விடுதலை விரும்பிகள் ஜெரமி கோபினுக்கு ஆதரவளிக்க வேண்டும்

2,757 . Views .

சு. கஐமுகன் gajan2050@yahoo.com

பிரித்தானிய தமிழர்கள் ஏன் ஜெரமி கோபினை ஆதரிக்க வேண்டும்? யார் இந்த ஜெரமி கோபின்? ஏன் தமிழர்கள் அவரை ஆதரிக்க வேண்டும்? அதனால் தமிழர்களாகிய நமக்கு என்ன நன்மை? என்பது பற்றி அலசி ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

ஜெரமி கோபினுக்காக ஆதரவு என்பது கோபின் எனும் தனி மனிதனுக்கான ஆதரவு இல்லை. அது ஜெரமி கோபினின் கொள்கைகளுக்காக கொடுக்கப்படும் ஆதரவே ஆகும். தற்பொழுது இங்கிலாந்தில் எழுந்திருக்கும் கோபின் அலைக்கு கொடுக்கும் ஆதரவு ஆகும்.

இந்த அலையானது சமூகத்தின் அடித்தட்டு மற்றும் பழைமைவாத கட்சியின் (Concervative Party) நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்டு வரும் மக்களினால் எழுப்பப்பட்டு வரும் அலை ஆகும்.

பெரும் முதலாளிகளின் பக்கம் சாயாமல் மக்கள் பக்கம் சாய்ந்து நிற்கும் இந்த கோபின் அலைக்கு அதரவு அளித்து இந்த கோபின் அலையை (Corbyn Movement) அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வது மக்களின் கைகளிலேயே உள்ளது.

ஆகையினால் தொழிலாளர் கட்சியின் அங்கத்தவர்கள் ஜெரமி கோபினுக்கு தமது வாக்கை செலுத்தி அவரை தொழிலாளர் கட்சியின் தலைமைக்கு அனுப்ப வேண்டியது கட்டாய அவசிய அதே சமயம் அவசர தேவையாகும்.

பிரேக்சிட் வாக்கெடுப்பில் பிரித்தானியாவின் பிரிவினைக்கு வாக்களித்து பெரும் முதலாளிகளின் கனவுகளில் மண்ணை அள்ளிப் போட்டது போல், இந்த முறையும் ஜெரமி கோபினை தலைமைக்கு அனுப்பி அவர்கள் கனவில் மண்ணை அள்ளிப் போடவேண்டும் பிரித்தானிய மக்கள்.

ஜெரமி தலைவராகும் பட்சத்தில் எதிர்காலத்தில் இடதுசாரித் தலைவர் ஒருவர் பிரித்தானியாவின் பிரதமர் ஆகும் வாய்ப்புண்டு, அவ்வாறு அமையும் பட்சத்தில் எமது போராட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி முன்னகர்த்தவும், எமக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதும் இலகுவானதாக அமையும்.

மாறாக மீண்டும் மீண்டும் வலதுசாரித் தலைவர்கள் பிரித்தானியாவின் பிரதமர்கள் ஆகும் பட்சத்தில் சர்வதேச நாடுகள் மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதும் அதன் மூலம் எமது நலன்களை நகர்த்துவதும் மிகக் கடினமானதாகவே காணப்படும்.

இதனை முன்னாள் பிரதமர்களான பிளேயர், கமரோன் போன்றோரின் கடந்த கால வரலாற்றின் ஊடாகக் காணமுடியும்.

ஆகவே வலதுசாரி ப்லேயரிஸ்ட்கள் தொழிலாளர் கட்சியின் (லேபர் பார்ட்டி) தலைமையினைக் கைப்பற்றாமல் அந்த இடத்திற்கு ஜெரமியை அனுப்ப வேண்டியது மக்களாகிய எங்களின் கடமையாகும்.

ஜெரெமி ஒரு இடதுசாரி என்பதற்காக மட்டும் எமது ஆதரவு வழங்க வேண்டும் என சொல்லவில்லை. இலங்கையில் பல இடதுசாரிகள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் தமிழ் மக்கள் உரிமைகளுக்கு கெடுதல் செய்த வரலாறு எமக்குத் தெரியும்.

ஆனால் ஒருவருக்கு ஆதரவு கொடுக்கும் முன் அவரது கொள்கை என்ன ? முன்பு வரலாற்றில் அவர் என்ன செய்தார் ? என்பனவற்றை பார்க்கச் சொல்கிறோம்.

ஜெரமியின் கடந்த கால வரலாற்றை எடுத்து நோக்கும் போது அவரது அனைத்து நடவடிக்கைகளும் மக்கள் சார்பாகவே இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. நாடுகள் மீதான போர் மற்றும் இராணுவ அத்துமீறல்களை முற்றாகவே எதிர்த்தார்.

ஈராக், சிரியா போன்ற நாடுகளின் மீதான போருக்கு எதிராகவே தமது நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். மேலும் 1983 இனக் கலவரம், 2009 முள்ளிவாய்க்கால் பிரச்சினைகளின் போதும் தமிழர்களின் பக்கமே நின்றுள்ளார், அத்தோடு இலங்கைக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போதும் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் 1980 களில் இனத்துவேசத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்ற பிரித்தானிய தலைவர்களில் ஜெரமி கோபினும் ஒருவராவார்.

மேலும், ஒடுக்கப்பட்டு வரும் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் தனது ஆதரவை வழங்கி இஸ்ரேலின் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்.

இத்தகைய வரலாற்றைக் கொண்ட ஒருவரை தலைமைக்கு அனுப்பாமல் வேறு யாரை அனுப்புவது?. இனப்படுகொலை, இனத்துவேசம், நிறவாதம், போர் போன்றனவற்றுக்கு எதிராக, ஒடுக்கப்படும் மக்களின் குரலாக நிற்கின்ற கோபின் தொழிலாளர் கட்சியின் தலைமைக்கு பொருத்தமானவர் என்பதில் சிறிதேனும் சந்தேகம் இல்லை.

தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என வெளிப்படையாக சொன்ன ஒருவரை ஆதரிப்பது தமிழர்களின் கட்டாயத் தேவை ஆகும்.

இதனைக் கவனத்தில் கொள்ளாது ஜெரமியை எதிர்க்கும் தமிழர்கள் உண்மையில் யார்? யார் பக்கம் இவர்கள் நிற்கின்றார்கள்? மக்களின் பக்கமா இல்லை பெரும் முதலாளிகளின் பக்கமா? அத்தகையவர்களை இனம் கண்டு அறிந்து தெளிந்து கொள்வது மக்களின் கடமையாகும்.

கடந்த கால வரலாற்றை மட்டுமல்லாது கோபினின் தற்போதைய கொள்கைகளை எடுத்து நோக்கின் அவை பெரும் முதலாளிகளுக்கு சார்பாக அமையாமல், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றது.

மணித்தியாலத்திற்கு பத்து பவுண்ஸ் சம்பள உயர்வுக்கு ஆதரவு, மருத்துவம் மற்றும் பொதுச் சேவைகளுக்கான வரிகளை குறைத்தல், மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு, 500,000 புதிய வீடுகளைக் கட்டுதல், வறுமை ஒழிப்புத் திட்டம், வீட்டு வரியைக் குறைத்தல், வீட்டு வாடகை உயர்வைக் கட்டுப் படுத்தல், கல்விக் கட்டணங்களை குறைத்தல், போன்றன அவற்றுள் சிலவாகும்.

இத்தகைய திட்டங்கள் அமுலாக்கப்படும் போது பிரித்தானியாவின் எல்லா மக்களும் மிகுந்த பயனைப் பெறுவார்கள். பிரித்தானியாவில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பெரும்பாலோனோர் அடித்தட்டு வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றார்கள். ஆகவே இந்தத் திட்டங்கள் அமுலாக்கப்படும் பட்சத்தில் அவை எமது மக்களுக்கும் பயன் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

முன்னெப்போதும் இல்லாத அளவு தொழிலாளர் கட்சி மிகப்பெரிய எழுச்சியைக் கண்டுள்ளது. மூன்று மாதங்களில் கட்சியில் இணைந்த மக்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தில் இருந்து ஆறு லட்சமாக அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஐரோப்பாவின் மிகப் பெரும் ஒரு கட்சியாகவும் வளர்ந்துள்ளது.

பாராளுமன்றத்தினுள் கோபினுக்கான ஆதரவு குறைவாக காணப்படுகின்ற போதிலும் பாராளுமன்றத்துக்கு வெளியே மக்கள் மத்தியில் கோபினுக்கான ஆதரவு ஓங்கியே காணப்படுகின்றது. கோபினுக்கு தேவை மக்கள் ஆதரவே தவிர பாராளுமன்றத்தின் ஆதரவு அல்ல.

யாருக்காக பாராளுமன்றம்? மக்களுக்காக பாராளுமன்றமே தவிர பாராளுமன்றதுக்காக மக்கள் அல்ல. ஜெரமி கோபினின் மக்கள் செல்வாக்கினைக் கண்டு அஞ்சுகின்ற பிளேயரிசவாதிகள், ஜெரமிக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனக்குரிய கட்டமைக்கப்பட்ட குழு ஒன்றை அமைக்கத் தவறி விட்டார், மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு இல்லை போன்ற பொய்ப் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளனர் சாதிக்கான் போன்ற வலதுசாரி பிளேயரிசவாதிகள். அனைத்தையும் தவிடுபொடி ஆக்கி மக்கள் செல்வாக்கை வலதுசாரி அரசியல் வாதிகளுக்கு உணர்த்த ஜெரமி கோபினுக்கு மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும்.

கடந்த லண்டன் கவுன்சில் தேர்தலின் போது தான் ஒரு பஸ் சாரதியின் மகன் என பிரச்சாரம் செய்து மக்கள் செல்வாக்கை பெற்ற சாதிக்கான், இன்று தனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ஜெரமி கோபினுக்கு எதிராக பிளேயரிசவாதிகளுடன் சேர்ந்து TFL க்கு சொந்தமான கட்டடங்களை சந்தை விலையை விட குறைந்த விலைக்கு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

இவ்வாறானவர்கள் மக்களுக்கு ஒரு முகமும் முதலாளி வர்க்கத்துக்கு இன்னொரு முகமும் காட்டி திரியும் வலதுசாரிகளே. இவ்வாறான வலது சாரிகளின் கையில் ஆட்சியைக் கொடுத்தால் நாடு முழுவதையும் தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்து விடுவார்கள் என்பது திண்ணம்.

இலங்கை அரசாங்கமே ஜெரமிக்கு எதிராக தமது கசப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றது. ஜெரமி தொழிலாளர் கட்சித் தலைவர் ஆவதை கண்டு பிரதமர் ரணிலும், இலங்கையின் நிதி அமைச்சரும் ஏன் அச்சம் கொள்கின்றனர். இதன் பின்னால் உள்ள நுண் அரசியலை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் ஜெரமி தற்போது தொழிலாளர் கட்சித் தலைவரானால் எதிர்காலத்தில் பிரித்தானிய பிரதமர் ஆகக் கூடிய சாத்தியம் உண்டு, அவ்வாறு ஆகும் பட்சத்தில் தமிழர் பிரச்சினை தொடர்பாக பிரித்தானியா இலங்கை அரசாங்கத்தின் மீது பெரும் அழுத்தத்தைக் கொடுக்கும் என்பதாலாகும்.

ஜெரமி கோபின் வெற்றி பெறும் பட்சத்தில் ஐரோப்பியக் கண்டத்தில் இடதுசாரி அலை, ஒடுக்கப்படும் மக்களுக்கு சார்பாக ஓங்கி ஒலிக்கும். அதனாலேயே ஜெரமிக் கோபினின் மக்கள் அலையைக் கண்டு வெவ்வேறு நாடுகளில் ஒடுக்கு முறையை மேற்கொள்ளும் பெரும்பான்மை இனமும், ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கமும் அஞ்சுகின்றது.

மக்களை ஒடுக்கி சுரண்டி அதன் மூலம் பிழைப்பு நடத்தும் முதலாளித்துவ வர்க்கமும் ஜெரமி கோபினை கண்டு அச்சம் கொள்வதில் வியப்பேதுமில்லை.

ஜெரமிக்கு தமிழர்கள் தற்போது ஆதரவு தெரிவிப்பது முக்கியமான விடயம். ஏனெனில் கோபின் தோற்கும் பட்சத்தில் அது தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆகவே தற்போது எவருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்து பின் வென்று வருபவருடன் சுமுக உறவுகளைப் பேணி அதன் மூலம் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என ஒரு சில தமிழ் அமைப்புகள் அல்லது தமிழர்கள் கருதக்கூடும்.

ஆனால் உண்மை நிலைமை என்னவெனில் ஜெரமி அல்லாது பிளேயரிசவாதிகள் பதவிக்கு வரும் பட்சத்தில் தமிழர்கள் பெற்றுக் கொள்ளும் நன்மை என்பது கல்லில் நார் உரித்தல் போன்றதே. கடந்த கால பிளேயரிசவாதிகளின் வரலாறு இதை நன்றாக உணர்த்தும்.

ஆகவே தற்பொழுது நடுநிலை வகித்து பின்னர் வென்றவரின் பின் சென்று விடுவது என்பது பெரும் முதலாளிகளுக்கு சரியே தவிர விடுதலை வேண்டி நிற்கும் இனத்துக்கு உகந்ததல்ல.

ஆகவே எதிர்வரும் பத்தாம் திகதி லேபருக்கான இளையோர் அமைப்பு ஜெரமி கோபினுடன் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை நடத்துகின்றது. தமிழ் சொலிடாரிட்டியும் அதற்கான முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குகின்றது.

ஆகவே தமிழ் மக்கள் அனைவரும் வருகை தந்து ஜெரமி கோபினுக்கான முழு ஆதரவையும் தெரிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றோம்.