நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்

1,207 . Views .

நுஜிதன்

இலங்கையிலே ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு வந்து ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் வடகிழக்கிலே வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நிலையே உள்ளது. இவ்விதமாகத் தமக்கென தனியார் காணிகளை அபகரிப்பதும் பல நூற்றுக்கணக்கான விவசாயிகள்,பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்துக்கு உலைவைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து நிரக்கதிக்கு உள்ளாக்குவதும் இலங்கை அரசின் நடைமுடையாக இருந்து வருகிறது. அரசின் நல்லிணக்கம் பற்றிய நேர்மைத் தன்மையை இது கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

ஆயுதப் போராட்டங்களின்போது பொது மக்களின் காணிகளை அபகரிப்பது என்பது அதிகார அரசுகளின் பொதுவான ஒரு நடவடிக்கை மட்டுமன்றி இதை சிறுபான்மை இனங்களுக்கு எதிரான பாகுபாட்டுக் கொள்கைகளின் ஒரு பகுதியாகவும் பாவிக்கப்பட்டு வந்திருப்பதை நாம் பார்க்கலாம். முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்குப் பிற்பட்ட காலகட்டத்திலோ அல்லது இடைக்கால நீதிப்பொறுப்புக்கூறல் செயன்முறையின்போதோ பறிக்கப்பட்ட காணிகள் விசயம் கவனத்திற் கொள்ளப்படவில்லை. உண்மை அறியும் ஆணைக்குழுக்கள், குறிப்பாக எல்சல்வடோர் நாட்டின் உண்மை அறியும் ஆணைக்குழுவானது காணிகளை அபகரிப்பதானது அநேகமாக ஆயுதப்போரின் நீட்சிக்கான காரணங்களில் முதன்மையாக  இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தது. இத்தகைய செயல்கள் சர்வதேசக் குற்றச்செயல்களாகப் பொதுவாகக் கருதப்படுவதில்லை என்பதாலும் அரசு பொறுப்பற்ற முறையில் இதை தொடர்ந்து செய்கிறது.  இவை குற்றவியல் வழக்குகளாக பார்க்கப்படுவதும் இலங்கையில் கிடையாது. இதனால் இதனைச் செய்பவர்களுக்கு தண்டனை வழங்காமை நிலவிவருகிறது.  

முன்னர் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டிருந்த தனியார் காணிகள் சிலவற்றை 2015 முதல் திருப்பி வழங்கிவிட்டதாக அரசு காட்டிக்கொண்டாலும் கூட, வடகிழக்கில் இராணுவம் அபகரித்துள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. எனவே, இலங்கையின் நிலைமாற்றுக்கால நீதி வழங்குவது என்பது காணி அபகரிப்பு விடயத்தைக் குறிப்பாகக் கையாளவேண்டியது முக்கியமானதாகும். அத்தகைய நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதையும், மற்றும் அந்தக் குற்றச்செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் அவற்றுக்கு பொறுப்புகூற செய்வதையும் வெளிப்படையான நோக்கங்களாகக் கொண்டே அது இடம்பெறவேண்டும்.

ஆனாலும் கிட்டத்தட்ட 9,000 ஏக்கர்களை விழுங்கியிருக்கும் இலங்கை அரசு, மீள்குடியேற்றம் முற்றிலும் முடிவடைந்திருப்பதாக கூறுகிறது. ஆக, கைப்பற்றப்பட்டிருக்கும் காணிகள் மீண்டும் வழங்கப்போவதில்லை என்ற தீர்மானத்தில் இலங்கை அரசும் இராணுவமும் இருப்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது. இதேபோன்று,கேப்பாபிலவு, வலிகாமம், பலாலி, வவுனியாவில் இடம்பெயர்ந்த முகாம்கள் அமைந்த காணிகள், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் கைப்பற்றப்பட்ட காணிகள் என பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்றும் படையினர் வசமே உள்ளன.

இந்நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கையில் எதுவித மாற்றத்தையும் அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை. சிறு சிறு சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு அவை பிரதான இராணுவ முகாமினுள் கொண்டு செல்லப்பட்டுள்ளனவே தவிர பிரதான முகாம்கள் அகற்றப்பட்டு அந்த நிலங்கள் மக்களுக்கு இன்றுவரை கொடுக்கப்படவில்லை.

மாறாக தமிழர் பகுதிகளில் இப்போது ஆக்கிரமிப்பாளர்களின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. இராணுவச் சிப்பாயாக மட்டும் இல்லாமல் தர்மத்தைப் போதித்த புத்தராகவும் அரசமரங்களாகவும் இந்த எண்ணிக்கை தமிழர்களின் பண்பாட்டு இடங்ககளில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போர் முடிந்த கையோடு தமிழ் மக்களை தோல்வியடைந்தவர்களாகப்  பார்த்த இலங்கை அரசும், பௌத்தபீடங்களும், தமிழ் பேசும் மக்களை ஆக்கிரமித்து அடிமைகளாக, தங்களது கண்காணிப்பில் வைத்திருப்பதற்கான திட்டத்தை திட்டமிட்டு இலங்கை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

தமிழர் நிலப்பகுதியில் இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், மக்களின் காணிகளில் பாரிய இராணுவ முகாம்களை நிறுவுவதன் மூலமும், தமிழர் காணிகளை அபகரிப்பதன் மூலமும், அவர்களது பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்வதன் மூலமும்,சிவில் விடயங்களில் தலையிடுவதன் மூலமும் தமிழ் மக்களை தாங்கள் ஆக்கிரமிப்பதாகத்தான் இலங்கை அரசு காட்டி வருகிறது. காலப்போக்கில் தாங்கள் அனைவரும் இராணுவத்தின் முற்றுகைக்குள் இருப்பதாக மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர்.

இராணுவக் கட்டமைப்பை பலப்படுத்தும் அதேவேளை அதனோடு சேர்ந்து ஆக்கிரமிப்பின் சின்னமாக புத்தரையும், பௌத்த விகாரைகளையும் ,சிங்கள குடியேற்றங்களையம் தமிழர் நிலப்பகுதிகளில் இராணுவத்தினர் தங்களோடு சேர்த்து குடியேற்றி வருகின்றனர்.

இராணுவத்தினர் அமைத்திருக்கும் அத்தனை சிறிய, பெரிய இராணுவ முகாம்களிலும் 7 – 9 வயது கொண்ட அரச மரத்தின் கீழ் கெளதம புத்தர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் இலங்கை அரசு திட்டமிட்டே அனைத்தையும் நிறைவேற்றுவது தெளிவாகின்றது. அத்துடன், பிரதான பாதைகளின் இருமருங்கிலும், சிங்கள மக்களே வசிக்காத, வசித்தனர் என்ற வரலாறே இல்லாத இடங்களில், பெரும் நிலப்பரப்பில் இராணுவத்தினர் இருத்திய புத்தர் தனியாளாக அசையாமல் ஆட்சிசெய்து வருகிறார். அவ்வாறு வடகிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் அத்தனை விகாரைகளும் இராணுவ பிரிகேட் பிரிவுகளால் நிறுவப்பட்டவை. இவை மக்களால் தாமாக நிறுவப்பட்டவை அல்ல. அத்தோடு, இந்தப் பகுதிகளில் சிங்கள மக்களே பூர்வகுடிகளாக இருந்தனர் என்றும், தமிழ் மக்கள் வந்தேறுகுடிகள் என்றும் சித்தரிக்கவே இந்த விகாரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராணுவச் சிப்பாய்கள் போரின்போது நடத்திய சாகசங்களை  பார்ப்பதற்காக தென்னிலங்கையிலிருந்து வரும் மக்கள் தங்கிச் செல்லக்கூடிய வகையிலேயேதான் இதில் ஒரு சில விகாரைகள் கட்டப்பட்டிருக்கின்றன. தாங்கள்தான் இந்தப் பகுதிகளிலும் பூர்வகுடிகளாக இருந்தவர்கள் என்ற மனோநிலையை தென்னிலங்கையிலிருந்து வரும் மக்களுக்கு இந்த விகாரைகள் வழங்கத் தவறுவதில்லை.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள தமிழ் தாயக மக்களின் நிலங்களை சூறையாடும் தீவிர முயற்சியில் தென்னிலங்கை அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது யாவரும் அறிந்த விடயமாக உள்ளது.

இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும், தமிழர்களின் காணிகளை திட்டுமிட்டு கையகப்படுத்தும் செயற்பாடு வலுவடைந்து கொண்டுதான் இருக்கின்றது.

தற்போதும் 2009 போரின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பெருமளவிலான பௌத்த விகாரைகள் தோற்றம் பெற்றுள்ளதுடன், சிங்களக் குடியேற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

வடக்கில் கனகராயன் குளம், மாங்குளம், வவுனியாவில் சேமமடு, கொக்கிளாய், திருக்கேதீஸ்வரம், நயினாத்தீவு, நாவற்குழி ஆகிய இடங்களில் பெளத்த விகாரைகள் புதிதாக முளைத்துள்ளன.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, இறக்காமம், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பகுதிகளில் பௌத்த விகாரைகள் தோற்றம் பெற்றுள்ளமையை நாம் அவதானிக்க முடிகின்றது.

அது மட்டுமல்லாமல் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் உள்ள பல தனியார் காணிகளும், கட்டடங்களுமாக பல ஏக்கர் நிலம் இன்னும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அத்துடன், வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து நிறுவப்பட்ட வண்ணம் உள்ளன. வடக்கிலுள்ள அரச காணிகளிலும், தமிழ் மக்களின் காணிகளிலும் சிங்கள மக்களை குடியேற்றும் நடவடிக்கை நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

அண்மையில் கொக்கச்சான்குளம் என்ற கிராமம் கலாபொபஸ்பெவே- 1, கலாபொபஸ்பெவே-2, நாமல்கம என மூன்று கிராமங்களாக சிங்களத்தில் பெயர் மாற்றப்பட்டு 3000 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

வவுனியா, கொக்குவெளியில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதுடன், கொக்குவெளி என்ற தமிழ் பெயர் சிங்களத்தில் கொக்கெலிய என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. தமிழர்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு இராணுவ முகாம் ஆக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, கொக்கிளாய் மற்றும் நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களின் கரைவலைப்பாட்டுப் பகுதிகளில் சிங்கள மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிங்கள மக்கள் இதுவரை வசிக்காத வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பௌத்த விகாரைகளும், புத்தர் சிலைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நயினாத்தீவில் 67 அடி உயரமான புத்தர்சிலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாவற்குழியில் ‘சிங்கள ராவய’ என்ற பெயரில் சிங்களக் குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை ஊடகங்கள் வாயிலாக நாம் அனைவரும் அறிந்த உண்மையே.

ஜனகபுர, சிங்கபுர, 13ஆம் கொலனி என்று முல்லைத்தீவின் எல்லையில் சில சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 13 ஆம் கொலனிப் பகுதியை அண்டி இப்பொழுது புதிதாக சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு அவை திருகோணமலையின் தென்னைமரவாடியை நோக்கி நகர்கின்றன.

ஒதியமலையை அண்டிய வவுனியாவின் எல்லைக் கிராமங்கள் கஜபாகுபுர ஆக்கப்பட்டுள்ளன. ஒதியமலை பகுதியை நோக்கி நாளுக்கு ஒரு வீடு என்ற வகையில் சிங்களக் குடியேற்ற முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. வவுனியா மாவட்டத்தின் எல்லைப் புறம் முழுவதும் சிங்களக் குடியேற்றங்களால் சுற்றி வளைக்கப்படுகின்றது.

வவுனியாவில் மன்னார், மதவாச்சி வீதியை அண்டிய பகுதிகளிலும் இவ்வாறு குடியேற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

மன்னார் முசலிப் பகுதியிலும் சிங்களக்குடியேற்றம் நடைபெற்று வருகின்றது. மன்னாரில் நரிக்காடு என்ற இடத்தில் 50 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

மடுவில் நூறு சிங்களக் குடும்பங்கள் வரையிலும், மணலாற்றில் 2 ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் வரையிலுமாகக் குடியேற்றப்பட்டுள்ளார்கள். போரின் பின்னர் இடம்பெற்ற சட்டவிரோதக் குடியேற்றங்களே இவை.

அத்துடன், யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பகுதியில் குமாரகோவில் காணப்பட்ட இடத்தில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில்“கமுணு” விகாரை என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்குள் குமாரகோவில் பிள்ளையார் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. வலி. வடக்கு வீமன்காமம் பிள்ளையார் ஆலயம் அழிக்கப்பட்டு அவ்விடத்தில் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் 30 வருடங்களாக இருந்து வந்த பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த 8 வருடகாலமாக பௌத்த ஆக்கிரமிப்பாக மாற்றி விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் கிளிநொச்சி கனகாம்பிகை ஆலயத்தின் மூன்றாம் வீதியை ஆக்கிரமிக்கும் வகையில் சுவர் அமைக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மஹிந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் தற்போதைய நல்லாட்சி எனக் கூறிக் கொள்ளும் மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் காலத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

கடந்த வருடம் வடமாகாணத்தில் மொத்தமாக 13 பௌத்த விகாரைகளே அமைக்கப்பட்டதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

எனவே வடக்கு கிழக்கில் மகிந்த ஆட்சியிலும் சரி நல்லாட்சியிலும் சரி திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மயமாக்கல் தமிழ் மக்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடாகவே இது பார்க்கப்படுகின்றது.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்காத வரையில், பெரும்பான்மை இனத்தவர்களின் ஆதிக்கம், வட கிழக்கு பகுதியில் அதிகரிக்கப்படும் என்பது மறுக்கப்பட முடியாத கசப்பான உண்மையாகும்.

தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த இடங்களில் தற்போது அவர்களுக்கு சொந்தம் என்று கூறிக்கொள்வதற்கு ஒரு அடையாளம் கூட இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் தோன்றத்தொடங்கியுள்ளது.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது பல உயிர்களையும், உடைமைகளையும் இழந்த தமிழ்மக்கள் தற்போது உரிமைகளையும் இழக்க தொடங்கியுள்ளனர்.

தற்போது மிச்சம் இருப்பது அவர்களின் பூர்வீகநிலங்கள் மட்டுமே. அவற்றையும் அவர்களிடமிடமிருந்து தட்டிப்பறிக்கும் செயற்பாட்டையே நல்லாட்சி என கூறிக்கொள்ளும் அரசாங்கமும், மகாநாயக்கபீடங்களும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.

சொந்த நிலங்களை விட்டுவிடுமாறு, அதை மீட்டுத்தருமாறு வடக்கிலும், கிழக்கிலும் எத்தனை போராட்டங்கள், எத்தனை ஆர்ப்பாட்டங்கள், எத்தனை சந்திப்புக்கள், நாட்களை கடந்து, வாரத்தை கடந்து, வாரங்கள் மாதங்களை கடந்து என – ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனாலும் இவை இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் தமிழ் அரசியல் தலைமைகளிற்கும், சர்வதேசத்திற்கும் தெளிவதாகத் தெரியவில்லை. இவ்வாறு தொடரும் பட்சத்தில் மீண்டுமொரு இனமோதலிற்கே இவை இட்டுச்செல்லும்.

வடக்கில் சிங்­களக் குடி­யேற்­றங்­களை தடுக்க வேண்டும் என்று வெளியே குரல் கொடுக்கின்ற அரசியல் கட்சிகள் அமைப்புரீதியாக ஒன்றிணைய வேண்டும். அதனைத் தடுப்பதற்கான ஆக்கபூர்வமான செயல்மு­றை­களை வரைய வேண்டும்.

ஆனால், வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதி­களால் – கட்சி, அரசியல், கொள்கை வேறுபாடுகளை மறந்து பொது நோக்கத்துக்காக ஒன்றி­ணைய முடியாதுள்ளமை இங்கு வேதனைக்குரிய விடயமாகும்.

சிங்கள பௌத்தமயமாக்கல் என்பது, நன்கு திட்டமிடப்பட்ட ஒரு மூலோபாயம். அந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு தமிழர் தரப்பும், நன்கு திட்டமிடப்பட்ட முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

சிறியளவிலான போராட்டங்களினால் மாத்திரம் இது சாத்தியப்படாது, அதற்கும் அப்பால் மக்கள் மற்றும் தமிழ் தலைமைகளின் ஒருங்கிணைந்த திட்டமிட்ட ஒரு முயற்சி தேவை.

அந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு தமிழ் தலைமைகள் தயாராக இருக்கிறதா என்பது கேள்வி குறியே?