வரலாற்றில் -நீண்ட தற்கொலைக் குறிப்பு

734 . Views .

1. ஜெரமி கோர்பினுக்கு எதிராக அனைத்து அதிகாரச் சக்திகளும் ஒன்றுபட்டு நிற்பது அனைவரும் அறிந்ததே. எல் எஸ் ஈ செய்த ஆய்வின் படி 75 வீதத்துக்கும் மேற்பட்ட ஊடக நடவடிக்கை கொர்பின் பற்றிப் பொய் பிரச்சாரம் செய்வதை வெளிக்காட்டி இருக்கிறது

(http://www.lse.ac.uk/media@lse/research/Mainstream-Media-Representations-of-Jeremy-Corbyn.aspx,

http://www.independent.co.uk/voices/jeremy-corbyn-media-bias-labour-mainstream-press-lse-study-misrepresentation-we-cant-ignore-bias-a7144381.html).

பெரும்பான்மை ஊடகங்கள் பெரும் முதலாளிகளின் கையில் இருக்கிறது. கோர்பின் வெல்லாமல் இருப்பதற்கு எது செய்யவும் தயாராக இருக்கிறார்கள் அவர்கள்.
கோர்பின் தேர்தல் கொள்கைகள் வெளி வந்தபோது அந்தக் கொள்கைகளை தொழிலாளர் கட்சியின் 83ம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையோடு ஒப்பிட்டு வர்ணித்தன ஊடகங்கள். வரலாற்றில் மிக நீண்ட தற்கொலைக் குறிப்பு என வர்ணிக்கப்பட்டது அந்தப் பழய தேர்தல் அறிக்கை எனச் சுட்டிக்காடி அவர்கள் இக்கொள்கைகளின் நியாயத்தை முடக்க எத்தனித்தனர். கோர்பினின் தேர்தல் அறிக்கையைப் புதிய தற்கொலைக் குறிப்பு என வர்ணிக்கின்றனர்.

2. அப்படி என்னதான் இருந்தது அந்தப் பழய தேர்தல் அறிக்கையில்?
வேலை இல்லாமையை நீக்குவது. புதிய கவுன்சில் வீடுகளைக் கட்டுவது. குறைந்த பட்ச ஊதியத்தை நிறுவுவது முதலான பல கொள்கைகள் மக்கள் நலனை முன்நிறுத்தியது. இது மட்டுமின்றி பெரும் முதலாளிகள் சங்கமான ஐரோப்பிய ஒன்றியத்தையும் அந்தத் தேர்தல் அறிக்கை எதிர்த்தது. அன்று அந்த அறிக்கை கோரிய குறைந்த பட்ச ஊதியத்தை நிறுவும் கோரிக்கை – பெண்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற உறுதி மொழி – ஆகிய கொள்கைகளை இன்று யாரும் எதிர்க்க முடியாது. ஆனால் சமூக அக்கறையில் பின் தங்கி இருந்த பழமை வாதிகள் எல்லோரும் அதை எதிர்த்தனர்.

தற்போது போலவே மக்கள் சார்பான இந்தக் கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்தன அதிகாரச் சக்திகள். முதலாளிகள் வசம் இருந்த ஊடகங்கள் நிறுவணங்கள் அனைத்தும் எதிர்த்தன. பழமை வாத கன்சவேடிவ் கட்சி மட்டும் இன்றி தொழிலாளர் கட்சிக்குள் இருந்த வலது சாரிகளும் கடுமையாக எதிர்த்தனர்.
அப்போது தொழிலாளர் கட்சிக்கு தலைவராக இருந்த இடது சாரியான மைகள் பூட் அவர்களுக்கு கட்சிக்குள் இருந்த வலது சாரிகளிடம் இருந்து பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. ஏற்கனவே பலர் கட்சியில் இருந்து உடைத்துக் கொண்டு வெளியேறி சமூக சனநாயக கட்சி என்ற ஒரு புதுக் கட்சியை உருவாக்கி இருந்தனர்.
இதையும் மீறி மைகள் பூட்டுக்கு மக்கள் மத்தியில் நிறய ஆதரவு இருந்தது. மக்கள் சார் அரசியலை வைத்து தேர்தலில் வெல்ல முடியாது என்ற அடிப்படையில் தான் அவரது தேர்தல் கொள்கையை தற்கொலை குறிப்பு என அவர்கள் ஒதுக்கினர்.

3. அன்று தேர்தலில் நடந்தது என்ன ?
நாடு எங்கும் ஆயிரக் கணக்கான மக்கள் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவாகத் திரண்டனர். இருப்பினும் தொழிலாளர் கட்சி தேர்தலில் தோல்வியைத் தழுவியது. அதிகார ஊடகங்களின் பிரச்சாரத்தாலும் சமூகத்தில் இருந்த முதலாளித்துவ ஆதரவு சக்திகளாலும் மட்டும் மைகள் பூட் முறியடிக்கப் படவில்லை. அச்சமயத்தில் நிகழ்ந்த போக்லான்ட் யுத்ததைப் பாவித்து மக்கள் மத்தியில் பிற்போக்கு தேசிய உணர்வை தூண்டி இருந்தது கன்சவேட்டிவ் கட்சி. இது ஒரு முக்கிய காரணி.

இருப்பினும் மைகள் பூட் தன் கொள்கைக்கு 36.9% வீத வாக்குகளைப் பெற்றிருந்தார். தொழிலாளர் கட்சியை உடைத்துச் சென்ற வலது சாரிகள் 13.8% வீத வாக்குகளைப் பெற்றிருந்தனர். ஊடக மற்றும் அதிகார சக்திகளின் ஆதரவு – மற்றும் போக்லான்ட் யுத்த காரணி இருந்தும் கன்சவேடிவ் கட்சி 43.9% வீத வாக்குகளை மட்டுமே வென்றது. அப்படியிருந்தும் இந்தத் தேர்தல் தோல்வியை வரலாறு காணாத தோல்வியாக வர்ணித்து இதன் பிறகு தேர்தலில் இடது சாரியக் கொள்கைகள் முன் வைக்கப் படாமல் செய்ய தொடர் பிரச்சாரங்களை செய்து வருகின்றன வலது சாரிய ஊடகங்கள்.

இதன் பிறகு வலது சாரியக் கொள்கைதான் தேர்தல் வெற்றியைத் தரும் என்று நிறுவி தமது ஆதிக்கத்தை நிறுவ தொழிலாளர் கட்சிக்குள் இருந்த வலது சாரிகள் கடும் வேலையில் ஈடு பட்டனர். அதன் தொடர்ச்சிதான் டோனி பிளேயர் தலைமையிலான ‘புதிய லேபர்’ கட்சி. பிளேயர் தலைமையில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது அதன் மாபெரும் வெற்றிக் கட்டமாக வலது சாரிகளால் வர்ணிக்கப் பட்டு வருகிறது. 1997 ல் பிளேயர் முதன் முதலாக வென்ற பொழுது அவருக்கு கிடைத்தது 34.4% வீத வாக்குகள் மட்டுமே. விகிதாச்சாரப் படி பார்த்தால் இவர்கள் கரித்துக் கொட்டும் மைகள் பூட்டை விட குறைந்தளவு வாக்குகளை வென்று பிரதமர் ஆனவர்தான் டோனி பிளேயர். இதன் பின்பு கன்சவேடிவ் கட்சி டேவிட் கமரோன் தலைமையில் 2010ல் ஆட்சியை பிடித்த போது எடுத்தது 32.4% வீத வாக்குகள் மட்டுமே. 2015லும் கமரோன் 36.1% வீத வாக்குகளை மட்டுமே பெற்றார்.

கன்சவேடிவ் கட்சி சார்பாகவும் தொழிலாளர் கட்சி சார்பாகவும் போட்டியிட்ட வலது சாரிகள் தமது வலது சாரியக் கொள்கைகளால் மிகப் பெரும் தோல்விகளைத் தழுவி இருக்கின்றனர். அந்த தோல்விகள் வலது சாரியத் தற்கொலை என வர்ணிக்கப் படுவதில்லை. இடது சாரிய கொள்கை முன்வர இவர்கள் விடுவதில்லை. ஆனால் அவ்வாறு இடது சாரியக் கொள்கைகள் முன் வந்த பொழுது – கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் மக்கள் மத்தியில் ஏராளமான ஆதரவு இருந்து வந்ததைப் பார்க்கலாம். இருப்பினும் அத்தகைய மக்கள் சார் அரசியல் மீண்டும் தலை எடுக்கக் கூடாது என்ற காரணத்துக்காக அவர்கள் பிரச்சார வேட்டை ஆடப் படுகிறார்கள்.

1983ல் கன்சவேடிவ் கட்சி வெற்றி பெற்றமை மக்களின் வாழ்க்கைத் தரம் குன்றவும் – தொழிலாளர்களின் –தொழிற் சங்கங்களின் உரிமைகள் பறிக்கப்படவும் வழி ஏற்படுத்தியது. தட்சர் அரசு வறிய மக்களினையும் – குறைந்த ஊதியத் தொழிலாளர்களையும் சூறையாடியது. உலகெங்கும் ஒடுக்கப் படும் மக்களின் நலன்களையும் மேலும் நலிய வைத்தது. இதனால் உலகிலேயே மிகவும் வெறுக்கப்படும் ஒரு வரலாற்று நபராக இன்று அறியப்பட்டு வருகிறார் தட்சர். தட்சருக்குப் பதிலாக மைகள் பூட் வென்டிருந்தால் நாடு காப்பற்றப் பட்டிருக்கும் என நீல் கிளார்க் போன்ற ஊடக வியலாளர்கள் எழுதுவதற்கு காரணம் அதுதான்.

4. கட்டுப்பாடான பிரச்சாரத்தால் மட்டும் தேர்தலில் வெல்ல முயல்கிறது டோரி கட்சி
83ல் நிகழ்ந்தது போல் எழுச்சி மிக்க மக்கள் ஆதரவை சந்தித்த போதும் லேபர் தேர்தலில் தோல்வி தழுவிக் கொண்டது போல் தான் இப்போதும் நிகழும் என எந்தக் கழிவிரக்கமும் இன்றி டோரி ஊடக வியலாளர்கள் பிரச்சாரிக்கிறார்கள். ‘சனநாயகம்’ – ‘மக்கள் நலன்’ – என்ற சொற்களை இவர்கள் வேறு விதத்தில் விளங்கி வைத்திருகிறார்கள் போலும்.
தெரசா மே பற்றி மக்கள் மத்தியில் எவ்வித எழுச்சியோ –உற்சாகமோ இல்லை. அவரது தேர்தல் பிரச்சாரம் நாடகம் மேடை ஏற்றப் படுவதுபோல் அரங்கேற்றப் படுகிறது. அவரது தேர்தல் தோற்றம் அவருடன் பயணிக்கும் ஊடக வியலாலர்களால் பரப்பப் படுகிறது. அவரைச் சுற்றி சனம் நிற்பது போல் காட்ட உள்ளூர் கன்சவேடிவ் உறுப்பினர்களைக் கூட அவர்களால் வர வைக்க முடியவில்லை.

கன்சவேடிவ் கவுன்சிலர்களாக இருப்பவர்களைக் கூட கட்டாயத்தில் அழைத்து பதாகைகளை பிடித்தபடி நிற்கவைத்து படம் பிடித்து பிரசுரிக்கிறார்கள். தப்பித் தவறி தெரசா மக்கள் மத்தியில் போன பொழுதில் எல்லாம் மக்கள் அவரை எதிர்த்து பேசி இருப்பதை பார்க்கக் கூடியதாக இருக்கிறது. தெரசா மேயின் பென்ஷன் கொள்கை – ஊனமுற்றோர் சார்பான கொள்கை என்பன கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது.

தெரசா தெருவுக்கு வந்த பொழுதெல்லாம் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கப் பட்டுள்ளார். இதனால் தெருவுக்கு வரப் பயந்து தனது சார் ஊடக வியலாளர்கள் சூழ அவர் தனிப்பட்ட முறையில் பவனி செய்து பிரச்சாரம் செய்கிறார். இதற்கு ஏன் நாடு முழுக்க திரிய வேண்டும் எனத் தெரியவில்லை. வெஸ்ட்மினிஸ்டரில் ஒரு வீடியோ ஸ்டூடியோவை வாடகைக்கு எடுத்து அவ்வப்போது பின்னணி செட்டை மாற்றிப் படம் எடுத்து ஊடகத்துக்கு அனுப்பி இருக்கலாம். நேரமும் சக்தியும் மிஞ்சி இருக்கும். தேர்தல் அறிவிக்க முன்பு எண்ணைக் கிணறு வியாபாரங்களில் இருந்து பெரும் வியாபாரச் சக்திகள் டோரி கட்சிக்கு பணம் வழங்கி இருந்தன. இந்த பணத்தில் பெரும் பகுதி விளம்பரங்கள் – சமூக வலைத்தள நடவடிக்கைகள் – பிரச்சாரங்கள் –முதலிய நடவடிக்கைகளுக்கு செலவு செய்யப்பட்டு வருகிறது. பெரும்பான்மை மக்களைத் திரட்டிக் காட்டும் சக்தி டோரி கட்சிக்கு கிடையாது.

தொழிலாளர் கட்சியின் – ஜெரமி கோர்பினின் நடவடிக்கை – இதிலிருந்து முற்றும் மாறிய நிலையில் இருக்கிறது. அவர் செல்லும் இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கூடுகிறார்கள். குறிப்பாக இளையோர் ஆதரவு செய்ய குவிந்து செல்கிறார்கள். ‘ஜெரமி , ஜெரமி’ என கூட்டம் கூட்டமாக கத்துகிறார்கள். ஒரு போப் ஸ்டார்க்கு இருக்கும் வர வேற்பைப் போல் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளும் வலது சாரிய ஊடகம் அதே மூச்சில் இது வெறும் கட்சி ஆதரவு என முடக்க முயல்கிறது. என்றைக்காவது தொழிலாளர் கட்சியின் வலது சாரிய தலைவர்களுக்கு இத்தகைய ஆதரவு இருந்ததா?

வலது சாரிய தலைவர்களுக்கு மக்கள் கூடி பூரிப்புடன் ஆதரவு அளித்த வரலாறு இல்லை. இது தவிர இந்த இளையோர் ஜெரமி கோர்பின் தொழிலாளர் கட்சி தலைவர் ஆனதால் அரசியல் மயப்பட்டவர்கள். மக்கள் சார்பான மாற்றுக்கான அவா என்பது சிறு கட்சி அரசியல் எனப் பொய் பிரச்சாரம் செய்யும் சாக்கடை ஊடகம் மேடை ஏற்றப்படும் மேயின் பிரச்சாரத்தை தூக்கி தூக்கி பேசும் சிறுமைத் தனத்தை பார்பவர்களுக்கு கோபம் பொங்கி வரத்தான் செய்யும்.

இதனால் தான் இந்த ஊடகங்கள் மக்கள் மத்தியில் பெருமளவில் செல்வாக்கை இழந்து செல்கின்றன. ஐரோப்பாவிலேயே மிக வலது சாரிய ஊடகமாக இருகின்றது பிரித்தானிய ஊடகங்கள் என ஒரு ஆய்வு சொல்கிறது (https://yougov.co.uk/news/2016/02/07/british-press-most-right-wing-europe/).

5. ஏனிந்தப் பயம்
கோர்பின் கொள்கைகள் அமுலுக்கு வருமானால் பெரும் கார்பரேட் நிறுவணங்கள் தமது லாபத்தில் சிறுதளவை இழக்க நேரிடும். பல்லாயிரக் கணக்கான மகளின் நலன் –அவர்களது வாழ்க்கைத் தரம் ஆகியன பற்றி அக்கறை அற்றவை இந்த நிறுவணங்கள். லாபத்தை மட்டும் முதன்மைப் படுத்தி இயங்கும் இவர்கள் மக்களின் நலன் சார் கொள்கைகள் தமக்கு எதிரானவை எனத் தெரிந்தே இயங்குகின்றன. அதிகாரம் மக்கள் சார்பான கொள்கை உள்ளவர்கள் கையில் போகக் கூடாது என்பதில் உறுதியான முடிவோடு இயங்குகிறார்கள் இவர்கள். இதனால் தமக்கு சார்பான அதிகார சக்திகளை பாது காப்பது இவர்களுக்கு முதன்மையாக இருக்கிறது.

சனநாயகம் என்ற சொல் அர்த்தமற்ற முறையில்தான் உபயோகத்தில் இருக்கிறது. விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் நடக்குமானல் தட்சர் மட்டுமல்ல பல வலதுசாரிகள் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. எல்லா நாடுகளிலும் பெரும்பான்மையானவர்கள் எந்தக் கட்சிக்கும் வாக்களிப்பதில்லை. சனநாயகம் என்ற பெயரில் நாலோ ஐந்தோ வருசத்துக்கு ஒரு முறை ஒரு பேப்பரில் ஒரு புள்ளி இட மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப் படுவதை தவிர வேறு எந்த முறையிலும் மக்களுக்கு அதிகாரம் வழங்கப் படுவதில்லை. தேர்தலில் கூட மக்கள் சார்பற்ற கட்சிகள் மட்டுமே நிற்பதற்கும் வெல்வதற்கும் அனுமதிகப் படுகின்றன. இதனால்தான் அரசியல் சாக்கடை என மக்கள் ஒதுங்கி இருக்கிறார்கள். அரசியல் சமூகம் சார்ந்த நடவடிக்கையாக அன்றி ஆளும் வர்க்கம் சார்ந்த – மூலதனம் சார்ந்த நடவடிக்கையாக குறுகி நிற்கிறது.

அரசு – ஊடகம் – பெரும் மூலதன நிறுவணங்கள் – நீதி மன்றங்கள் முதலான அரச நிறுவணங்கள் – ஆகியவற்றுக்கு இடையில் ஒரு தொடர்பு உண்டு என்பதை நாம் அறிந்து வைத்திருப்பது அவசியம். மக்கள் சார் அரசியலை முதன்மைப் படுத்த முயற்சி எடுத்து வருபவர்கள் இந்த அனைத்து அதிகார சக்திகளுக்கும் எதிராகவும் இயங்க வேண்டி ஏற்படுகிறது. மக்கள் அரசியலை முதன்மைப் படுத்திய மாற்று அதிகார மையங்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

கோர்பினைத் தேர்தலில் தோற்கடிப்பதற்காக மான்செஸ்டர் குண்டு வெடிப்பும் – பிரக்சிட்டும் கூட பாவிக்கப் பட்டு வருகிறது. இத்தகய நெருக்கடிக்குள்ளும் கோர்பின் வெல்வதற்கு சந்தர்பம் இருக்கு என்பது மக்கள் மத்தியில் எத்தகய எதிர்ப்பு ஊறிக் கிடக்கிறது என்பதைக் காட்டுகிறது. கோர்பின் தோற்கடிக்கப் பட்டாலும் அவர் முன் வைத்த கொள்கைகளுக்கான போராட்டம் தொடரத்தான் போகிறது. மக்கள் தற்போது தேர்தல் தளத்தில் தமது எதிர்ப்பை தெரிவிக்க நகர்கிறார்கள். அந்த தளத்தில் தோல்வி ஏற்படும்போது அது – தொழிற்சங்கத் தளம் – மக்கள் அமைப்புக்களின் தளம் என்று நகரும் என எதிர் பார்க்கலாம். தட்சர் காலத்தில் வெடித்த பெரும் போராட்டங்கள் போல் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பலாம். இன்னுமொரு தட்சர் ஆட்சி பிடிக்காமல் இருக்க ஏராளாமான மக்கள் வாக்குச் சாவடிக்கு தமது எதிர்ப்பை எடுத்துச் செல்ல முன்வரவேண்டும்.