடாரிட்டி அழைப்பு

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தவும் 06/09/2026 அன்று பிரித்தானியத் தமிழர்கள் லண்டனில் உள்ள Primrose Hill பகுதியில் ஒன்று திரண்டனர்.

செம்மணி புதைகுழியில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான மனித எச்சங்களை நினைவுகூரும் வகையில், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வெள்ளைத் துணிகளால் தங்களை மூடி, இறந்த உடல்களைப் பிரதிபலிக்கும் வகையில் தரையில் படுத்தனர். கிருஷாந்தி குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தையும் நினைவுகூரும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் 7 ஆம் திகதி, 18 வயதான தமிழ் மாணவி கிருஷாந்தி குமாரசாமி யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச் சென்ற அவரது தாய், சகோதரர் மற்றும் அயலவரும் கொல்லப்பட்டு, கிருஷாந்தியின் உடலுக்கு அருகில் புதைக்கப்பட்டனர்.

கிருஷாந்தி கொலை தொடர்பான வழக்கில் சாட்சியமளித்த சிறிலங்கா இராணுவத்தின் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களின் உடல்கள் செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக 1998 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், செம்மணி தொடர்பான முழுமையான விசாரணையும் பொறுப்புக்கூறலும் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டன.

இந்த வரலாற்றின் பின்னணியிலேயே செம்மணி தொடர்பான சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் லண்டன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிறிலங்கா ஒரு சுற்றுலாத்தலமாக மட்டுமே சர்வதேச அளவில் சித்தரிக்கப்படுவதற்கு எதிராகவும், அந்தப் பிம்பத்திற்குப் பின்னால் மறைக்கப்படும் நீண்டகால மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்த வரலாற்றை வெளிக்கொணரவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

வீதியில் சென்ற பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு செம்மணி புதைகுழி தொடர்பான தகவல்கள் அடங்கிய அஞ்சலட்டைகளும் வழங்கப்பட்டன. சிறிலங்காவின் சுற்றுலா விளம்பரங்களால் மறைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச கவனத்தை அதிகரிப்பதே இதன் நோக்கமாக முன்வைக்கப்பட்டது.

பிரித்தானியத் தமிழர் கூட்டமைப்பு மற்றும் PEARL ஆகிய அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடவடிக்கையில், தமிழ் சொலிடாரிட்டி (Tamil Solidarity), பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC), நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), உலகத் தமிழர் வரலாற்று சங்கம், தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE), பிரித்தானிய பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளும் பங்கேற்றன.

கிருஷாந்தி குமாரசாமி படுகொலை செய்யப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், செம்மணி புதைகுழி தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற காணாமல் ஆக்கப்படுதல்கள் மற்றும் பாரிய மனித உரிமை மீறல்களின் முக்கியமான சாட்சியமாக தொடர்கிறது. செம்மணி உள்ளிட்ட புதைகுழிகள் தொடர்பாகவும், போரின் போது இடம்பெற்ற பாரிய அட்டூழியங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகவும் சுயாதீனமான சர்வதேச விசாரணையும் பொறுப்புக்கூறலும் அவசியம் என தமிழர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

அடையாளப் போராட்டங்களைத் தாண்டி அரசியல் அழுத்தத்தை உருவாக்க வேண்டும் – தமிழ் சொலிடாரிட்டி

புலம்பெயர் நாடுகளில் செம்மணி போன்ற முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக தமிழர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை தமிழ் சொலிடாரிட்டி வரவேற்கிறது. கொல்லப்பட்டவர்களின் நினைவுகளைப் பாதுகாப்பதும், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்வதும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோருவதும் முக்கியமான போராட்டங்களாகும்.

அதேவேளை, இவ்வாறான நடவடிக்கைகள் வெறுமனே அடையாள ரீதியான நினைவு நிகழ்வுகளாகவோ அல்லது ஒரு நாள் ஆர்ப்பாட்டங்களாகவோ சுருங்கிவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் சொலிடாரிட்டி வலியுறுத்துகிறது.

புலம்பெயர் நாடுகளில் இயங்கும் முற்போக்கு மற்றும் புரட்சிகர அமைப்புகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் ஏனைய சமூக இயக்கங்களையும் இத்தகைய போராட்டங்களில் இணைத்துக்கொண்டு, அரசுகளின் மீது உண்மையான அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய பரந்த மக்கள் இயக்கங்களாக இவற்றை வளர்த்தெடுக்க வேண்டும் என தமிழ் சொலிடாரிட்டி அழைப்பு விடுக்கிறது.

செம்மணிக்கான நீதி என்பது கடந்த காலத்தை நினைவுகூர்வதுடன் முடிவடையக் கூடாது. உண்மையை வெளிக்கொணர்வது, குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை பொறுப்புக்கூறச் செய்வது மற்றும் இதுபோன்ற அட்டூழியங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் அரசியல் அழுத்தத்தை உருவாக்குவது ஆகியவற்றை உள்ளடக்கிய தொடர்ச்சியான போராட்டமாக அது அமைய வேண்டும் என்பதே தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடாகும்.

நேற்றைய கவனயீர்ப்பு போராட்டத்தின் புகைப்படங்கள்