சைபர் தாக்குதல்களும் ஜெரமிக் கோர்பினின் தேவையும்

933 . Views .

-சு. கஐமுகன் [email protected]

கடந்த வாரம் ரன்சம்வேர் வைரஸ் மூலம் உலகளாவிய ரீதியில் நிகழ்த்தப்பட்ட சைபர் இணையத் தாக்குதலில், பிரித்தானியா, பிரான்சு, ஜேர்மன், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, உட்பட உலகின் 150 மேற்பட்ட நாடுகளில் 200,000 க்கு மேற்பட்ட கணனிகள் மற்றும் கணணித் தொடர்புள்ள உபகரணங்கள் பாதிப்புக்குள்ளாகின.இதனால் பல நாடுகளின் தொலைத்தொடர்புத் துறை, வைத்தியத்துறை, வங்கித் துறை, ரயில்வே துறை, காவல்துறை, உட்பட பல்வேறு துறைகள் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ செயலிழந்துபோயின.

மைக்ரோசொப்ட் விண்டோஸ் (windows xp) இணை தாக்கும் திறன் கொண்ட ரன்சம்வேர் (Ransomware ) வைரஸ் 2005 இலேயே முதன் முதலாக அமெரிக்க கணணிகளை தாக்கியது .அதன் பின்னர் பல்வேறு தாக்குதல்கள் உலகெங்கிலும் நிகழ்த்தப்பட்டாலும் இதுவரை நிகழ்ந்த தாக்குதல்களில் இதுவே அளவில் மிகப் பெரிய ரன்சம்வேர் வைரஸ் தாக்குதல் ஆகும். உலகெங்கும் மிகப் பெரும் சைபர் தாக்குதலை நிகழ்த்திய இவ்வைரஸ் வோன்னகிறை (wannacry) என அழைக்கபடுகிறது.

குறித்த ஒருவரிடமிருந்து பணத்தை பெறும்பொருட்டு அவரது சொத்தை முடக்கி வைத்திருத்தல் அல்லது அவர் சார்ந்த நபர்கள் யாரையேனும் பணயக் கைதிகளாக வைத்திருத்தல் இதுவே ரன்சம் (Ransome) எனப்படும்.இதனடிப்படையில் உருவாக்கப்பட்டதே ரன்சம் சொப்ட்வேர் ஆகும். கணணி பாவணையாளர்களிடமிருந்து பணத்தை பெரும் பொருட்டு அவர்களது கோப்புக்களை முடக்கி வைத்திருத்தலே ரான்சம் வைரசின் நோக்கமாகும். ஹாக்கர்கள் கேட்கும் பணத்தை அல்லது பிணையை கொடுக்காவிட்டால், ரன்சம் வைரஸினால் நமது கோப்புக்களை அழித்துவிடவோ அல்லது இரகசியக் குறியீட்டுக்கு மாற்றிவிடவோ முடியும்
அதிகமான தாக்குதல்கள் ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகளில் இருந்தே மேற்கொள்ளப்பட்டன. இதன் பின்னணியில் ரஷ்யா உளவுத்துறை இருக்கலாம் எனவும் சந்தேகிப்படுகின்றது எனினும் ரஷ்யாவிலும் பல துறைகளை இவ்வைரசுகள் தாக்கியமையினால் அதனை முற்று முழுதாக உறுதி செய்ய முடியாதுள்ளது.

மறுபக்கத்தில் தமது உலகளாவிய வியாபாரத்தை அதிகரிக்க காப்ரேட் கம்பனிகளே இத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்டுகிறது.இதுவரை 200,000 க்கும் மேற்பட்ட கணனிகள் தாக்கப்படிருந்தாலும் அதன் எண்ணிக்கை மேன்மேலும் அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இனிவரும் காலங்களில் நடைபெறும் யுத்தம் என்பது இணையத்தையும், தொழில்நுட்பத்தையும் குறி வைத்தே நிகழ்த்தபடும். மனிதர்களுக் கிடையே நடைபெறும் யுத்த அழிவுகளை விட மிக மோசமான அழிவுகளை இவ்யுத்தம் கொண்டுவரக் கூடிய சாத்தியக்கூறு உள்ளது.

மக்கள் தொகைப் பெருக்கம், பருவநிலை மாற்றங்கள், போன்றனவற்றால் மனிதன் வாழக்கூடிய தகுதியை பூமி இன்னும் சில நூற்றாண்டுகளில் இழந்துவிடும், அதற்குள் மனிதன் வாழ ஏதுவான பிறிதொரு கோளை கண்டுபிடித்தாக வேண்டும் என ஸ்டீபன் ஹாகிங் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இணைய தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அதன் மீதான தாக்குதல் ஸ்டீபன் எதிர்பார்த்ததை விட குறுகிய காலத்தில் உலகம் மனிதன் வாழக் கூடிய தகுதியை இழந்துவிடும் என்பதை தெளிவுபடுத்துகின்றது.
ஹாலிவுட் படங்களில் சித்தரிக்கப்படுவது போன்று எப். பி. ஐ , இன்டர்போல், யூரோபோல் போன்ற சர்வதேச பாதுகாப்பு முகவர் நிறுவனங்களே ஹக்கர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றது. பிட்கோய்ன் எனப்படும் இலத்திரனியல் பணத்தின் பரிமாற்றப் பாதையினை கண்காணிப்பதன் ஊடாகவே ஹாக்கர்களைக் கண்டுபிடிக்க முடியும். எனினும் கறுப்பு சந்தையில் நிகழும் பிட்கோய்ன் இலத்திரனியல் பணபரிமாற்றத்தை பின்தொடர்வது என்பது முற்றுமுழுதாக சாத்தியம் இல்லாதது. சர்வதேச கறுப்பு சந்தையில் பிட்கோய்ன் எனப்படும் இலத்திரனியல் பணபரிமாற்றமானது ஆயுத விற்பனை, ஆட்கடத்தல், சமூகத்தின் பிரபல புள்ளிகளை கொலை செய்தல், குழந்தைகளைக் கடத்தி ஆபாச படம் தயாரித்தல் போன்றனவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றது. மேலும் ஹாக்கர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படாத சந்தர்ப்பத்தில் இதனை விட அதிக திறன் கொண்ட வைரசுகள் (updated version) மீண்டும் அனுப்பப்படலாம், அவை இணைய பாதுகாப்புக் (internet security) கொண்ட விண்டோஸை கூட தாக்கலாம். இதன் மூலம் பல்வேறு துறைகள் முடக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது.

ரன்சம்வேர் வைரஸினால் பாதிக்கபட்ட தமது கோப்புக்களை மீட்பதற்கு பாதிக்கப்ட்டவர்களிடம் 230 பவுண்டுகள் ($300) ஹக்கர்களினால் கேட்கப்படுகின்றது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக எழுநூறு மில்லியன் பவுண்டுகள் ஹாக்கர்கள் வசம் செல்லக்கூடிய சாத்தியக்கூறு உண்டு. எனினும் அத்தொகையினை செலுத்த வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தபட்ட போதிலும் இதுவரை 23,000 பவுண்டுகள் பெறுமதியான பிட்கோயின் எனப்படும் இலத்திரனியல் பணம் ஹக்கர்களுக்கு செலுத்தப்பட்டுவிட்டது. இது ஹக்கேர்களுக்கு மேலும் பலத்தை அதிகரிப்பதுடன் அவர்களின் இணைய தாக்குதலை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த வழிவகுக்கும். மேலும் பாதிக்கப்ட்டவர்களின் வங்கித் தகவல்களும் ஹாக்கர்கள் வசம் செல்லக்கூடிய சாத்தியமும் இருப்பதனால் வங்கிக்கணக்கில் உள்ள பணமும் திருடப்பட வாய்ப்புள்ளது எனவேதான் ஹாக்கர்கள் கேட்க்கும் பணத்தை கொடுக்க வேண்டாம் என சர்வதேச பாதுகாப்பு முகவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிரிட்டனிலுள்ள நிசான் கார்க் கம்பனியின் இணையத்தளம் மீதும் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எனினும் தேசிய சுகாதார சேவையின் இணையத்தளத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் போல் பெரியளவில் பாதிப்பு ஏற்ப்படவில்லை. தனியாரைவிட அரச துறையில் பாதுகாப்பு குறைவாக இருகின்றது என்பதையே இது காட்டுகின்றது. NHS இல் அதிக முதலீடு தேவை, அதன் மீதான நிதிக் குறைப்புகள் தடுக்கப்படவேண்டும்,தனியார் மயமாவது தடுக்கப்படவேண்டும் என லேபர் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் முன் வைக்கும் திட்டங்கள் அவசர அவசியத் தேவை என்பதை மேற்படி சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன. எதிர்வரும் பிரித்தானியா பிரதமர் தேர்தலில் மேற்படி சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவை பொறுத்தவரை, மேற்படி வைரஸ் தாக்குதலினால் 47, NHS எனப்படும் தேசிய சுகாதார சேவை மையங்கள் மிகுந்த சிக்கல்களுக்குள்ளானது. இருதய அறுவைச் சிகிச்சை மற்றும் வேறு பல சாதாரண சிகிச்சைகள் மேற்கொள்ளும்போது கணணி, ஸ்கேனர், எக்ஸ்ரே உபகரணங்கள் உட்பட பல்வேறு வைத்திய சாதனங்கள் ஸ்தம்பித்துப் போனதால் பிரித்தானியாவின் வைத்தியத்துறை மிகுந்த பாதிப்புக்குள்ளானது. ஆயிரக்கணக்கான நோயாளிகள் வைத்தியம் ஏதும் செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்ட்டனர். அறுவைச்சிகிச்சை செய்வோருக்கான திகதிகளும் ஒத்தி வைக்கப்பட்டன. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேசிய சுகாதார துறைக்கு நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கும் கன்சர்வேடிவ் அரசை விட, நிதி ஒதுக்கீடு செய்ய முன்வரும் ஜெரமிக் கோர்பினின் முடிவு பாராட்டத்தக்கது.

நாட்டின் பொருளாதாரத்தை அசைக்கும் வலிமை கொண்ட இத்தகைய சைபர் தாக்குதலை எதிர்க்க ஆரம்பத்திலேயே இணையக் கவசம் (Internet Security) போடாமல் விட்டமை கன்சவேட்டி அரசின் மெத்தனப் போக்கையே எடுத்துக் காட்டுகின்றது. 2015 முதல் தேசிய சுகாதார பட்ஜெட்டில் வெட்டுக்கள் விழுந்தமையால், NHS ன் இணையப் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. அதனால் காலாவதியான இயங்கு தளமே இதுநாள் வரையில் பாவனையில் இருந்தது, ஆகையினால் ஹாக்கர்களினால் இலகுவாக இணைய தாக்குதல் செய்ய முடிந்தது. 2015 ஆம் ஆண்டு 5.5 மில்லியன் செலுத்தி மைக்ரோசொப்ட் உடனான இணையப் பாதுகாப்பு ஒப்ந்தந்தை தொடர முன்வரவில்லை கன்சர்வேட்டி அரசு. அவ்வாறான ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தால் இத்தாக்குதலினால் பெரியளவில் சேதாரம் ஏற்பட்டு இருந்திருக்காது. கன்சர்வேட்டி அரசின் பட்ஜெட் மீதான வெட்டுகள் இன்று நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக வந்து நிற்கின்றது. இவ்வரசின் அசமந்தப்போக்கு NHS ன் இணையதளப்பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குவதோடு மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கின்றது. கன்சர்வேட்டிவ் அரசு மக்கள் சேவைக்கு, மக்களின் தேவைக்கு, மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்யாமல் காப்ரேட் கம்பனிகளுக்கு மட்டும் வரிவிலக்கு அளித்து நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளுகின்றன.

ஜெரமி கோர்பின் பிரதமாராக தெரிவு செய்யப்பட்டால் 37 மில்லியன்கள் தேசிய சுகாதார சேவைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அதில் 10 மில்லியன்கள் தேசிய சுகாதார சேவையின் கட்டுமானத்திற்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பாதுகப்பிற்கும் செலவிடப்படும் எனத் தெரிவித்திருந்தார். தேசிய சுகாதார சேவைக்கு நிதி ஒதுக்கீட்டை குறைக்கின்ற, அதனை தனியார் மயப்படுத்த முயற்சிக்கின்ற கன்சர்வேடிவ் அரசுடன் ஒப்பிடும் பொழுது ஜெரமிக் கோபனின் லேபர் கட்சி ஆட்சிக்கு வருதல் காலத்தின் கட்டாய தேவையாகும்.

ஒருபுறத்தில் மானுடத்தின் மீது காதல் கொண்ட விக்கிலீக்ஸ் போன்றோரின் கைகளில் சிக்கும் தொழில்நுட்பம் மக்கள் விரோத அரசுகளினதும், காப்ரேட் கம்பனிகளின் அடாவடித்தனங்களை வெளியுலகிற்கு கொண்டுவருகின்றது, மறுபுறத்தில் சுயநலம் கொண்டோரின் கைகளில் சிக்கும் அதீத வளர்ச்சி கொண்ட தொழில்நுட்பம் மற்றும் மக்கள் நலன் பற்றி கரிசனை கொள்ளாமல் காப்ரேட் கம்பனிகளுக்கு சேவகம் செய்யும் அரசுகள் போன்றன எதிர்கால மானுடத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் தடைக்கற்களாக நிற்கின்றன.

-கஐன்-