சிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணி அரசியல்

1,169 . Views .

-சு. கஐமுகன் [email protected]

ரொபேர்ட் முகாபே சிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் 37 வருட முகாபேயின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. சிம்பாப்வேயின் ஆளுங்கட்சியான சானு பிஎப் (Zanu – PF) கட்சியின் தலைமைப்  பதவியைக் கைப்பற்றிப் பின்னர் தற்பொழுது சிம்பாப்வேயின் இரண்டாவது ஜனாதிபதியாகியிருக்கும் எமர்சன் மனாங்கக்வா ஆட்சிக்கு வந்துள்ளமையால் இனி சிம்பாப்வேயில் ஜனாநாயகம் மலர்ந்துவிடும் என்பதுபோல் சில மேற்கத்தைய ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. உண்மை நிலைமை அதுவல்ல ஏனெனில் இதுவரை காலமும் முகாபேயின் வலதுகரமாக செயற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களையும், தொழிலாளர்களையும் அடக்கியும் ஒடுக்கியும் படுகொலை செய்த வரலாறு உடையவர்தான் எமர்சன் மனாங்கக்வா.

முதலை எனப் புனை பெயர் கொண்ட எமர்சன் மனாங்கக்வா மக்கள் விரும்பும் ஒரு ஜனநாயக ஆட்சியை வழங்குவார் என்பது கேள்விக் குறியே. 1983 இல் 20,000 க்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்ட குகுரகண்டி படுகொலையில் சம்பந்தப்பட்டவர் இவர். இப்பொழுது ரோஹிங்கிய மக்களை எவ்வாறு பெளத்த பேரினவாதசக்திகள் துன்புறுத்துகின்றனவோ அது போல், தம்மை எதிர்த்த மக்களை எரித்தும், புதைத்தும், அவர்களின்  கிராமங்களை அழித்தும் அவர்களை இனப்படுகொலை செய்தவர்தான் எமெர்சன் மனாங்கக்வா.

கடந்த மாதம் அரசியல் முறுகல் நிலை ஏற்பட்டவுடன் முகாபே, மனாங்கக்வாவினை சிம்பாப்வே துணை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கினார். இதைத் தொடர்ந்து தென்னாபிரிக்க நாட்டிற்கு தப்பியோடிய மனாங்கக்வா உடனடியாக இராணுவத்துக்குள் இருந்த தனக்கு ஆதரவுச் சக்திகளைத் திரட்டி முகாபே அரசை விழுத்தும் முயற்சியில் இறங்கினார். சிம்பாப்வே தலைநகர் ஹராரே (Harare) மற்றும் ZBC (Zimbabwe Broadcasting Corporation) எனப்படும் சிம்பாப்வே ஒளிபரப்புக்கு கூட்டுத்தாபனத்தையும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார், பின்னர் முகாபேயினை வீட்டுக் காவலினுள் கொண்டுவந்தார். இதன் பிறகு தான் சனநாயகத்திற்கு ஆதரவாளர் என்ற பிரச்சாரத்தை மக்களுக்கும் மேற்குலகுக்கும் காட்ட பாராளுமன்றத்தின் மூலம் முகாபேவை விலத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. பராளுமற்றத்தின் மூலம் விலத்தப்பட இருந்த நிலையில் முகபே ராஜினாமா செய்தார்.

இவை அனைத்தும் ஒரு சில வாரங்களிலேயே நடந்து முடிந்து விட்டன. இரத்தம் சிந்தாமல் நடைபெற்ற புரட்சி இதுவென மனாங்கக்வாவின் ஆதரவாளர்கள் புல்லரிக்கின்றனர். ஆனால் உண்மை என்னவேனின் எமெர்சன் மனாங்கக்வா, தான் அதிகாரத்தை பிடிக்கவேண்டும் என்ற சுயநலத்தின் அடிப்படையில் மட்டுமே இயங்கினார். இவர் மேற்குலக அதிகார சக்திகள் சார்பான நிலைப்பாடு கொண்டவராக இருப்பதால் இவரை ஒரு சனாநாயகவாதியாக சித்தரிக்க முயல்கின்றன மேற்குலக ஊடகங்கள்.

இத்தனை களோபரம் நடைபெற்றபோதும் அமைதியாக ரசித்துக் கொண்டு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது மேற்கத்தைய சக்திகள். தமது எதிரி முகாபே அகற்றப்படவேண்டும், தமது கைப்பொம்மையாக மனாங்கக்வா பதவிக்கு வரவேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.

மேற்கின் ஆதரவைப் பெற்ற எமர்சன் சிம்பாப்வேயின் மத்திய புலனாய்வு அமைப்பு (CIO- Central Intelligence organisation) மற்றும் தெற்கு ஆப்பிரிக்க அபிவிருத்தி சமூக (SADC- South African Development Countries) நாடுகளுடன் உடன் இணைந்து முகாபேவிற்கு எதிராக இயங்க முன்பே திட்டமிட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது. அதன் பிறகு நடந்தவை எல்லாம் வெறும் நாடகங்களே. பொதுவாக மக்கள் புரட்சி நடைபெறும்போது அதனை குழப்பி குழம்பிய குட்டையின் மீன் பிடிக்கும் மேற்கத்தைய வல்லரசு நாடுகள் இம்முறை அமைதியாக இருந்ததன் ரகசியத்தை ஆராய்ந்து பார்த்தாலே அவர்களின் அமைதியின் பின்னணியில் புதைத்திருக்கும் அரசியல் புலப்படும். மேற்கத்தைய வல்லரசு நாடுகள் எமர்சனின் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக கண்டனத்தையோ அல்லது எதிர்ப்பையோ பதிவு செய்யவில்லை. மாறாக ஜனாதிபதியாகப் பதவியேற்றமைக்கு வாழ்த்துக்களையே தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமக்கு எதிரான கொள்கை கொண்ட மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்களை வளரவிடாமல் செய்தல், மீறி வளர்ந்தால் கொலை செய்தல், அவர்களின் நாடுகளுக்கு பொருளாதரத்தடை விதித்தல், ஆட்சியை கவுத்தல் அல்லது தமக்கு சாதகமான பொம்மை ஆட்சியினை நிறுவுதல் என்பது மேற்கிற்கு கை வந்த கலை. அந்த வகையில் தமக்குரிய பொம்மையாகவே தற்பொழுது எமர்சனை தேர்ந்தெடுத்து இருக்கிறது மேற்கத்தைய வல்லரசு.

மேற்கத்தைய அரசுகள் சிம்பாப்வேயின் நிகழ்ச்சி நிரலை மாற்ற முனைந்து வருகின்றன என்று கடந்த பதினேழு வருடங்களாக முகாபே எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தார்.  வழக்கம் போல சி.ஐ.ஏ (CIA) அல்லது எம்.ஐ.சிக்ஸ் (MI6)  போன்ற தமது இரகசிய உளவு நிறுவனங்கள் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொள்ளாமல், இம்முறை அக்கட்சியிலிருந்த ஒருவரைப் பயன்படுத்தியே முகாபேயை நீக்கி உள்ளது மேற்கத்தைய வல்லரசு சக்திகள். கடந்த 2015 இல் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு மேற்கத்தைய சக்திகள் மைத்திரிபால சிறிசேனவை பயன்படுத்தி மகிந்தவை விழ்த்தியதோ, அதுபோலவே மேற்கின் திரை மறைவு ஆதரவுடன் நடைபெற்ற இன்னொரு நிகழ்ச்சிதான் சிம்பாப்வேயின் ஆட்சி மாற்றம்.

முகாபேயினை அகற்றி சிம்பாப்வேயின் வளங்களைக் கொள்ளையடிக்க பல வருடங்களாக முயன்று கொண்டிருந்தன மேற்கு வல்லரசு சக்திகள். அது முகாபே ஆட்சியில் இருக்குவரை அது சாத்தியப்படாது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். சிம்பாப்வே மக்களின் நலனில் இயங்குவதான பாவணை காட்டித்தான் முகபே தனது அதிகாரத்தை இதுவரை பாதுகாக்கக் கூடியதாக இருந்தது. “ஆபிரிக்கர்களின் வளங்கள் அமெரிக்கர்களுக்கு அல்ல, பிரித்தானியர்களுக்கு அல்ல, அது ஆபிரிக்கர்களுக்கு மட்டுமே” என முகாபே முன்பொருமுறை கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது. சிம்பாப்வே நாட்டின் வளங்களைச் சுரண்டுவதுதான் மேற்குலக சக்திகளின் முக்கிய குறிக்கோளேயன்றி, அவர்களுக்கு சனநாயக உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்ற எந்த நோக்கமும் அவர்களுக்கு இல்லை. அதனால்தான் இந்த திடீர் நாடகங்களும் ஆட்சி மாற்றங்களும் மேற்கின் நிகழ்ச்சி நிரலின்படி நடந்தேறி கொண்டிருக்கின்றது. சிம்பாப்வே நாடானது இயற்கையாக தங்கம், பவளம், இரும்பு, செம்பு, லித்தியம், பிளாட்டினம் என விலைமதிப்பற்ற பல வகையான கனிய வளங்களைக் கொண்டிருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1980 இல் முகாபே பதவிக்கு வருவதற்கு முன்னர் அங்கிருக்கும் கறுப்பின மக்கள் இனத்துவேச சட்டங்களாலும், சிறுபான்மை வெள்ளை இன அதிகாரத்தாலும் மிகுந்த அடக்குமுறைக்குள்ளாகி வந்தனர். தற்பொழுது இங்கிலாந்து மகாராணியாக இருக்கும் எலிசபெத் அம்மையார் கூட, அந்தக்காலத்தில் அத்தைகைய துவேசச் சட்டங்களை ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்தில் மார்க்சியக் கருத்துகளால் கவரப்பட்டவர் முகாபே. கறுப்பின மக்கள் மீதான அடக்கு முறைகளுக்கு எதிரான, மேற்கத்தைய காலனியாதிக்க சக்திகளுக்கு எதிரான போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஏராளமான ஆதரவு இருந்தது. இந்த ஆதரவின் அடிப்படையில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் அதிகாரத்தை முகாபே கட்சி கைப்பற்றியதை அனைத்து முதலாளித்துவ சக்திகளும் எதிர்த்தன. அச்சமயம் நிகழ்ந்துகொண்டிருந்த பனி யுத்த கால கட்டத்தில் இடது சாரிய கருத்துள்ள ஒருவர் ஆட்சியை பிடிப்பதை எல்லா முதலாளித்துவ சக்திகளும் கடுமையாக எதிர்க்கும் நிலை இருந்தது. இது மட்டுமின்றி நாட்டுக்குள் முதலாளித்துவ சுரண்டல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சக்திகள் பல தாம் அதை தொடர்ந்து செய்ய முடியாது என்ற பயத்திலும் கடுமையாக எதிர்த்தன.

மேற்கின் ஆதரவை இழந்த நிலையில் முகாபே மேற்குக்கு எதிரான சக்திகள் பக்கம் திரும்பும் நிர்பந்தத்துக்குல்லானார். வட கொரியா, சீனா முதலிய நாடுகள் பக்கம் அவர் சரிவு நிகழ்ந்தது.

அதனால் மேன்மேலும் இறுக்கமான பொருளாதார தடைகளை மேற்கத்தைய நாடுகள் அமுல்படுத்தி சிம்பாப்வேயினை மிகுந்த நெருக்கடிக்குள்ளாக்கியது. 1999 ஆம் ஆண்டு முதல் ஐ.எம்.எப் (IMF) உம், 2000 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவும் சிம்பாப்வேவிற்கு நிதி உதவி தடையை அமுல்படுத்தின. இவ்வாறு சிம்பாப்வேயினைப் பொருளாதார ரீதியாக பின்தள்ளி, மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே கொண்டு சென்றதின் பெரும் பங்கு மேற்கத்தைய வல்லரசுகளுக்கு உண்டு.

அதன் பின்னர்தான் முகாபேயின் கொள்கைகளில் மேலதிக கடும்போக்கு மாற்றம் ஏற்பட்டது. நலிந்துகொண்டிருந்த சிம்பாப்வேயின் பொருளாதரத்தைத் தூக்கி நிறுத்துவதற்கான புரட்சிகரத் திட்டமிடல் இல்லாமை – திட்டமிட்ட பொருளாதார முறை நோக்கி நகராமை ஆகிய காரணங்களால் பொருளாதாரம் திணறத் தொடங்கியது. வறுமையும் வேலை இல்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் மக்கள் எதிர்ப்பு அதிகரிக்க, புரட்சியின் பேரில் அதிகாரத்தைக் கைப்பற்றிய முகாபே அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அடக்குமுறையை கைக்கொள்ள ஆரம்பித்தார். அரசு சர்வாதிகரமாக மாறியது.

ஆகவே சர்வாதிகாரி முகாபே அகற்றப்படவேண்டியவர்த்தான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்குப் பிரதியீடாக வந்திருக்கும் எமர்சன் மனாங்கக்வா மக்களின் நண்பன் எனப் பார்ப்பது தவறு. உழைக்கும் மக்களை ஒடுக்ககூடிய, மேற்குலக சக்திகளுக்கு விசுவாசமாக இருக்கக்கூடிய, சமுகத்தின் அடித்தட்டு மக்களைப் பற்றிக் கரிசனை கொள்ளாமல் உயர்தட்டு மக்களுக்கு மட்டும் சேவகம் செய்யக்கூடிய ஒரு நபர் எமர்சன் மனாங்கக்வா. இத்தகைய ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ், அதிகார சக்திகளால் மக்கள் மேன்மேலும் ஒடுக்கப் படுவர். ஐ.எம்.எப் (IMF) இல் வேலை செய்த ஒரு உறுப்பினர் கூட எமர்சனின் அமைச்சரவையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக உள்ளார். சிம்பாப்வேயை ஐ.எம்.எப் மற்றும் மேற்குலக நாடுகளுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதுதான் நிகழப்போகிறது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. மேலும் மானங்கக்வா தனது புதிய அமைச்சரவையை அண்மையில் அறிவித்திருந்தார். அதில் முக்கிய பதவிகள் அனைத்தும் கட்சி விசுவாசிகளுக்கும், முகாபேயை நீக்குவதற்காக தன்னுடன் இணைந்து இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட இராணுவ மூத்த உறுப்பினர்களுக்குமே வழங்கப்பட்டுள்ளது.

எமெர்சனுக்கு மேற்கத்தைய நாடுகள் ஆதரவு வழங்குவதற்கு பல காரணங்கள் உண்டு. ஐ.எம்.எப் (IMF) உடன் இணைந்து வேலை செய்வதற்கும், அவர்களின் திட்டங்களை சிம்பாப்வேயில் நடைமுறைப் படுத்துவதற்கும், மேற்கத்தைய காப்ரேட் நிறுவனங்களை சிம்பாப்வேயினுள் அனுமதிப்பதற்கும், மேற்கு அரசுக்கு சார்பான ஆட்சிமுறையினை வழங்குவதற்கும் எமர்சன் தயாராவே உள்ளார். அதனாலேயே மேற்கு சக்திகள் எமர்சனுக்கு தார்மீக ஆதரவை வழங்குகின்றன. இதனால் மீண்டும் பாதிக்கப்படப்போவது சாதாரண உழைக்கும் சிம்பாப்வே மக்களே. நிலச்சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட போது தமது சொத்துக்களுடன்  தென்னாபிரிக்காவுக்கு நாட்டைவிட்டு ஓடிப்போன ஆதிக்க வெள்ளையினத்தவர்கள் மீண்டும் சிம்பாப்வேயினை நோக்கி வரக்கூடும். இவர்கள் மீண்டும் நிலங்களைக் கைப்பற்றி தமது ஆதிக்கத்தினை உழைக்கும் சிம்பாப்வே மக்கள் மீது செலுத்தக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. காப்ரேட் நிறுவனங்கள், ஐ.எம்.எப், ஆதிக்க வெள்ளையினத்தவர்கள் என இவை அனைத்தும் சிம்பாப்வேயின் வளங்களையும், சிம்பாப்வே மக்களின் இரத்தத்தையும் சுரண்டி இழுக்கும் பணத்தாசை பிடித்த இரத்தக் காட்டேரிகள். எமர்சனின் ஆதரவுடன் உள்நுழையும் இவர்களினால் சிம்பாப்வே மக்களின் உரிமைகள் பறிக்கப்படுமிடத்து, நிலங்கள் மீண்டும் பறிக்கப்படுமிடத்து சிம்பாப்வேயில் உள்நாட்டுப் போர் வெடிக்க சாத்தியமுள்ளது.

1990 ஆம் ஆண்டளவில் முகாபே, சிம்பாப்வேவின் பொருளாதர கட்டமைப்பை சீர்செய்யும் முகமாக ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கியுடன் இணைந்து ESAP (Economic Structural Adjust Programme) என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். வெளிநாட்டு மூலதனங்களை அதிகரித்தல் மற்றும் அரச செலவீனங்களைக் குறைத்தல் போன்றனவே ஐ.எம்.எப் மற்றும் உலகவங்கியின் பிரதான கொள்கையாக இருந்தது. இன்றும் அதன் கொள்கைகள் அவ்வாறே இருக்கின்றது

ESAP திட்டத்தின் பிரகாரம் உலகவங்கி மற்றும் ஐ.எம்.எப் ஆகிய இரண்டும் சிம்பாப்வே அரசுடன் இணைந்து, அரச செலவீனங்களைக் குறைப்பதற்காக மக்கள் நலத் திட்டங்களில் நிதி வெட்டுக்களை மேற்கொண்டது. அதாவது மருத்துவம் மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் நிதி வெட்டு,  பொதுத்துறைகளை தனியார் மயப்படுத்தல், வர்த்தகத்தில் தாரளமயமாக்கள், இறக்குமதிக்கான வரி மற்றும் கட்டுப்பாடுகளைக் குறைத்தல் போன்றன அவர்கள் முன்னெடுத்த கொள்கைகளில் சில. இது சிம்பாப்வேயில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை, வறுமை, ஊழல் என்பனவற்றை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் வேலையில் மிக மோசமான பாதுகாப்பற்ற சூழல், குறைவான சம்பளம் போன்ற நிலைமையை தோற்றுவித்தது.

.இது மக்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்தது. இதனால் மக்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டனர். 1996 ஆம் ஆண்டளவில் 70,000 இற்கும்  அதிகமான மக்கள் இணைந்து பொது வேலை நிறுத்தத்தை கூட மேற்கொண்டிருந்தனர். அதேபோல் 1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் இரண்டு நாட்கள் தொடர்ந்து மக்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வரலாற்றில் சிவப்புச் செவ்வாய் என அந்த நாட்கள் அழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எமர்சன் ஐ.எம்.எப் உடன் இணைந்து வேலை செய்வாராயின் இது போன்ற நிலைமையினையே சிம்பாப்வேயில் மறுபடியும் தோன்றும் என்பதற்கு கடந்தகால வரலாறேன சாட்சி.

தொண்ணூறு வயதைத் தாண்டிய முகாபே இயற்கையாக இறந்தால் அதிகாரத்துக்கான வெற்றிடம் தோன்றும் – அதிகாரத்துக்கான போட்டி பலப்படும். இந்த சந்தர்பத்தில் மக்கள் திரட்சி நிகழ்ந்து சனநாயக கோரிக்கைகள் வலுப்படும் மக்கள் இயக்கம் உருவாகும் வாய்ப்பு இருந்தது அதிகார சக்திகளுக்குத் தெரியும். மத்திய கிழக்கில் சர்வாதிகாரத்தை தூக்கி எறிய வெடித்த மக்கள் இயக்கம் அதிகார சக்திகளுக்கு இன்றுவரை தலையிடியை ஏற்படுத்தி வரும் விளைவுகளை ஏற்படுத்தி இருப்பது அறிவோம். அத்தகைய மக்கள் இயக்கம் உருவாகுவதை தடுப்பதன் நோக்கமும் எமர்சன் மனாங்கக்வாவின் அதிகாரப் பறிப்புக்கு இருந்தது என்பதையும் அவதானிக்க வேண்டும். மக்களின் எழுச்சியை தவிர்த்து அதிகாரத்தை முதலாளித்துவ சுரண்டலுக்கு ஆதரவானாதாக மாற்றுவது எவ்வாறு என்ற அடிப்படையில் ஆதிக்க சக்திகள் இயங்கியதை அவதானிக்க வேண்டும்.

வல்லரசு நாடுகளோ அல்லது அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஐ.எம். எப் , உலகவங்கி, ஐரோப்பிய வங்கி, ஐ. நா போன்றனவோ, மூன்றாம் உலக நாடுகளுக்கு கடன் வழங்குவதன் நோக்கமானது, அந்நாட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அந்நாட்டின் வளங்களையும் செல்வங்களையும் கொள்ளையடிப்பதற்கேயாகும்.

சீனா, யுத்த காலத்தில் இலங்கைக்கு கடன்களை வழங்கி அதன் பிரதிபலனாக அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், காலிமுகத்திடலின் ஒரு பகுதியையும் தன் வசம் கைப்பற்றிக்கொண்டுள்ளது என்பது யாவரும் அறிந்ததே. மறுபக்கத்தில் இலங்கையில் கூட கல்வி,சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை தனியார்மயப்படுத்துவது, சைட்டம்( SAITM) போன்ற தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஊக்குவிப்பதன் பின்னணியில் இருப்பது ஐ.எம்.எப் என்பதையும் அறிவோம். இலங்கையின் பட்ஜெட் ஐ.எம் .எப் கொள்கையின் படியே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வல்லரசு நாடுகள் மற்றும் அதனோடு இணைந்த அமைப்புகளின் நோக்கம் என்னவென்பது நன்கு புலனாகின்றது.

எமர்சனின் அரசு முகாபேயின் எண்ணங்களுக்கு எதிராகவே செயற்படவுள்ளது. காப்ரேட் நிறுவனங்கள் மற்றும் மேற்கின் வருகையால் சிம்பாப்வே மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சாத்தியம் உண்டு என இம்மாற்றத்தினை ஆதரிப்போரும் உண்டு. ஆனால்  மறுபக்கத்தில் சிம்பாப்வே மக்களின் பண்ணை நிலங்களும், கனிம வளங்களும் மீண்டும் ஆப்பிரிக்க ஆதிக்க வெள்ளையினத்தவர் வசமும், மேற்கின் வசமும், காப்ரேட் நிறுவனங்களின் வசமும் சென்றுவிடும் நிலையில் மக்கள் விரும்பும் ஜனநாயக மாற்றமாக அமையாமல் அதற்கு எதிரான மாற்றமாக இது அமையக்கூடிய சாத்தியமுள்ளது.

பிரிட்டிஷ் பெற்றோலியம் (British Petroleum), ஷெல் (Shell) போன்ற பன்னாட்டு  பெற்றோலிய நிறுவனங்கள் தமக்குத் தேவையான பெற்றோலிய வளங்களை நைஜிரியா போன்ற நாடுகளில் இருந்து எடுத்துவிட்டு அந் நாட்டு மக்களை வறுமையிலேயே தள்ளி விடுகின்றன. அதனால் வளங்கள் இருந்தும் மேற்கு நாடுகளின் சுரண்டலால் பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது இத்தகைய நாடுகள். மேற்குலக சக்திகளுடன் சேர்ந்து இயங்கும் எமேர்சனின் அரசு இது போன்ற நிலைமையினையே சிம்பாப்வேவில் உருவாக்கும்.

முகாபேயின் ஆதரவாளர்கள், முகாபேயின் மனைவி கிரேஸ் இன் ஆதரவாளர்கள் என எமர்சனுக்கு எதிராக சானு பிஎப் (ZANU – PF) கட்சிக்குள் பிளவுகள் இருகின்றன. அதேபோல் கட்சிக்கு வெளியேயும் முகாபேயின் ஆதரவாளர்கள், கிரேஸின் இளைஞர் அணி, பெண்கள் அணி என மக்கள் மத்தியிலும் முகாபே யிற்கு செல்வாக்கு உண்டு. இவர்களினை ஒன்றிணைத்து எமேர்சனின் அரசு தன் பக்கம் திருப்புவது என்பது மிகுந்த கடினமான சவாலான விடயமாகும். ஐ.எம்.எப் மற்றும் காப்ரேட் நிறுவனங்களின் உதவியுடன் மக்களுக்கு எதிரான மேற்கின் திட்டம் நடைமுறைப் படுத்துமிடத்து அல்லது மேற்கின் அழுத்தம் காரணாமாக, 2000 ஆம் ஆண்டளவில்  தப்பியோடிய ஆபிரிக்க வெள்ளையின ஆதிக்க சக்திகளுக்கு மீண்டும் நிலங்கள் வழங்கப்படுமிடத்து இம்மக்கள் எமர்சனுக்கு எதிராகவே திரும்பக்கூடும். இவ்வாறு அரசியல் அதிகாரத்துக்கான குழப்பங்கள் தோன்றுமாயின் அது மேற்கத்தைய சக்திகளுக்கே வாய்பாக அமையும். மேற்கு வல்லரசு நாடுகள் தமது அரசியல், பொருளாதார சுய லாபங்களுக்காக அரபு நாடுகளில் குழப்பங்களை மேற்கொண்டு அக்குழப்பங்களை தமக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே.

“எமர்சனின் இராணுவ நடவடிக்கையினால் பாரியளவில் மக்களுக்கு எந்தவொரு மாற்றமும் வரப்போவதில்லை, இராணுவ நடவடிக்கையையைக் கண்டிக்காத கள்ள மெளனம் சாதித்து வரும் மேற்கத்தைய சக்திகளின் போக்கு எமக்கு ஆச்சரியத்தை தருகின்றது. முகாபேயினை ஆதரிக்கத் தேவையில்லை ஆனால் முகாபேயினை  எதிர்க்க வேண்டும் என்பதற்காக எமர்சனினை ஆதரிக்க முடியாது” என்று மூன்று லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக்ன் கொண்டு இயங்கும் தென்னாபிரிக்காவின் மிகப்பெரும் தொழிற்சங்கமான, உலோகத் தொழிலாளர்கள் தேசிய ஒன்றியம்- நும்சா (NUMSA – National Union of Metalworkers of South Africa) தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் எமேர்சனின் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் ஊழலை அதிகரித்து  நாட்டை மேலும்  வறுமை நிலைக்கே கொண்டு செல்லும் என் எச்சரிக்கை விடுத்துள்ளது நும்சா. மேலும், சிம்பாப்வே உட்பட ஆபிரிக்க கண்டத்தின் பல நாடுகளை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒடுக்கிய பழைய காலனித்துவவாதிகளிடமிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதிலிருந்து சிம்பாப்வே மீண்டும் நவீன காலனித்துவ சக்திகளின் கைக்குள் செல்லாமல் இருக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளது நும்சா.

“அந்நிய நேரடி முதலீடுகளை சிம்பாப்வே வரவேற்கும் எனவும் வெளிநாட்டு மூலதனங்கள் சிம்பாப்வேயில் பாதுகாப்பாக இருக்கும்” எனவும் தனது ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் எமர்சன் தெரிவித்திருந்தார். சிம்பாப்வேயின் கனிய, நில  வளங்களை கொள்ளையடிக்க வேலைவாய்ப்பு, முதலீடு, அபிவிருத்தி என்ற பெயரில் அந்நிய வெளிநாட்டு சக்திகள் சிம்பாப்வேயினுள் காலூன்றத் தொடங்கும் காலம் வெகு தூரத்திலில்லை. சிம்பாப்வே உழைக்கும் மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கே இது வழிவகுக்கும். முகாபே பதவியிலிருந்து அகற்றப்பட்டதான் விளைவாக தற்பொழுது ஒரு ஜனநாயக வெளி ஒன்று உருவாகியுள்ளது. இவ் ஜனநாயக வெளியைப் பாவித்து சிம்பாப்வே மக்கள், சிம்பாப்வேவிற்கு வெளியே வசிக்கும் சிம்பாப்வே புலம்பெயர் மக்கள் மற்றும் அமைப்புகள், நும்சா போன்ற தொழிற்சங்கங்கங்கள் போன்றன இணைந்து எமெர்சன் மற்றும் மேற்குலக சக்திகளுக்கு எதிரான போராட்டத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.இல்லையெனில் அவர்களின் ஒடுக்குமுறை சிம்பாப்வேவினுள் இன்னொரு உள்நாட்டுப் போரினை தோற்றுவிக்கக்கூடிய சாத்தியமுள்ளது.

 

சு. கஜமுகன்

[email protected]