ஆக்காண்டி-இஸ்லாமபோபியா நாவல்.

ஆக்காண்டி-இஸ்லாமபோபியா நாவல்.

லண்டனில் திரள் குழுமம் 16-09-2023 அன்று நடத்திய கூட்டத்தில் முன்வத்த கருத்துக்கள் சில. திரள் குழுமம் காணொளியை வெளியிடுவதாக சொல்லி உள்ளார்கள் – வந்ததும் இங்கு பதிவிடப்படும்

1

ஆக்காண்டி ஒரு அரசியல் நாவல் என அறியப்படுவதால் அதுபற்றிப் பேசமுடியுமா என திரள் குழுமம் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நடேசன் கேட்டிருந்தார். நாவலைப் படிக்க முதலே எனக்கு நிறைய தயக்கங்கள் இருந்தது.

ஜெப்னா பேக்கரி என்ற தனது நாவல் மூலம் இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட எழுத்தாளர் ஆனவர் வாசு முருகவேல். ஜெப்னா பேக்கரி நாவலின் அரசியல் பின்னணி எனக்கு உடன்பாடற்றது. அந்த நாவலை தொடர்ந்து, வாசு முருகவேல் தன்னை அடையாளப் படுத்திக்கொண்ட அரசியல் குறுகிய அரசியல் என்பது பலருக்கும் தெரியும். இந்த பின்னணிதான் தயக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த வருடம் (2023) ஜனவரியில், எதிர் வெளியீடாக(எமது பதிப்பகம் அல்ல -ஆசிரியர்) வெளிவந்த அவரது ஆக்காண்டி நாவல் அவர் தனது அரசியலை ஒரு சொட்டும் மாற்றிக் கொள்ளவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.

நாவலின் அரசியல் பற்றி சில கருத்துக்களை சொல்ல முதல், எழுத்து நடை பற்றி ஒரு குறிப்பையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். ஈழ எழுத்து என்பது பல்வேறு காரணங்களால் தமிழ் நாட்டு எழுத்து முறையில் இருந்து வேறுபாடானது. தமிழ் நாட்டு தமிழ் இலக்கியம் ஒடுக்கப்படும் மக்களின் பேச்சையும் நடைமுறைகளையும் நீண்ட காலமாக ஒதுக்கி வைத்த வரலாற்றை உடையது. தலித்துகள் ஒரு அரசியல் இயக்கமாக எழுந்த பிறகுதான் தலித் இலக்கியமும் தலைதூக்கத் தொடங்கியது. மாறாக நேரடியாக அரசியல் பேசாத ஈழ இலக்கியத்தை காட்டுவது மிக அரிது, இது இன்றும் தமிழ் நாட்டு ‘அதிகார மையங்களுக்கு’ ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. ஈழ எழுத்து நடையையும் வாசிக்க முடியாத ஒன்றாக அவர்கள் கருதுகிறார்கள். இதனால் சில ஈழ எழுத்தாளர்கள் தமிழ் நாட்டு கவனத்தைப் பெற தமது நடையை மாற்றி எழுதுகிறார்கள். இது கண்டனத்துக்குரியது. அதிகார மையத்தை உடைக்காது அதன் ஆசீர்வாதத்துகாக உடன்பட்டு மாறுவது தவறு.

அதிகார பீடங்களை கட்டி வைத்திருப்பவர்கள் நிறைய வாசிப்பு சோம்பேறித்தனம் உடையவர்கள். கொஞ்சம் மூளையை பாவியுங்கள் என அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம். இலங்கை உங்கள் பக்கத்து நாடு – அங்கு வாழும் ஈழ மக்கள் பேசுவதும் எழுதுவதும் தமிழ்தான். கொஞ்சமாவது மற்ற காலாச்சார பண்பாட்டு – வரலாற்று அரசியல் நிலவரங்களை அறிந்து கொள்ள முயலுங்கள். தமிழ்நாட்டு அதிகார எழுத்தாளர்களுக்கு ஈழ அரசியல் பற்றி ஒரு மண்ணும் தெரியாது. ஈழ அரசியல் எழுத்தைப் படிக்க அதை விளங்கிக் கொள்ள இவர்களால் முடியாது.

இந்த விளக்க குறைவோடு ஈழ எழுத்துக்கள் மேல் முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற உலக இலக்கியங்களை இவர்கள் எவ்வாறுதான் படிக்கிறார்கள்- புரிந்து கொள்கிறார்கள் என்பது அவர்கள் வழிபாடும் விஷ்ணுவுக்கே வெளிச்சம்.

தமிழ்நாட்டில் முப்பது வருடத்துக்கு மேல் வாழ்ந்தாலும் ஈழ நடையில் எழுதி வருகிறார் வாசு முருகவேல். ஆனால் இவரும் அதே அதிகார தொனியில் கிழக்கு இலங்கை தமிழ் நடையை முற்றாகப் புறக்கணித்து கிழக்கு இலங்கை கதை எழுதி உள்ளார். இது தெரியாமல் செய்த பிழை இல்லை. குறிப்பாக கிழக்கு இலங்கை முஸ்லிம்கள் மேல் அவர் செய்யும் ஏளனம் இது. தனது முதல் நாவலை தமிழ் நாட்டுத் தமிழில் மொழிபெயர்த்து இன்னொரு நாவலாக வெளியிட்டவர் வாசு முருகவேல். அவர் தெரிந்தே செய்யும் சிறுமை இது.

படைப்பாளியை பேசாமல் சில படைப்புகள் பற்றி பேச முடியாது. ஓர் அப்பட்டமான – மிக மோசமான முஸ்லிம் எதிர்பாளர் வாசு முருகவேல் என்பதை ஆக்காண்டி மீள பதிவு செய்துள்ளது எனக் கூறுவது மிகையான கூற்றல்ல. இது ஒரு இஸ்லாமபோபியா நாவல். இது ஒரு சக எழுத்தாளர் மேல் வைக்க கூடிய பாரதூரமான குற்றச்சாட்டு என தெரிந்தே சொல்கிறேன். தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்ற எதிர் குற்றச்சாட்டை வாசு முருகவேல் வைக்கமுடியும். நடந்த வன்முறையின் அடிப்படையில் இருந்துதானே எழுதி இருக்கிறேன் என அவர் வாதிட முடியும். அத்தகைய நியாயப்படுத்தல் போதாது என்பதை ஆக்காண்டியை வாசிப்பவர்கள் தெரிந்து கொள்ள முடியும். இஸ்லாமபோபியா என்பது நேரடியான கொச்சையான எதிர்ப்பு மட்டுமல்ல- பல நுணுக்கமான தளங்களில் இயங்கி வருவது. அந்த நுணுக்கங்கள் கூட தேவைப்படவில்லை வாசு முருகவேலுக்கு.

2

ஆக்காண்டி நாவல் பேசும் அரசியலைப் பின்வருமாறு சுருக்க முடியும்:

தமிழர்மேல் வெறுப்பு கொண்ட சில சோனகர்கள் இலங்கை இராணுவத்தின் சிறப்பு பிரிவினருடன் வேலை செய்தனர். அதன்மூல பணம் மற்றும் அரசியல் லாபத்தை அரசிடம் இருந்து பெற்ற இவர்கள் இராணுவ ஆதரவுடன் தமிழர் மேல் (தமிழ் இந்துக்கள் மேல்) கொலைவெறி வன்முறையை நிகழ்த்தினர். இதற்கு புத்த பிக்குகளும் உதவினர். ஒட்டு மொத்த சோனகரும் காட்டிக் கொடுக்கும் தன்மை உடையவர் – அரசுடன் வேலை செய்பவர்கள். இதே முஸ்லிம்கள் பின்பு 2018 கண்டி கலவரத்தின்போது புத்த பிக்குககளால் தாக்கப்பட்ட போதுகூட அரசுடன் இணைந்தே வேலை செய்தனர். அதன்பின் அடிப்படைவாத இயக்கத்துக்கு அரபு நாட்டு காசும் உதவியும் கிடைத்தது. அரபு நாட்டுப் பணம் மற்றும் இலங்கை இராணுவ உதவியுடன் இந்த அடிப்படைவாதிகள் தமிழர் அதிகம் செல்லும் கிறித்தவ ஆலயங்களுக்கு குண்டு வைத்தனர். ஈஸ்டர் பெருநாளில் நடந்த குண்டு வெடிப்பபின் பின்னணி இவாறுதான் தமிழர் மேலான தாக்குதலில் இருந்து தோன்றியது.

வடக்கில் இருந்த முஸ்லிம் மக்கள் 1990 களில் புலிகளால் வெளியேற்றப்பட்டபின் பிற்போக்கான பல தமிழ்தேசியர் முன்வைத்த இலகுபடுத்திய வாதங்களைத் தாண்டி வாசு முருகவேளின் அரசியல் நுணுக்கம் நகரவில்லை.

3

மத அடிப்படைவாதம் பற்றியோ – அது எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்றோ எந்த அவதானமும் நாவலில் இல்லை. தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை அடிப்படை வாதிகள் இனவெறி அடிப்படையில் இயங்குவது போன்ற அர்த்தத்தில்தான் விவரணங்கள் நகர்கிறது.

மத அடிப்படை வாதம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை விமர்சிப்பது என்பது வேறு – அதை பொதுமைப்படுத்தி ஒரு மக்கள் குழுவையே வன்முறை குழுவாக சித்தரிப்பது என்பது வேறு.

மத அடிப்படைவாதத்தை விமர்சிப்பது என்ற ‘முற்போக்கு’ போர்வை மத ரீதியாக முடக்கப்படும் சிறுபான்மையினர் மேலான வன்முறைகளை நியாப்படுத்த உதவி வந்திருக்கிறது. இஸ்லாமை பின்பற்றுகிறார்கள் என்ற ஒற்றைக் காரணத்தால் அவர்கள் தாக்கப்படுவது இலங்கை இந்தியா மற்றும் மேற்கு உலகெங்கும் நடக்கும் ஒன்றுதான். இதற்கான எதிர்ப்பும் வறுமை போன்ற இதர காரனிகளும்தான் அடிப்படை வாதத்தை வளர்க்கிறது. இந்தப் புரிதலை நாவலில் எங்குமே நீங்கள் பார்க்க முடியாது. மாறாக ஒட்டு மொத்த அம்பாறை மாவட்ட சோனக சமூகம் முழுமையும் தூக்கில் ஏற்றப்படவேண்டும் என்ற பிரமையைத்தான் நாவல் உருவாக்குகிறது.

ஒரு குறிப்பிட்ட வன்முறைக் குழுவை விமர்சித்து எழுதுவதாக சொல்லிக்கொண்டு பொத்தம் பொதுவாக இஸ்லாமிய சமூகத்தையே குற்றம் சொல்வதுதான் மேலோங்கி நிற்கிறது. இந்துக்களும் தமிழர்களும் ( கிறித்தவர்களும்) மட்டுமே உண்மையாகப் பாதிக்கப்படுபவர்கள் என்ற பாவனை தருவதும் செய்யப்படுகிறது.

நான் உண்மையை எழுதி இருக்கிறேன் என நாவல் ஆசிரியர் சொல்லலாம். வன்முறையை வன்முறையாக எழுதுவது தவறா எனக் கேட்கலாம். ஏன் எனில் பல்வேறு கொடூர வன்முறைகள் நிகழ்ந்தது உண்மையே. ஆனால் நாவல் ஒருதலை பட்சமாக விசயத்தை அணுகுவதுதான் பிரச்சினை.

கிழக்கு மாகாணத்தில் பல்வேறு கொடூர வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. புத்தூர், அக்கரைப்பற்று, காத்தான்குடி, சம்மாந்துறை, ஏறாவூர் முதலான பல இடங்களில் முஸ்லிம்கள் கோரப்படுகொலை செய்யபடிருக்கிறார்கள். முஸ்லிம்கள் என்ற காரணத்துக்காக கொலை செய்யப்படிருக்கிறார்கள். எந்த வகையிலும் இக்கொலைகளை நியாயப்படுத்த முடியாது. இது போன்ற கொலைகள் மற்றும் புலிகள் முஸ்லிம்களை வடக்கில் இருந்து வெளியேற்றியது போன்ற நடவடிக்கைகள்தான் தமிழ் முஸ்லிம் உறவை முறிக்க உறுதுணையாக இருந்தது. இது போன்ற சம்பவங்கள்தான் சில இளையோரை அடிப்படைவாதம் நோக்கி நகர்த்தியது. மதம்சார் பற்று என்பது அடிப்படை வாதத்துக்கான ஆதரவு இல்லை. இந்து மதத்தை பின்பற்றும் எல்லோரும் முஸ்லிம்கள் மீதான குஜாரத் படுகொலையை ஆதரித்தனர் எனச் சொல்லுவது போன்ற மடத்தனம்தான் இது. பல தளங்களில் தாக்கப்பட்ட போதும் இன்றுவரை இலங்கை முஸ்லிகள் மத்தியில் அடிப்படை வாதத்திற்கு பெரும்பான்மை ஆதரவு கிடையாது. உண்மையில் அதற்கு கடும் எதிர்ப்பு இருப்பதை பல இடங்களில் நாம் பார்க்க முடியும்.

ஆனால் கோரப் படுகொலைகள் மக்கள் மத்தியில் முரணை கூர்மைப்படுத்தக் கூடியன. இந்த முரணால் பின்தள்ளப்பட்ட நிலையில் இருந்து எழுதுவது  எழுத்தாளன் தன்னைத்தானே சிறுமைப்படுத்திக் கொள்ளும் செயல். இந்த கூரிய முரண் பல்வேறு உணர்வுத் தளங்களில் வெளிப்படும் என்பதும் ஆழமான சிக்கல்களை உருவாக்கும் என்பதும் எமக்குத் தெரியும். இருப்பினும் அந்த நிழலிலும் அரிய எழுத்துக்களை உருவாக்க முடியம் என்பதை பல கிழக்கு எழுத்தாளார்கள் செய்து காட்டி உள்ளனர். உதாரணமாக மீகாத்தின் குதர்க்கங்களின் பிதுக்கம் நாவாலைப் படியுங்கள். எழுத்தாளனின் அரசியல் நுணுக்கம் அவனது எழுத்துக்களில் வெளிப்படும். ‘உளவு சொல்வது ஏதோ ஒரு மதக்கட்டளை போல சோனக குடும்பங்களுக்குப் பழக்கமாகிப் போயிருந்தது’ என எழுதுகிறார் வாசு முருகவேல். இது ஒரு கதாபாத்திரத்தின் வசனமாக அன்றி எழுத்தாளனின் கூற்றாகவே வருகிறது. இது ஒரு உதாரணம் மட்டுமே.

வாசு முருகவேல் எடுத்திருக்கும் கதைக் களத்தின் பின்னணி திராய்க்கேணி என்ற கிராமத்தில் நடந்த கொடும் கொலைகளோடு தொடர்பு கொண்டது. அங்கு 13 முஸ்லிம்கள் கொலை செய்யப்படதைத் தொடர்ந்து ஏராளமான தமிழர் கொல்லப்பட்டனர் – நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அங்கு வாழ்ந்த தமிழர்கள் பெரும்பான்மையானவர்கள் வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவம் ஆகஸ்ட் 1990ல் நிகழ்ந்தது. இந்த படுகொலை தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான மோதலாக நிகழவில்லை. மாறாக திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டது. சிறப்பு இராணுவ பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய ஆயுதக் குழுவே இக்கொடுமைகளைச் செய்து முடித்தது. இலங்கை இராணுவத்தின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்தே புலிகள் 1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் எல்லா முஸ்லிம்களையும் வடக்கில் இருந்து வெளியேற்றினர் என சொல்லப்படுகிறது. புலிகள் இயக்கத்தின் மாபெரும் தவறான இந்த நடவடிக்கையை நியாயப்படுத்த பலர் இதைக் குறிப்பிடுவர். இது ஒரு படுகொலையை நியாயப்படுத்தும் விவாதம். தெற்கில் குண்டு வைத்ததால் தமிழர்கள் வடக்கில் கொல்லப்பட்டனர் எனச் சொல்லப்படுவது போன்றது இது. அரச இயந்திரத்தின் திட்டமிட்ட படுகொலை நடவடிக்கையின் வலையில் விழுந்து தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவை முறித்த வேலையத்தான் புலிகளின் நடவடிக்கை நிறைவேற்றியது.

திராய்க்கேணி படுகொலை செய்த அதே சிறப்பு இராணுவம்தான் அரசியல் நலனுக்காக ஈஸ்டர் படுகொலையையும் செய்தது என இனைத்து பேசுகிறது நாவல். அதில் நிறைய உண்மை உண்டு. அதிகார சக்திகள் மற்றும் இலங்கை அரச இயந்திரம் தமிழ் சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்த மோசமான சக்திகளை தமக்கு சாதமாகப் பாவித்தது -தொடர்ந்து பாவித்துவருவது  உண்மையே. ஆனால் அத்தகைய  ஆழமான தொனி நாவலில் இல்லை. நாவல் வெறுமே ‘சோனகர் வன்முறை’ பற்றி பக்கம் பக்கமாக விவரிக்கிறது. பாதிப்புக்கு உள்ளான தமிழ் மக்கள் சார்பில் நின்று நாவல் பேசுகிறது என்று மட்டும் பேச முடியாது. திராய்க்கேணி வன்முறையை அவ்வாறு இலகுபடுத்திப் பார்ப்பதுதான் நாவலை இஸ்லாமபோபியா நாவலாக மாற்றி நிற்கிறது. இராணுவத்தாலும் அவர்கள் பணத்தில் இயங்கிய சிறுபான்மை வன்முறை குழுவாலும் நிகழ்ந்த வன்முறை தமிழ் மக்கள் மேலான வடு மட்டுமல்ல – இது சிங்கள முஸ்லிம் மக்கள் மேலும் விழுந்த அடியே. தமிழ் சிங்கள உறவை முறிக்க இனவாத சிறப்பு இராணுவப் பிரிவு திட்டமிட்டு இயங்கியது என்ற குற்றச்சாட்டை நாவலாசிரியர் வைப்பாரானால் அது சரியே. அந்த அரசியல் நுணுக்கம் இருக்குமானால் நவலாசிரியர் ஆர்வம் அரச இயந்திரத்தை நோக்கி குறிப்பாக குவிந்திருக்கும். மாறாக தமிழர் மேல் சோனகர் செய்த கொடுமை என்ற முறையில் குறுகி நிற்கிறது.

ஈழ இலக்கிய வட்டாரத்தில் முற்போக்கு போர்வையுடன் இயங்கி வரும் பல இலக்கிய பாவனையாளர்கள் சிலர் இன்னொரு பார்வையை இங்கு முன்வைக்க முடியும். முஸ்லிம்கள் மேல் நிகழ்ந்த வன்முறை அனைத்தும் புலிகள் செய்தது என பேசி அரசைக் காப்பாற்றுபவர்கள் இவர்கள். அதே சமயம் தமிழர்கள் மேலான வன்முறைக்கும் அரசு மேல் முழுமையான குற்றச்சாட்டை இவர்கள் வைப்பதில்லை. இவர்களில் சிலரது அரச எதிர்ப்பு மென்மையானது. இந்தப் போக்கு – தமிழ் அரசியல் தலைவர்கள் என தம்மை தாமே சொல்லிக்கொள்வோரின் அரசியற் பலவீனம் – என பல்வேறு அவதானகள் நாவலில் தவிர்க்கப்பட்டிருப்பது இனவாதத் தொனிக்குத்தான் பலம் சேர்த்துள்ளது. தமிழ் – எதிர் – முஸ்லிம் என்ற கருப்பு வெள்ளைப் பார்வை வெறும் இனவாதத்தை நோக்கித்தான் சரியும்.

பணம் மற்றும் அரியல் லாபத்துக்காக அரசுடன் இயங்கும் தமிழரின் தொகை முஸ்லிகளின் தொகையைவிட அதிகமமாக இருக்கத்தான் வாய்ப்புண்டு. தீவிர வலது சாரிய தமிழர் மட்டுமல்ல, அரச நலன் சார்ந்து இயங்குபவர்கள். புலிகளின் அடக்குமுறைக்கு உட்பட்ட பல தமிழரும் அரசிடமே தஞ்சம் அடைந்தனர். புலி எதிர்ப்பு மையம் என நாம் வர்ணிக்கும் அரசை மென்மையாக விமர்சிப்பவர்க்களும்கூட ஏதோ ஒருவழியில் அரச சார்புக்கே சென்றடைந்தனர். இது நாம் வைக்கும் அரசியல் விமர்சனம். அரசிடம் நேரடியாலக வேலை செய்தவர்கள் – காசு வாங்கியவர்கள் பட்டியல் வேறு- இவர்கள் வேறு. ஆனால் எந்த அரசியலை இறுதியில் காப்பாற்றினர் என்ற கேள்வி சார்ந்தது எமது விமர்சனம். புலி எதிர்ப்பு வேகம் இவர்கள் அரசியற் கண்களை குறுடாக்கி விட்டது. இன்றுவரை மாற்றமில்லை.

இப்போதும் பாருங்கள் என்ன நடக்கிறது என. சமீபத்தில் சனல் 4 ஊடகம் இலங்கை ஈஸ்டர் படுகொலை பற்றி ஒரு டொக்குமென்றி வெளியிட்டிருக்கிறது. நாம் சொல்லும் கும்பல் கள்ள மௌனம் காப்பதைப் பார்க்கலாம். முஸ்லிம் மக்களை காக்கவா அதைச் செய்கிறார்கள்? மாறாக தமது அரசியலை அவர்கள் காப்பாற்ற இதைச் செய்கிறார்கள். ஈஸ்டர் படுகொலையின் பின் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என முதன்மைப்படுத்தி முஸ்லிம் சமூகத்தையே வில்லனாக சித்தரித்த ராஜபக்ச குடும்ப அரசியலை இப்போதாவது எதிர்க்க வேண்டாமா? அரசின் மேல் முதன்மை குற்றச்சாட்டு விழுவது முஸ்லிம் மக்களின் நலன் சார்ந்தது என தெரியாமலா இருக்கிறார்கள் இவர்கள்?

ஆக்காண்டி நாவல் இந்தப் பிரச்சினையைப் பேசுகிறது என்பதற்காக மட்டும் மேற்சொன்ன இந்தக் குறிப்பைக் கூறவில்லை. ஆக்காண்டி நாவலின் போதாமையை சுட்டவுமே சொல்கிறேன்.

ஈழ இலக்கியவாதிகள் – மற்றும் முற்போக்கு பாசாங்கு செய்யும் பலரது கைகளும் இரத்தம் தோய்ந்தவையே. யுத்தத்தை முடித்தமைக்கு ராஜபக்சவுக்கு நன்றி சொன்னதை கூட இன்னமும் வாபஸ் வாங்கவில்லை இவர்கள் என்பதையும் – ஈஸ்டர் கொலை உட்பட பல கொலைகளின் பின் இருக்கும் அரச இயந்திரத்தின் பின் பல தமிழர்களும் இருக்கிறார்கள் என்பதையும் – வாசு முருகவேல் அறியவில்லைப் போலும். குறிப்பாக வாசு முருகவேல் இருக்கும் இதே இலக்கிய குட்டைக்குள் ஊறிக் கிடப்பவர்கள் இவர்கள்.

இலக்கியச் சந்திப்பு என்ற பெயரில் சுய இன்பம் காணும் ஒரு சந்திப்பு குழு இந்த பிரச்சினையால்தான் 2013ல் நெருக்கடிக்கு உள்ளானது. ஈஸ்டர் கொலைக்குப் பின் இருக்கும் அரச சக்திகளுக்கு ஆதரவாக இயங்கிய பிள்ளையானின் ஆதரவாளர்கள் இலங்கை அரசுக்கு ஆதரவு தேட பல வேலைகளை செய்து வந்தார்கள். இலக்கிய சந்திப்பையும் அவர்கள் அதற்குப் பாவித்தார்கள். இலக்கிய சந்திப்பு ‘புலி எதிர்ப்பு மையமாக’ இயங்கியது அவர்களுக்கு வாய்ப்பாகப் போயிற்று. அச்சமயம் எழுதியதின் ஒரு பகுதி இது:

‘பல ஆண்டுகளாக இலக்கியச் சந்திப்பின்மேல் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. பல கலைஞர்கள் சந்திப்பில் நின்று விலகி நிற்க இது காரணமாக இருந்தது. கிழக்கின் உதயம் என்ற பெயரில் கருணா, பிள்ளையான் முதலான அதிகார சக்திகளின் பிரச்சாரக்கூடமாக இலக்கியச் சந்திப்பை மாற்ற முனைந்தனர் சிலர். டக்ள‌ஸ் தேவானந்தா, சிறிடெலோ என்று அரச சார்புக்குழுக்களின் ஆதரவாளர்கள் அல்லது அங்கத்தவர்களின் ஆதிக்கம் வளர ஆரம்பித்தது. ‘மாற்று’ அரசியல் என்ற போர்வையில் கொலைகார அரசியலுக்கு புலத்தில் தளம் தேடியோர் இலக்கியச் சந்திப்பை நோக்கித் திரும்பினர் என்று கூறுவது மிகையில்லை….அராஜக அரசு ஆதரவாளர்கள் தமது அரசியல் நலன்களுக்காக இலக்கியச் சந்திப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள திட்டவட்டமான நகர்தலைச் செய்தது பல கலைஞர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

புலத்தில் நடந்துவரும் இலக்கியச் சந்திப்பை இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை இலங்கைக்குள் இருந்து எழவில்லை. அது பிரான்ஸ் கலைஞர்களிடம் இருந்துதான் எழுந்தது.’

‘…முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைக்கு எதிராகப் பேசிய தோழர் தான் லண்டனிற் பேசுவதைக்கூட அளந்துதான் பேசவேண்டியிருக்கு என்று பச்சையாக போட்டுடைத்திருந்தார். இதே கூட்டத்திற் கலந்துகொண்டிருந்த ஒருவர் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட கிராமங்களை முன்னேற்றுவதற்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்து போராடி வருபவர். அவர் அதிகாரங்களுக்கும் எதிராக இருக்கிறார் என்பதால் அவரது புகைப்படம் எடுக்கப்பட்டது பற்றி நமக்கு பயம் உண்டாகியிருக்கிறது.’

ரஞ்சி, சுசீந்திரன், கிரிஷ்ணராஜா, லட்சுமி, பௌசர், யமுனா ராஜேந்திரன், நான் உட்பட பலர் இதை அன்று கடுமையாக எதிர்க்க வேண்டி இருந்தது.

எதிர்ப்பு செய்த எமது புகைப்படங்களை எடுத்து மிரட்டும் அளவுக்கு அவர்கள் முத்தி இருந்தனர். மக்களால் ராஜபக்ச குடும்பம் தூக்கி எறியப்படும் என்ற எமது வாதத்தை அன்று யாரும் நம்பி இருக்கவில்லை. அதிகாரத்தின் மோகத்தில் திளைத்திருந்தனர். வாங்க பாப்பம் நாட்டுக்கு என்ற தெனாவெட்டுதான் உணர்ந்தோம்.

இன்றுகூட பிள்ளையான், கோத்தபாய போன்றவர்களைக் கடுமையாக விமர்சித்தால் இலங்கைக்கு போக முடியாது என்ற பயக்கெடுதி சூழல்தான் நிலவி வருகிறது. ஆரம்பத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு பிள்ளையானோடு இயங்கிய பலர் – பல முஸ்லிம்கள் இன்று வாய் முடக்கப்பட்டு கிடக்கின்றனர். கோர வன்முறையும் அத்தகைய வன்முறையை சாதாரனாமாக ஏற்றுகொல்வதும் ஈழ தமிழர் மத்தியில்தான் அதிகமாக பார்க்க முடியும்.

யுத்தக் கோர அழிவுக்கு முன்பிருந்தே வன்முறை ஆதரவு நடவடிக்கை – சுயத்தை முன் தள்ளும் நடவடிக்கை என்பன இலக்கிய சந்திப்பில் ஊறிக் கிடந்தது உண்மையே. பாரிசில் 2008ல் நடந்த நெடுங்குருதி என்ற கூட்டத்தை உதாரணமாகக் கூற முடியும்.

அச்சமயம் குருதிப்புனல் என்ற தலைப்பில் எழுதியதில் இருந்து : (அந்த கூட்டத்தை ஏற்பாட்டாளரில் முக்கியமானவர் குகன்.)

‘முதன்மை ஏற்பாட்டாளர் குகனின் கடையில் வைத்து அங்கு வேலை செய்த தொழிலாளி ஒருவர் சுடப்பட்டார் என்ற செய்தி எமக்குக் கிட்டியது. இது தொடர்பாக உடனடியாக குகனுடன் தொடர்புகொண்ட ஜெயபாலன் (தேசம்நெட் ஆசிரியர்) சம்பவம் பற்றி அவருடன் தொலைபேசியில் உரையாடியபோது முக்கியமாக இரண்டு விசயங்களை குகன் தெரிவித்தார். ஒன்று இந்தக் கொலை முயற்சிக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்பது. இரண்டாவது நெடுங்குருதி நிகழ்வு நடக்குமா நடக்காதா என்பதை மற்றையவர்களுடன் உரையாடி பின் அறிவிக்கிறோம் என்றது. இதைத் தொகுத்து யூலை 25 அன்று ‘1983 – 2008 நெடுங்குருதி பாரிஸ் சார்சல் வரை கசிகிறது’ என்ற தலைப்பில் ஜெயபாலன் செய்தி வெளியிட்டிருந்தார். இதற்கடுத்தநாள் 26ம் திகதி குகன் பிரெஞ் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். ஏற்கனவே கூட்டம் நடக்குமா இல்லையா என்ற எந்த செய்தியும் தெரிவிக்கப்பட்டிருக்காத நிலையில் ஏற்பாட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த சிலருடன் பேசியபின் 26ம் திகதி ‘இன்று நெடுங்குருதி ஏற்பாட்டாளர் கைது!!! ஞாயிறு நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்!- ஏற்பாட்டாளர்கள்’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது.

இக்கூட்டத்தை அன்று பலர் புறக்கணித்தனர். பாரிஸ்வரை சென்ற நித்தியானந்தன், சுசீந்திரன் முதலானோர் உட்பட பலர் இக்கூட்டத்தை புறக்கணித்தனர்.  ‘அண்மையில் இடம்பெற்ற நிகழ்வுகள் காரணமாக தான் இந்நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை’ என்று சோதிலிங்கலம் சொன்னது (அவர் அப்போது தேசம்நெட் ஆசிரியர்) பலருக்கு கடும் கோபத்தைக் கிளறி விட்டது. கொலை நடந்த பிறகு கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் ஆதரவில் கொலைக்கு எதிரான கூட்டத்தை அவர்கள் போட்டார்கள். இதற்கு ‘பிரபல எழுத்தாளர்’ ஷோபாசக்தி தனது முழுப் பலத்தையும் திரட்டி ஆதரவு  வழங்கினார். இந்தப் போக்குதான் இன்றும் தொடர்கிறது.

இத்தகைய போக்கு எல்லா சமூகத்திடமும் உண்டு. சோனகர்தான் காட்டிக்கொடுப்பு செய்பவர்கள் என்ற பாவனை தருவது இனவாதம்.

இன்று ஈஸ்டர் கொலை சம்பவம் தொடர்பாக தகவல்களை வெளியிட்ட கண்சீர் ஆசாத் மௌலானா ஒரு துரோகி ஆகி இருக்கிறார். இஸ்லாமிய தீவிரவாதிகளை பாதுகாக்கவும் – தமிழ் தேசியவாதிகளின் பணத்துக்காகவும் மௌலானா இப்படி பேசுகிறார் என்கிறார் பிள்ளையான். இந்த பிள்ளியானின் தலைமை ஆலோசகராகவும் இலக்கிய சந்திப்பின் முக்கியஸ்தராகவும் இருந்த ஞானம் ஏன் மௌனம் சாதிக்கிறார்? அவரது துனையாகவும் இலக்கிய சந்திப்பின் ஒரு தூணாகவும் இருந்த விஜி எங்கே? படுகொலைகளில் இருந்து பாலியல் கொடூரம் ஈறாக குற்றச் சாட்டுகள் இருக்கிறது. ஒரு காரசாரமான விமர்சனத்தை பிள்ளையான் மேல் வைக்கட்டும் பார்க்கலாம்.

இது மௌலானாவின் தனிப்பட்ட குற்றச்சாட்டு சார்ந்த விசயம் மட்டுமல்ல. அவர் இருபது வருடங்களுக்கு மேல் பிள்ளையானோடு நெருக்கமாக வேலை செய்தவர் என்பது அவரது குற்றச்சாட்டுக்கு ஒரு கனதியைக் கொடுத்திருகிறது உண்மை. ஆனால் அதையும் தாண்டி பல தகவல்கள் – ஆதாரங்கள் இன்று வெளியாகி இருக்கிறது. அரசின் சார்பில் இயங்கிய நிசந்த சில்வாவின் வாக்கு மூலம் தொட்டு பலரது வாக்குமூலங்கள் மௌலானாவின் தகவல்களை இன்று உறுதிப்படுத்தி இருக்கிறது. ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடக்க முதல் சிறப்பு இராணுவம் உருவாக்கிய NTJ அமைப்பிற்கும் (மொகமட் சர்ஹான் உருபினராயிருந்த) , இராணுவ அமைப்பான திரிப்பொலி பட்டூனுக்கும், கோத்தபாயவிற்கும், சுரேஷ் சாலிக்கும், இருந்த தொடர்புகள் பற்றிய செய்தியை இலங்கை மிரர் பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. குண்டு வெடிப்பு நடந்து சில மணித்தியாலங்களில் மிரரின் அதுசார் அனைத்துக் கட்டுரைகளும் நீக்கப்பட்டு விட்டன. பலருக்கு இது புதிய விசயமில்லை. முழுப் பூசணிக்காயை சோத்துக்குள் புதைக்க கடும் வன்முறை அதிகாரம் பாவிக்க பட்டபோதும் அது சாத்தியப்படவில்லை.

தமிழ் முஸ்லிம் உறவை உடைப்பதில் பயன் அடைந்தவரகள் அரசியற் தலைவர்களும், அரசுமே. புலி எதிர்ப்பு நிலைப்பாட்டை அரச ஆதரவாகத் திரட்ட முயன்றது இலங்கை அரசு என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் முஸ்லிம் மக்களை தனியாக தனிமைப்படுத்துவது பல முஸ்லிம் அரசியற் தலைவர்களுக்கும் தேவையாக இருந்தது. புலிகள் இனச் சுத்திகரிப்பு செய்தனர் – அதற்கு ஒட்டுமொத்த தமிழரும் ஆதரவு வழங்கினர் என்ற பிரச்சாரமும் இதற்கு துணை போனது.

இத்தகைய இலகுபடித்திய குறுகிய – அரசியற் குறைபாட்டு பார்வைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும்.