செய்குறி பிழைத்த ஊடலும் கூடலும்

கூட்டமைப்பு – கூட்டணி என்ற சொற்கள் மிகவும் குழப்பம் தரும் சொற்களாக மாற்றப் பட்டுள்ளன. இந்தச் சொற்கள் அர்த்தமிழந்து வெறும் கதிரை அரசியலுக்கான நகர்வுகளை மட்டும் குறிக்கும் குறியீடுகளாகக் குறுகிப் போயுள்ளது.

1

தமிழ்த் தலைமைகள் எனத் தம்மைத் தாமே சொல்லிக் கொண்டவர்களின் வலது சாரியத் சரிவு தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தைத் தொடர்ந்து உடைத்து வந்திருக்கிறது. இந்தப் போக்கை மிக அவதானமாக நாம் கவினிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் தமிழ் தலைமைகளின் உடைவும் சரிவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மறைமுகச் சதி மூலம் மட்டும் நிகழ்வதாக காட்டும் போக்கும் உண்டு. இலங்கை அரசும் வலது சாரிய ஐ.தே.க யும் தமிழ் மக்களின் நலன்களுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த ஒடுக்கப்படும் மக்களுக்கும் எதிராகத்தான் எப்போதும் இயங்கி வந்துள்ளன. அவர்களின் கொள்கை தமிழ் மக்கள் மத்தியில் போராட்ட அரசியல் வளர்வதற்கு எதிர் திசையில் இருக்கிறது. இதனால் அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையும் போராட்ட சக்திகளை உடைப்பதாக இருக்கத்தான் செய்யும். இது இரகசியமில்லை – இது இதுவரையான வரலாறு. தமிழ் தலைமைகளுக்கு வலது சாரியச் சரிவு இன்றி ஐ.தே.க தன் வரலாற்றுக் கடமையை எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்பதை சிலர் வசதியாக மறந்து விடுகின்றனர்.

நாற்பதுகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரசில் ஏற்பட்ட கட்சி முரண்பாடுகளுக்குப் பின்னால் இருந்த முக்கிய காரணம் அக்கட்சித் தலைமையின் வஞ்சகத் தனமான வலது சாரிய கூட்டே. ஜி ஜி பொன்னம்பலம் கதிரைக்கு ஆசைப்பட்டு ஐ.தே.க உடன் இரண்டறக் கலந்ததை அப்போது எதிர்த்த இள வயதினர் உடைத்துக் கொண்டு புதிய கட்சி கட்ட வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப் பட்டனர். இவ்வாறுதான் செல்வநாயகம் தலைமையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உருவாகியது. இருப்பினும் இந்த உடைவின் அடிப்படை அரசியல் போக்கைச் சரியாக அடையாளப் படுத்தி தமது அரசியல் திட்டமிடல்களை –தமது கட்சியின் அரசியல் பண்பை தீர்மானிக்கும் திறமை புதிய தமிழரசுக் கட்சிக்கு இருக்கவில்லை. ‘தமிழ் பற்று’ – ‘தமிழர்களுக்கான அதிகாரம்’ என்ற அடிப்படையில் மட்டும் ‘தமிழ் வாக்குகளைக்’ குவிக்கும் நோக்குள்ள கட்சியாக இக்கட்சி தன்னை அரசியல் அடிப்படையில் சுருக்கிக் கொண்டுவிட்டது. ஆங்கிலத்தில் பிடரல் கட்சி என்ற பெயரில் இயங்கிய இக்கட்சி பழைய தமிழ் காங்கிரசின் அரசியலில் இருந்து முற்றாக உடைத்துக் கொள்ளவில்லை. ‘தமிழரசு’ என்ற தேசிய முரண் தவிர்த்து வேறு முக்கிய முரண்கள் இல்லாமையால் உடனடியாக மக்களை தம் பக்கம் இழுக்க முடியவில்லை. தமிழரசுக் கட்சி பங்கு பற்றிய முதலாவது தேர்தலில் இரண்டு வீதத்திற்கும் குறைவான வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. தமிழ் பேசும் மக்கள் இவர்கள் ஏன் உடைத்துக் கொண்டனர் என்ற காரணத்தை அறிந்து கொள்ள முடியவில்லை. அதாவது எவ்வாறு தமிழரசுக் கட்சி கொள்கை அடிப்படையில் தமிழ் காங்கிரசுடன் வேறு படுகிறது என்று தெரியாத நிலையில் மக்கள் வாக்கு வழங்கும் பானியில் மாற்றம் ஏற்படவில்லை.

ஆனால் ஐம்பதுகளில் எழுந்த சிங்கள இனவாதம் மற்றும் தமிழ் பேசும் மக்களுக்கு மேலான தாக்குதல்கள் ஆகியன மக்களை தமிழரசுக் கட்சி பக்கம் திரட்டியது. கொள்கை அடிப்படையில் இன்றி தேசிய ஒடுக்குதலில் இருந்து விடுதலை என்ற அடிப்படையில் இது நிகழ்ந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். தேசிய அடிப்படையில் தாக்குதலுக்கு உள்ளான மக்கள் தமது அரசியல் எதிர்ப்பை பதிவதற்கு அன்று வேறு அரசியல் வாகனம் இருக்கவில்லை. அன்று பலத்துடன் இயங்கிய இடதுசாரிகள் பலர் தேசிய பிரச்சினை சார்ந்த சரியான அணுகுமுறை கொண்டவர்களாக இருக்கவில்லை.

அக்காலத்தில் பலம் வாய்ந்த கட்சியாக இருந்த லங்கா சம சமாஜ கட்சி தமிழ் மக்களின் மொழி உரிமை உட்பட பல தேசிய உரிமைகளை ஏற்றுக் கொண்டு அதை பாதுகாத்துப் பேசிய போதும் அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க கட்சியாக மாற முடியவில்லை. தமிழ் மக்கள் மத்தியில் கால் ஊன்ற முடியாமைக்கு தமிழ் சாதிய கட்டுமானம் – மற்றும் வளரும் தமிழ் தேசியம் ஆகியவற்றை அவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் தமிழ் மாக்கள் மத்தியில் ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலவரங்களை நாடி பிடித்துப் பார்க்கும் வல்லமை இந்த தலைமைகளுக்கு இருக்கவில்லை என்பதும் – தமிழ் தேசிய வளர்ச்சியின் அடிப்படையை இவர்கள் புரிந்து கொண்டிருந்த விதம் தவறு என்பதும் மறக்க முடியாத உண்மையே. தெற்கில் மலேரியா தாக்கிய போது இடதுசாரிகள் செய்த கடும் உழைப்பு சம சமாஜ கட்சி பலப் பட உதவிது. அத்தகைய முறையில் தமிழ் மக்கள் மத்தியில் சனநாயக உரிமைகளை பாதுகாக்கும் எந்த பலமான வேலைகளையுக் இக்கட்சி செய்யவில்லை. வர்க்க வாதம் தாண்டிச் சனாயாக கோரிக்கைகளையும் கையில் எடுக்காமல் தேசிய பிளவைத் தான்டி தாம் நகர முடியாது என்பதை அவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை.

பொருளாதார மற்றும் சனாயாக உரிமைகள் சார்ந்த சரியான நிலைப்பாடு தேசிய உரிமை சார்ந்த சரியான நிலைப்பாடோடு இணைந்த ஒரு அரசியல் அமைப்பு அன்று இருந்திருக்குமானால் வரலாறு வேறு மாதிரி நகர்ந்திருக்கும் வாய்ப்பு இருந்திருக்கும். அப்படி ஒரு அமைப்பு இல்லாத காரணத்தால் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சி பக்கம் திரண்டனர். அந்தப் பலத்தை தெற்கு சிங்கள இனவாதிகள் தமது அதிகாரத்தை சிங்கள மக்கள் மத்தியில் உறுதிப்படுத்த உபயோகித்துக் கொண்டனர். இதை வெட்டி நிமித்துகிறோம் என்ற போக்கில் இடது சாரிகள் அரசுடன் கூட்டரசியலில் விழுந்தது மட்டுமின்றி தமது பழைய தேசிய உரிமை மற்றும் மொழி உரிமை பற்றிய நிலைப்பாடுகளையும் மாற்றிக் கொண்டுவிட்டனர். இது மக்களிடையே ஏற்பட்ட துருவமாக்களை மேலும் பலப் படுத்தியது.

2

தமிழ் மக்கள் மத்தியில் தேசிய அரசியலின் அடிப்படையில் மட்டுமே பலப்பட முடியும் என்ற போக்கில் அனைத்து வாக்குச் சேகரிக்கும் அரசியல் நடவடிக்கைகளும் ‘தேசியக் கதையாடல்கள்’ நோக்கி நகர்ந்தது. இருப்பினும் தேசியக் கோரிக்கைகளுக்குப் பின் இருந்த கொள்கை அடிப்படைகள் தமிழ் மக்கள் மத்தியில் – குறிப்பாக இளையோர் மத்தியில் பலமாகவே இருந்து வந்ததை தமிழரசுக் கட்சி தலைமைகள் கவனத்தில் எடுக்கவில்லை. வடக்கில் தேசிய சொல்லாடல்களை எரிந்துவிட்டு தெற்கில் வலது சாரிய கொள்கைகளுக்கு –குறிப்பாக ஐ.தே.க இக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தது தமிழரசுக் கட்சியின் சரிவுக்கு வித்திட்டது.

தமிழ் அமைப்புக்கள் தேசியம் மற்றும் பொருளாதார –சமூக கொள்கை அடிப்படையில் இணைய வேண்டும் – ஒன்றுபட வேண்டும் என்ற கோரிக்கை மேலிருந்து எழுந்த கோரிக்கை அல்ல. அது கீழிருந்து மேலாக எழுந்த கோரிக்கை. குறிப்பாக இளையோர் தாம் தமக்கான அமைப்புக்களை நிறுவத் தொடங்கிய காலகட்டத்தில் வலுப் பட்ட கோரிக்கை அது. அந்த கோரிக்கையின் பலத்தின் பின்னணியில்தான் வட்டுக்கோட்டை தீர்மானமும் முதலாவது கூட்டும் உருவாகியது.

இந்தக் கூட்டில் ‘விடுதலை’ என்ற சொல் இணைக்கப்பட்டு பிடரல் கொள்கைக்கு அப்பால் தேசிய கோரிக்கை நகர்த்தப் பட்டது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனி என்ற கூட்டணி ஆரம்ம்ப காலத்தில் இலங்கையில் உருவாகிய மிக வெற்றிகரமான அமைப்புக்களில் ஓன்று. தமிழ் மக்கள் மத்தியில் இத்தகைய பலமான அரசியல் ஒன்றிணைவு அதுவரை இருந்ததில்லை. சோஷலிச தமிழ் ஈழம் என்ற முழுமையான தேசிய உரிமையைக் கோரியது மட்டுமின்றி பொருளாதார மற்றும் சனநாயக உரிமைகள் சார்ந்தும் பல முற்போக்குத் தன்மைகளின் அடிப்படையில் உருவான வட்டுக் கோட்டைத் தீர்மானம் இந்த கூட்டணி உருவாகாக் காரணமாகியது.

ஆனால் இந்தக் கூட்டணி பல சக்திகளை ஒன்றிணைத்த காரணத்தால் அரசியல் பண்பை – அது நகரும் அரசியல் திசையை தீர்மானிக்கத் திணறியது. இதற்கு முக்கிய காரணங்களில் ஓன்று இந்தக் கூட்டணிக்குள் சனயாகப் பண்புகள் மறுக்கப்பட்டமையே (அமிர்தலிங்கத்துக்கு காட்போர்ட் கிட்லர் என்ற ஒரு பட்டப் பெயரும் இருந்ததை நினைவு கொள்வோம்). அது மட்டுமின்றி முழுமையான தலைமை தொடர்ந்தும் தமிழரசுக் கட்சி தலைமைகளிடம் மட்டுமே இருந்தது. இதனால் அமைப்பின் பெயரும் –கடதாசியில் கொள்கையும் – மாறியதே தவிர நடைமுறையில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அடுத்த தேர்தலுடன் இந்தத் தலைமைகள் தங்கள் உண்மை முகத்தை வெளிக்காட்டி விட்டனர். கொள்கை அடிப்படையில் தேர்தலில் ஓடி ஓடி வேலை செய்த இளையோர் – பறந்து பறந்து வாக்குப் போட்ட மக்கள் எல்லோரும் ஒரு கணத்தில் கைவிடப்பட்டனர். ‘தலைமைகளுக்கு’ கொள்கை காற்றில் பறந்தது – வலது சாரிய ஐ.தே.க உடன் நட்பும் –கதிரைக்காக அவர்களுடன் சமரசமும் வளர்ச்சி கன்னடது. இதுவே ஆயுதப் போராட்டத்துக்கு வித்திட்டது. இந்த ஆயுதப் போராட்டம் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் முடக்கி விட்டது.

3

வெறும் கோதாக இருந்த தமிழரசுக் கட்சி – அது பங்கு பற்றிய இன்னுமொரு கோதான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னை ஆகிய கட்சிகளின் தலைமைகள் இளையோருக்கு எதிராக திரும்பியது மட்டுமின்றி இக்கட்சிகள் தொடங்குவதற்கு காரணமாயிருந்த அனைத்து அடிப்படைகளில் இருந்தும் முற்றிலும் முரண்பட்ட நிலைக்கு வந்து சேர்ந்தன. இவர்கள் முற்று முழுதான அரச சமரச கட்சிகளாகவும் போராட்ட நிலைப்பாடுகளுக்கு எதிர் திசையில் நிற்பவர்களாகவும் உருமாற்றம் பெற்றனர். இது ஒரு நாளில் நிகழ்ந்த நடவடிக்கையோ – அல்லது வேறு வழியின்றி நடந்த ஒரு மாற்றமோ அல்ல. பழைய தமிழ் தலைமைகளின் பிற்போக்கு அரசியல் – வலதுசாரியத் தனம் மற்றும் கதிரைக்கான ஏக்கம் ஆகியன இவர்களை இவ்வாறு நகர்த்தியது. மக்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லாத நிலையில் அவர்களின் உண்மையான அரசியல் கொள்கை நிலைப்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

தற்போது கூட்டணித் தலைவராக இருக்கும் ஆனந்த சங்கரி முன்பு சம சமாஜக் கட்சியில் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சியில் மக்களுக்கு காணி வழங்கியமை முதலான பழைய சில வரலாறுகளால் இன்னும் ஒரு சிறு ஆதரவு இவருக்கு உண்டு. இருப்பினும் இவர் அக்கட்சியில் இருந்த காலத்திலும் அதன் பிறகும் அரசியல் கொள்கை நிலைப்பாட்டில் மிகக் குழப்பம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார். கடிதம் எழுதுவது தவிர வேறு எந்த அரசியல் செயல் முறைகளுக்கும் அப்பாற்பட்டவராகவும் இருந்து வருகிறார். கட்சியை தன்னைச் சுற்றிய தொண்டர் குழுவாகவும் குறுக்கி வைத்திருப்பது இவர் தலைமையின் பண்பை எடுத்துக் கட்டுகிறது. 2000ம் ஆண்டு  ஆரம்ப காலத்தில் மீண்டும் தேர்தலில் பங்கு பற்றி கட்சி அரசியலை நிலை நாட்டும் வாய்ப்புக்கள் உருவாகத் தொடங்கிய தருணத்தில் இக்கட்சி தலைமைகளுக்கு மத்தியில் யார் ‘கட்டுப்பாட்டில்’ இருப்பது என்ற அடிப்பாடுதான் வலுபெற்றதே அன்றி என்ன கொள்கையை முன் வைப்பது என்ற அடிபாடு நிகழ வில்லை.

தமிழ் பகுதிகளில் தேர்தல் நடக்கவும் – தேர்தலில் தமிழ் கட்சிகள் நிற்கவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்ப்பு இருக்கப் போவதில்லை என்ற சமிக்சையே மீண்டும் இந்தக் கட்சிகளுக்கு உயிர்ப்பு ஏற்படுத்தியது என்பது மிகையான கருத்தில்லை. தேர்தலில் முழுமையாக பங்கு பற்ற முடியாத காலப் பகுதியில் இந்தக் கட்சிகள் என்ன செய்தன – என்ன கொள்கை அடிப்படையில் இயங்கின – எத்தகய போராட்டத்தை வைத்தன என நாம் பார்க்க வேண்டும். இக்கால கட்டங்களில் புலி எதிர்ப்பு மட்டுமே இக்கட்சி நடவடிக்கைகளில் முதன்மைப் பட்டிருந்ததையும் நாம் அவதானிக்க வேண்டும். இக்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல்களை இக்கட்சி எதிர்க்க கூடாது என நாம் கூறவில்லை. அல்லது புலிகளின் அரசியல் தவறுகளை தட்டிக் கேட்க இவர்களுக்கு உரிமை இல்லை என்ற அர்த்தத்தில் நாம் பேசவில்லை. மாறாக இவர்கள் அரசியல் – கொள்கைகள் எத்தகய மையத்தில் குவிந்திருந்தன என அவதானிக்கும் படியே நாம் கேட்கிறோம். இவர்கள் சரியான கொள்கை அடிப்படையில் இயங்கி இருந்தால் வெறும் கோதுகளாக இவர்கள் சுருங்கி நிற்கும் நிலை இருந்திருக்காது. கூட்டணி நோக்கிக் குறிப்பிடத்தக்க இளையோர் குவிக்கும் வல்லமை கூட்டணியின் பழைய வரலாற்றுக்கு இருந்தது. சங்கரி உட்பட இந்த தலைமைகள் எதுவுமே அத்தகைய பலத்தை உபயோகப் படுத்தி ஒரு போராட்ட அமைப்பைக் கட்டுவதில் அக்கறை எடுக்கவில்லை. குறுக்கு வழியில் எவ்வாறு அதிகாரத்தை தக்க வைப்பது –பாராளுமன்றத்துக்குள் இருப்பது எவ்வாறு – என்ற வாக்கு அரசியலை தாண்டி நகரும் எந்த நோக்கும் இவர்களுக்கு இருக்கவில்லை.

இது எழுந்தமானமான கருத்தில்லை. இது பற்றி கூட்டணியினருடன் –குறிப்பாக ஆனந்த சங்கரியுடன் பல தடவை நேரடியாக உரையாடிய அனுபவமுண்டு. இக்கட்சி மீண்டும் பலமான கட்சியாக மாறுவதற்கான அரசியலை இது கையில் எடுக்க வேண்டும் என உரையாடிய சந்தர்பங்களில் அது பற்றிய எந்த அக்கறையுமே இவர்களுக்கு இல்லை என்பதற்கு அப்பால் – புலி எதிர்ப்பின் முதன்மைப்பாடு இவர்கள் அரசியல் கண்களைக் குருடாக்கி விட்டு விட்டது என்பதும் தெளிவாக தெரிந்து விட்டது. இதன் தொடர்ச்சிதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவான போது இவர்கள் தனித்துப் போகவும் காரணமாகியது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பழைய தலைவர்களின் திடீர் அரசியல் அக்கறை அதிகரிப்பால் உருவாகவில்லை. இதன் உருவாக்கப் பின்னணியை திரித்துப் பேசி வரலாற்றை மாற்றும் நடவடிக்கையும் தற்போது நிகழ்வதைப் பார்க்கலாம். பின் புலத்தில் ஒரு பலத்தின் உந்துதல் இலாமால் ஒரு காலத்திலும் தமிழ் தலைமைகள் ஒன்றுபட முன் வந்ததில்லை. தேர்தல் அரசியலுக்கான வெளி ஓன்று உருவாகும் நிலை விடுதலைப் புலிகள் வழங்க இருக்கும் நிலை இன்றி கூட்டமைப்பு நிமிர்திருக்க முடியாது. இருப்பினும் விடுதலைப் புலிகளின் நேரடித் தலையீடு தவிர்ப்பது –மேலும் சொல்வதானால் அவர்களுக்கு எதிரான கூட்டு ஒன்றை உருவாகும் நோக்கும் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளில் முதன்மைப் பட்டிருந்தது. இருப்பினும் தமிழ் தேசிய ஆதரவு தமக்கு வாக்கை பெற்றுத் தரும் என்ற அடிப்படையும் – புலிகளின் ஆதரவு சமிச்சையும் கூட்டமைப்பின் அரசியல் போக்கை விரைவில் மாற்றி விட்டது. 2002ல் ஆரம்பித்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து புலிகளுக்கும் ஒரு அரசியல் வாகனம் தேவைப் பட்டது. ஒரு புத்தம் புதிய கட்சியை உருவாக்குதல் அல்லது பழைய கட்சியை பாவித்தல் என்பதுதான் அவர்களுக்கு இருந்த தேர்வு. புலிகளின் பொம்மையாக இயங்குவதன் மூலம் தமிழ் வாக்குகளை அள்ளிக் கொட்ட முடியும் என்ற ஒற்றை காரணம் மட்டுமே பெரும்பான்மை கூட்டமைப்பை அவர்கள் நோக்கித் திருப்பியது. இந்தப் போக்கை ஏற்றுக் கொள்ளாத சங்கரி விலகிக்  கொண்டார். இதனால் இந்தக் கூட்டுக்குள் இருந்த தமிழரசுக் கட்சி முதன்மைப் பட்டது.

கூட்டமைப்பில் இருந்து விலத்தி தமிழரசுக் கட்சி 2004ல் தனியாக போட்டி போட்டிருந்தால் எத்தகய ஆதரவைப் பெற்றிருக்க முடியும் ? புலிகளின் பலத்தின் பின்னணியில்தான் கூட்டமைப்பு பலம் சேர்க்கத் தொடங்கியது. அந்த அடிப்படையில்தான் கூட்டமைப்புக்குள் இருந்த தமிழரசுக் கட்சி முக்கிய கட்சியாக மாறியது. இந்த உண்மையை மறுக்க முடியாது. தமிழரசுக் கட்சி தலைமைகள் மக்கள் மத்தியில் இறங்கி வேலை செய்து – தமது கொள்கைப் பரப்பல் செய்து – தமது கொள்கைக்கு மக்களை வென்றெடுத்து பலப்படவில்லை. மாறாக குறுக்கு வழியில் புலிகளைப் பாவித்து வாக்கு வங்கியைக் கைப்பற்றினர்.

யுத்தம் முடிந்த கையோடு புலிகளின் கட்டுப்பாடு முடிவுக்கு வந்த நிலையில் உடனடியாகவே தமிழரசுக் கட்சி – மற்றும் கூட்டமைப்பின் பண்புகள் மாறத் தொடங்கி விட்டன. புலிகள் சர்வாதிகாரம் எனச் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் கூடமைப்புக்குள் இருந்த தேசிய சக்திகள் மற்றும் சிறு கட்சிகளை ஓரங்கட்டத் தொடங்கினர். தமிழரசுக் கட்சியின் தலைமையில் அதிகாரமும் கூட்டமைப்பின் பெயரும் இருந்தமையால் மற்றையவர்கள் பொறுத்துப் போயினர்.

அவர்களின் பொறுமை அவர்தம் அரசியல் போதாமையை வெளிக்காட்டுகிறது. தமிழரசுக் கட்சிக்கு மாற்றான போராட்டக் கொள்கையை –சனநாயக கோரிக்கைகளை முன்னெடுத்து மக்கள் மத்தியில் வேலை செய்ய எவரும் தயாராக இருக்கவில்லை. யுத்தம் முடிந்த கையோடு நிகழ்ந்த தேர்தலில் யுத்தத்தை முன்னெடுத்த சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு – ஐ.தே.கட்சிக்கு நிபந்தனை அற்ற ஆதரவு என்ற நிலைக்கு தமிழரசுக் கட்சித் தலைமை வந்த பொழுதே கூட்டமைப்பு உடையப் போவது தெரிந்துவிட்டது. இதை முதன் முதலாக தமிழ் சொலிடாரிட்டி சுட்டிக் காட்டிய பொழுது அதன் சாத்தியமின்மை பற்றி பலர் விவாதித்தனர். கொள்கை ரீதியான எந்த அக்கறையுமற்ற புலம் பெயர் அமைப்புக்கள் ஓடிச் சென்று கூட்டமைப்புத் தலைமைகளுடன் கூட்டுப் போட்டுக் கொண்டனர். இது ஒன்றும் ஆச்சரியமான விசயமில்லை. வலதுசாரியக் கொள்கை அடிப்படையில் இவர்களிடம் ஒன்றுபட்ட கருத்து இருந்தது – அது ஐ.தே.க கொள்கையுடன் ஒன்றுபடுவதாகவும் இருந்தது. ஆனால் தமிழ் தலைமைகளின் இந்த நிலைபாடு அமைப்புகளை எங்கே கொண்டுபோய் சேர்த்திருக்கிறது – மக்களை எவ்வளவு ஏமாற்றயுள்ளது என்ற வரலாறு தெரிந்தவர்கள் இந்த அரசியல் எந்தத் திசையில் நகரும் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

தெற்கு அரசின் அடக்குமுறை – தேசிய ஒடுக்குமுறை –இராணுவ ஆக்கிரமிப்பு முதற் கொண்டு பல சனநாயக மறுப்புகள் தான் இன்றும் கூட்டமைப்பை – தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் மத்தியில் பலமாக வைத்திருக்கும் காரணங்கள். கூட்டமைப்பின் கொள்கைக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்கவில்லை – மாறாக இலங்கை அரசின் அடக்குமுறைக்கு எதிர்ப்பான தமிழ் தரப்பு அரசியல் வாகனமாக இந்த அமைப்பு பார்க்கப் படுவதால் மட்டுமே இந்த ஆதரவு என நாம் பலமுறை சுட்டிக் காட்டி இருக்கிறோம்.

2013 மாகாண சபை தேர்தல்தான் இவ்வமைப்பை மேலும் பலப் படுத்தியது. இந்தத் தேர்தலின் போது புலிகள் ஆதரவு அடிப்படையில் பிரச்சாரங்கள் பலப்படுத்தப் பட்டிருந்தது அனைவரும் அறிவர். இந்தப் பெரும் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அதிகார போதை தலைக்கேறிய பாணியில் தமிழரசுக் கட்சித் தலைமை கூத்தாடத் தொடங்கி விட்டது. எதிர்ப்புச் சக்திகள் எல்லோரும் ஒதுக்கப் படத் தொடங்கினர். தாங்கள் விரும்பினாலும் கூடமைப்புக்குள் இருக்க முடியாத நிலையில் சிறு கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறத் தொடங்கின.

ஏற்கனவே தேசியக் கோரிக்கை சார்ந்த உடைவு என்ற அடிப்படையில் தங்களைப் பிரித்துக் கொண்ட கஜன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் ஒன்றுபட்டு ஒரு ‘மாற்று’ அமைப்பை உருவாக்கி இருந்தனர். தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி இதுவரை தாம் எத்தகய மாற்றை முன் வைக்கிறோம் எனச் சொல்லவில்லை. தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என சுலோகங்களை உச்சரிப்பதும் – தாம் தமிழ் தேசியத்துக்கு விசுவாசமானவர்கள் எனக் காட்டிக் கொள்வதும் தவிர இவர்கள் என்ன மாற்றை வைத்திருக்கிறார்கள்? இவர்கள் தமது சொந்த கதிரை ஆசைக்காக உடைத்துக் கொண்டிருகிறார்கள் என்ற பார்வை மக்கள் மத்தியில் பலப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில் இவர்களுக்கு இதுவரை ஆதரவு இருக்கவில்லை. ‘பூகோள அரசியல்’ என எடுத்ததற்கு எல்லாம் பேசும் இவர்கள் இன்றுவரை பூகோள அரசியலை தாம் எப்படி பார்க்கிறார்கள் – அல்லது இவர்தம் பூகோள அரசியல் பார்வை என்ன என்பது பற்றி ஒரு விளக்கமும் கூறவில்லை. வெறும் சொற்பதங்களைப் பாவிப்பது மட்டும் போதாது. அதைக் கூட்டமைப்பும்தான் செய்கிறது என்பது இவர்களுக்குத் தெரிந்ததுதானே.

இது தவிர தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் மனோ கணேசனும் ஒரு தேர்தல் நகர்வை செய்திருந்தது அறிவோம்.இதுவும் தேர்தல் காரணங்களுக்காய் – வாக்கு வங்கியை தக்க வைக்கும் ஒற்றை நோக்குக்காய் ஏற்படுத்திக் கொண்ட கட்சித் தலைவர்களுக்கிடையிலான வெற்று ஒப்பந்தமாக சுருங்கி நிற்கிறது. பல தலைமுறையாக கடும் துன்பத்தில் உழலும் மலையக மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை.

கூட்டு என்பது வெறும் தேர்தல் நோக்கிலான நடவடிக்கையாக சுருங்கி நிற்கிறது. ஏனெனில் கொள்கை அடிப்படையில் இந்த அமைப்புக்கள் – தலைவர்கள் மத்தியில் பெரிய மாறுபாடுகள் –முரண்பாடுகள் இல்லை. எவ்வாறு வாக்கு பொறுக்குவது என்பதே முதன்மை நோக்கு. ஆனால் தற்போதைய வரலாற்று நிகழ்வுகள் இவர்களின் போலித்தன கட்சிகளுக்கு கூட பலம் சேர்க்கும் தன்மை உடையதாக இருக்கிறது.

2015 தேர்தலுக்குப் பிறகு தமிழரசுக் கட்சி தலைமைகள் அரசுடனும் வலது சாரி ஐ.தே. க உடனும் ஏற்படுத்திக் கொண்ட பகிரங்க நெருக்கம் மிகப்பெரும் பாதிப்பை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. பொன்னம்பலம், அமிர்தலிங்கத்தை மிஞ்சிய வஞ்சகத்தை சம்பந்தன் – சுமந்திரன் கூட்டு செய்து வருகிறது என்பது மிகையான கூற்றல்ல. இன்று இளையோர் மத்தியில் மிக வெறுக்கப் படும் பெயர்கள் இவை.

இந்த நிலை த.தே.ம.மு வுக்கு ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த இடைவெளியில் தமது பலத்தை நிலை நாட்டிக் கொள்ள தேர்தல் மற்றும் இந்தியா பற்றிய தமது பழைய நிலைப்பாடுகளை தூக்கி எறிந்து விட்டு தேர்தல் களத்தில் குதித்துள்ளது இந்தக் கட்சி. இந்த வெற்றிடம் பலரும் வாக்குகளைப் பொறுக்கக் கூடிய சந்தர்ப்பத்தை வழங்கி உள்ளமையினால் ஒதுக்கப் பட்ட சிறு கட்சிகளும் வெவ்வேறு தேர்தல் கூட்டுகள் பற்றி பேசுகின்றன. ‘விடுதலை’ என்ற சொல்லை இணைத்து தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஆனந்த சங்கரியின் பெயரில் புதிய கூட்டமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. சங்கரி ‘தலைமை’ என்ற போதும் முக்கிய பின்னணித் தலை சுரேஷ் பிரேமச்சந்திரன் எனச் சொல்லப் படுகிறது.

முன்பு விடுதலை என்ற சொல்லை முதன்மைப் படுத்தி செல்வநாயகம் பிரிந்ததற்கும் இப்போது இவர்கள் முன்னெடுக்கும் முயற்சிக்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு. யுத்த சமயத்தில் – படுகொலைகள் நிகழ்ந்த பொழுதில் சங்கரியார் விடுப்புப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. மாறாக படுகொலைச் சக்திகளுக்கு ஆதரவு அழித்துக் கொண்டிருந்தவர். இதே போல் இந்தக் கூட்டமைப்பில் இருக்கும் பல சக்திகள் விடுதலை –போராட்ட அரசியல் ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிர் திசையில் நிற்பவர்கள். இவர்கள் எத்தனை கூத்தை ஆடினாலும் மக்கள் ஆதரவு பெறுவது கடினமாகவே இருக்கும்.

கூட்டமைப்பு உடைந்து தமிழரசுக் கட்சியாக சுருங்கி நின்ற போதும் இந்த உடைவு அவர்களை மிகப் பலவீனப் படுத்தி விட்டது என கருதுவது தவறு. அவர்கள் அரசியல் ரீதியாக மிக பலவீனப் பட்டிருப்பது உண்மையே. தொலை நோக்குப் பார்வை அடிப்படையில் அவர்களின் இறுதிக் காலம் தொடங்கி விட்டது எனவும் கூற முடியும். ஆனால் உடனடியாக அவர்களின் பலத்தை தேர்தல் களத்தில் முற்றாக சோதிக்கும் வல்லமை உள்ள உறுதியான கொள்கை நோக்குள்ள அமைப்புக்கள் எதுவும்  இல்லை. இந்த நிலை தமிழரசுக் கட்சியின் தேர்தல் பலத்தை தொடர்ந்து பாதுகாக்கும்.

புதிய அமைப்புக்கள் உருவாகுவது வரவேற்கப் படவேண்டியதே. ஆனால் இவை எந்த அடிப்படையில் உருவாக்கப் படுகின்றன என்ற அடிப்படை கேள்வியை நாம் தவற விட முடியாது. சமூகம் சார்ந்த – பொருளாதாரம் சார்ந்த – சனநாயக கோரிக்கை சார்ந்த சரியான நிலைப்பாடு கொண்ட ஒரு மாற்றுத்தான் ஒரு சரியான மாற்றாக இருக்க முடியும். தேசிய ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை என்பது வெறும் வாக்கு வெல்லும் சொல்லாடல் இலை. இந்த அமைப்புக்கள் அதற்கான தமது திட்டமிடல் என்ன என்பதை தெளிவாக மக்கள் முன் வைக்க வேண்டும்.

மக்களே திரண்டு வந்து வாக்கு வழங்குங்கள் என கேட்கும் அளவுக்கு மாற்றத்துக்கான மக்கள் திரட்சியை யாரும் கோருவதில்லை. மக்கள் திரட்சி அவசியம் பற்றி யாருமே பேசுவதில்லை. இவ்வாறு இருக்க எந்த அடிப்படையில் தங்கள் மேல் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என இவர்கள் கோருகிறார்கள் எனத் தெரியவில்லை. இதுவரை வரலாறு – இவர்தம் கடந்த கால கொள்கை நிலைப்பாடுகள் –தேர்தல் திருகுதாளங்கள் எனப் பல விசயங்கள் எமக்கு முன் உண்டு. இதனால்தான் பேசப்படும் மாற்று என்ற சொல் போலியானதாக இருக்கிறது.

பேச்சளவில் பிரயோசனம் இல்லை. உங்கள் திட்டமிடல் என்ன ? உங்கள் கோரிக்கைகள் என்ன? எந்த கொள்கை அடிப்படியில் அமைப்பு மற்றும் கூட்டு ? என்ற விபரங்களை மக்கள் மத்தியில் பகிரங்கமாக வைக்க இந்த அமைப்புக்கள் முன் வரவேண்டும். பழைய வரலாறு எதுவாக இருப்பினும் தமது நலன்களை தூக்கிப் பிடித்து அதற்காக போராட முன்னிற்கும் அமைப்பை – தலைமையை மக்கள் ஆதரிப்பர் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கு என்றால் துணிந்து அரசியல் நிலைப்பாடு பற்றறிப் பேசுவோம் வாருங்கள்.

தற்போதிருக்கும் எந்த அரசியல் கட்சியும் முழு ஆதரவை கோரி நிற்க முடியாத நிலவரம் உருவாகி இருக்கிறது. வரும் தேர்தலில் பல சுயாட்சை வேட்பாளர் – பொது நல அமைப்புக்கள் பங்கு பற்றுவது வளர்ந்து வரும் நம்ம்பிக்கை இல்ல்லமையை சுட்டி நிற்கிறது. மக்கள் நலன்களை முன்னெடுக்கும் போராட்டக் குணமுள்ள முற்போக்கு அமைப்பு ஓன்று உறவாக வேண்டும் என்பது இன்றைய கால கட்டத்தின் அத்தியாவசியத் தேவை.