
-சு. கஐமுகன் gajan2050@yahoo.com
கடந்த மார்ச் மாதம் முதலாம் வாரத்தில் வாகன விபத்து தொடர்பாக சிங்கள வாகன சாரதிக்கும் முஸ்லிம் இளைஞர்களுக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தாக்கபட்ட சாரதி சில நாட்களின் பின்னர் இறந்து போனமையால், துவேச குழுக்கள் மற்றும் பெளத்த இனவாத கும்பல்கள் முஸ்லிம் மக்களை தாக்கியதுடன் அவர்களின் சொத்துக்களை நாசம் செய்துள்ளனர். 2014 இல் களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னர் முஸ்லிம் மக்களிற்கு எதிராக நடாத்தப்பட்ட மிகப் பெரும் இனக்கலவரம் இதுவாகும்.
கண்டி முஸ்லிம் மக்களின் மீதான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதன் பின்னர் இலங்கை அரசானது கடந்த 6 ம் திகதி அவரசர கால சட்டத்தை அமுல்படுத்தியது. 2011 இன் பின்னர் தற்பொழுதுதான் முதன் முறையாக அவரச காலச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது. மேலும் வாட்ஸ் அப், வைபர், முகப்புதகம், இன்ஸ்டராகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டிருந்தன. துவேச கருத்துக்களை கட்டுப்படுத்த என அரசு கூறிய போதும் இந்த நடவடிக்கை எதிர்ப்பாளர்களை கட்டுப்படுத்தும் -மக்களின் கருத்துச்சுதந்திரத்தை முடக்கும் செயலே.
வெறுமனே சில நபர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறால் இக்கலவரம் ஏற்பட்டது என கறுப்பு வெள்ளையாக மேலோட்டமாகப் பார்க்காமல் இதன் பின்னால் உள்ள அரசியல் பொருளாதார காரணிகளை ஆராய வேண்டும். இனவாத பெளத்த பிக்குகள் மற்றும் பெளத்த அடிப்படை வாதிகளால் முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். அதற்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாகவே இருந்துவருகிறது. ‘அதிகமாக பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு சனத் தொகையினை அதிகரிகின்றனர் ,கொத்து ரொட்டிக்குள் கருத்தடை மருந்து கலக்கின்றனர்’ போன்ற பொய் பிரச்சாரங்கள் நடந்து வருகிறது. இதுவே இன்றைய முஸ்லிம் மக்களிற்கு எதிரான வன்முறைக்கும் வித்திட்டது எனலாம். சிங்கள பெளத்த இனவாதிகளின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள இந்தப் பொய் பிரச்சாரங்களை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. வன்முறை நடந்து கொண்டிருக்கும்போது போலீசார் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் மெளனமாக செயலற்ற நிலையில் இருந்தனர் என மக்கள் குற்றம் சாட்டி இருந்ததனர்.
சிங்கள மக்கள் மத்தியில் அவர்களின் பெரும்பான்மை குறைந்துவிடும் என பயம் ஏற்படுத்தும் பொருட்டு பொய்ப் பிரச்சாரங்களை இனவாதிகள் செய்து வருகிறார்கள். எழுபது வீதத்துக்கும் அதிகமாக மிகப் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் மத்தியில் பத்து வீதத்திற்கும் குறைவாக இருக்கும் மக்கள் பற்றி இவ்வாறு பிரச்சாரிப்பது மிக கேவலமான விசயம்.
இதே போல் தான் தமிழ் மற்றும் சிங்கள மக்களின் நிலங்களை முஸ்லிம்கள் அபகரிக்கிறார்கள் என்ற பொய் பிரச்சாரமும். முஸ்லிம் தலைமைகள் தங்களின் சுயலாபத்துக்காகவும், வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளவும், நிலங்களை மத மற்றும் இன அடிப்படையில் பிரித்து வழங்குவது நிகழ்கிறதே தவிர மக்கள் அபகரிப்பு செய்யவில்லை.
ஆகவே இந்த விடயத்தில் நாங்கள் குற்றஞ்சாட்ட வேண்டியது தமது சுய அரசியல் லாபங்களிற்காக மக்களை தூண்டி விட்டு அதன் ஊடாக குளிர் காயும் அதவுல்லா, ரிஷாட் பதியுதீன் போன்ற முஸ்லிம் தலைமைகளேயாகும். ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களும் காணி பறிக்கின்றனர் என்ற போலி பிரசாரங்கள் நிறுத்தப்படவேண்டும். இது போன்ற போலி பிரச்சாரங்களின் ஊடாக சிறுபான்மை மக்களை என்றும் பிரித்து வைக்க நினைக்கும் சிங்கள பேரினவாதத்தின் பிரித்தாளும் தந்திரங்களிற்கு மக்கள் அடிபணியக் கூடாது.
பொருளாதார ரீதியான குறிப்பிட்ட, சிறிய சதவீத முஸ்லிம் மக்களின் வளர்ச்சி மற்றும் முஸ்லிம் மக்களின் மீதான இனத்துவேசம் போன்றனவே தற்பொழுது நடைபெற்ற வன்முறை மற்றும் கலவரத்தின் பின்னணியில் இருக்கும் மிகப் பெரும் இரு காரணிகளாகும். தற்போதைய பிரச்சனையை மையமாக வைத்து முஸ்லிம் மதமானது ஒரு கொலை மதம் என்ற பிரச்சாரத்தை பேரினவாத சக்திகள் மேற்கொள்கின்றன. மேற்கத்தைய நாடுகளில் எவ்வாறு இனவாத ஊடகங்கள் முஸ்லிம் மக்களினை, அவர்களின் மதத்தினை ஒரு கொலை மதம் எனப் பிரச்சாரம் செய்து வருகின்றனரோ அதே போன்ற ஒரு நடவடிக்கையைத்தான் இலங்கை பேரினவாத ஊடகங்களும் மேற்கொள்கின்றனர். ஆனால் உண்மையில் இலங்கையைப் பொறுத்த வரையில் இனவாதிகளும் வன்முறையையும் கலவரத்தையும் கிளப்பிவிட்டு கொலைகளை செய்வோர் – அன்பையும் காருண்யத்தையும் போதிக்கின்றோம் எனச் சொல்லும் புத்தமதம் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இலங்கை வரலாற்றில் புத்த மதத்துக்கு வன்முறை வரலாறு உண்டே தவிர இஸ்லாமுக்கு இல்லை.
இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் முஸ்லிம் சிறுபான்மையைச் சேர்ந்த சிறுதொகை முதலாளிகள் குறிப்பிடத்தக்க செல்வாக்கை கிழக்கு இலங்கையில் வைத்துள்ளனர். வடக்கு மற்றும் மலையக பிரதேசத்தில் இவர்தம் முதலீடுகள் சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக உணவகம் மற்றும் புடவைக்கடை ஆகிய சிறு முதலீடுகளை ஒரு சிறுபான்மை முஸ்லிம் முதலீட்டாளர் செய்து வருகின்றனர். பெரும்பான்மை பொருளாதாரம் மற்றும் அரசியல் அதிகாரம் சிங்கள முதலாளிகள் கையிலேயே இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும், சிறுதொகை முஸ்லிம்களின் சிறு பொருளாதார வளர்ச்சியைச் சகிக்க முடியாத பேரினவாத அடிப்படை சக்திகளே முஸ்லிம்களின் வளர்ச்சி அதிகரிக்கின்றது, வர்த்தகங்களை முஸ்லிம்கள் கைப்பற்றுகின்றனர் என்ற இனவாத, மதவாத கருத்துக்களை பரப்பி, அம்மக்களின் மீது வன்முறையை ஏவி அவர்களின் சொத்துக்களை நாசம் செய்துவருகின்றனர். வர்த்தகத்தில் ஈடுபடும் முஸ்லிம் வியாபாரிகள் மீது ஆத்திரம் கொண்ட வன்முறைக் குழு மற்றும் பெளத்த அடிப்படைவாத சக்திகள் சாதாரன உழைக்கும் மக்கள் மீதும், சிறு வியாபாரிகளின் வியாபார தளங்கள் மீதும் தாக்குதல்களைச் செய்துள்ளது. யார் மீதோ உள்ள கோபத்தில் யார் மீதோ தாக்கியதைப் போன்றுள்ளது இச்சம்பவம்.
மக்கள் நலன் சார்ந்த, திடமான பொருளாதாரக்கொள்கைகளினை பின்பற்றாமை, IMF போன்ற நிதி நிறுவனங்களின் விதிகளுக்கமைய இலங்கையின் பட்ஜெட்டை நடைமுறைப்படுத்தல், கல்வி சுகாதாரம் போன்றவற்றின் செலவீனங்களை குறைக்க அவற்றை தனியார் மயப்படுத்த முனைதல் , SAITM போன்ற தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவித்தல், போன்ற மக்களுக்கு எதிரான திட்டங்களை நடைமுறைப் படுத்துவதனாலேயே மக்கள் வாழ்வாதாரம் மிகவும் கீழ் நிலைக்கு சென்றுள்ளது. அத்துடன் வேலையில்லாப் பிரச்சனையும் அதிகரித்துள்ளது. ஆனால் இதற்கு காரணம் முஸ்லிம்கள்தான் என மத அடிப்படைவாதிகளால் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு உண்மையான காரணங்கள் திசை திருப்பப்படுகிறது. தம் பக்கத்தில் இருக்கும் அரசியல் ஓட்டைகளை மறைக்க இதுபோன்ற வன்முறைகளை பேரினவாத அரசுகளே அவ்வப்போது கிளப்பிவிடுகின்றன. தமது அரசியல் இருப்பை தற்காத்துக்கொள்ள இது போன்ற வன்முறைகள் இனவாத தலைமைகளுக்கு அவசியமாகவே காணப்படுகின்றது. இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் இலங்கை அரசையேயன்றி முஸ்லிம் மக்கள் அல்ல. டொனல்ட் ட்ரம்ப் அரசு நிறவாதத்தையும், மோடியின் அரசு மதவாதத்தையும் கையில் எடுத்திருப்பதன் பின்னணியும் இதுதான். அரசு மீது மக்களுக்கு உள்ள கோபத்தை திசை திருப்ப இது போன்ற நிறவாத, மதவாதங்களைக் கட்டவிழ்த்து விடுவது வலதுசாரிய அரசின் இயல்பு ஆகும்.
கடந்த கால வரலாற்றை எடுத்து நோக்கும் பொழுது இலங்கையில் 1915 இல் முஸ்லிம் சிங்கள மக்களுக்கிடையில் ஏற்பட்ட முதலாவது இனக்கலவரமானது இலங்கையின் வளங்களையும் பொருளாதாரங்களையும் முஸ்லிகள் சுரண்டுகின்றனர் என்று அநாகரிக தர்மபால போன்ற பெளத்த இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தின் பின்னர் உருவானதாகும். அக்காலத்தில் கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தின் வர்த்தகத்தில் முஸ்லிம் மக்கள் அதிக செல்வாக்கு பெற்று விளங்கியிருந்தனர். அதனைப் பொறுக்கமுடியாத இனவாதிகளே கலவரத்தை ஏற்படுத்தினர். அக்கலவரத்தில் 4000 கடைகள், 86 பள்ளிவாசல்கள், 17 தேவாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் பலர் கொல்லப்பட்டும் இருந்தனர். இது தவிர 1956 இல் ஏற்பட்ட கலவரம், 83 கறுப்பு ஜூலைக் கலவரம் போன்றன தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அடிப்படைவாதிகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக்கலவரங்களாகும்.
பல ஆண்டுகளைக் கடந்த பின்னரும் இது போன்ற சம்பவங்கள் இன்றும் ஏற்படுகின்றது. அதன் உண்மையான பின்னணியில் இருப்பது தமது அரசியல் அதிகாரத்தை நிலைநாட்ட பாடுபடும் பேரினவாத சக்திகளே. ஆகவே சிறுபான்மை இனங்கள் தமக்குள் பிளவுபட்டு நிற்கப் போகின்றனவா அல்லது உண்மைத்தன்மையினை புரிந்து கொண்டு பேரினவாத சக்திகளுக்கு எதிராக ஒன்று சேர்ந்து திரளப் போகின்றனவா? ஏனெனில் இன்று முஸ்லிம் மக்களுக்கு மீது விழுந்த அடி வெறுமனே முஸ்லிம் மக்களின் மீது விழுந்த அடி அல்ல, இது ஒட்டு மொத்த சிறுபான்மை இனங்களின் மீதும் விழுந்த அடியாகும். நாளை இது தமிழருக்கும் நடக்கலாம். ஆகவே வேற்றுமைகளையும் கடந்த கால கசப்புகளையும் மறந்து, பேரினவாத சக்திகளுக்கு எதிராக சிறுபான்மை மக்கள் ஒன்றாக கைகோர்த்து நிற்க வேண்டிய காலகட்டம் இதுவாகும்.
ஒடுக்கப்படும் முஸ்லிம் மக்களை காப்பாற்ற தமிழ்த் தலைமைகளோ அல்லது முஸ்லிம் தலைமைகளோ காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்க வில்லை என்பதே யதார்த்தமாகும். வெறுமனே கண்டன அறிக்கையை வெளிட்டுவிட்டு அமைதியடைந்துவிட்டது தமிழ் தலைமைகள். முஸ்லிம் தலைமைகளோ ஆயுதம் ஏந்தப் போவதாகவும், தீக்குளிக்கப் போவதாகவும் வெறும் வெற்று உணர்ச்சி அரசியல் பேசுகின்றனர். இவர்கள் அரசுடன் கூடிக் குழைந்து கும்மி அடிப்பார்களே தவிர அரசை எதிர்த்து ஆயுதம் தூக்கவோ அல்லது அரசை கண்டித்து தீக்குளிக்கவோ மாட்டார்கள் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் இந்தப் பிரச்சனையைப் பயன்படுத்தி முஸ்லிம் தலைமகள் எவ்வாறு தமது வாக்கு வங்கிகளை நிரப்பிக் கொள்ளலாம், எவ்வாறு தமது நாற்காலிகளைக் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பது பற்றியே சிந்திக்கின்றனர். மக்கள் பற்றி கிஞ்சித்தும் கரிசனை அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். மாறாக மக்கள் மீது அக்கறை கொண்ட தலைமைகளாக இருப்பார்கள் எனின் தாம் இணைந்து ஆட்சி நடத்தும் இவ்வரசினை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். தம் மக்களைக் காப்பாற்றாத, தம் மக்களுக்கு பாதுகாப்பு தராத அரசுடன் இவர்களுக்கு என்ன வேலை?. மக்கள் வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருகும் பொழுது பாராளுமன்றத்தில் இவர்களுக்கு என்ன வேலை?, பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி மக்களுடன் வீதியில் இறங்கி நின்று போராடியிருக்க வேண்டும். மக்களுக்காக பாராளுமன்றமே தவிர, பாராளுமன்றத்திற்காக மக்கள் அல்ல. பாராளுமன்றத்தை விட்டு வெளியேறாமல் தம்மை ஒடுக்கும் அரச அதிகார சக்திகளுடனேயே தொடர்ந்தும் நிற்கின்றனர் எனின் அவர்களின் நோக்கம் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதே ஆகும்.
முஸ்லிம் அமைப்புகள் கூட இவ்விடயத்தில் தமது ஒற்றுமையை வெளிப்படுத்துபவர்களாக இல்லை. தனித்தனியாக போராடுகிறார்களே தவிர ஒற்றுமையாக ஒன்றாக நின்று போராடவில்லை என்பது வருந்தத்தக்க விடயமாகும். ‘மேலும் சிங்கள மக்களை வெட்ட வேண்டும், விகாரைகளை எரிக்க வேண்டும் அதன் மூலம் உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்’ என மதவாத கருத்துக்களை பரப்பும் இஸ்லாமிய தலைவர்கள், பொது பல சேனா போன்ற பெளத்த மத அடிப்படைவாதிகளுக்கு நிகரான ஆபத்தானவர்களே. இத்தகையோரின் கருத்துக்களை காதில் வாங்கிக் கொள்ளாமல் முஸ்லிம் மக்கள் முற்போக்கு அரசியலை நோக்கி நகரவேண்டும்.
தமிழ் தலைமைகள் வடக்கு கிழக்கு மக்களை ஒன்றிணைத்து ஒரு போராடத்தை நடாத்தியிருக்க வேண்டும். இதன் மூலம் சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு எதிராக தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்த மாபெரும் சக்தியாக எழுந்திருக்க முடியும். அவ்வாறு ஒரு போராட்டம் நடந்து இருந்தால் எதிர்காலத்தில் சிறுபான்மை இனங்கள் மீது தாக்குதல் நடத்த சிங்கள பேரினவாத அரசு தயங்கும். அவ்வாறான ஒரு போராட்டம் இதுவரை நடை பெறாமையே சிறுபான்மை இனங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல் இடம்பெறுவதற்கு காரணமாக அமைகின்றது. சிறுபான்மை இனங்கள் பிரிந்து கிடப்பது என்றும் பெருமான்மை இனவாத சக்திகளுக்குத்தான் நன்மை பயக்கும். தமிழரைத் தாக்கும்பொழுது முஸ்லிம்கள் வெறுமனே கைகட்டிக் கொண்டு நிற்பதும், முஸ்லிமைத் தாக்கும்போது தமிழர் வெறுமனே கையைக் கட்டிக் கொண்டு நிற்பதும் பெரும்பான்மை இனவாத சக்திகளுக்கே நன்மை பயக்கும். சிறுபான்மை இனங்களை எப்போதும் பிரித்து வைத்திருக்கவே பேரினவாதம் விரும்புகிறது. “முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு இல்லாதுவிடின் இந்நாட்டில் போரை முடித்திருக்க முடியாது” என கூட்டுப் படைகளின் பிரதானி ரியல் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன அண்மையில் தெரிவித்திருப்பதன் பின்னணிக் காரணம் கூட சிறுபான்மை இனங்களிற்கிடையில் வன்மத்தை வளர்ப்பதற்கேயாகும். அமெரிக்க, சீன , இந்தியா போன்ற வல்லாதிக்க நாடுகளின் ஆதரவுடன் முடிக்கப்பட்ட யுத்தத்தினை, முஸ்லிம்களால்தான் முடிக்க முடிந்தது என்று கூறுகின்றமை சிறுபான்மை இனங்களுக்கிடையில் இனவாதத்தை தூண்டி அவர்களை பிரிந்து கிடக்கச் செய்வதற்கேயாகும்.
2005 இல் மகிந்தவின் வருகையானது பொது பல சேனா போன்ற இனவாத கும்பல்களின் வரவுக்கும் எழுச்சிக்கும் வித்திட்டது. மகிந்த போன்றோர் இனவாத அரசியலை முன்னெடுத்துச் செல்ல பக்க பலமாக நிற்பது இத்தைகைய கும்பல்களே. எனினும் 2015 ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த வீழ்த்தப்பட்டவுடன், தம் மீதான கடந்த காலக் குற்றங்களுக்கு தண்டனை கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் மன்னிப்புக் கேட்டுவிட்டு தலைமறைவாகி விட்டிருந்தது பொது பல சேனா கும்பல். எனினும் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் கணிசமான ஆசனங்களைக் கைப்பற்றி மீண்டு வந்திருக்கும் மகிந்தவின் எழுச்சியானது பொது பல சேனாவுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது. அதனால் சிறுபான்மை இனங்களின் மீதான தாக்குதல்களையும், அச்சுறுத்தல்களையும் அது மீண்டும் தொடங்கியுள்ளது. மகிந்த தனது அரசியல் பயணத்தை தொடர இது போன்ற இனவாத சக்திகளுக்கு மறைமுக ஆதரவு கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.
2005 இல் ஏற்பட்ட மகிந்தவின் வருகையானது, 2009 இல் சிறுபான்மை இனங்களில் ஒன்றான தமிழினத்தின் இனப்படுகொலைக்கு வித்திட்டது. அதே போல் 2018 மீண்டும் ஏற்பட்ட மகிந்தவின் வருகையானது இன்னொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் இனத்தின் இனப்படுகொலைக்கு வழிவகுக்கின்றதா என்பது இங்கு கேள்விக்குரிய ஒரு விடயமாகும். ஆகவே இனவாதத்தை, மதவாதத்தை ஊக்குவிக்கும் கட்சி அரசியலுக்குள் சிக்குண்டு சிதறாமல் அதனைத் தாண்டிய முற்போக்கு அரசியல் சக்தியாக மக்கள் திரள வேண்டும். ஏனெனில் 2014 இல் அளுத்கம, பின்னர் காலி , அம்பாறை என அனைத்து இடங்களிலும் முஸ்லிம் சிறுபான்மை இனம் தாக்கப்பட்டுக்கொண்டே வருகின்றது. மாறி மாறி ஆளும் பேரினவாத கட்சிகளோ இதற்கு நிரந்தரத் தீர்வை முன்வைப்பதில் கரிசனை அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். ஆகவே அணைத்து இன முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைவதே இதற்கு நிரந்தர தீர்வை தேடித் தரும்.
மேலும் கிழே குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை முன்வைத்து முற்போக்கு சக்திகள் தமது போரட்டத்தைக் கட்டி எழுப்ப வேண்டும். முஸ்லிம் மக்களின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும், அனைத்து சிறுபான்மை இன மக்களும் தமது மதத்தைப் பின்பற்றுவதற்கான முழு உரிமையும் அளிக்கப்படவேண்டும், இளைஞர்கள், தொழிற்சங்கவாதிகள், உழைக்கும் மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய இனத்துவேசதுக்கு எதிரான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும், பொது பல சேனா போன்ற மதவாதக் குழுக்கள் மற்றும் வன்முறை குழுக்களின் தாக்குதல்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற அணைத்து இன மக்களையும் கொண்ட பாதுகாப்புக்குழு அமைக்கப்படவேண்டும். கலவரத்தின் பின்னணியில் இருப்பவர்களுக்கு எதிராக நீதியான சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும். தாக்குதல்களில் பாதிப்படைந்த மக்களுக்கு உரிய இழப்பபீடு வழங்கப்படவேண்டும். என்பவையே அவையாகும்.
கடந்த வருடம் மியன்மாரின் நாட்டின் ராக்கெய்ன் பகுதியில் ஆங்சாங் சூகியின் பெளத்த அடிப்படைவாத அரசின் ஆதரவுடன் இடம்பெற்ற கலவரத்தின் காரணமாக 600,000 ற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர். அது போன்று இலங்கைப் பேரினவாத அரசின் ஆதரவுடன் இடம்பெற்ற ஒரு கலவரம் இதுவாகும். 1983 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கைக் கொண்ட அதே பாணியைத்தான் இன்று ரணில் கைக்கொள்கின்றார். இனவாதத்தையும், கலவரங்களையும் கையில் எடுக்காமல் இவர்களால் ஆட்சியினை நடத்த முடியாது என்பதே நிதர்சனம்.
“இனவாதம் இல்லாமல் முதலாளித்துவம் இல்லை” என்ற மல்கம் எக்ஸ் இன் கூற்றுப்படி, முதலாளித்துவத்திற்கு ஆதரவான இனவாதத்தை மையமாக வைத்து அரசியல் நடாத்தும் முதலாளித்துவ ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது சுதந்திரக் கட்சியோ சிறுபான்மை மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கப்போவதில்லை. இதற்கு மாற்றாக தமிழ் சிங்கள முஸ்லிம் உட்பட அனைத்து மக்களினது உரிமைகளை அங்கீகரிக்கும் முற்போக்கு சக்திகள், இடதுசாரிய இயக்கங்கங்கள், மக்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பாக உருவாக வேண்டும். அப்போதுதான் சிறுபான்மை இனங்களின் உரிமைகள் மட்டுமல்ல, பெரும்பான்மை இனத்தின் உழைக்கும் மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும்.
சு.கஜமுகன் (லண்டன்)