விசேட அதிரடிப்படையினரின் சுமந்திரன் மீதான விசுவாசம்

2,630 . Views .

கடந்த வாரம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 59 பெண்களில் சசிகலா ரவிராஜும் ஒருவர். சசிகலாவின் விருப்பு வாக்கு விடயத்தில் சுமந்திரன் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்ட போதும் கிளிநொச்சி மாவட்டத்துக்கான விருப்பு வாக்குகள் அறிவிக்கப்படாமல் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டதாகவும் பின்னர் சுமந்திரன் வாக்களிப்பு நிலையத்திற்கு வந்த பின்னரே விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டது என்றும் தெரியவருகிறது. முதலில் சசிகலா இரண்டாம் இடத்திற்கு வந்ததாகவும் பின்னர் சுமந்திரன் வாக்கு மோசடியில் ஈடுபட்டதால் சசிகலா தோல்வியினைத் தழுவ வேண்டி வந்ததாகவும் சசிகலா தரப்பால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகின்றது. சுமந்திரன் மோசடியில் ஈடுபட்டாரா இல்லையா என்பதைத் தாண்டி இங்கு கவனிக்கப் படவேண்டிய இன்னுமொரு முக்கிய புள்ளி என்னவெனில் வாக்கெண்ணும் நிலையத்தில் தமது எதிர்ப்பை வெளியிட்ட மக்களை எவ்வாறு சுமந்திரனும் அவரது விசேட அதிரடிப் படையினரும் கையாண்டனர் என்பதே ஆகும். சுமந்திரன் மீதான விசுவாசத்தைக் காட்ட எவ்வாறு அதிரடிப்படையினரும் பொலிசாரும் மக்களுக்கு எதிராக திரும்பினர் என்பதே இங்கு பெரும்பாலானோர் கவனிக்கத் தவறிய மிக முக்கியமான புள்ளியாகும்.

இங்கு ஏற்பட்ட குழப்ப நிலையைத் தடுக்க சுமந்திரனின் விசேட அதிரடிப் படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் மக்களையும், ஊடகவியலாளர்களையும் தாக்கி உள்ளனர். இதனை சுமந்திரன் கண்டித்திருக்க வேண்டும் ஆனால் சுமந்திரன் எந்த வித வருத்தமோ கண்டனமோ தெரிவிக்க வில்லை. மாறாக “கடமையில் இருந்த போலீசார் மக்களை விரட்டியடிப்பதை நான் பார்த்தேன், அது கட்டாயம் செய்யப்பட்டிருக்க வேண்டிய விடயம் ,போலீசார் தமது கடமையைத்தான் செய்தார்கள்’’ எனத் தெரிவித்து இருந்தார். சுமந்திரனின் இப்போக்கானது அதிகாரத்தின் மீதான அவரின் அவாவினை மட்டுமல்லாது தனக்கு எதிராக தனது மக்கள் கிளம்பினால் விசேட அதிரடிபடையினை அனுப்பி அவர்களை அடக்கவும் தயங்க மாட்டேன் என்ற செய்தியையுமே வழங்குகின்றது. 

தனக்கு எதிராக தன் நாட்டு மக்கள் கிளம்பும்போது எப்படி ஒரு அரசு தனது அதிகார சக்திகளை அனுப்பி அதனை அடக்குமோ அதைப் போல தனக்கு எதிராக தம் மக்கள்- தமிழ் மக்கள் – கூச்சல் இட்டு தமது எதிர்ப்பைக் காட்டிய போது விசேட அதிரடிப் படையினரின் தாக்குதல் மூலம் அதனைக் கட்டுபடுத்தினார் சுமந்திரன்.

வாக்கு மோசடி உட்பட பல்வேறு மோசடிகள் இலங்கையின் தேர்தல் காலங்களில் தெற்கு உட்பட பல பிரதேசங்களில் சர்வ சாதாரணமாக நிகழும் ஒரு சம்பவமாகும். எனினும் சசிகலா ரவிராஜ் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாலும் அதனால்  எதுவித பிரயோசமும் இல்லை. தேர்தல் ஆட்சேபனை மனுவை சமர்ப்பிப்பதன் ஊடாக நீதிமன்றத்தின் மூலமோ அல்லது வாக்கை மறுமுறை எண்ணுதல் மூலமோ வென்றவர் தோற்றதாகவும், தோற்றவர் வென்றதாகவும் இலங்கை வரலாற்றில் இல்லை. ஆகவே இது வெறும் நேர மற்றும் பண விரயமாகும் செயலாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் சசிகலாவுக்கு ஒரு நீதியை வழங்குவார் என்பதும் சாத்தியமில்லை. வாக்கு மோசடி, கட்சிக்குள் உள்ளிருந்து கொண்டே கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக செயற்படுவது, குழிபறிப்பு போன்றனவற்றை சர்வசாதரணமாக செய்பவர்கள் கூட்டமைப்பினர். ஆகவே அவர்களிடமிருந்து சசிகலா நீதியை எதிர் பார்க்க முடியாது. அவ்வாறு எனில் சசிகலா என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பிரச்சனையினால் சசிகலா வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் கூட அறியப்பட்டு வரும் ஒரு பிரபலம் ஆகி வருகிறார். அவர் மேல் வீசும் அனுதாப அலை என்பது சில நாட்களே வீசும் பின்னர் அது மறைந்து விடும்.ஆகவே இவ் தற்காலிக அனுதாப அலையை நம்பி மோசம் போகாமால் ஒரு நிரந்தர அரசியல் மாற்றத்தை நோக்கி சசிகலா நகரவேண்டும். தனக்கிருக்கும் மக்கள் சக்தியைக் அமைப்பு முறையில் திரட்ட அவர் முன்வரவேண்டும். அவ் அமைப்பின் மூலம் மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும்.அது மட்டுமல்லாமல் கூட்டமைப்பின் மோசடிகளையும் வெளிக் கொண்டுவர வேண்டும். மாறாக கூட்டமைப்பு தலைமையுடன் இணங்கிப் போவதோ அல்லது அவர்களுடன் சமரசத்திற்கு வருவதோ அவரது நீண்ட கால அரசியல் வாழ்க்கைக்கு உகந்ததல்ல. ஏனெனில் இந்த முறை நடந்தது போல் மீண்டும் நடக்காது என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை. 

ஆகவே மக்களை தன் பக்கம் திரட்டி அதன் மூலம் ஒரு புதிய அரசியல் எழுச்சியை உருவாக்க முன்வரவேண்டும். தெற்கிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் அறியப்பட்டு வரும் ஒரு பெண்ணாக இருப்பதனால், தனியே தமிழர்களை மட்டுமல்லாது சிங்கள முஸ்லிம் மக்களையும் உள்வாங்கி இயங்க முடியும். 

சு.கஜமுகன் 

gajan2050@yahoo.com