சேனன்
5
திறன் உழைப்பு பற்றிச் சிறு குறிப்பு.
“ஒருவர் ஐந்து மணி நேரம் செய்யும் வேலையை இன்னுமொருவர் ஒரு மணி நேரத்தில் செய்து முடித்து விட முடியும் என்றால் அவரது தனிப்பட்ட திறமை தானே காரணம். அத்தகைய திறன் உழைப்பு சாதாரன உழைப்பில் இருந்து மாறு பட்டதுதானே. இது பற்றி மார்க்ஸ் கவனிக்க வில்லை. அவர் எல்லா உழைப்பையும் சமமாக பார்க்கும் தவறை செய்து விட்டார்” என வாதிப்போர் இன்றும் உண்டு. ஆனால் இது பற்றி மார்க்ஸ் நிறைய எழுதி உள்ளார். தவிர பிற்கால மார்க்சியர்கள் பலரும் இது பற்றி ஆழமான உரையாடல்களை செய்திருக்கிறார்கள் (https://www.marxists.org/archive/rubin/value/index.htm). இது பற்றி நீண்ட உரையாடலை இங்கு தவிர்த்துக் கொண்டு ஒரு புள்ளியை மட்டும் குறித்துக் செல்வோம்.
மார்க்ஸ் பேசும் உழைப்புச் சக்தி என்பது ஒரு அரூபக் குறியீடு. உழைப்பு அரூப மயப்படுவாதல் உருவான ஒருவகை அலகு அது. சந்தையில் இருக்கும் எல்லாப் பண்டங்களையும் போல் அதுவும் ஒரு பண்டமே. திறன் உழைப்பு உட்பட அனைத்து உழைப்பையும் இந்த அலகால் பிரிக்க முடியும். ஆக மார்க்சியக் கருத்தின் படி திறன் உழைப்பு என்பது ஒரு தனிப்பட்ட விசேட உழைப்பு அல்ல. அதுவும் உழைப்புச் சக்தியால் அளக்கப் படக் கூடியதே.
6
உற்பத்தி சக்திகளும் – அதன் வளர்ச்சியும்.
தொழில்நுட்பம் வளர்த்தல் என்று சொல்வதன் மூலம் நாம் உற்பத்தி செய்யும் கருவிகளின் வளர்ச்சி பற்றியே தோழர் கனகராஜ் குறிப்பிடுகிறார். இதை நாம் சுருக்கமாக உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என குறிப்பிட முடியும்.
உற்பத்திக்கு உபயோகிக்கும் கருவி, வளர்ச்சி அடைவதாலோ அல்லது ஒருவரின் துறை சார் திறன் அதிகரிப்பதாலோ குறிப்பிட்ட உற்பத்திக்கு தேவையான நேரம் குறையலாம். தோழர் கனகராஜ் சொல்வது இதற்கு நேரெதிரானது.
லாபத்தை பெருக்குவதை தலையாய நோக்காக கொண்டு இயங்கும் முதலாளித்துவ உற்பத்தி முறை அதை செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. உற்பத்தி கருவிகளைத் தொடர்ந்து புதுப்பிப்பது அதில் ஓன்று. ஆனால் உற்பத்தி கருவிகளின் வளர்ச்சி முதாலாளிகளின் நடவடிக்கை மட்டும் சார்ந்ததல்ல. இயற்கை சார்த்த வளர்ச்சியுடனும் சம்மந்தப்பட்டது அது. உற்பத்தி கருவிகள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கின்றன.
உற்பத்தியை செழுமைப்படுத்தும் கருவிகளை அறிமுகப்படுத்தல் உற்பத்திக்கு தேவையான மாறும் மூலதனத்தைக் ( உழைப்புச் சக்தி) குறைக்கும். இது லாப பெருக்கை ஏற்படுத்த முடியும் எனபது தர்க்கம். ஆனால் குறைந்த உழைப்புச் சக்தி வழங்கப் படுவது லாப வீதத்தை குறைக்கிறது. ‘லாப வீத வீழ்ச்சி நோக்கிய போக்கு’ என்ற விதி மூலம் இந்த முரண் நிலையை மார்க்ஸ் விளக்கி இருப்பார். இந்த விதியைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. மார்க்ஸ் மூலதனம், பண்டம், உழைப்புச் சக்தி என்பவற்றை தனிப்பட்ட முறையிலோ – அல்லது சிறு பிரிவுகளுக்குள் முடக்கியோ ஆய்வு செய்ய வில்லை. மாறாக அவர் அதன் முளுமைத்தன்மையைப் பற்றிய அவதானத்தோடு ஆய்வு செய்துள்ளார்.
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி எவ்வாறு முதலாளித்துவத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது என அவர் விளக்கி இருப்பார். உபரிக்கும் அதை உருவாக்க வழங்கப் பட்ட உழைப்புச் சக்திக்குமான வீதத்தையே சுரண்டல் – அல்லது வகையீட்டுச் சுரண்டல் – என மார்க்ஸ் குறிப்பிடுகிறார் (https://www.marxists.org/archive/marx/works/1867-c1/ch09.htm#S1). அதே போல் மாறா மூல தன உற்பத்திக்கும் உழைப்புச் சக்திகுமான வீதம் உற்பத்தி திறனை குறித்து நிற்கிறது. ஆக சுரண்டல் அதிகமாவது வழங்கப் படும் உழைப்புச் சக்தியை பொறுத்தது. அது வேலை நேரத்தோடு மட்டும் தொடர்புடையது அல்ல. குறைந்த வேலை நேரத்திலும் கூடிய உபரி பெருக்குதல் நிகழ முடியும். உற்பத்திச் சக்திகள் வளர்ச்சி வேலை நேரத்தை கூட்டும் என்று கருதுவதும் – அதனால்தான சுரண்டல் அதிகரிக்கும் எனவும்- தர்க்க ரீதியான முடிவுக்கு வருவது தவறு. புதிய கருவி அறிமுகம் எப்படி எட்டு மணி நேர வேலையை பன்னிரண்டு மணி நேர வேலையாக மாற்றும் என தோழர் கனகாஜ் விளக்க வேண்டும். ஒரு வராலாற்று உதாரனத்தையாவது காட்ட முடியுமா?
இங்கு சில விசயங்களை நுணுக்கமாக பார்க்க வேண்டும். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி உற்பத்திக்கு தேவையான உழைப்பைக் குறைக்கும் போக்கு கொண்டது. அதே சமயம் திறன் உழைப்பை அதிகரிக்கும் வல்லமை கொண்டது – அதன் மூலம் லாப வீத பெருக்கைக் காத்துக் கொள்ளும் வல்லமை கொண்டது. உதாரணமாக அப்பிள் கம்பனியை எடுத்துக் கொள்ளுங்கள். உயர் தொழில் நுட்பம் – அதே சமயம் உயர் ஊதியம் – அதே சமயம் உயர் உபரி உருவாக்கள் – ஆகியன ஒரே சமயத்தில் நிகழ முடியும். உழைப்புச் சக்தி என்பது வரையறைக்கு உற்பட்டதோ அளக்க கூடியதோ அல்ல என முன்பு பேசி இருந்தோம். சுரண்டல் வீத அதிகரிப்பு என்பது நேர அளவு அதிகரிப்பால் மட்டும் நிகழ வேண்டிய அவசியமில்லை. திறன் உழைப்பை பிழிவதாலும் அது நிகழ முடியும்.
புதிய உற்பத்தி கருவி அறிமுகப்படுத்தல் என்பது பழைய கருவியில் வேலை பழகிய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்க வைக்கலாம். அந்தப் பழைய கருவி பழக்கத்தில் இல்லாது போதல் அந்த கருவியை உபயோகிக்கும் திறனை இல்லாதொழிக்கலாம். முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சி இந்தப் போக்கைத் துரிதப் படுத்துகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் தொடர் வேகத்தில் நிகழ்கிறது. ஆனால் இவை மனித திறனைக் குறைப்பதில்லை – அழிப்பதில்லை. மாறாக திறனை அதிகரிக்கின்றன. வில்லு அம்பை உபயோகித்த ஒருவரின் திறனுடன் கணணியை உபயோகிக்கும் ஒருவரின் திறனை ஒப்பிட முடியாது. தனிப்பட்ட சில திறன்கள் இல்லாது போகலாம். ஆனால் திறன் உழைப்பு மங்குவதில்லை. ஏனெனில் இது சமூகம் சார்ந்தது. சமூகத் தொடர்பாடல் முறைதான் உற்பத்தி முறையை தீர்மானிக்கிறது. குறிப்பிட்ட சமூக உறவுமுறை அடிப்டையில்தான் முதலாளித்துவ உற்பத்தி நடை பெறுகிறது.
நவீன கருவியை அறிமுகப்படுத்தல் என்பது திறமை இல்லாத தொழிலாளரை வேலைக்கு அமர்த்த உதவுகிறது என்ற மோசமான கருத்துக்கு தோழர் எப்படி வந்து சேர்ந்தார் எனத் தெரியவில்லை. திறனும் குறைகிறது அதே சமயம் வேலை நேரமும் கூடுகிறது என்றால் முதலாளி எவாறு லாபம் பெருக்க முடியும் ? இது என்ன புது பொருளாதார கருத்தாக இருக்கிறது. தோழர்தான் விளக்க வேண்டும். வேலை நேரம் சமன் உபரி என்பதை ஒரு இயந்திரத் தன்மையுடன் விளங்கிக் கொண்டு தர்க்க அடிப்படையில் சிந்திப்பதன் விளைவு அது.
இன்னுமொரு வகையிலும் தர்க்க விளக்கம் கொடுக்க முயலலாம். இயந்திரங்கள் எல்லா வேலைகளையும் செய்கிறது அதனால் தொழிலாளர்கள் இனி ஒன்றும் செய்ய தேவை இல்லை – திறன் மனிதரிடம் இருந்து இயந்திரங்களுக்கு மாறிக் கொண்டு இருக்கிறது என்ற அடிப்படையில் வாதிட முடியும். இது ஒரு ஊகம் மட்டுமே. அப்படி ஒரு தர்க்க விளக்கத்தை திணித்துப் பார்த்தால் கூட தோழர் சொன்ன கருத்துப் பிழையே. மனித திறனின் பண்பில் தொடர் மாற்றங்கள் நிகழ்வதை நாம் அவதானிக்க வேண்டும். அதனால் சமூகம் சார் அறிதல் மங்கி விடுவதில்லை. மாறாக அது திறன் வளர்ச்சியின் பாற்பட்டதாக இருக்கிறது. உற்பத்தி சக்திகள் வளர்ந்தால் திறன் மங்கி விடும் என்றால் நாம் உற்பத்தி சக்திகளை எரித்துக் கொளுத்தும் திட்டமிடல் அல்லவா முன் வைக்க வேண்டும். தோழர் இருக்கும் கட்சி அப்படி ஒரு செயற் திட்டத்தை முன் வைத்ததாக தெரியவில்லை. முதலாளித்துவம் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை ( மணித திறன் உட்பட) முடக்குகிறது என்பது உண்மையே. இந்த முடக்குதல் வளர்ச்சியை நிறுத்துவதில்லை. மாறாக புரட்சியை உற்பத்தி செய்கிறது. ஆனால் அது வேறு கதை. தோழர் பேசுவது அது பற்றி அல்ல.