இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளின் வரலாற்றைத் தொற்றுநோயால் மூடிமறைக்க முடியாது!

Views: 0

இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளின் வரலாற்றைத் தொற்றுநோயால் மூடிமறைக்க முடியாது!

தமிழ் சொலிடாரிட்டியின் கண்டன அறிக்கை

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு காரணமாக உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் எனப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தனது இடைக்கால ஆய்வறிக்கையில் முன்வைத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான கோபத்தை உருவாகி உள்ளது. 

படுகொலை நடந்த இடங்களை மூடி மறைத்தல் – துடைத்து வரலாற்றைத் திரித்து பேசுதல் சிங்கள இனவாத அரசும் அதன் ஆதரவாளர்களும் செய்து வரும் நடவடிக்கைதான்.  ராஜ் சோமதேவ வழங்கும் எவ்வித ஆதாரமும் அற்ற ‘விளக்கமும்’ இத்தகைய இனவாத அடிப்படையிலானதே. 

செம்மணி என்பது வெறுமனே ஒரு தொல்லியல் ஆய்வுத் தளம் அல்ல. அது இலங்கை அரசின் இராணுவ அடக்குமுறை, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் படுகொலைகளின் வரலாற்றோடு தொடர்புடைய இடமாகும். இந்த வரலாற்றுப் பின்னணியைப் புறக்கணித்துவிட்டு, மனித எச்சங்களுக்குத் தொற்றுநோயையோ இயற்கைப் பேரழிவையோ காரணமாக முன்வைப்பதன் பின் இருப்பது இனவாத அரசியல் நோக்கமே. 

வடக்கு மக்களின் பண்பாடு, சமூக வாழ்க்கை மற்றும் இறுதிச் சடங்கு மரபுகளை அறிந்த எவருக்கும் இத்தகைய விளக்கம் பல அடிப்படைக் கேள்விகளை எழுப்பும். நூற்றுக்கணக்கான மக்கள் தொற்றுநோயால் உயிரிழந்து ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருந்தால், அதற்கான வரலாற்றுப் பதிவுகள் எங்கே? மருத்துவ ஆதாரங்கள் எங்கே? அத்தகைய பேரழிவை நினைவுகூரும் உள்ளூர் மக்களின் சாட்சியங்கள் எங்கே? இந்த மனிதர்கள் எந்தக் காலப்பகுதியில், எத்தகைய சூழ்நிலையில், யாரால் புதைக்கப்பட்டார்கள்?

உடல்களை எரிக்கும் வழமை இருக்கும் வடக்கில் – ஏன் புதைப்பது என முடிவெடுத்தார்கள் ? அதுவும் கல்லறை அற்ற வெளியில் எந்த நினைவு கல்லும் நடாமல் புதைத்து மூடி விட்டு சென்று விட்டார்கள் என சொல்லுவது மிக கேவலமான அவதூறு. 

பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்ததாகக் கூறப்படும் விளக்கத்தின் அறிவியல் அடிப்படைகள் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும். தடயவியல் ஆய்வுகள் முழுமையடைவதற்கு முன்னரே எந்தவொரு கருதுகோளையும் இறுதி முடிவாகச் சித்தரிக்கக் கூடாது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு இதுவரை முழுமையான நீதி வழங்கப்படவில்லை. இந்தச் சூழலில் செம்மணியில் கண்டெடுக்கப்படும் ஒவ்வொரு மனித எச்சமும் உண்மையைக் கண்டறிவதற்கான முக்கியமான தடயமாகும்.

தமிழ் மக்களின் வரலாற்று அனுபவங்களையும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சாட்சியங்களையும் புறக்கணித்து, நிரூபிக்கப்படாத விளக்கங்களை உண்மையாகப் பரப்புவது இனவாதமே. அறிவியல் ஆய்வு என்ற பெயரில் இத்தகைய திருப்புகள் நிகழ்வதை நாம் அனுமதிக்க கூடாது. 

யாரிந்த ராஜ் சோமதேவ ? சிங்கள இனவாத வரலாற்று திரிப்பாளர்களில் ஒருவர் இவர். சிங்கள இனத்தின் முதன்மையை நிலைநாட்டும் நோக்கிலேயே இவரது ஆய்வுகள் அனைத்தும் நிகழ்ந்துள்ளன – தமிழ் நாட்டில் ஒரு சிலர் எவ்வாறு அனைத்துக்கும் தமிழ் முதன்மை என ஆய்வுகள் செய்கிறார்களோ அதே போல் இவரது ஆய்வும் புற நிலை யதார்தத்தை – உண்மையை நிலை நாட்டும் நோக்கை கொண்டவை அல்ல. இதனால்தான் இவர் முழு அரசின் ஆதரவுடன் இயங்கி வந்துள்ளார். இதனால்தான் இனவாத அரசு அவரை நம்பி ‘ஆய்வை’ வழங்கி உள்ளது. இந்த ஆய்வுக் குழுவில் தமிழரோ முஸ்லிம் ஆய்வாளரோ இணைத்துக் கொள்ளப்படவில்லை? ஆரம்பத்தில் இருந்தே மூடி மறைக்கும் நோக்கில்தான் இந்த ‘ஆய்வு’ மேற்கொள்ளப் பட்டதா – ஆதாரங்களை இவர்கள் மறைத்தார்களா ? சிதைத்தார்களா என்ற கேள்விகள் மக்களை மத்தியில் எழுவது நியாயமானதே. வெளிப்படையான சர்வதேச கண்காணிப்பு தேவை என தமிழ் மக்கள் கோருவது இதனால்தான். 

 

செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து மனித எச்சங்களும் ஒரே காரணத்தினால் புதைக்கப்பட்டவை அல்ல என்றால் அந்த உண்மையைத் தீர்மானிக்க வேண்டியது அரசியல் அதிகாரமோ இனவாதப் பிரச்சாரமோ அல்ல; சுயாதீனமான, வெளிப்படையான, நம்பகத்தன்மையுள்ள தடயவியல் விசாரணையே ஆகும்.

தமிழ் சொலிடாரிட்டி பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது:

  1. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சுயாதீனமான, சர்வதேசக் கண்காணிப்புடனான தடயவியல் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.
  2. ராஜ் சோமதேவவின் இடைக்கால அறிக்கையும் அதற்கான ஆதாரங்களும் பொதுமக்களின் ஆய்வுக்காக வெளியிடப்பட வேண்டும்.
  3. கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் அடையாளம், மரணத்திற்கான காரணம் மற்றும் புதைக்கப்பட்ட காலப்பகுதி ஆகியவை அறிவியல் முறையில் கண்டறியப்பட வேண்டும்.
  4. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசாரணை தொடர்பான தகவல்களை அறியும் உரிமையும், உரிய பங்கேற்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  5. விசாரணையில் குற்றச்செயல்கள் உறுதிப்படுத்தப்பட்டால், அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். 

செம்மணியில் கண்டெடுக்கப்பட்டவை வெறும் எலும்புக்கூடுகள் அல்ல. அவை மனித உயிர்கள். அவர்களுக்குப் பெயர்கள் இருந்தன; குடும்பங்கள் இருந்தன; எதிர்காலக் கனவுகள் இருந்தன. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை அவர்களது குடும்பங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உள்ளது.

உண்மையைக் கண்டறிவதற்கான போராட்டம் தமிழர்களுக்கு மட்டுமான போராட்டமல்ல. அது இனவாதத்திற்கும் அரச ஒடுக்குமுறைக்கும் எதிராக நிற்கும் தமிழ், சிங்கள, முஸ்லிம் உழைக்கும் மக்களின் பொதுவான ஜனநாயகப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

செம்மணியில் புதைக்கப்பட்ட மனிதர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். உண்மை முழுமையாக வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்.

மனிதர்களைப் புதைத்திருக்கலாம். ஆனால் உண்மையை நிரந்தரமாகப் புதைக்க முடியாது!

தமிழ் சொலிடாரிட்டி (Tamil Solidarity)