நினைவேந்தல் ஊர்வலம் மற்றும் தமிழ் எம்.பி மீது நடத்தப்பட்ட இனவாத தாக்குதலை தமிழ் சொலிடாரிட்டி  வன்மையாக கண்டிக்கிறது. 

1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி வடக்கு கிழக்கு பகுதியை ஆக்கிரமித்திருந்த அன்றைய இந்திய இராணுவத்தினரிடம் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்த திலீபன் அவர்களின்  நினைவாக, அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மரணம் அடைந்த 26 ஆம் திகதி வரை ஒவ்வொரு ஆண்டும், அவரது நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுகிறது, இன்றுவரை திலீபனின் மரணம் பல தமிழர்களால் மகத்தான தியாகமாகவும், மக்கள் நலன்களை முதன்மைப்படுத்திய தன்னலமற்ற செயலாகவும் கருதப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் எதிர்ப்பாளர்களும், புலிகளின் வழிமுறைகளுடன் உடன்படாதவர்களும் கூட தமிழர் போராட்டத்தில் திலீபனின் மரணத்தின் உணர்திறன் மற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். இந்த இந்தகாரணத்திற்காக, இனவாதிகள் அவரை அல்லது அவரது நினைவைப் பற்றிய எந்தவொரு குறிப்பையும் தொடர்ந்து எதிர்க்கின்றனர்.

எவ்வாறாயினும், குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தின் எழுச்சியின் வெற்றின் பின்னர், அனைத்து தமிழர் நினைவேந்தல் நிகழ்வுகளும் தெற்கில் உள்ள இனவாத சக்திகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. பெரும்பாலும், இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் இலங்கை அரசாங்கப் படைகளாலும்  அல்லது இராணுவைத்துடன் ஒத்துழைக்கும் குழுக்கள்  மற்றும் ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய இனவாத அமைப்புகளால் நன்கு  திட்டமிடப்படு ஒழுங்கமைக்கப்பட்டவை. இந்தத் தாக்குதல்கள் தன்னிச்சையானவை அல்ல. இந்த ஆண்டு கொழும்பில் நடைபெற்ற 1983 ஜூலை நிகழ்வுகளை நினைவுகூரும், நிகழ்வும் இதே வழியில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது.  செப்டம்பர் 17 அன்று நடந்த தாக்குதலில் இது தெளிவாகத் தெரிகிறது. இலங்கைக் கொடியை ஏந்திய ஒரு குழுவினர், வெறுப்பூட்டும் கோஷங்களை எழுப்பியதுடன் பேரணியில் பங்கு பற்றியவர்கள் மற்றும் திலீபன் அவர்களின்  படத்தையும் தாக்கினர். நடைபயணத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.கஜேந்திரனும் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த தாக்குதல்கள் அனைத்தும் சம்பவ இடத்திலிருந்து காவல்துறையின் ஒத்துழைப்புடனே நடைபெற்றது. இந்த தாக்குதலின் வீடியோ ஒன்று வைரலாக பரவி உலகம் முழுவதும் பரவி பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொலிசாரின் மறைமுகமான ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த வெறுப்புக் தாக்குதல், இலங்கை அரசாங்கத்தின் மீது  தமிழர்கள் கொண்டிருக்கும் ஆழமான அவநம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.

இலங்கையில் உள்ள ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி (USP) உடனடியாக இனவெறி தாக்குதலுக்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது. ஜூலை 83 நினைவேந்தலைத் தாக்கிய இனவாதிகளுக்கு எதிராக USP தற்போது நீதிமன்றப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் தகவல் மற்றும் பிரச்சாரத்திற்கு உதவ தமிழ் சொல்லிட்டாரிட்டியை  (info@tamilsolidarity.org) தொடர்பு கொள்ளவும். பல தமிழ் மற்றும் முஸ்லிம் அமைப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து, வெளிப்படுத்தப்பட்ட வெறுப்பின் தீவிரத்தைக் கண்டு திகைத்து, இந்தச் செயலை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கின்றனர் . இதுவரை, இலங்கை அரசாங்கம் குற்றவாளிகளை கண்டிக்கவோ அல்லது சட்டத்தின் முன் நிறுத்தவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பெரும்பான்மையான மனித உரிமை அமைப்புகளும் மேற்கத்திய அரசாங்கங்களும் இந்தக் கொடூரச் செயலைக் கண்டிக்கவில்லை, முதன்மையாக திலீபன்  புலிகளின் உறுப்பினராக இருந்ததாலும், தமிழர்களுக்கான சுதந்திரமான தாயகத்திற்காக போராடியதாலுமே அவர்களின் இந்த கள்ள மௌனம், இது அவர்கள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறப்படும் பின்னணியில் உள்ள அரசியல் உள்நோக்கங்களை வெளிப்படுத்துகிறது. இந்த இனவாதத் தாக்குதலையாவது கண்டிக்க புலிகளின் வழிமுறைகளை ஆதரிப்பது அல்லது திலீபனின் கொள்கைகளை ஆதரிப்பது அவசியமில்லை. எவ்வாறாயினும், அரசாங்கத்துடனும் ஸ்தாபனத்துடனும் நெருக்கமாக இணைந்திருக்கும் பல குழுக்கள் அனைத்து வகையான நினைவேந்தல் நிகழ்வுகளையும் அழிப்பதில் ஆர்வமாக உள்ளன,ஏனெனில்  இந்த நினைவேந்தல்கள்  தமிழர்களுக்கு எதிரான கடந்தகால குற்றங்களின் நினைவூட்டுகின்றன  மற்றும் அவர்களின் சமரச அரசியலுக்கு இடையூறு விளைவிக்கும் என்று கருதுகின்றனர். 2009ஆம் ஆண்டு போரின் முடிவில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைப் படுகொலையை சகித்துக் கொண்டதும் அதே மனநிலையில்தான். போராட்ட வரலாற்றையும் கடந்த கால அட்டூழியங்களையும் மௌனமாக்க முயற்சிப்பதன் மூலம், அரச அதிகாரமும் அவர்களுடன் இணைந்திருப்பவர்களும் தமிழர்களின் ஜனநாயக மற்றும் தேசிய உரிமைகளுக்கான கோரிக்கைகள் தொடர்பான முன்னோக்குகளை மாற்றியமைக்க நினைக்கின்றனர். இருப்பினும், உண்மை இதற்கு நேர்மாறானது; இது போன்ற சம்பவங்கள் உதவியற்ற மற்றும் நம்பிக்கையற்ற உணர்வை உருவாக்கி, புதிய தலைமுறை இளைஞர்களை மேலும் தமிழ் தேசியத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.

இந்த வெறுக்கத்தக்க இனவாத  தாக்குதலை  தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள், அவர்களின் அனுசரணையாளர்கள்  உட்பட அனைவரையும் அம்பலப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இவ்வாறான இனவாத தாக்குதல் சதிகளில் பொலிஸாருக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான தொடர்பு வெளிக்கொணரபட  வேண்டும், பொது விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

எமது கோரிக்கைகள்:

  • அனைத்து இனவெறி தாக்குதல்களுக்கும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
  • நினைவேந்தல் நிகழ்வுகளுக்குக்கான தடைகளை நீக்குக.
  • போர்க் குற்றவாளிகள் மற்றும் இனவாத  குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைக்க பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளை உள்ளடக்கிய பொது விசாரணையை நிறுவுதல்.
  • தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.

 

இனவெறித் தாக்குதலைக் கண்டித்து 20 – புதன் கிழமை லண்டனில் நடைபெறும் போராட்டத்திற்கு தமிழ் சொலிடாரிட்டி முழு ஆதரவு அளிக்கிறது. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்து பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

போராட்டத்தின் நேரம் மற்றும் இடம்

Wednesday – 20th September 3.00 pm 
Foreign, Commonwealth & Development Office
SW1A 0AA    
Near Westminster Tube Station