மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 02)

-சு. கஐமுகன் gajan2050@yahoo.com

“ஆங்சாங் சூகியின் எண்ணமானது ரோஹிங்கிய மக்களுடன் யுத்தம் புரிவதல்ல, மாறாக அம்மக்கள் அகதிமுகாமிலிருந்தோ அல்லது தப்பித்து செல்லும்போது கடலினுள் விழுந்தோ இறந்து போகட்டும்” என்பதே அவரின் எண்ணமாக இருக்கிறது என்றார் சமீபத்தில் மியான்மாரிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அகதி ஒருவர். இதுதான் தற்பொழுது ஆங்சாங் சூகியைப் பற்றிய மக்களின் பார்வையாக உள்ளது

ஆங்சாங் சூகி – மியன்மார் வன்முறை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காலத்திலிருந்து உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர் இதுதான். ரோஹிங்கிய மக்களை காப்பாற்றக்கூடிய அதிகாரம் தன்வசம் இருந்தும் அதைப்  பயன்படுத்தாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்தான் இந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமாதானத் தேவதை. அது மட்டுமல்லாமல் மியன்மார் அரசைக் காப்பாற்றுவதற்காக முதலில் அமைதியாக இருந்தவர் பின்னர் அழுத்தம் காரணமாக பேசத் தொடங்கியதும் தன்னால் முடிந்த பொய்களையும் அவிழ்த்து விடுகிறார்.

முதலில் இனச்சுத்திகரிப்பு நிகழ்ந்துள்ளது என்பதையே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் ஆங்சாங் சூகி. மாறாக தன் நாட்டின் மேற்கில் வன்முறை எதுவும் இடம்பெறவில்லை எனவும் கூறுகிறார். இதுவரை 582,000 க்கும் மேற்பட்ட மக்கள் அண்மை நாடான பங்களாதேசுக்கு இடம்பெயர்ந்த பின்னரும், இனச்சுத்திகரிப்புக்கான வரைவிலக்கணம் (Ethnic Cleansing) இதுவென ஐ.நா கண்டனம் தெரிவித்த பின்னரும், ரோஹிங்கிய மக்கள் இடம்பெயரும் காட்சி சாட்டிலைட் படங்களாக வெளிவந்த பின்னரும் இவ்வாறு அப்பட்டமாக பொய் கூறுவது சூகியின் மியன்மார் பெளத்த அதிகார அரசின் மீதான பாசத்தையே காட்டுகின்றது.

மியன்மாரின் நிலமையைக் கண்டறிய முயற்சி செய்த ஐ.நா உறுப்பினர்கள், சர்வதேச பத்திரிகையாளர்கள், சமூகவியலாளர்கள் போன்றோரைத் தடை செய்த சூகி, இப்பொழுது அவர்கள் நாட்டிற்குள் வருகை தரலாம் எனவும் ஆனால் மியன்மார் இராணுவத்தின் ஆதரவுடனேயே அவர்கள் செல்ல வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதித்திருக்கின்றார். சுதந்திரமான அவர்களின் பயணத்துக்கு, சுதந்திரமான அவர்களின் விசாரணைக்கு ஏன் கட்டுப்பாடு விதிக்கிறார்?, வெளியுலகிற்கு அவர் ஏதோ ஒன்றை மறைக்க முயல்கிறார், அது வேறொன்றுமில்லை, இனச் சுத்திகரிப்பு நிகழ்ந்துள்ளது என்பதையேயாகும்.

“மறைப்பதற்கு எதுவும் இல்லை எனின் சுதந்திரமான, எதுவித கட்டுப்பாடும்  இல்லாத விசாரணைக்கு ஐ. நா வினை அனுமதிக்க வேண்டும்” என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அண்மையில் குற்றம் சாட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கை, மியன்மார் போன்ற நாடுகளில் இனப்படுகொலை நடைபெறும்பொழுது அதனை தடுக்கவோ அல்லது அவ்வரசுகளை எதிர்த்து அந்நாட்டினுள் செல்வதற்கோ வலிமை இல்லாத ஐ. நா சர்வதேச ரீதியாக அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டி மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் என நம்புவது கேலிக்குரிய விடயமாகும்.

மியன்மார் 1993 இல் பங்காளதேசுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், ஒரு சில ஆயிரம் அகதிகளை மீண்டும் தன் நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றார் சூகி, ஆனால் அதிலுள்ள சிக்கல் என்னவெனில் அவ் உடன்படிக்கையின் பிரகாரம் அவர்கள் மீள குடியமர்த்தப்படுவதற்கு தாம் நீண்டகால பூர்விக ரோஹிங்கிய குடிகள் என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கும் மக்களிடம், உடுத்த உடையுடன் கிராமங்களை விட்டு தப்பி ஓடிய மக்களிடம் எவ்வாறு ஆவணங்களை எதிர்பார்க்க முடியும். கிராமங்களில் விட்டுச் சென்ற அவர்களின் ஆவணங்கள் மியன்மார் ராணுவத்தாலும், பெளத்த அடிப்படைவாதிகளாலும் எரியூட்டப்பட்டுவிட்டன என்பது ஆங்சாங் சூகிக்கு தெரியாதா? அல்லது தெரிந்துதான் இவ்வாறு ஒரு அறிக்கையை விடுகிறாரா?. சர்வதேசத்தை ஏமாற்ற, வெறும் கண்துடைப்புக்காக இலங்கை அரசு எவ்வாறு சில நடவடிக்கைகைகளை மேற்கொள்ளுகின்றதோ அது போன்றதொரு நடவடிக்கையே இதுவாகும்.

ஆரம்பத்தில் சிறு சிறு வன்முறை இடம்பெற்ற போதும் செப்டெம்பர் 5 க்கு பிறகு தாக்குதல் இடம்பெறவில்லை எனவும், அனைத்தும் கட்டுக்குள் வந்துவிட்டது எனவும் மக்களை எதுவித துன்புறுத்தலும் செய்யக்கூடாது என தான் கட்டளை யிட்டுள்ளதாக பின்னர் அறிக்கை விட்டிருந்தார் சூகி. எனினும் செப்டெம்பர் 5 க்குப் பிறகும் பங்காளதேஷ்- மியன்மாரைப் பிரிக்கின்ற ஆற்றின் மறுகரையில் இருந்து அவதானித்தபோது எரியும் கிராமங்களைப் பார்க்கக்கூடியதாக இருந்தது என பங்களாதேஷ் மக்கள் தெரிவித்து இருந்தனர். அவ்வறிக்கை நடைமுறைப்படுத்தப் பட்டு இருக்குமானால் கிராமங்கள் தொடர்ந்து எரிந்த வண்ணம் இருப்பதற்கு காரணம் என்ன? தனது இராணுவத்தின் குற்றங்களை மறைக்க அடுக்கடுக்காக பொய்களை கட்டவிழ்த்து விடுகிறார் நோபல் பரிசு பெற்ற மியன்மாரின் சமாதான தேவதை.

மியன்மார் அரசுக்கு சாதகமாகவே பேஸ்புக் நிறுவனமும் செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. மலேசியா, மியன்மார், மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இருந்து பதிவேற்றம் செய்யப்படும் ரோஹிங்கிய மக்களின் அவலத்தை சித்தரிக்கும் படங்கள், மியன்மார் அரசுக்கு எதிரான படங்கள் நீக்கப்பட்டுள்ளன அல்லது அவர்களின் முகப்புத்தகக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மக்கள் பிரச்சனைகள் வெளிக்கொண்டுவரப்பட்டு மக்கள் அரசியல்மயப்படுவதை அல்லது ஒடுக்கப்படும் மக்களுக்குக்காக குரல் கொடுப்பதை பேஸ்புக் போன்ற காப்ரேட் நிறுவனங்கள் விரும்புவதில்லை. மக்களின் உழைப்பைச் சுரண்டும் பெரும்பாலான காப்ரேட் நிறுவனங்கள் அரசுக்கு சேவகம் செய்ய விரும்புமே தவிர மக்களுக்கு அல்ல என்பதையே பேஸ்புக்  நிறுவனத்தின் அரசியல் எடுத்துக் காட்டுகின்றது.

மரியாதையின் நிமித்தமாக, இங்கிலாந்தின் மிகப்பெரும் தொழிற் சங்கங்களில் ஒன்றான யுனிசன் (UNISAN)  உறுப்பினர் உரிமையும், பிரிஸ்டல் பல்கலைகழகம் சட்டத்துறையில் பட்டமும் வழங்கி இருந்தன. ஆனால் தற்போது யுனிசன் ஆங்சாங் சூகிக்கு கொடுத்த விருதை இடைநிறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் சூகிக்கு கொடுத்த விருதை திரும்பப் பெற எண்ணியுள்ளன. வீட்டுக் காவலில் இருந்த பொழுது இத்தகைய விருதுகள் வழங்கபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மியன்மாரின் இராணுவ அடக்குமுறையை எதிர்த்தமைக்காக, மியன்மாரில் ஜனநாயகத்தை நிலைநாட்டியமைக்காக, மியன்மாரின் மனித உரிமையை காப்பாற்ற போராடியதற்காக இவ்விருதுகள் வழங்கப்பட்டன என்றெல்லாம் கூறப்பட்டது. இவையெல்லாம் மீடியாக்களால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமே தவிர, ஊதிப்பெருப்பிக்கப்பட்ட விம்பமே தவிர உண்மை அல்ல. அதாவது ட்விட்டர் மூலம் தன்னை ஒரு மக்கள் போராளியாக எவ்வாறு கமல் ஊதிப் பெருப்பித்துக் காட்டிக்கொள்கிறாரோ அது போலொன்றுதான் இதுவும். ஆங்சாங் சூகி மக்களைத் திரட்டி மக்கள் போராட்டம் ஒன்று செய்ததாக வரலாறு இல்லை.

“ரோஹிங்கிய அகதிகளுக்கு அகதி அந்தஸ்து கொடுக்கும் எண்ணமில்லை எனவும், அவர்கள் தம் நாட்டுக்கு திரும்ப வேண்டும்” எனவும் பங்காளதேஷ் அமைச்சர் அமீர் ஹுசைன் தெரிவித்துள்ளார். மியன்மார் அரசுடன் இணைந்து பங்காளதேஷ் அரசும் ரோஹிங்கிய மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றது. மியன்மார் அரசும், பங்காளதேஷ் அரசும் கை விட்ட நிலையில் தற்காலிகமாக வசதியற்ற கூடாரங்களில் தங்கி இருக்கும் அகதிகளைக் காப்பாற்ற வேண்டியது மக்களின் கடமையாகும்.

பங்காளதேஷ் பிரதமர் சேக் ஹசினா “அகதிகள் மறுபடியும் தமது இருப்பிடங்களுக்கு செல்ல வேண்டும்” என கூறுகிறார். பங்காளதேஷ் அரசின் மனிதாபிமானமற்ற செயலையே இது காட்டுகின்றது. மேலும் அகதி முகாமுக்குள் சென்று உதவ தன்நாட்டு மக்களுக்கு தடையும் விதித்திருக்கின்றது பங்காளதேஷ் அரசு. ரோஹிங்கிய அகதிகள் தமது உறவினராக இருந்தால் கூட அகதி முகாமுக்குள் சென்று அவர்களுக்கு உதவ முடியாத நிலையே காணப்படுகின்றது. மக்கள் மனிதாபிமானம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர் ஆனால் அரசுகளும் அதன் அதிகார சக்திகளும் மக்களின் மனித நேயத்தை சிதைக்கின்றது என்பதே இதிலிருந்து தெளிவாகின்றது.

பங்காளதேஷ் அரசு நிர்மாணிக்கும் அகதிமுகாங்கள் சிறைச்சாலையைப் போன்றது. வசதிகளற்ற, நோய்த் தொற்றுகள் பரவக்கூடிய இவ்வகதி முகாமில் இருப்பவர்களில் 58 வீதமானோர் குழந்தைகள் மற்றும், வயது வந்தோரில் 60 வீதமானோர் பெண்கள் ஆவர். பல குழந்தைகள் வன்முறையினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் உள்ளனர். மேலும் 1400 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்த நிலையிலுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எல்லையைக் கடக்கும் பொழுது கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது தொலைந்து போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. தற்போதைய நிலவரப்படி அடுத்த ஆறு மாதங்களுக்கு அகதிகளைப் பராமரிக்க 434 மில்லியன் டாலர்கள் அவசரத் தேவையாக உள்ளது

தம் நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் வரை அகதி முகாமிலிருந்து எவரும் வெளியில் எங்கும் செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மியன்மார் அரசின் ஒடுக்குமுறையிலிருந்து காடுகள், ஆறுகள், மலைகள், நிலக்கீழ் கன்னிவெடிகளைத் தாண்டி தப்பி வந்து பங்காளதேஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கின்றனர் ரோஹிங்கிய அகதிகள்.

பெளத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பல தசாப்தங்களாக ஒடுக்கப்படும் இனமாகவே இருந்து வருகின்றனர். 135 க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் இருக்கின்றபோதும் ரோஹிங்கிய இன மக்களை குறைந்த ஒரு இனமாக கூடக் கருதுவதில்லை  பெளத்த அடிப்படைவாதிகள். அதன் வெளிப்பாடே காலம் காலமாக அவர்களின் மேல் நிகழ்த்தப்படும் கடுமையான ஒடுக்குமுறை. இராணுவ ஆட்சி முடிவடைந்து தேர்தல் நடைபெற்ற வேளை, 2015 இல் தனது கட்சி சார்பாக ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை ஆங்சாங் சூகி என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்சாங் சூகியின் முஸ்லிம் மக்களின் மீதான வெறுப்பரசியல் அப்பொழுதிலிருந்தே தொடங்கப்பட்டுவிட்டது, இருந்தபோதும் ஒடுக்கப்படும் சிறுபான்மை இன மக்கள் ஆங்சாங் சூகிக்கே தமது வாக்குகளை அளித்தனர். சிறுபான்மை மக்களுக்கு சூகி ஆதராவாக இருப்பார் என்று நம்பினார் அம்மக்கள். எனினும் தற்பொழுது அம்மக்களின் நம்பிக்கையை சிதைத்து பெளத்த அதிகார அரசின் பக்கமாகவே சாய்ந்திருக்கிறார் சூகி. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற பின்னர் நல்லிணக்கம் என்ற பெயரில் பெளத்த பேரினவாத சக்திகளுடன் கைகோர்த்து இயங்கும் சம்பந்தன் ஐயாவின் அரசியலை ஒத்தது சூகியின் அரசியல்.

தென்கிழக்காசியாவின் பல நாடுகள் முஸ்லிம் மக்களை அதிகமாகக் கொண்டிருக்கின்றபோதும், குறிப்பாக சில நாடுகள் ரோஹிங்கிய முஸ்லிம்களையே கொண்டிருக்கின்ற போதும், மியன்மாரிலிருந்து  இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதற்கு எந்த நாடும் முன்வரவில்லை. நிலங்களையும், வளங்களையும், ஆட்சியதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் வளர்ச்சியடைந்த தென்கிழக்காசிய நாடுகள் கூட குறைந்த பட்சம் சில ஆயிரம் அகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்க தயங்குகின்றன.

பங்காளதேஷ் என்பது வறுமை மிக்க நாடு என்றும் அகதிகளை அந்நாடு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சிலர் கருத்துரைக்கின்றனர். ஆனால் உண்மை அதுவன்று, பங்காளதேஷ் அதிக சனத்தொகை அல்லது சன அடர்த்தி கொண்ட வறுமை மிக்க நாடுதான் ஆனால் மறுபக்கத்தில் உலக பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்துள்ள பல பங்காளதேஷ் அரசியல் தலைவர்கள் காணப்படுகின்றனர். மக்களுக்கு சேரவேண்டிய பங்காளதேசின் நிலங்களையும், வளங்களையும் சுரண்டி, ஊழல்களிலும் ஈடுபட்டு தமது சொத்தை நிரப்புகின்றனர் அவ்வரசியல்வாதிகள். இவ்வளங்கள் முறையாகப் பங்கிடப்படுமிடத்து பங்காளதேஷ் மக்கள் மட்டுமல்ல ரோஹிங்கிய மக்களும் பங்காளதேஷ் மண்ணில் வாழக்கூடிய சாத்தியம் உண்டு.

மியன்மார் அரசால் மதவெறி தூண்டப்பட்டு, மத அடிப்படைவாதிகளால் அது வளர்த்தெடுக்கப்படுகின்றது. மியன்மார் பெளத்த மத அடிப்படைவாதிகளால் கூறப்படுவதுபோல் மியன்மார் என்பது தனியே பெளத்தர்களுக்கான நாடு அல்ல. அது பல்லினப் பண்பாடு கொண்ட, பன்முனைத் தன்மை கொண்ட, பல நூற்றாண்டுகளாக பல்லின சமூகம் வாழும் ஒரு நாடு. எவ்வாறு இலங்கை சிங்கள பெளத்தர்களுக்கு மட்டுமே உரித்தான நாடு என்று பொதுபல சேனா போன்ற பெளத்த அடிப்படைவாதிகளால் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாதோ, எவ்வாறு இந்தியா இந்துக்களுக்கே என்ற ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அடிப்படைவாதிகளின் கருத்தை ஏற்கமுடியாதோ அதேபோல் மியன்மார் என்பதும் பெளத்தர்களுக்கான நாடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த நாடும் தனித்து எவருக்கும் சொந்தமில்லை.

1930 முதல் தமிழ் இஸ்லாமியர் உட்பட பல முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த மியன்மார் பெளத்த பேரினவாதம் இன்று ரோஹிங்கிய முஸ்லிம் மக்களைக் கொன்று குவிக்கின்றது. ஒன்றுபட்ட மக்கள் திரட்சியின் ஓங்கி ஒலிக்கும் குரலே, மியன்மார் அரச ஒடுக்குமுறையினால் கொல்லப்படும் மக்களைக் காப்பாற்றக்கூடிய வலிமை படைத்தது. மக்கள் திரட்சி என்பது வெற்று வார்த்தையல்ல. சாத்தியப்படாதது என்ற ஒன்றல்ல. அரச ஒடுக்குமுறையை எதிர்க்க சாத்தியப்படக்கூடிய செயல் வடிவம் அதுவாகும். போராடும் சிறு மக்கள் குழு என்பது சிறு துளி போன்றது. அச்சிறு துளி பொங்கிப் பிரவாகிக்க வேண்டும் எனின் அனைத்துப் போராட்ட சக்திகளும், அனைத்து ஜனநாயக நட்பு சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அனைத்து மக்களினதும் ஒன்றிணைந்த பெருங்குரலே மக்களுக்கு எதிரான அதிகாரத்தின் எழுச்சியை, அரச ஒடுக்குமுறையை தகர்த்தெறியும் வலுக் கொண்டது.

 

சு. கஜமுகன் (gajan2050@yahoo.com)