நாம் மறக்க மாட்டோம். (பகுதி 2 )

513 . Views .

லொபி அரசியலின் போதாமை

– லொபி செய்வதும் இணக்க அரசியல்தான். தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைத்த போராட்டம் பலப்படாமல் எந்த ஒரு பலத்தைம் எமது பக்கம் திருப்ப முடியாது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தை (PTA)  இல்லாமல் செய்வதை முக்கிய நிபந்தனையாக ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க அரசுகளும் இதை முன்வைத்திருந்தன. ஆனால் அந்த சட்டத்தை விட மோசமான முறையில் சனநாயக உரிமைகளை கொண்டுவரும் சட்டத்தை (ATA) ரனில் அரசு அமுல்படுத்த முயலும் பொழுது இவர்கள் என்ன செய்கிறார்கள். இதைக் கூட நிறுத்த முடியாது என்றால் எதற்கு லொபி. ஐ. எம் எப் சனாயாக உரிமைகளை மதிக்கும் அடிப்படையிலா  உதவி வழங்குகிறது. நாம் பல தடவை சுட்டிக் காட்டியது போல் லொபி அரசியல் இந்த சக்திகளின் ஆதரவை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் கட்ட உதவி இருக்கிறதே தவிர மக்களின் உரிமைகளை முன்னோக்கி நகர்த்தவில்லை. தொடர்ந்து லொபி செய்யும் அமைப்புக்கள் தமது அரசியற் திட்டமிடலை தெளிவாக முன்வைக்கும்படி நாம் தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறோம். ‘இதைத் தவிர வேறு வழியில்லை’ என்ற முறையில் மக்கள் இயங்கி வருகிறார்கள். பலமான சக்திகளை எதிர்க்க முடியாது. அனுசரித்துத்தான் போக வேண்டும் எனச் சொல்லி வருகிறார்கள். இது மக்களை ஏமாற்றும் வேலை என்பதை நாம் மக்கள் மத்தியில் வெளிப்படுத்த வேண்டி இருக்கிறது. நாம் விட்டு விட்டால் நடுவில் இலங்கை அரச சக்திகள் புகுந்து விடுவார்கள் எனச் சொல்லி லொபி அரசியலுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் அரசியற் போதாமை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அத்தகைய தர்க்கத்தின் தொடர்ச்சியாக இவர்கள் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம் வலுப்பெறுவதை முடக்க உதவுகிறார்கள். மக்களுக்கு இதனால் விடிவில்லை.

லொபியால் உரிமைகளை வென்று விட முடியம் என்ற பொய்யை நிறுத்த வேண்டும். இது பற்றிய பொது வெளியில் ஒரு திறந்த உரையாடல் நிகழ்வது மிக அவசியம்.

முந்திய PTA –பிந்திய ATA ஆகிய சட்டங்கள் முற்றாக நீக்கப் படவேண்டும்.

குறைந்த பட்சம் இதையாவது முதன்மைப்படுத்தி – இந்த விசயத்தில் எந்த சமஅரசும் இல்லை என்பதை அமைப்புக்கள் முன்னெடுக்க முடியாதா? இதையும் மீறி ‘நல்லுறவு’ பாதுகாக்க வேண்டி இருப்பதன் அவசியம் என்ன ?

*

மக்கள் போராட்டமும் – அதற்கான ஆதரவும் எதிர்ப்பும்

பெரும்பான்மை அமைப்புக்களும் – அதன் தலைமைகளும் மக்கள் போராட்டத்தை வெறுக்கின்றான. இதை இவர்கள் வெளிப்படையாக சொல்வதில்லை. போராட்ட நடவடிக்கைகளை மக்கள் முன்னெடுக்கும் பொழுது அதற்கு தடையாக நின்றபடி ஏதாவது சாக்கு போக்கு சொல்வர். சமீபத்தில் தென்னிலங்கையில் நடந்த போராட்டம்  மிக மோசமான அரசியல் வாதிகள் அனைவருக்கும் எதிராக எழுந்த பொழுது இவர்கள் என்ன செய்தார்கள் என பார்ப்பது இதை விளங்கி கொள்ள போதுமாக இருக்கும். இது எமது பிரச்சினை இல்லை என இவர்கள் தட்டிக் கழித்தார்கள். எது உங்கள் பிரச்சினை? தெற்கு ஊழல் அரசியல் வாதிகளுக்கு தமிழ் மக்கள் வாக்கை திரட்டுவது உங்கள் பிரச்சினையாக இருந்திருக்கிறது. படுகொலைக்கு காரணமான ஜெனெரல் மேல் நம்பிக்கை வளர்ப்பது உங்கள் பிரச்சினையாக இருந்திரிக்கிறது. பாராளுமன்றத்தில் கூட்டு போடுவதும் சேர்ந்து புக்கை, இடியப்பம், வடை சாப்பிடுவதும் உங்கள் பிரச்சினையாக இருந்திறுக்கிறது. மக்கள் தெருவில் நின்று போராடுவது மட்டும் ஒருபோதும் உங்கள் பிரச்சினையாக மாற்றியதில்லை. ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்களின் வயிறு எரிய வேலை செய்த ராஜபக்ச குடும்பம் ஒதுக்கப்படுவதை உங்களால் ஏன் கொண்டாட முடியவில்லை. அதற்கான ஆதரவை ஏன் நீங்கள் திரட்டி காட்டவில்லை.

இது வெறும் அரசியல் அறிவீனம் மட்டுமல்ல. இது யாவர்தம் அரசியல் நிலைப்பாடு பற்றிய விளக்கத்தை காட்டி நிற்கிறது. அவர்கள் எந்த வர்க்கத்துடன் உடன்பட்டு நிற்கிறார்கள் – யார் நலன்களை முதன்மைப்படுத்தி இயங்குகிறார்கள் என்ற நிலைப்பாட்டை இது வெளிகாட்டி நிற்கிறது. போராட்டத்தை கட்ட வேண்டும் என முன்வருபவர்கள் இதை கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்.

போராட்ட அரசியலுக்கு எதிரான சக்திகள் இவர்கள். இதை அவர்கள் தொடர்ந்து நிருபித்து வருகிறார்கள்.

போராட்டஅரசியலுக்கு வருபவர்கள் இந்த போக்குக்கு எதிராக ஓன்று திரள வேண்டும். ஒற்றுமை என்பது போராட அரசியல் நிலைப்பாடு சார்ந்து கட்டி எழுப்பப்பட வேண்டும்.

தமிழர் ஒருங்கிணைப்புப் குழு (TCC) செய்வது போராட்ட அரசியலா ?

தம்மை போராட அரசியல் செய்பவர்களாக காட்டிக் கொள்ளும் சில அமைப்புக்களும் ‘வித்தைகள்’ செய்து வருகிறார்கள். தமது நடவடிக்களைகள் மற்றும் நிலைப்பாடு பற்றி மக்கள் முன் வெளிப்படையாக வைக்க தயங்கும் – உரையாட தயங்கும் எல்லா அமைப்புக்களும் மக்கள் முன் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற அமைப்பை இங்கு உதாரணமாக சுட்ட முடியம். தாம் விடுதலை புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சி என காட்டிக் கொள்ள முயலும் இவர்கள் – தமக்கு மிஞ்சி எந்த அமைப்பும் இயங்க முடியாது என்ற போக்கு கொண்டவர்களாக இருக்கிறார்கள். புலிகள் இயக்க கொடி பிடிப்பதும் எமது தலைவர் பிரபாகரன் என கோசம் வைப்பதும் தாண்டி இவர்கள் என்ன அரசியலை முன்னெடுத்து இருக்கிறார்கள்? புலிகளின் பெயரை பாவித்துக் கொண்டு புலிகளின் போராட்ட ஆரசியலுக்கு எதிர் அரசியல் நிலைப்பட்டை எடுப்பது அனைத்து போராளிகளுக்கும் செய்யும் அவமானம் அல்லவா? கொடி பிடிக்கும் விவாரத்தை தவிர இவர்களிடம் எந்த அரசியல் ஆயுதமும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

உங்கள் அரசியல் நிலைப்பாடு – செயற்திட்டம் என்ன என நாம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். அவவப்போடு தெருவில் நின்று எமக்கு எதிராக கூச்சல் போடுவது – எமது உறுப்பினர்கள் பற்றி அவதூறு செய்வது- விடுதலிப் புலிகளின் கொடி பிடிக்காதவர்கள் அனைவரும் தமிழ் ஈழத்துக்கு எதிரானவர்கள என பிரச்சாரிப்பது போன்ற கீழ்மையான நடவடிக்கை தவிர இவர்கள் நிதானமான அரசியல் உரையாடல் நிகழ்த்த முன்வந்ததில்லை. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்பார்கள்.

தாம் போராட்ட அரசியல் ஆதரவு என இவர்கள் சொன்னால் – அந்த போராட்ட அரசியல் என்ன என நாம் கேட்பது நியாயம்தனே. ஆயுத போராட்டமா? அரசியல் போராட்டம் என்றால் அது என்ன ? இவை பற்றி பூசி மெழுகாது தெளிவாகப் பேச முன்வரவேண்டும்.

இவ்வாறு போராட்ட அரசியல் பூச்சாண்டி காட்டும் TCCயும் மற்ற மிதவாத அமைப்புக்கள் போலத்தான் லொபி அரசியலை தாண்டிய அரசியல் இல்லை என நினைக்கிறார்கள். அனைத்து மக்கள் விரோத சக்திகளின் பின்னாலும் தாம் எவ்வாறு ஓடித் திரிகிறோம் என்ற உண்மையை இவர்கள் மக்களுக்கு மறைத்து வருகிறார்கள். மற்றய லொபி அரசியல் அமைப்புக்களோடு இவர்களுக்கு அரசியல் ரீதியாக பெரும் முரண் இல்லை – யார் கட்டுப்பாடில் இது நிகள்வது என்பதுதான் இவர்தம் ‘பெரும்’ பிரச்சினை.   TCC மக்கள் மத்தியில் செய்யும் வேலை பணம் திரட்டும் வேலை மட்டுமே. மக்களை அரசியல் படுத்தும் எந்த வேலையும் நிகழ்வதில்லை. மாவீரர் நாள் மற்றும் முள்ளிவாய்க்கால் நாள் போன்ற நிகழ்வுகளை தாம் மட்டுமே நடத்த வேண்டும் என்று அடிபடுவதுதான் இவர்தம் அரசியல் முதன்மை செயற்பாடு. இதன்மூலம் மக்கள் மத்தியில் ஆதரவை தக்க வைக்க வேண்டும் என இவர்கள் கருதுகிறார்களே தவிர மக்களை அரசியல் படுத்துவதன் மூலம் திரட்ட வேண்டும் என்ற நோக்கம் இல்லை. அதற்கான அரசியல் வலிமை இல்லை.

சக போராட்ட அமைப்புகள் மேல் வெற்று அவதூறு செய்வதை இவர்கள் நிறுத்த வேண்டும். இணைந்து வேலை செய்வதானால் எத்தகைய போராட்ட அரசியல் நிலைப்பாடை முன்னெடுக்கிறார்கள் என்பதை மக்கள் முன் தெளிவுபடுத்த வேண்டும்.

தொடரும்…..