உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பில், மத்திய அரசு 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் எனச் சொல்கிறது.
மத்திய அரசைச் சேர்ந்த, நிதின் கட்காரி போன்றவர்கள் அதுகுறித்து பேட்டி அளிக்கும்போதெல்லாம்- அதை அமைக்க வாய்ப்பில்லை என்றோ, உச்சநீதிமன்றம் சொல்லியுள்ள கால அளவிற்குள் அமைக்க வாய்ப்பில்லை என்றோ கூறுகிறார்கள்.
எப்படியும் மத்திய அரசு அத்தகைய மேலாண்மை வாரியத்தை அமைக்காது என்பது பலருக்கும் தெரியும். ஆளும் அதிமுக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என திமுக தலைமையில் பல எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தார்கள்.
காவிரி விசயத்தில் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் அதி கூடிய வெறுப்பு உண்டு என்பதும் இந்தக் கட்சிகளுக்குத் தெரியும். மத்திய அரசுக்கு எதிரான – குறிப்பாக மோடி மற்றும் பா.ஐ.க வுக்கு எதிரான உணர்வு தமிழ் நாட்டில் மேலோங்கி வருகிறது. இந்துத்துவ மற்றும் கிந்தி அதிகாரத்தை தமிழ்நாடு மேல் திணிப்பதை மக்கள் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறார்கள். திராவிட கலாச்சார விழுமியங்களை தாக்குவதன் மூலம் தமது கட்சி வளர்க்க முயற்சித்து வருகிறது பா.ஐ.க. இது தவிர மத்திய அரசின் பல்வேறு அடக்குமுறை சமூகப்- பொருளாதார கொள்கைகள் வறிய மக்களின் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மோசமாக்கி உள்ளது. இவ்வாறு பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கும் தமிழ் நாட்டு இளைஞர், தொழிலாளர், மற்றும் வறியோர் தமக்கு கிடைத்த சந்தர்பத்தில் எல்லாம் தமது போராட்ட குணத்தை காட்டி வந்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டாக இருப்பினும் – காவிரி விசயமாக இருப்பினும் –அந்த ஒரு தனிப்பட்ட விசயம் முக்கியம் என மட்டும் மக்கள் போராட்டத்துக்கு திரளவில்லை. மாறாக மக்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பு இந்த விசயங்களின் ஊடாகவும் வழிவதை நாம் அவதானிக்க வேண்டும்.
இது தவிர தமிழ் நாட்டு போராட்ட நடவடிக்கைகள் பல வெற்றிகளை ஈட்டி உள்ளது. மக்களின் ஒன்றுபட்ட திரட்சி தந்த பலம் மற்றும் தன்னம்பிக்கையுடன் வெற்றிகள் தந்த அனுபவமும் இணைந்து தமிழ் நாட்டில் போராட்ட உணர்வு பலப் பட்டுக் கொண்டிருக்கிறது. தெருவுக்கு வந்து போராடுவது பலனில்லை என எந்த வலது சாரியக் கட்சியும் பேச்சுக்கும் சொல்ல முடியாத நிலை உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த மக்களின் போராட்ட குணத்தை தமக்கு சாதகமாக திருப்புவதற்கு மும்முரமாக முயற்சி செய்கின்றன தேர்தல் லாப நோக்கில் இயங்கும் கட்சிகள். காவிரி விசயத்தில் மக்கள் கொதித்துப் போய் இருப்பது அவர்களுக்கு தெரியும். இந்தக் கொதிப்பு தானாக வடிந்து தமக்கு எதிராக திரும்ப முதல் எதிர் கட்சிகள் தம்மை போராட்டத்துடன் இணைத்துக் காட்ட முண்டி அடித்து வேலை செய்யத் தொடங்கி விட்டன. ஆனால் இந்த கட்சிகளின் உண்மை நிலைப்பாட்டின் பண்பை ஆளும் கட்சியின் நடவடிக்கையில் பார்க்கலாம்.
ஆளும் அதிமுக அரசு பொறுமை காக்கிறதாம். உச்சநீதிமன்றத்தின் கெடு அதற்குள் முடிந்துவிட்டது. எதிர்கட்சிகள் அதிமுக அரசை இறுக்க ஆரம்பித்ததும் உடனே அமைச்சரவை கூட்டப்படுகிறது. ஆனால் அமைச்சரவையில் மத்திய அரசுக்கு எதிரான கண்டனமோ, தீர்மானமோ சின்ன கண்டிப்போ கூட இல்லை.
கெடு முடிந்த அடுத்த நிமிடமே மத்திய அரசின் மேல் நீதிமன்ற அவமதிப்பு போட்டிருக்க வேண்டும். ஆனால் போடாமல் காலம் தாழ்த்தியது அதிமுக அரசு. அதற்குள் மத்திய அரசு சுதாரித்துக் கொண்டு ‘Scheme’ என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுப்போட்டுவிட்டது. கர்நாடக தேர்தல் நடக்க இருப்பதால் மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போட வேண்டும் என்கிற கோரிக்கையையும் உச்சநீதிமன்றத்தில் வெளிப்படையாகவே வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஒவ்வொருமுறையும் உச்சநீதிமன்றமும் ஏதாவது சொல்லுவதும், விசாரணையை நீட்டிக்கொண்டே போவதும் நடக்கிறது.
இதன் பின்னர் திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. அதற்கு அதிமுக, தமிழக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட அழைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கூட்டத்தில்தான் முழு கடையடைப்பு, நடைபயணம், பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டுவது என படிப்படியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டது.
ஆளும் அதிமுகவும் தன் பங்குக்கு ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி முடித்தது.
திமுக தலைமையில் விசிக, மதிமுக, இடதுசாரிகள் மற்றும் வணிகர் சங்கங்களின் முழு ஆதரவுடன் ஒரு கடையடைப்பு நடந்தது. ரயில்,சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களின் போது சென்னையின் மட்டும் 10,000 பேர் கைது செய்யப்பட்டார்கள். சாலைகளிலும், போராட தடை விதிக்கப்பட்ட மெரினாவிலும் திரண்டு, தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்த மக்களை கைது செய்ய போதிய வசதிகள் இல்லாமல் காவல்துறை திணறியது. வரலாற்றில் முதன்முறையாக சென்னையின் பேரங்காடிகள்(Shopping malls) கூட மாலை ஆறுமணி வரை அடைக்கப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் டெல்டா விவசாயிகளிடையே தன் நடைபயணத்தை துவக்கினார். உடன் திருமாவளவன், திருநாவுக்கரசர், முத்தரசன் ஆகியோரும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
நடிகர்கள் சங்கத்தினர் தங்கள் சார்பில் ஒரு மௌன விரத போராட்டம் நடத்தினார்கள். மௌனவிரத மேடையில் இருந்த நடிகர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டாலும், மீடியாவிடம் யாரும் வாய் திறக்கவில்லை. போராட்டத்தின் முடிவில், சத்யராஜ் மட்டும் மத்திய அரசை எதிர்த்துக் கோஷங்களை எழுப்பினார். கட்சி ஆரம்பித்துவிட்ட கமலும், ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துவிட்ட ரஜினியும் சத்யராஜின் வாயைப் பார்த்துக்கொண்டு நின்றது வேடிக்கை. இதன் எதிரொலியாக தமிழிசை சத்யராஜுக்கு ரெய்டு மிரட்டல் விடுத்ததும், அதை சத்யராஜ் கேலி செய்ததும் தனிக்கதை.
பாரதிராஜா தலைமையில் திரை கூட்டமைப்பினர் ஒன்றுகூடி, கட்சி அடையாளமில்லாத அமைப்பாக செயல்படப்போவதாகவும், முதல்கட்டமாக IPLக்கு எதிராக போராடப்போவதாகவும், அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கொடி ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. இயக்குனர் வெற்றிமாறன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன், சீமான், கர்ணாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஐ.பி.எல் போட்டி நடந்த சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி திரண்ட போராட்டக்காரர்கள் காவல்துறைக்கு பெரும் சவாலாக இருந்தார்கள். அன்றைய தினம் முழுதும் அரசுக்கும், போலீசுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நேரம் பதற்றத்துடனேயே கழிந்தது. போராட்டக்காரர்களோ கடைசிவரை இருந்து போராடினார்கள். கொடி கொண்டுவரக்கூடாது என முடிவுசெய்யப்பட்டிருந்ததை மீறி நாம் தமிழர் கட்சியினர் சிலர் மைதானத்திற்குள் நாம் தமிழர் கொடியோடு புகுந்து கைது செய்யப்பட்டார்கள். மைதானத்திற்குள் செருப்பு வீசப்பட்டதும், சில ரசிகர்கள் தாக்கப்பட்டதும் கூட நடந்தது. இறுதியாக நாம் தமிழர் கட்சிக்காரர்கள் சிலர் போலீஸைத் தாக்கி கைதானார்கள். சீமான் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. (வெளியே வந்த சீமான் போலீசை தாக்கியது தன் கட்சிக்காரரே இல்லை எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது)
அடுத்தநாள் இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த ரஜினி, போலீசை தாக்குவது உச்சகட்ட வன்முறை என்றும், அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் காட்டமாக கருத்து தெரிவித்து தமிழக மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்தார். ஏனெனில் சில நாட்களுக்கு முன் காவல்துறையால் திருச்சியில் ஒரு பெண் மாண்டபோதோ, காவல்துறையினர் மக்களை தாக்கியபோதோ வாயே திறக்காதவர் ரஜினி. போராட்டத்தின் எதிரொலியாக சென்னையில் நடக்க இருந்த ஐ,பி.எல் போட்டிகள் அனைத்தும் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டன. போராட்டம் வெற்றியடைந்தது. இந்திய அளவில் போராட்டம் கவனம் பெற்றது.
பிரதமர் மோடி சென்னை வருவது உறுதியானபின் கறுப்புக் கொடி போராட்டம் நிச்சயம் நடக்கும் என ஸ்டாலின் தெரிவித்தார். இந்தப் பக்கம் பாரதிராஜா தலைமையிலான கூட்டமைப்பும் உறுதியாக இருந்தனர். இதற்கு பயந்து மோடியின் பயணம் முழுதும் வானத்திலேயே (வாகனத்திலேயே) இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்பட்டது. ஐஐடி வளாகத்தில் அவர் கார் போவதற்கு புதிதாக ஒரு ‘பொந்து’ அமைக்கப்பட்டு சாலை போடப்பட்டது பலரால் கேலி செய்யப்பட்டது. இவ்வளவு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டும் தமிழர்கள் விடவில்லை. மாநிலம் முழுதும் கறுப்புச்சட்டைகளோடு திரண்டார்கள். திமுக உட்பட அனைத்துக் கட்சியினரும் கறுப்புக் கொடிகளோடு சாலைகளில் திரண்டார்கள். சென்னை முன்னாள் திமுக மேயர் மா.சுப்பிரமணியன் ஒருபடி மேலே போய், கறுப்பு பலூன்களை மோடி வரும் விமான நிலையத்திற்கு அருகில் பறக்கவிட்டார். இதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் வானத்தில் பயணிக்கும் மோடி பார்வையில் படும்படி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. கறுப்புக்கொடி போராட்டத்தை திமுக முதலில் அறிவித்திருந்தாலும், அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களும் ஒட்டுமொத்தமாக கலந்துகொண்டது இந்தியாவையே அதிரச் செய்தது.
இன்னொரு புறம், அதேநாளில் டிவிட்டரில் தமிழர்கள் துவக்கிய ‘#GobackModi’ hashtag உலக அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆனது மோடிக்கும், அவர் ஆதரவாளர்களுக்கும் பெரும் அவமானமாகப் போனது.
அடுத்தடுத்து, அடுக்கடுக்காக, அழுத்தம் கூடிக்கொண்டே போன இந்தப் போராட்டங்களின்மூலம் தமிழகம் இன்னமும் தன் போர்க்குணத்தை விடவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
ஆகமொத்தம், ஏற்கனவே மதவாதத்திற்கு எதிரான கொள்கைகள் உள்ள தமிழ்நாடு, மோடிக்கு சிம்மசொப்பனம்தான். காவிரி மேலாண்மைவாரியத்திற்கான போராட்டம் தமிழகத்தில் மோடியும், அவர் பரிவாரங்களும் கால் ஊன்ற முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சத்யா ராஜன்