இம்முறை முள்ளி வாய்க்கால் – அரசியல் பிழைத்தோர் ஆதரவை இழந்தனர்.

1,176 . Views .

சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் பேசும் மக்கள் மீது நடாத்திய கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் உச்சம் நடைபெற்று எட்டு  ஆண்டுகள் கடந்து விட்டன. முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய அரசபயங்கரவாதத்தை இனப்படுகொலைக்கான நாளாக உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்கள்டையாளப் படுத்து கின்றனர்.

2010 ஆம் ஆண்டில்  மே 18 திகதி லண்டனில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் இத்தினத்தை இனப்படுகொலை நாளாக அடையப்படுத்தினர். எட்டு ஆண்டுகள் கழித்து 2017 இல் அதே லண்டனில் நடைபெற்ற இனப்படுகொலை நினைவேந்தல்  நாளில் பிரித்தானிய தமிழர் பேரவையால் அவர்கள்உறுப்பினர்கள் அடங்கலாக 200 இற்கும் குறைவான மக்களையே ஒருங்கிணைக்க முடித்துள்ளது.

மக்கள் 2009 இற்கு பின்னர் கையறு நிலையில் வீதிகளில் திரண்டனர்.  மக்களை அரசியல் மயப்படுத்திஒன்றிணைக்க வேண்டிய தருணத்தில் அமைப்புகள் வல்லாதிக்க சக்திகளோடு இணைந்து வேலைசெய்வதன் மூலம் மட்டும் தான் தீர்வினை நோக்கி நகர முடியும் என்று சாணக்கியர்  வேடம் தரித்தனர். இனியும் வீதியில்மக்கள் திரண்டு போராடுவதால் என்ன பயன் என்று பிரித்தானியா தமிழர் பேரவையினர் வெளிப்படையவேகேட்டனர்.

அறுபது வருட காலதிற்கு மேலாக தமக்கான அரசியல்,அடிப்படை உரிமைகளுக்காக போராடிய ஓர் சமூகத்தை வீட்டிற்குள் முடக்கியதே கடந்த எட்டு ஆண்டுகளின் இந்த அமைப்புகளின் சாதனை பட்டியலில் முதலிடம்  பெறுகிறது. தங்கள் வீட்டு குழாய்களில் பாய்ந்து வரும் நீரை போல பூட்டியவுடன் உள்ளிருந்து விட்டு அழைத்தவுடன் குபு குபு வென பாய்ந்து வருவார்கள் எனற மாயையில் திளைத்திருந்தார்கள். மக்கள் குழாயில் வரும் தண்ணி இல்லை. நீங்கள் நினைக்கும் நேரங்களில் மட்டும் வருவதற்கு அவர்கள் அழைத்தால் வரும் ஜடங்கள் இல்லை.

பிரித்தானிய தமிழர் பேரவை மக்களின் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை என்பதை அவர்களும் உணரும் வேளை இதுவாகும். இந்த வலதுசாரிய எண்ணம் கொண்ட வெறும் வியாபார அனுகூலங்களை முதன்மைப் படுத்தும் அரசியல் ஓர் அமைப்பை  எவ்வாறு மக்களிடையே  பலவீனப் படுத்தும் என்பதற்கு பிரித்தானியதமிழர் பேரவை ர் சிறந்த உதாரணம்.

இம்முறை பிரித்தானியா பிரதமர் வாசஸ்தலத்துக்கு முன்பாக நடைபெற்ற இன்னுமொரு இனப்படுகொலை நினைவேந்தல் நாள் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் ஒருங்கமைக்கப்ட்டு நடாத்தப்பட்டது. ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் – தமிழ் மக்கள் அடக்குமுறைக்கு எதிராக உயர்த்தி பிடித்த ஓர் அடையாளமான கொடியும் , உலகத்தையே அடக்கி ஆழ துடித்த ஏகாதிபத்யத்தியத்தின் கொடியும் ஒன்றாக ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. இங்கிலாந்து ஏகாதிபத்திய தேசிய கீதத்தை சத்தமாக அங்கு ஒலிக்கச் செய்தது ஒரு விதத்தில் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் செயலே. பெரும் தேசிய சிங்கள இனவாத அரசின் தேசிய சின்னங்களை மறுக்கும் நாம் எவ்வாறு மாபெரும் ஏகாதிபத்திய சின்னங்களை ஏற்றுக் கொள்வது?

மக்களை அரசியல் மயப்படுத்தி  போராட்ட சக்திகளோடு இணைத்து நமது உரிமைக் குரலை உயர்த்தும்செயற்திட்டங்களை இவ்வாறான நிகழ்வினூடு மக்களிடையே கொண்டு சேர்க்கபடல் வேண்டும். ஆனால் மகாராணியின் புகழ் பாடும்  ஏகாதிபத்திய தேசிய கீதங்களையும் , கொடிகளையும் ஒடுக்கப்படும் மக்களின் அரசியல் நிகழ்வுகளில் பயன்படுத்தும் அமைப்பு எந்த வகையான அரசியலை முன்னெடுக்கிறது.

முப்பது வருட ஆயுத போராட்டத்தின் நீட்சி நாம் தான் என வரிந்து கட்டி கொண்டு தம்மை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக  அடையாள படுத்துவதனூடாக அமைப்புகள் தங்களை மக்களிடையே நிலை நிறுத்தமுயல்கின்றனர். அடையாளங்களையும், சின்னங்களையும் முன்னிறுத்துவதன் ஊடாக எந்தவித அரசியல் புரிதலும் அற்ற வெறும் உணர்ச்சி பிழம்புகளாகவே இந்த நினைவேந்தல்கள் நடைபெறுகின்றன. ஆயுதப் போராட்டத்தின் அடுத்த வாரிசுகளாக தம்மை அடையாளப் படுத்த முற்படும் அமைப்புகள் அப் போராட்டத்தில் இருந்து என்ன பெற்றுக்கொண்டனர் என்பது புரியாத புதிர்.

ஏகாதிபத்திய உறவு கொள்ளாமல் கட்டமைக்கப்பட்டது கடந்த முற்பது வருட போராட்டங்கள். வெறும் எட்டு ஆண்டுகளுக்குள் ஏகாதிபத்தியத்தின் வெள்ளை மாளிகைக்குள் விருந்து உண்டு நிரந்தர தீர்வு வாங்கி வர முண்டியடிக்கிறன பெரும்பலான அமைப்புகள். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட இந்த சமூகத்தை  அரசியல்மயப்படுத்தி ஒன்றிணைப்பதே இன்றைய முக்கிய கடமையாக இருக்கிறது.

போராட்ட வடிவங்கள் நீர்த்து போய் விட்டன என அரசியல் ஆய்வு கட்டுரைகள்  என்னும் பெயரில் களம் புகாதஅலம்பல்கள் ஒருபுறம் புத்தக வடிவம் பெற , மறுபுறம் கவர்ச்சிகரமான தலையங்கங்களுடன் காப்பிரேட் கனவான்கள் கட்டுரை வரைகிறார்கள்.  தனிப்பட்ட வன்மங்களளுக்காக  பழி தீர்க்க  ஓர் இனப்படுகொலைநினைவேந்தலை பயன்படுத்தும் சம்பவங்களும் மலிந்து விட்டன. இளைஞர்களின் அரசியல் புரிதல் ,வாழ்வாதர  சிக்கல்களை துருப்பு சீட்டாக கொண்டு நிகழுவுகளை புறக்கணிக்க வற்புறுத்தலும் தாராளமாக அரங்கேறியுள்ளன.

இவ்வாறான விடயங்கள் நடப்பது வெளிப்படையாக தெரிந்தும் சம்பந்த பட்ட அமைப்பு எவ்விதமான எதிர்வினையும் ஆற்றவில்லை. ஆனால் அரசியல் ரீதியான விமர்சனத்தை முன்வைக்கும் தமிழ் சொலிடாரிட்டி மீது உடனடியாக பாய்ந்து விழுவது அவர்களின் வர்க்க அரசியலின் வெளிப்பாடாகும்.  மாவீர் நாளும் ,முள்ளிவாய்க்கால் தினமும் மக்களின் எழுச்சி நாட்களாகும். இதில் திரளும் மக்களை ஒருங்கமைத்து விட்டு நாம் தான் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று பிரகடனப்படுத்த முடியாது.

இன்றைய நிலையில் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு நோக்கி நகர்தலுக்கு திட்டமிடல் இல்லாத அமைப்புகள் சமூகத்தில் கானல் நீராகிப் போகும். மக்களின் கோபமும் தாபமும் நீறு பூத்த நெருப்பாயிருக்கிறது. ஒரு நாள் அது பொங்கி எழத்தான் போகிறது. அதன் தணல்களில் அரசியல் நீங்கிய அமைப்புக்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் கருகிவிடும். இதை அறிந்து செயற்படுங்கள் –அரசியல் நோக்கி மாறுங்கள்