பிரித்தானியத் தேர்தல்  – முடிவுகள் – பகுதி 1

1,202 . Views .

பிரித்தானியத் தேர்தல் முடிவுகள் பற்றிய சில விபரங்களை மட்டும் கீழ தந்துள்ளோம். தேர்தல் பற்றிய ஆய்வுகள் மற்றும் தொங்கு பாராளுமன்றம் என்றால் என்ன என்ற விபரங்களை தொடர்ந்து இங்கு பதிவிட இருக்கிறோம். தொடர் பதிவுகளைப் பெற உங்கள் ஈ மெயிலை இந்தத் தளத்தில் பதிவிடுங்கள். இந்த வார வாரந்திர ஞாயிறு நேரலையிலும் இது பற்றி உரையாட இருகிறோம். இங்கிலாந்து நேரம் 4pm மணிக்கு எம்மோடு இணைந்து கலந்து கொள்ளுங்கள்.

– எதிர்

 

1 தேர்தல் இறுதி முடிவுகள்

650 ஆசனங்கள் உள்ள பிரித்தானியப் பாராளுமன்றதில் 325 ஆசனங்களுக்கு அதிகமாக ஆசனங்களைக் கைப்பற்றுபவர்கள்தான் ஆட்சி அமைக்க முடியும். நடந்து முடிந்த தேர்தலில் ஒரு கட்சிக்கும் அத்தகய பெரும்பான்மை இலை. இதனால் இது தொங்கு பாரளுமன்றம் என அழைக்கப் படுகிறது. தற்போது வட அயர்லாந்து யூனியனிஸ்ட் கட்சியுடன் இணைந்து சிறுபான்மை ஆட்சியை அமைத்துள்ளது கன்சவேடிவ் கட்சி.

ஒவ்வொரு கட்சிக்குமான வாக்கு விபரங்கள் வருமாறு.

பழமைவாத கட்சி – கன்சவேடிவ் – 318

தொழிலாளர் கட்சி – லேபர் – 262

ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி – 35

லிபரல் டெமோகிராட் – 12

சனநாயக யூனியனிஸ்ட் கட்சி – 10

சின் பெயின் – 7

ப்ளைட் கமரூ – 4

கிரீன் கட்சி – 1

 

வாக்குகள் & வாக்கு மாறிய வீதம்

 

வாக்களித்தோர் எண்ணிக்கை 68.7% ( 2015 இலிருந்து  2.6% அதிகரிப்பு) – வாக்களிக்கத் தகுதியான 46.9 மில்லியன் பேரில் ஏறக்குறைய 38 மில்லியன் மக்கள் வாக்களித்திருக்கின்றனர்

  • நன்றி பி.பி.சி

 

2 முக்கிய நிகழ்வுகள்

இளையோரின் எழுச்சி என வர்ணிக்கும் அளவில் ஏராளமான இளையோர் இந்தத் தேர்தலில் வாக்களித்திருக்கின்றனர். 18 இலிருந்து 25 வரை வயதுள்ளோர் மத்தியில் 72% வீதமானோர் வாக்களித்துள்ளனர்.

இரு கட்சிகளுக்கும் இறுக்கமான போட்டி இருப்பதாக கருதப்படும் – விளிம்பு ஆசனம் எனச் சொல்லப்படும் – இடங்களில் பெரும்பான்மையை தொழிலாளர் கட்சி வென்றுள்ளது. உதாரணமாக குறிப்பிடத்தக்க தமிழ் பேசும் மக்கள் வாழும் இல்போர்ட் நோர்த் ல் கன்சவேடிவ் கட்சி வேட்பாளர் லீ ஸ்காட் தோற்கடிக்கப்பட்டது மட்டுமின்றி அவர்களது வாக்கு வீதம் குறைந்துள்ளது. ஏறத்தாள பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 14% வீத வாக்கதிகரிப்புடன் தொழிலாளர் கட்சி வென்றுள்ளது.

தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் ஏறத்தாள 33 000 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வாக்கை 12.7% வீதமாக அதிகரித்து 9 ஆவது தடவையாக வென்றுள்ளார். கன்சவேட்டிவ் கட்சி தலைவரான தெரசா மே தனது தொகுதியில் 26 000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்த போதும் அவரது வாக்குகள் 1.1% வீதமாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது தொகுதியிலேயே தொழிலாளர் கட்சி தனது வாக்குகளை 7.5% வீதமாக அதிகரித்திருந்தது. லிபரல் கட்சியின் முன்னால் தலைவரை லேபர் தோற்கடித்திருக்கிறது. தற்போதைய லிபரல் தலைவரான டிம் பாரன் 777 வாக்கு வித்தியாசத்தில் அரும்பொட்டில் வென்றுள்ளார்.

1918 ம் ஆண்டு காலத்தில் இருந்து கன்சவேட்டிவ் கட்சியின் வலதுசாரியக் கோட்டையாக இருந்த கண்டன்பரி தொகுதியை 187 வாக்குகள் வித்தியாசத்தில் லேபர் கைப்பற்றி உள்ளது. பல இடங்களில் கன்சவேடிவ் கட்சி அரும்பொட்டில்தான் தமது தொகுதிகளை தக்க வைத்துள்ளது. பலராலும் வெறுக்கப்படும் டோரி பா.உ ஆன சாக்ஸ் கோல்ட்ஸ்மித் வெறும் 45 வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். இவர் மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் உண்டு. லண்டன் மேயர் தேர்தலில் நின்று தோற்ற பிறகு கீத்ரோ விமான நிலைய தகராறு தொடர்பாக தனது தொகுதியில் இருந்து ராஜினாமா செய்தவர். மில்லியனர் ஆன இவரை டோரி கட்சி தொடர்ந்தும் ஊக்குவிக்கும் என எதிர் பார்க்கலாம். இதேபோல் டோரி தலைமைக் காரியாலயத்தில் இயங்கி வரும் முக்கிய டோரியான கவின் பர்வலும் பத்து வீத வாக்குகள் குறைந்து தோல்வியை தழுவி இருக்கிறார். நிகோலா ப்லாக்வுட், ரோப் வில்சன், பென் கம்மர் ஆகிய முக்கிய டோரிகளும் படு தோல்வியை தழுவி உள்ளனர்.

இதேபோல் உள்துறை மந்திரியாக இருக்கும் அம்பர் ரூட் வெறும்  346  வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். மான்செஸ்டர் மற்றும் லண்டன் தீவிர வாத தாக்குதலின் பின் இவரை முக்கிய தலைவராக டோரி பிரச்சாரிகள் முன் தள்ளியது தெரிந்ததே. தெரசா மேக்கு பதிலாக தொலைக்காட்சி விவாதத்தில் டோரி சார்பாக கலந்து கொண்டவரும் இவரே. இதே சமயம் நிழல் உள்துறை மந்திரியும் கோர்பின் ஆதரவாளருமான டயான் அபோட் தனது தொகுதியில் 75.1% வீத வாகுகளைப் பெற்று 35 000 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி ஈட்டி உள்ளார். இவரது வாக்கு  12.2% வீதமாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் இறுதி நாள் வரை இவர் மேல் துவேச வெறி கொண்ட பிரசாரங்களை கார்பொரேட் பத்திரிகைகள் செய்து வந்தது தெரிந்ததே. இதே போல் நிழல் நிதி மந்திரியான ஜோன் மக்டோனல்ட் 66.5% வீத வாக்குகளை வென்று அமோக வெற்றி ஈட்டி உள்ளார். கடுமையான எதிர் பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் பொதுவாக கோர்பின் கொள்கைகளை ஆதரித்து நின்றவர்கள் இலகுவாக தேர்தலில் வென்றுள்ளனர்.

3 ப்ரக்சிட் & யு.கே.இ.பா

குடிவரவாளர்களுக்கு எதிரான துவச கருத்துக்களைக் கொண்ட  யு.கே.இ.பா (UKIP) ஒரு ஆசனம் கூட வெல்ல முடியாது தமது வாக்குகளில் 11% வீதம் குறைந்து கடும் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் தலைவர் போல் நட்டால் வெறும்  3308 வாக்குகளைப் பெற்று கடும் தோல்வியைத் தழுவி உள்ளார். 2015ம் ஆண்டில் 12+% வீதமாக – நாலு மில்லியன் வாக்குகளாக -இருந்த இவர்கள் வாக்கு இன்று அரை மில்லியனாக குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இவரும் கட்சியின் ஷேர்மனும் ராஜினாமா செய்துள்ளனர். ஒரு வருடத்துக்குள் மூன்றாவது முறை தலைமைக்கான போட்டி இக்கட்சிக்குள் நிகழ உள்ளது. ப்ரக்சிட்க்கு பிறகு இந்த கட்சி உடைந்து சின்ன பின்னமாகி போய்க்கொண்டிருப்பது தெரிந்ததே. கோர்பின் சமூக அக்கறை உள்ள கொள்கைகளை முன் வைப்பது இதற்கு ஒரு காரணம்.

யு.கே.இ.பா வாக்குகள் உடைந்து டோரி கட்சிக்கு செல்ல இருப்பதாக முன்பு பலர் பேசி இருந்தனர். தொழிலாளர் கட்சியின் கோட்டைகளை இந்த கட்சியின் வாக்குகளை வைத்து உடைக்கப் போவதாக நம்பினர். இதனால் டோரிக்கு பெரும் வாக்கு திரளும் என நம்பினர். முதலாளித்துவ ஐரோப்பிய பாராளு மன்றம் – சேவைகள் உடைக்கப் படுத்தல் ஆகிய காரணங்களால் பல தொழிலாளர் கட்சி வாக்காளர்கள் யு.கே.இ.பா நோக்கி நகர்ந்திருந்தனர். இவர்களின் வாக்குகள்  யு.கே.இ.பா ஊடாக டோரிக்கு வந்து சேரும் என அவர்கள் போட்ட குழைந்தைப் பிள்ளை ஆய்வில் இன்று மண் அள்ளி விழுந்துள்ளது. அவர்கள் வாக்குகள் இரண்டாக உடைந்து லேபருக்கும் சென்றுள்ளதைப் பார்க்கலாம். ப்ரக்சிட் ஆதரவு பலமாக இருந்த இடங்களிலும் லேபர் வென்றுள்ளது.

கிரீன் கட்சி

அரை மில்லியன் வாகுகளை பெற்ற போதும் கிரீன் கட்சிக்கு இரண்டு வீத வாக்கு குறைந்துள்ளது. இருப்பினும் இதன் தலைவர் கரலைன் லூகாஸ் வெற்றி பெற்றுள்ளார். இவர்கள் தற்போது யு.கே.இ.பா கட்சியை விட பெரிய கட்சியாக மாறி இருக்கிறார்கள். இருப்பினும் ஊடகங்கள் தொடர்ந்தும் வலதுசாரிய யு.கே.இ.பா கட்சியை மட்டுமே ஊக்குவித்து வருவதை அவதானிக்கலாம்.

ஸ்கொட்லாந்து

கன்சவெடி கட்சி மற்றும் லேபர் கட்சி ஆகியன வெஸ்மினிஸ்டர் கட்சிகளாக பார்க்கப்பட்டு புறக்கணிக்கப் பட்டிருந்தன. ஸ்கொட்லாந்து விடுதலைக்கான வாக்கெடுப்புக்குப் பிறகு சாத்தியமான 59 ஆசனங்களில்  56 ஆசனங்களை முன்பு வென்றிருந்தது ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி. தற்போது 21 ஆசனங்களை இழந்து 35 ஆசனங்களை மட்டுமே வென்றுள்ளன. கன்சவேடிவ் 13 ஆசனங்களையும் லேபர் 7 ஆசனங்களையும் லிபரல் 4 ஆசனங்களையும் கைப்பற்றி உள்ளன. எஸ் ஏன் பிக்கு இது ஒரு மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.