“வாரச் செய்திகள்” தை 11, 2016 முதல் தை 17, 2016 வரை

997 . Views .

 

திங்கட்கிழமை – தை 11, 2016

 1. வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்காக விரைவில் விசேட நிதியம்! பிரதமர் அறிவிப்புயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக்  கொண்டு விசேட நிதியமொன்றை இவ்வருடத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.தேசிய இளைஞர் சம்மேளன பிரதிநிதிகளை நேற்று அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
 2. மீதொடமுல்லை குப்பை மேட்டுக்கு எதிராக கடந்த 27ம் திகதி மார்கழி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட.கீர்த்தி, நுவன் ஆகியோர் பிணையில் விடுவிப்பு – இவர்களை இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 3. ஐரோப்பிய ஒன்றிய உயர்குழு இலங்கை வருகிறதுஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நிலை அதிகாரிகள், இலங்கை வரவுள்ளனர். எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இவர்களின் இலங்கை விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் சலுகை உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் ஆராயும் முகமாகவே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இலங்கையில் வர்த்தக சமூகத்தினரை மையமாகக் கொண்டு ஜீஎஸ்பி பிளஸ் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தவுள்ளனர்.
 4. லொறிகளின் மேல் ஏறி நின்றும் மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் கொள்ளையர்களின் நடவடிக்கையினை கட்டுப்படுத்துமாறு கோரியும் லொறி உரிமையாளர்களுக்கு மணல் ஏற்றுவதற்கான அனுமதி வழங்குமாறு கோரியும் மட்டக்களப்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக கடந்த ஆட்சியின் போது இங்கிருந்த சில அரசியல்வாதிகளின் அடிவருடிகளாக செயற்பட்டவர்கள் பல அனுமதிப்பத்திரங்களை வைத்திருந்த மண் அகழ்வினை செய்வதாகவும் அதன் காரணமாக தமக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 5. பாட புத்தகங்களை விற்பனை செய்ய தயாராகின்றது அரசு – வரவு செலவுத்திட்டத்தில் 6 வீதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், பாடசாலை மாணவர்களிடமிருந்து இன்றும் பணம் அறவிடப்படுவதாக முன்னிலை சோஷலிச கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது.
 6. இலாபத்தை சம்பாதித்தாலும், தொழிலாளர்கள் சம்பளத்தை அதிகரிக்கவில்லைதேயிலை தோட்ட உரிமையாளர் அதிக இலாபத்தை சம்பாதித்த போதிலும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
 7. .நா. மனித உரிமைகள் ஆணையாளர் அடுத்த மாத முதல் பகுதியில் இலங்கை வருகிறார் – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் எதிர்வரும் மாதம் முதல் பகுதியில் இலங்கை வரவுள்ளார்.இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 8. ஜப்பானும் இலங்கையும் உயர்மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனஜப்பானும் இலங்கையும் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.இரண்டு நாடுகளினதும் சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்கும் அந்த கொள்கைக்கலந்துரையாடல், எதிர்வரும் 12ஆம் திகதியன்று வெளியுறவுத்துறை அமைச்சில் இடம்பெறவுள்ளது.

 

செவ்வாய்க்கிழமை – தை 12, 2016

 1. அரசியலமைப்பு பேரவை அமைப்பது குறித்து நாடாளுமன்றில் இன்று விவாதம்- அரசியலமைப்பு உருவாக்கும் நோக்கில் அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அரசியலமைப்பு பேரவை குறித்த யோசனை அண்மையில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
 2. கனகராயன்குளத்தில் விறகு வெட்டச் சென்ற பெண்கள் மீது வனஇலகா அதிகாரிகள் தாக்குதல்வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் விறகு வெட்டச் சென்ற விதவைப் பெண்கள் மீது வனஇலாக அதிகாரிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் அவர்களின் கோடரிகளையும் பறித்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
 3. மலையகத்தில் 728 மில்லியன் ரூபாவில் வீதிகளை புனரமைக்க நடவடிக்கைமலையகத்தில் கிராமபுற மற்றும் தோட்டபுற பிரதான வீதிகளை நல்லாட்சி அரசாங்கம் இனங்கண்டு சீர்செய்யும் நடவடிக்கைக்கான நிகழ்வினை பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆரம்பித்து வைத்துள்ளார்.
 4. மன்னாரில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புமன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த ஆண்டு 66 டெங்கு நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் தெரிவித்தார். கடந்த வருடம் 66 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட போதும் டிசம்பர் மாதம் மட்டும் சுமார் 18 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 5. பேக்கரி உற்பத்திகளின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படும்புதிதாக கொண்டுவரப்பட்ட வரி முறையின் அடிப்படையில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை 5 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்க தலைவர் என்.கே. ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
 6. இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வருகைஇரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் இன்று இலங்கையை வந்தடைந்தார்
 7. “தனிஈழம் தான் வேண்டும்என்றால் அந்த கருத்தும் இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படும் – “தமக்கு தனிஈழம்தான் வேண்டும்” என்ற கோரிக்கையை வடக்கு மக்கள் முன்வைக்கும்பட்சத்தில், அந்தக் கருத்தும் இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படும் என்று அரசமைப்பு மறுசீரமைப்பு சம்பந்தமாக மக்களிடம் கருத்தறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
 8. வேதனத்தை உரிய நேரத்தில் வழங்க வேண்டும்! வட்டவளை தோட்டத் தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு – வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் 300ற்கும் அதிகமான தோட்ட தொழிலாளர்கள் “தங்களுக்கான வேதனத்தை உரிய நேரத்தில் தோட்ட நிர்வாகம் வழங்கப்பட வேண்டும்” என கோரி அடையாள பணிபகிஷ்கரிப்பில் இன்று ஈடுப்பட்டுள்ளனர்.பண்டிகை காலங்களில் தங்களுக்கான சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்படுவதில்லை. இத்தோட்டம் ஜனவசம நிர்வாகத்தின் கீழ் இயக்கப்படுவதனால் தொழிலாளர்களுக்கான சலுகைகள் உரிய வேளையில் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருவதை ஆட்சேபித்து இன்று காலை பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கபட்டுள்ளது.
 9. நாடாளுமன்றில் இன்று அரசமைப்பு தொடர்பான யோசனைகள் இன்று சமர்ப்பிப்பு – அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்பது யோசனைகளை முன்வைத்துள்ளது. அதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று நாடாளுமன்ற அமர்வின்போது அதனை சபையில் சமர்ப்பிக்கவுள்ளோம் என கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் பைஷல் முஸ்தபா ஆகியோர் கூறினர்.
 10. ஒரே தடவையில் 2600 பட்டதாரிகளுக்கு அரசாங்கத் தொழில் நியமனம்2600 பட்டதாரிகளுக்கு இன்று அலரிமாளிகையில் வைத்து அரசாங்கத் தொழில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் பத்து லட்சம் பேருக்கு புதிதாக தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவுக்கு ஏற்ப இன்றைய தொழில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
 11. முல்லைத்தீவில் 946 இயந்திரப் படகுகள் மாத்திரமே உள்ளதுமுல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் 3451 மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான தொழில் உபகரணமாக 946 இயந்திரப் படகுகள் மட்டுமே உள்ளதாக மாவட்ட நீரியல்வள திணைக்கள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
 12. பாலியல் வன்முறைகளை ஒழிக்கும் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்துபோரின் போது பாலியல் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும் பிரகடனத்தை இலங்கை இன்று கைச்சாத்திட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் 25ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் நியூயோர்க் தலைமையகத்தில் 122 நாடுகள் இந்த பிரகடனத்தை ஏற்றுக்கொண்டன. இந்த நிலையில் குறித்த பிரகடனத்தை இன்று 155 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

 

புதன்கிழமை – தை 13, 2016

 1. அரசாங்க உயர்மட்டத்தினருடன் சந்திப்புக்களை நடத்திய ஜெய்சங்கர் இன்று கூட்டமைப்பினருடன் பேச்சுஇலங்கை இந்திய கூட்டு ஆணைக்குழுவின் முன்னெடுப்புகள் மற்றும் இரு நாடுகளினதும் ஒன்றிணைந்த எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் நேற்று அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 2. யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்தனியார் பல்கலைக் கழகத்திற்கான அனுமதி வழக்கப்படுவது எதிர்ப்புத் தெரிவித்தும் வேறு பல கோரிக்கைகளை முன்வைத்தும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் போரணி ஒன்றினை நடத்தியுள்ளனர். மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 7 பிரிவுகளை சேர்ந்த 600 மாணவர்கள் இவ்வார்ப்பாட்டப் போரணியில் கலந்து கொண்டுள்ளனர் என்று ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
 3. மருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் – நாடளாவிய ரீதியிலான மருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு பல்கலைகழக, மருத்துவபீடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார்2000ற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
 4. தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் கோரிக்கை – தமிழ் அரசியல் கைதிகள் பிரதான இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சத்திவேல் தெரிவித்துள்ளார். மெகஸின் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 5. ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம் – தேசிய பொங்கல் விழாவுக்காக ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் யாழ். வருகைதரவுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
 6. தனியார் துறை சம்பளத்தை 3500 ரூபாவால் அதிகரிக்க பிரேரணை – தனியார் துறை ஊழியர்களுக்கு 3500 ரூபா சம்பள உயர்வை வழங்கும் வகையில் சம்பள நிர்ணய சபைகள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான பிரேரணையை தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
 7. மட்டு மாவட்டத்தில் ஒரு வருடத்திற்கு பின் அபிவிருத்திக்குழுக் கூட்டம் – மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் எஸ்.எம்.எம். அமீர் அலி, அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
 8. திருகோணமலைமுல்லைத்தீவு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம் – திருகோணமலை. பதவிசிறிபுர பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட திருகோணமலை – முல்லைத்தீவு பிரதான வீதியில் சிங்கபுர பகுதியில் இன்று பிரதேசவாசிகளால் சாலை மறியல் போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. திருகோணமலை முல்லைத்தீவு பிரதான வீதியின் நிர்மாணப் பணிகள் கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுடன் இடைநிறுத்தப்பட்ட நிலையில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்வதற்காக கொண்டு வரப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் மீள எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
 9. வற் மற்றும் என்பிடி வரிகள் நடைமுறைப்படுத்தப்படாது– 2016ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட வற் என்ற பெறுமதிசேர் வரி மற்றும் என்பிடி என்ற தேச நிர்மாண வரி ஆகியவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துவதில்லை என்று நிதியமைச்சு தீர்மானத்தை எடுத்துள்ளது.  குறித்த வரிகள் தொடர்பில் ஏற்கனவே பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை வரி அமுலாக்கம் இருக்காது என்று நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 10. வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது – வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் கே.கே.மஸ்தான் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது

 

வியாழக்கிழமை – தை 14, 2016

 1. இறக்குமதி வாகனங்களின் விலைகள் அதிகரிக்கவுள்ளன – புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வாகனங்களின் விலைகள் 20 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளன. வாகன இறக்குமதியாளர் சம்மேளன தலைவர் மஹிந்த சரத்சந்திர இதனை தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்ட யோசனைப்படி நவம்பர் 2015 முதல் சுங்கத்தீர்வையும், சுங்க மதிப்பீட்டு கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
 2. இலங்கை விமானப்படைக்கு விரைவில் புதிய ரக போர்விமானங்கள் – இலங்கை விமானப்படைக்காக போர்விமானங்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படு வருவதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவி்த்துள்ளார்.
 3. .நா அலுவலகத்திற்கு முன்பாக குண்டுவெடிப்புக்களும் துப்பாக்கி பிரயோகங்களும். – இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புக்கள் மற்றும் துப்பாக்கி பிரயோகங்கள்இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 4. செட்டிகுளத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணியை விடுவிக்க வேண்டும் – வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறாயிரத்து 348 ஏக்கர் காணியை விடுவிக்க வேண்டும் என செட்டிகுளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 5. மஹிந்தவை போலவே மைத்திரியும் விற்க முனைகிறார் – தொழிற்சங்கம் குற்றச்சாட்டு – கொலன்னாவை எரிப்பொருள் களஞ்சியசாலையின் உரிமையை இந்தியன் எண்ணெய் நிறுவனத்திற்கு விற்பதற்கு அரசாங்கம் இரகசிய ஒப்பந்தங்களை செய்துள்ளதாக தொழிற்சங்கம் குற்றஞ் சுமத்தியுள்ளது.
 6. வலி. வடக்கில் மீள் குடியேற்றத்துக்காக5 ஏக்கர் நிலம் இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்படும்- யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 701.5 ஏக்கர் நிலம் கடந்த 29ம் திகதி மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், 2ம் கட்டமாக 282.5 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்திருக்கின்றார்.
 7. முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மக்களின் காணிகளுக்கு பதில் காணி வழங்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். மகாவலி பிவிருத்தி திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் காணிகளை சிங்கள மக்களிற்கு கையளிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் தமது வயல் காணிகளில் அவர்கள் நெற்செய்கையில் ஈடுபடுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
 8. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் பாலத்தினை புனரமைத்து தருமாறு இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படாத இந்த பாலத்தினை புனரமைப்பதற்கு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
 9. இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 55 தமிழக மீனவர்கள் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 10. திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அப்துல்லா மஹாறுப் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், எதிர்க் கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட மாகண அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 11. உலக அறிவுசார் சொத்து சம்மேளனத்தின் உதவிப்பெறும் முன்னணி நான்கு நாடுகளில் ஒரு நாடாக இலங்கை தெரிவாகியுள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் ஜெனீவா தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. அறிவுசார் சொத்து, சுற்றுலா மற்றும் கலாசாரம் என்ற பெயரில் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள முன்னணி நான்கு நாடுகளில் ஒன்றாகவே இலங்கை தெரிவாகியுள்ளது.
 12. இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகவல்களின்படி பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் அமைப்பு மீள் உருவாக்கம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
 13. 2015 ஆம் ஆண்டுக்கான புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் போரினால் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் ஆகியோருக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் திட்டம் வடக்கு மாகாண மீன்பிடி,போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

 

வெள்ளிக்கிழமை – தை 15, 2016

 1. சமஷ்டி முறையா அல்லது ஐக்கிய இலங்கையா என்பது குறித்து யாப்பு திருத்தம் தொடர்பான ஆராய்வின் போதே முடிவு செய்யப்படும் என்று தெரிவித்த அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன நாட்டை துண்டு போடாது தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்தே ஆராயப்படுவதாகவும் தெரிவித்தார்.
 2. எவரும் ஆளும்கட்சியில் இணையப் போவதில்லைகூட்டு எதிர்க்கட்சியின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
 3. வன்னிப் போர் குறித்த இரகசிய புலனாய்வு அறிக்கைகள் வெளிப்படுத்தப்படக் கூடாது என புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உயர் அதிகாரியொருவர் கோரிக்கை விடுத்துள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றின் ஊடாக குறித்த அதிகாரி இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.
 4. சட்டவிரோதமாக மண் அகழ்ந்தவர் ஆயுதங்களை கைவிட்டு தலைமறைவுஇராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள முள்ளிவாய்க்கள் பொதுக்காணிகளில் சட்டவிரோதமாக மண் அகழப்படுவதாக பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர். இது தொடர்பாக காவற்துறையினருக்கு ஏற்கனவே தகவல் வழங்கியதாகவும், அவர்களின் கண்காணிப்பு முல்லை-பரந்தன் பிரதான வீதியில் மட்டுமே இருக்கின்றது, ஆனால் மண் அகழ்வுக்காரர் புதிதாக பாதைகள் அமைத்து இராணுவத்தினர் பயன்படுத்தும் பிரதான வழியூடாக மண்னை கடத்திச் செல்வதாகவும் இதைக்கண்டும் காணாதவாறு படையினர் இருப்பதாகவும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.
 5. பாணின் விலையை மீளக் குறைக்கத் தீர்மானம் – ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை மீண்டும் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் பாண் ஒன்றின் விலை ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.
 6. உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி! மக்களுக்கு நிவாரணம் இல்லைஉலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்தும் அதனை இந்த நாட்டு மக்களுக்கு அனுபவிக்க முடியவில்லை என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினம் 30 அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளதுடன், அது கடந்த 11 ஆண்டுகளுக்கு பின்னர் காணப்பட்ட குறைந்த விலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் எண்ணெய் விலை 70% இனால் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் மக்களுக்கு எந்தவிதத்திலும் சலுகைகள் வழங்கப்படவில்லை என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
 7. இலங்கையில் வாழும் குடும்பங்களில் 25 இலட்சம் குடும்பங்கள் அரச காணிகளில் குடியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள் என தெரியவந்துள்ளது. மேற்படி காணிகளில் குடியேறியிருப்பவர்களுக்கு அந்த காணிகளை சொந்தமாக்கி கொடுக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 8. கடல் பாதுகாப்பபில் இலங்கையும் ஜப்பானும் இணைந்து செயற்பட இணக்கம் – கடல் பாதுகாப்பில் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து இலங்கையும் ஜப்பானும் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன.
 9. ஐந்தாண்டுத் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதிபெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை மையமாக்க்கொண்டு தயாரிக்கப்பட்ட பத்தாண்டுக்கான தேசிய நடவடிக்கைத் திட்டம் ஐந்தாண்டுத் திட்டமாக மாற்றப்பட்டு அதற்கான அங்கீகாரத்தினை அமைச்சரவை வழங்கியுள்ளது.
 10. சுகாதார அமைச்சருக்கு எதிராக வழக்கு!- வைத்தியர்கள் எச்சரிக்கை – தமது சங்கம், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அரச மருத்துவர் அதிகாரிகள் சம்மேளனம் எச்சரித்துள்ளது. மாலபே தனியார் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களை அரச வைத்தியசாலைகளில் உள்ளக பயிற்சிகளுக்கு அனுமதித்தமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சம்மேளனம் அறிவித்துள்ளது.

 

சனிக்கிழமை – தை 16, 2016

 1.  உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலிடம்2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த மாகாணமாக வட மாகாணமும், சிறந்த மாவட்டமாக யாழ்ப்பாண மாவட்டமும் சாதனை படைத்துள்ளன.
 2. பெற்றோல், டீசல் விலையினை குறைக்குமாறு கோரிக்கை பெற்றோல் லீற்றரின் விலையை 90 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 70 ரூபாவாகவும் குறைக்குமாறு, நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
 3. அரசாங்கத்திற்கு1 பில்லியன் ரூபாய்களை செலுத்துமாறு அவன்ட்கார்ட் நிறுவனத்திடம் கோரிக்கை  – அவன்ட்கார்ட் கடல்பாதுகாப்பு சேவை நிறுவனம் அரசாங்கத்துக்கு 3.1 பில்லியன் ரூபாய்களை செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.பாரிய ஊழல்கள் மற்றும் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு இந்த கோரலை விடுத்துள்ளது. 2012- 14ஆம் ஆண்டுக்களுக்காகவே இந்த தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது. அவன்ட்கார்ட் நிறுவனம் கடலில் வெளிநாட்டு கப்பல்களுக்கு பாதுகாப்பை வழங்கி வந்த நிறுவனமாகும்
 4. ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 1400 ற்கும் அதிகமான முறைப்பாடுகள் – பல்வேறு விடயங்கள் தொடர்பில் 1400 ற்கும் அதிகமான முறைப்பாடுகள் பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்குக் கிடைத்துள்ளன. கடந்த நவம்பர் மாத இறுதியில் சுமார் 900 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்தார்.
 5. அரசியலமைப்பிற்கான பொது மக்களின் கருத்துக்கணிப்பு ஆரம்பம் – அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்கணிப்பு எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இக்கருத்துக்கணிப்பானது, கொழும்பு விசும்பாயவில் அமைந்துள்ள அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மக்கள் ஆலோசனை குழு செயலாளர் காரியலயத்தில் இடம்பெறும்.
 6. காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதியுடன் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது
 7. கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் உடனடியாக மீட்கப்பட வேண்டும்: முல்லை மக்கள் – ”கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் உடனடியாக மீட்கப்படவேண்டும்” என முல்லைத்தீவு வெட்டுவாய்க்கால் கிராமத்தின் பொதுமக்கள் வடமாகணசபை உறுப்பினர் ரவிகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
 8. தமிழகத்தின் 125 தொழில்துறை பிரதிநிதிகளுடன் உலகெங்கிலும் உள்ள 400 தொழில்துறை பிரதிநிதிகள் இலங்கையின் கிழக்கு பிராந்தியத்தில் நடைபெறும் இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர் அமர்வில் பங்கேற்கவுள்ளனர்.இந்த அமர்வு, எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
 9. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கினால் இலங்கைக்கு அதிக உதவி! பிரித்தானிய அறிவிப்பு – இலங்கையின் தயாரிக்கப்படும் புதிய அரசியல் அமைப்புக்கு தம்மால் எவ்வித செல்வாக்கும் செலுத்தப்படவில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் ஹீகோ ஸ்வைர் இதனை தெரிவித்ததார்.

 

ஞாயிற்றுக்கிழமை – தை 17, 2016

 1. சம்பள உயர்வு தொடர்பில் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு தொடா்ந்தும் ஏமாற்றம்சித்திரை புத்தாண்டு, தீபாவளி மற்றும் தைப் பொங்கல் என ஒவ்வொரு பண்டிகைக் காலங்களிலும் சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்து போனதாக மலையக தோட்டத் தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.
 2.  .பொ. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை குறைப்பதற்கு தீர்மானம்கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை ஒன்பதிலிருந்து 6 அல்லது 7 பாடங்களாக குறைப்பதற்கு தேசிய கல்வி நிறுவகம் தீர்மானித்துள்ளது. இதற்காக புதிய பாடநெறிகளை தயார் செய்துள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் தலைவர் கலாநிதி குணபால நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
 3. இணைத்தலைவர்களை ஜனாதிபதியும் பிரதமரும் சந்திக்கின்றனர் – இலங்கையில் மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள புதிய இணைத்தலைவர்களை ஜனாதிபதியும் பிரதமரும் சந்திக்கவுள்ளனர்.இந்த சந்திப்பு நாளை இடம்பெறும் என கூறப்படுகிறது. இதன்போது மாவட்ட அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்பு குழுக்களின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது.
 4. உத்தேச அரசியலமைப்பை வரைவது தொடர்பில் ஆலோசனையில் சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா – உத்தேச அரசியலமைப்பை வரைவது தொடர்பில் ஆலோசனை வழங்கும் நடவடிக்கையில் சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாபிரிக்க நாடுகளைச் சேர்ந்த அரசியலமைப்பு நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று பங்குகொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 5. அனைவருக்கும் விரைவில் காணி உறுதிப்பத்திரம் – உறுதிப்பத்திரம் இல்லாத காணி உரிமையாளர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த வகையில் 17 இலட்சம் உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.ஏ.கே. மஹாநாமா தெரிவித்துள்ளார்.
 6. பா­­சாலை ஆசி­ரி­யர்­­ளுக்கும் மாண­வர்­­ளுக்கும் இந்த வரு­டத்தில் 13 நாட்கள் மேலதிக விடு­முறை பா­ட­சாலை ஆசி­ரி­யர்­க­ளுக்கும் மாண­வர்­க­ளுக்கும் இந்த வரு­டத்தில் 13 நாட்கள் மேலதிக விடு­முறையாக வழங்­கப்­பட்­டுள்ளது.
 7. அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்க தயாராகும் சிவில் அமைப்புகள்நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு வருடம் கழிந்துள்ள போதிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குதல், கொள்ளையர்கள், மோசடியாளர்கள் மற்றும் ஊழல்வாதிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வருவதாக அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படவில்லை சிவில் அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.இதனால், நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாரிய பணிகளை செய்த சகல சிவில் அமைப்புகளும் அரசாங்கத்திற்கு எதிராக இறுதி அறிக்கையை வெளியிட தீர்மானித்துள்ளன.
 8. கப்பல் போக்குவரத்து பாதையில் கவனம் செலுத்தும் அமெரிக்கா! இலங்கையுடன் இணைய முயற்சி – கப்பல் போக்குவரத்துப் பாதையின் பாதுகாப்பு விடயத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்படும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், கப்பல் போக்குவரத்து வழியைப் பாதுகாப்பதில் இலங்கையுடன் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பது குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆய்வு செய்துள்ளார். கடந்த 14ஆம் திகதி காலியில் உள்ள இலங்கையின் கடற்படையின் தென்பிராந்தியத் தலைமையகத்துக்கு சென்றிருந்த அமெரிக்கத் தூதுவர், இலங்கையின் கடற்படையின் போர்க்கப்பல்களையும் பார்வையிட்டார். மேலும், காலி துறைமுகத்தை அமெரிக்கத் தூதுவர் படகில் சென்று பார்வையிட்டுள்ளார்
 9. மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் விடுவிக்கப்படாதுயாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்களின் பயன்பாட்டுக்கு விடுவிப்பதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.