ஈரானிய மக்கள் போராட்டத்தின் பின்னணி

1,400 . Views .

-சு. கஐமுகன் gajan2050@yahoo.com

கடந்த டிசம்பர் மாதம் ஈரானிய ஜனாதிபதி வெளியிட்ட 2018 க்கான பட்ஜெட் அறிவிப்பதைத் தொடர்ந்து, டிசம்பர் 28 முதல் மக்கள் வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர். ஈரானின் வடகிழக்கில் அமைந்துள்ள , அதிகளவான மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நகராமான மஷ்ஹாத்தில்தான் முதலில் போராட்டம் தொடங்கியது. பின்னர் படிப்படியாக வளர்ந்து எண்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போரட்டங்களுக்கு எதிராக நடந்த அரச வன்முறையில் இதுவரை 25 பேர் வரைக்கும் இறந்துள்ளனர். மேலும், 3200 ற்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அதில் மூன்று பேர் ஈரானின் மிகப் பிரபல்யமான சிறையான எவின் சிறைச்சாலையில் (Evin Prison) கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை (Arnesty International) தெரிவித்துள்ளது.

ஒரு சில இடங்களில் மக்கள் ஆத்திரம் கொண்டு காவல் நிலையங்கள், இராணுவ துணைத் தலைமையகம், மற்றும் மத சம்பந்தமான நிறுவனங்களை தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளது. மக்கள் கூடுவதற்கு எதிராக அரசு எச்சரிக்கை விடுவித்த போதும் மக்கள் வீதிக்கு வந்து போராடினர். சில இடங்களில் மக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் 2009 இவ்வாறான ஒரு மிகப் பெரும் மக்கள் போராட்டம் இடம்பெற்றது. அப்போது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த மஹ்முத் அஹ்மதின் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடிருந்தார் எனக் குற்றம் சாட்டியே ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எனினும் அப்போராட்டத்தை ஈரானின் மத தலைவர் அய துல்லா, Revolution Guard எனப்படும் ஈரானிய ஆயுதப் படை மற்றும் ஈரானிய இராணுவங்களைப் பயன்படுத்தி முடக்கியிருந்தார்.

2005 முதல் 2013 வரை ஆட்சி செய்த மஹ்மூத் அஹ்மதின் இன் இருண்ட பக்கங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று எண்ணித்தான்  மக்கள் ஹாசன் ருஹானியைத் இரண்டாவது முறையாக 2017 இல் தெரிவு செய்திருந்தனர். பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை ருஹாணி மேற்கொள்வார் என மக்கள் நம்பினார்கள். ருஹானியின் ஆட்சிக் காலத்திலேயே JCPOA ( Joint Comprehensive Plan of Action ) எனப்படும் அணு ஒப்பந்தம் 2015 இல் உலகநாடுகளுடன் மேற்கொள்ளபட்டு ஈரான் மீதான அமெரிக்காவின் தடைகள் தளர்த்தப்பட்டது. இதன் மூலம் புதிய துறைகள் உருவாக்கபட்டு தமக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும், புதிய வெளிநாட்டு முதலீடுகள் ஈரானுக்குள் வரும் எனவும் மக்கள் நம்பினர். அதே நம்பிக்கையில்தான் மீண்டும் ருஹாணியை ஜனாதிபதியாக தெரிவு செய்திருந்தனர் மக்கள். ஆனால் எதிர் பார்த்த அளவு புதிய வேலை வாய்ப்போ அல்லது பொருளாதார முன்னேற்றங்களோ ஏற்படவில்லை மாறாக ருஹாணி, இஸ்லாமிய தலைவர் அலி காமேனி , ஈரானிய காப்ரேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஈரானிய மேற்தட்டு வர்க்க குழுவினர் ஒன்றிணைந்து மக்களை ஒடுக்கும் நடவடிக்கையிலேயே ஈடுபடத் தொடங்கினார். அதன் ஒரு அங்கமே இந்த பட்ஜெட் அறிவிப்பு ஆகும். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஜனாதிபதி, இஸ்லாமிய தலைவர் அலி காமேனி மற்றும் நிதி மோசடி செய்த நிதி நிறுவனங்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர். “சர்வாதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கு”, “ருஹானிக்கு மரணதண்டனை வழங்கு”, “ஈரானை விட்டு வெளியேறுங்கள்”, “அரசியல் கைதிகளை விடுதலை செய்” போன்ற கோசங்களை எழுப்பியவாறு மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர்.

போராட்டத்தின் உடனடிக் காரணாமாக இருந்தது பட்ஜெட் இல் உணவுப் பொருட்கள் மற்றும் எரி வாயுக்களின் விலை உயர்வு, அதிலும் குறிப்பாக ஐம்பது சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ள பெற்றோலின் விலை உயர்வு (லீட்டருக்கு 0.30 டொலரிலிருந்து 0.45 டொலராக அதிகரிக்கப்படவுள்ளது) மற்றும் மத நிறுவனங்களுக்கு அதிகளாவான நிதி ஒதுக்கப்பட்டமை ஆகும். எனினும் பொருளாதார நெருக்கடி, வேலையில்லாப் பிரச்சனை (இளைஞர்களில் வேலையற்றோர் சதவீதம் 25-40 வீதம் வரை காணப்படுகின்றது), திறமைக்கு ஏற்ற வேலையின்மை, வேலைக்கேற்ற ஊதியமின்மை, அதிகார வர்க்கங்களின் ஊழல், தவறான பொருளாதார நிர்வாகம்,  உள்நாட்டில் மக்கள் வறுமையில் திண்டாடும்பொழுது ஈராக், சிரியா, லெபனான், யேமன் போன்ற நாடுகளில் யுத்தத்திற்காக அதிகளவான பணம் செலவழித்தல், எண்ணெய் உட்பட ஈரான் நாட்டு வளங்களை யுத்தத்திற்கு பயன்படுத்தல், 2015 அணு ஒப்பந்தம் மூலம் எதிர்பார்த்தளவு வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறாமை, மக்களின் வாழ்க்கைத் தரத்தில் வீழ்ச்சி (கடந்த சில ஆண்டுகளில் ஈரானிய மக்களின் வாழ்க்கைத் தரம் 15 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது) போன்ற காரணிகளால் மக்களின் ஒட்டு மொத்த கோபமும் அரச அதிகாரத்தின் மீது திரும்பியது.

ஈரான் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் போன்ற வளங்களை அதிகம் கொண்ட, மத்திய கிழக்கு நாடுகளினுள் இரண்டாவது மிகப் பெரும் பொருளாதார வளத்தைக் கொண்ட ஒரு நாடு ஆகும். எனினும் மக்களின் நிலைமை மிகவும் மோசமான நிலையிலேயே இருக்கின்றது. அதனால்தான் ஆரம்பத்தில் போராட்டமானது விலைவாசி உயர்வுக்கும் ஊழலுக்கும் எதிராகவே இருந்தபோதும் பின்னர் அது பரவி மிகப்பெரிய பரந்த அரசியல் பார்வையைக் கொண்ட போராட்டமாக, பல அரசியல் பிரச்சனைகளுக்கு எதிரான போராட்டமாக  மாறி அரசுக்கு எதிரான போராட்டமாக வெடித்தது. கடந்த வருடம் தமிழ் நாட்டில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் கூட அவ்வாறான ஒன்றுதான். ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டுத் தடைக்கெதிராகவே மக்கள் போராடினார் பின்னர் அது வளர்ச்சி அடைந்து பல அரசியல், சமூகப் பிரச்சனைகளுக்கும் எதிரான கோஷமாக மாறியது நினைவிலிருக்கக்கூடும்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முட்டை விலை உயர்வின் காரணமாக சாதாரண ஏழை மக்கள் தமது அடிப்படை உணவுத் தேவையினைக் கூட நிறைவு செய்து கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகின்றது. தற்போது ஒரு டிரே (Tray) முட்டையின் (3௦ முட்டைகள் அடங்கிய தட்டு) விலையானது 100,000 ரியால்கள், புதிய வரவு செலவு திடத்தின் படி முட்டைத் தட்டின் விலையானது 210,000 ரியால்களாக அதிகரிக்கப்படவுள்ளது. அதாவது கிட்டதட்ட ஐம்பது சதவீதத்தால் முட்டையின் விலை உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மாதாந்த கொடுப்பனவான 455000 ரியால்கள் (12.60 டொலர்கள்) நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 77 மில்லியனுக்கும் மேற்பட்ட ஈரானிய மக்கள் அதாவது 96 வீதமான மக்கள் பாதிக்கப்படுவார்கள். மத நிறுவனங்களுக்கு ஒதுக்கும் நிதியினை அதிகரித்தது. அதற்கான அரசுக்கான செலவீனங்கள் ஆறு சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டது. மறுபக்கத்தில் மக்களின் மாதாந்த கொடுப்பனவுகளை நிறுத்திய அரசின் செயலானது மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. அதனால் ஈரானின் புனித நகரம் என்று அழைக்கப்படும், அதிகமான மதகுருக்கள் வசிக்கும் நகரமான கோம் (Qom) நகரில் கூட மக்கள் மதகுருக்களுக்கு எதிரான கோசத்தை முன்வைத்து போராடினார்.

ஈரானிய அரசு 2018 ற்கான வரவு செலவுத் திட்டத்தில் எட்டு பில்லியனுக்கும் மேற்பட்ட நிதி வெட்டுக்களை மேற்கொண்டுள்ளது. மக்களுக்கு ஒதுக்க வேண்டிய மாதாந்த மானிய நிதியில் 5.3 பில்லியன் டொலர்களும், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய ஒதுக்க வேண்டிய நிதியில் 3.1 பில்லியன் டொலர்களும் வெட்டுக்களை மேற்கொண்டுள்ளது.. மானியம் வழங்கும் இத்திட்டமானது ஈரானின் முன்னால் ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதினினால் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

2015 இல் தடை நீக்கப்பட்டவுடன் ஈரான் அதிகமான எண்ணெய்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தபோதும், ஈரானின் அந்நிய நேரடி முதலீடு 3.5 பில்லியன் டாலர்களைத் தொட்டபோதும் ஈரானின் பொருளாதாரம் போதியளவு முன்னேற்றத்தை தரவில்லை. 2013 இல் பணவீக்கமானது 31 வீதமாக அதிகரித்து ரியாலின் பெறுமதி 450 வீதத்தால் குறைவடைந்து காணப்பட்டது. எனினும் பின்னர் 2015 இல் தடை நீக்கப்பட்ட பின்னர் பெறுமதி உயர்வடைந்து பணவீக்கமானது 11 வீதமாகக் குறைவடைந்திருந்தது. எனினும் மக்களின் வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஏனெனில் வருமானங்கள் யாவற்றையும் நிறுவனங்களும் அதிகார சக்திகளும் தமக்குள் சுருட்டிக் கொண்டனரே தவிர மக்கள் நலத் திட்டங்களுக்கு, நாட்டின் பொருளாதார அபிவிருத்தி திட்டங்களுக்கு  பயன்படுத்தவில்லை. பெற்றோலியத்துறை வளர்ச்சி அடைந்த போதும் பெற்றோலியம் அல்லத துறைகள் வளர்ச்சியடையவில்லை. அத்துடன் பெற்றோலியத்துறை வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தவில்லை. ஈரானின் உத்தியோகபூர்ப தகவல்களின் படி வேலையற்றோர்களின் சதவீதம் 12.4 ஆகும் எனினும் சில பிரதேசங்களில் 6௦ வீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் வேலையின்றியே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பின் (International Labour Organazation) தகவல்களின் படி 79.9 மில்லியன் சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானோர் முப்பது வயதுக்கு கீழப்பட்டவர்களாவார், அதிலும் 15-24 வயதுக்குட்பட்டோரில் 26.7 வீதமானோர் வேலையற்றவர்களாகவே இருக்கின்றனர். வேலையற்றோரின் அதிகரிப்பானது வறுமையைத் தோற்றுவிக்கின்றது. இதனால் 8.2 மில்லியன் மக்கள் நாளாந்தம் 5.50 டொலர் ற்கும் குறைவான தொகையைக் கொண்டும், இரண்டு வீதமான மக்கள் அதாவது 196,000 மக்கள் நாளாந்தம் 1.90 டொலருக்கும் குறைவான தொகையைக் கொண்டுமே தமது வாழ்கையை நடாத்துகின்றனர் என்று 2014 வெளிவந்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வங்கிகளின் கட்டுப்பாடற்ற அதீத வளர்ச்சி, மற்றும் ஈரானிய பொருளாதாரம் மீதான அவர்களின் ஆதிக்கம் ஆகியன ஈரானிய மக்களின் மிகவும் கடினமான வாழ்க்கையை மேலும் மோசமாக்கி உள்ளன. வங்கிகள் மக்களுக்கு வழங்கும் கடன்களுக்கு அதிக வட்டி வசூலித்து மக்களை சுரண்டுவதால் நடுத்தர வர்த்தக மற்றும் சிறு முதலாளிகள் திவாலாக வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. அத்துடன் ஈரானிய மத்திய வங்கி வட்டி வீதத்தை குறைத்திருந்தபோதும் தனியார் வங்கிகள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி மீண்டும் அதிக வட்டி வீதங்களையே மக்களிடம் வசூலிக்கின்றன. 2000 இன் ஆரம்பத்தில் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தமக்கென ஒரு வங்கியினை உருவாக்கின. அதில் பெரும்பாலானோர் பாதுகாப்பு மற்றும் இராணுவ துறைகளை ஊழல் செய்த அதிகாரிகளாகவே இருந்தனர். மேலும் அவர்களால் உருவாக்கப்பட்ட தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆரம்பவைப்புத் தொகையினை ஈரானிய மத்திய வங்கிக்கு செலுத்தவில்லை அதனால் அவை திவாலாகும்பொழுது ஈரானிய மத்திய வங்கியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை வழங்கமுடிவதில்லை. இதனால் பல ஈரானிய மக்கள் வீடு வாசல் இழந்து வாழ முடியாமல் நடுத் தெருவுக்கு வந்துள்ளனர்.

அண்மையில் திவாலான ஈரானின் மிகப் பெரும் நிதி நிறுவனமான கஸ்பியன் கடன் வழங்கும் நிறுவனம் இருபது மில்லியன் ஈரானிய வாடிக்கையாளர்களுக்கு 1.4 பில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வைப்பீடு செய்த பெரும்பாலான மக்கள் வறுமையானவர்கள். மக்களின் பணம் மீள வழங்கப்படும் என்று ஈரானிய அரசு அறிவித்திருந்த போதும், வெறும் ஒரு வீதமான பணமே இதுவரை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு வாரமும் அந்நிதி நிறுவனத்துக்கு முன்னாள் பணத்தை வைப்பில் இட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று வருடங்களுக்கு முன்னர் Padideh Shandiz நிறுவனம் திவாலானதால் பல மக்கள் முதலீடு செய்த தமது பணத்தை இழந்து மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகினர். இது போன்று மக்களை ஏமாற்றும் மோசடியான நிதி நிறுவனங்கள், முறையான உரிமம் பெறாத கடன் வழங்கும் நிறுவனங்கள், தனியார் வங்கிகள் மக்களின் பணத்தை ஏமாற்றுவதும் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மூடப்படுவதனாலும் மக்கள் நெருக்கடிக்கும், வறுமைக்கும்  ஆளாகின்றனர்.

உள்நாட்டு விடயங்களை விட வெளிநாட்டு விடயங்களுக்கே அரசு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதே மக்கள் முன்வைக்கும் மற்றுமொரு பிரதான குற்றச்சாட்டு ஆகும். “எங்களுக்கு இஸ்லாமிய குடியரசு தேவையில்லை”, “சிரியாவை விட்டு வெளியேறு எங்களைப் பற்றி சிந்தி”, “எனது வாழ்க்கை காஸாவில் அல்ல, லெபனானில் அல்ல எனது வாழ்க்கை ஈரானில்” போன்ற கோசங்கள் வெளிநாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஈரானை கண்டிக்கும் மக்களின் கோசங்களாய் அமைந்திருந்தன.

அண்மையில் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் தமது கட்சிக்கும், தெற்கு லெபனானின் கட்டமைப்புகளை விரிவு படுத்துவதற்கும் ஈரான் உதவி செய்கின்றது என்று கூறியமை இங்கு கவனிக்கத்தக்கது. ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஒதுக்கப் படும் நிதியானது தற்பொழுது வருடத்திற்கு 200 மில்லியனிலிருந்து 800 மில்லியன் டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இது தவிர ஈராக்கில் உள்ள  ஹசாத் அல் ஷாபி ( Hasad al shaabi) என்ற அமைப்புக்கும், யேமனில் உள்ள ஹெளதிக்கள்( Houthis) என்னும் அமைப்புக்கும் ஈரான் நிதி உதவி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஒருபுறத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ மறுபுறத்தில் ஷியா இஸ்லாத்தை வளர்ப்பதற்காக – தமது இஸ்லாமிய ஏகாதிபத்திய குறிக்கோளை அடைவதற்காக- பயங்கரவாத அமைப்புகளுக்கும், வெளிநாட்டு நிறுவங்களுக்கும் நிதி உதவி அளித்து மத அடிப்படைவாதத்தை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றது ஈரானிய அரசு. மக்கள் நலத் திட்டங்களில் முதலீடு செய்யாமல், தனது பிராந்தியங்களில் ஷியா மத அடிப்படைவாதத்தை பரப்புவதற்கு பல பில்லியன்களை முதலீடு செய்கிறது  ஈரானிய அரசு.

ஒரு சட்டம் நிறைவேற்றுவதற்கு வரைவுச் சட்டம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் இஸ்லாமிய மதபீடத்தின் உயர் தலைவரினால் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் அதன் பின்னரே அவ்வரைவுச்சட்டம் சட்டமூலமாக்கப்படும். இவ்வாறு மத பீடங்கள் அரசினை விட ஒரு படி மேலே நின்று ஆதிக்கம் செலுத்தும் நிலைமையே காணப்படுகின்றது. மேலும் ஈரானின் அதியுயர் இஸ்லாமிய தலைவரான அலி காமேனி பழமைவாத மதகுருக்களின் ஆதரவைப் பெற்றவராகவும், IRGC (Islamic Revolutionary Guard Corps) எனப்படும் ஈரானிய படை மற்றும், ஈரான் பாதுகாப்பு படைகள், ஊடகங்கள், நிலங்கள், நீதித்துறையைக் கட்டுப்படுத்துபவராகவும் காணப்படுகின்றார். மேலும் இவர் ஈரானின் பொருளாதாரத்தின் பெரும் பகுதியை தன் வசம் கொண்டிருப்பவராக அல்லது அதனைக் கட்டுப்படுத்துபராகக் காணப்படுகின்றார். அதனால் மக்களுக்காக தனது அதிகாரங்களை விட்டுக் கொடுக்க விரும்ப மாட்டார் மாறாக மக்கள் போராட்டத்தை அடக்கி ஒடுக்கவே முயலுவார். சவூதி அரேபியாவின் ஆதரவுடன் சி.ஐ.ஏ மற்றும் இஸ்ரேலின் மொசாட் போன்ற உளவு நிறுவனங்களே தமது நாட்டில் குழப்பத்தை உண்டு பண்ணுகின்றன என்று வெளிநாட்டு சக்திகளைக் குற்றம் சொல்லும் ஈரானிய அரசும், ஈரானிய இஸ்லாமிய உயர்பீடங்களும் போராடும் மக்களின் நியாயமான தேவை என்ன என்பதை புரிந்து கொள்ள மறுக்கின்றது.

அகதிகளையும் சிறுபான்மை முஸ்லிம் இன மக்களையும் ஒடுக்கும் ட்ரம்ப், ஈரானில் மணித்தியாலத்திற்கு ஒவ்வொரு தடவையும் மனித உரிமைகள் மீறப் பட்டுக்கொண்டிருக்கின்றன என நீலிக்கண்ணிர் வடிப்பது முரண் நகையாகத் தோன்றுகின்றது. டொனல்ட் ட்ரம்ப் தமது ஆதரவை ஈரானிய மக்களுக்கு தெரிவித்தபடியால் பல்வேறு அமைப்புகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, மக்களை ஒடுக்கும் ஈரானிய அரசுக்கு ஆதரவை வழங்குகின்றன. இது ஒரு படு முட்டள்தனமான ஒரு செயற்பாடு ஆகும். அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே ஒரு கொள்கையினை மனதிற் கொண்டு போராடும் ஈரானிய மக்களுக்கு ஆதரவளிக்காமல், போராட்டத்தை ஒடுக்கும் ஈரானிய அரசுக்கு ஆதரவளிப்பது கண்டிக்கத்தக்கது. அவர்களின் சரியான அரசியல் தெளிவின்மையையே இது காட்டுகின்றது.

மக்களுக்கு ஆதரவாக தெஹ்ரான் கரும்பு தொழிற்சாலை ( Tehran Sugar Cane Factory/ Haft Tapeh Sugar factory)  தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  இக்கம்பனி தனது தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை. ஒவ்வொரு தடவையும் தமக்கான ஊதியத்தையும், கொடுப்பனவுகளையும் பல்வேறு போராட்டங்களின் பின்னரே பெற வேண்டியுள்ளது எனவும் அரசும் அவர்களுக்கு சாதகமாகவே செயற்படுகின்றது எனவும் அத்தொழிலாளர்கள் தெஹ்ரான் கருப்புத் தொழிற்சாலை நிறுவனத்தின் மீதும் அரசின் மீதும் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். அந்நிறுவனத்தின் மேலாளர்கள் அதிக வசதி கொண்டவர்களாகவும், தொழிலார்கள் வறுமை நிலையிலும் காணப்படுகின்றனர்.

மேலும் இந்நிறுவத்தில் வேலை செய்யும் கரும்பு அறுவடை செய்யும் தொழிலாளிகளுக்கு காப்பீடு செய்யவோ அல்லது ஓய்வூதியக் கொடுபனவு வழங்கவோ நிறுவனம் தயாராக இல்லை. அவர்கள் குறித்த பருவத்தில் மட்டும் வேலை செய்யும் பகுதி நேர தொழிலார்கள் ஆகையால் அவர்களுக்கு காப்புறுதி மற்றும் ஓய்வூதியம் வழங்க முடியாது எனவும் மறுத்துள்ளது. தொழிலார்களின் உரிமை பறிக்கப்படுவது மட்டுமல்லாமல் அக்கரும்பு நிறுவனத்தின் சூழல் வேலை செய்வதற்குரிய அடிப்படை வசதிகளைக் கொண்டிருக்காமல் மிகுந்த மட்டமான நிலைமையிலேயே காணப்படுகிறது.

மேலும் 2014 இல் கரும்பு அறுவடை செய்யும் தொழிளார்களுக்கு நஷ்ட ஈடாக 250 பில்லியன் ரியால்கள் ( 7 மில்லியன் டொலர்கள் ) வழங்குவதற்கு சம்மதித்திருந்தது எனினும் இன்றுவரை அந்த நஷ்ட ஈடு முழுமையாக வழங்கப் படவில்லை. மேலும் சமூக பாதுகாப்பு திட்டத்துக்கு இந் நிறுவனம் தான் வழங்க வேண்டிய பணத்தினை வழங்காததால் தொழிலார்கள் தமக்குரிய ஓய்வூதியங்களை பெற முடியாமல் உள்ளது. கடந்த ஆறு மாதங்களாக தொழிலார்களின் ஊதியங்கள் வழங்கப்படாமையினால் அவர்களின் குடும்பங்கள் பசியியிலும் வறுமையிலும் வாடுகின்றனர். இதனால் கொதிப்படைந்த தொழிலாளர்களே இப்பொழுது போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

முறையாக சம்பளம் தராத, தொழிளார்களுக்கு காப்பீடு செய்யாத, ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்காத தொழிலார்களை சுரண்டும் தனியார் வசமிருக்கும் இத் தொழிற்சாலையை தேசியமயப்படுத்தவேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கையை ஜனாதிபதி ரூஹாணி நிராகரித்துள்ளார். இதனால் தொழிலாளர்கள் தொடர்ந்தும் ஒழுங்கான வேலையின்மை, வேலைகேற்ற ஊதியமின்மை, ஓய்வூதியமின்மை போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர்.

இவர்களுடன் இணைந்து தொழிற்சங்கத்திலுள்ள தெஹரான் பஸ் தொழிலார்கள், உட்பட பல தொழிற்சங்க செயற்பாட்டாளர்களும் போராட்டத்தில் இணைந்திருந்தனர். இது தவிர பல்வேறு சுயாதீன தொழிற்சங்கங்களும் தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்திருந்தது.

ஈரானின் முன்னால் ஜனாதிபதியும், ஈரானின் முதல் பத்து பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவருமாகிய மஹ்முத் அஹ்மதின் “ மக்களின் பிரச்சனைகளில் இருந்து அவர்கள் தள்ளியே நிற்கின்றனர். சமுகத்தின் யதார்த்த நிலை பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது” என்று ஈரானிய அரச அதிகாரத்தையும், நீதித்துறையையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இறுக்கமான சுதந்திரமற்ற ஒரு ஜனாநாயக நிலைமையே ஈரானில் காணப்படுகின்றது என்பதையே மேற்படி சம்பவம் காட்டுகின்றது.

சில வருடங்களுக்கு முன்னர் ஈரானிய மதகுரு ஒருவரின் கார் மக்களால் அடித்து நொறுக்கப்பட்டது அதன் பெறுமதி பெருமாளான ஈரானிய மக்களின் பத்து வருட ஊதியம் ஆகும். ஈரானில் நிலவி வரும் சமத்துவமின்மையையே மேற்படி சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. ஈரானின் உயர் பீட மதகுருக்கள், உயர்தட்டு மக்கள் என இரண்டு சத வீதமான மக்கள் ஆடம்பர கார், ஆடம்பர உணவு, உயர்ரக துணிகள் என பகட்டு ஆடம்பர பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் அதே வேளை மறு பக்கத்தில் பெருமளவிலான மக்கள் வறுமையினாலும், பசியினாலும், வேலையின்மையினாலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 33 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள், அதாவது 24 மில்லியனிற்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழேயே வாழ்கின்றனர்.

கடந்த இருபது வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட தற்பொழுது பொருட்களின் விலையானது சராசரியாக 22 மடங்கால் அதிகரித்துள்ளது. அதனால் மக்களின் வாங்கும் திறன் குறைவடைந்துள்ளது. 2007-2008 காலப்பகுதியில் ஒரு குடும்பத்தின் சராசரி செலவீனம் 14,800 டொலர்களாக காணப்பட்டது எனினும் 2016-2017 வரையான காலப்பகுதியில் அது 12,515 டொலர்களாகக் குறைவடைந்திருந்தது. குறிப்பாக 2009 ற்கு பின்னர் ஈரானின் பொருளாதாரம் சொல்லிக் கொள்ளும் படியாக வளர்ச்சி அடைய வில்லை அதனால் ஊதிய உயர்வின்மை, வேலையில்லாப் பிரச்சனை, வறுமை போன்ற பிரச்சனைகள் காணப்பட்டன. ஆகவே மக்களின் வாங்கும் திறனும் குறிப்பாக சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க குடும்பத்தை இந்நிலைமை வெகுவாகப் பாதித்தது.

கடந்த பத்து வருடங்களில் பாண், பால், இறைச்சி போன்றனவற்றை மக்கள்  நுகரும் அளவு 3௦ சதவீதத்திலிருந்து 5௦ சதவீதம் வரை குறைவடைந்துள்ளது.  2006 இல் சராசரியாக 1.2 கிலோ இறைச்சி, 4 லிட்டர் பால் மற்றும் 9 கிலோ பாணினை வாராந்தம் உட்கொண்ட ஒரு குடும்பமானது 2017 இல் முறையே 800 கிராம் இறைச்சி, 2 லிட்டர் பால், 6 கிலோ பாண் என தமது தேவையை சுருக்கிக் கொண்டனர். மக்களின் வாங்கும் திறன் குறைவடைந்துள்ளமையே அதன் முக்கிய காரணமாகும். கடந்த பத்து வருடத்தில் இறைச்சியின் விலை 590 சதவீதத்தாலும், பாலின் விலை 650 சதவீதத்தாலும், பாணின் விலை 1380 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த இருபது வருடங்களில் வீடுகளின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. பணவீக்கத்தின் வீதத்துடன் ஒப்பிடும்பொழுது இந்த அதிகரிப்பானது மிக அதிகமாகவே காணப்படுகின்றது அதனால் வீடு வாங்கும் மக்களின் எண்ணிகையும் குறைவடைந்துள்ளது. இதனால் கடந்த இருபது வருடத்துக்கு முன்னர் ஐந்தில் ஒருவரே வாடகை வீட்டில் இருப்பர் தற்பொழுது அந் நிலைமை மாறி மூன்றில் ஒருவர் வாடகை வீட்டில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக வாழும், ஈரானின் தலைநகரமான தெஹ்ரானில் சாதாரண குடும்பத்தின் சம்பளத்தின் அரைவாசியானது வாடகைக்கே சென்றுவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2011 இல் இடம்பெற்ற துன்சிய போராட்டம் போல், 2017 இல் இடம்பெற்ற   ஜல்லிகட்டு போராட்டம் போல், ஈரானிய மக்கள் போராட்டத்திலும் ஸ்மார்ட் போன்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. 2011 இல் 16.2 வீதமான மக்களே ஸ்மார்ட்போன் வைத்திருந்தனர் எனினும் 2016 இல் அதன் சதவீதமானது 41.3 இணை எட்டியிருந்ததும் அதற்குரிய முக்கிய காரணமாகும்.

டெலிகிராம் என்னும் செயலி (app) அதிகமான ஈரானிய மக்களால் பயன்படுத்தப்படுகிறது. போராட்டங்களை ஏற்பாடு செய்து ஒழுங்குபடுத்துவதற்கும், போராட்டம் சம்பந்தமான தகவல்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை பரிமாறுவதற்கும் மக்கள் அதனையே பயன்படுத்தினர். அதனால் அதிகார சக்திகள் இன்ஸ்ராகிராம், டெலிகிராம் உட்பட பல சமூக வலைத்தளங்களை தடை செய்தது. டெலிகிராமின் சேவையினை நிறுத்தக் கோரி ஈரானிய அரசு அதன் நிறுவனரான பவெல் துரோவ் ( Pavel Durov) விடம் கோரிக்கை விடுத்தனர் எனினும் அவர் அதனை நிராகரிக்கவே ஈரான் உடனடியாக டெலிகிராமினை தடை செய்தது. கடந்த வருடம் ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் போராட்டம் நடைபெற்ற பொழுது எவ்வாறு மின்சாரம், தண்ணீர் வசதிகைளை தடை செய்து போராடடத்தை குழப்பியதோ அதே போன்ற ஒரு நடவடிக்கை இதுவாகும். மக்கள் போராட்டங்களை தடை செய்ய பொதுவாக எல்லா அரசும் இது போன்ற மலினமான நடவடிக்கைகளையே கையாளும் என்பது வரலாறு.

அதிகளவான கடன்களை ஈரான் அரசு வங்கிகளுக்கு கொடுக்க வேண்டி இருகின்றமை, ஓய்வூதிய நிதிகளில் குறைப்பனவு, நிதி நிறுவனங்கள் திவாலானமை, அதிகளாவான செல்வம் குறித்த சில தனியார் கை வசம் இருத்தல் ஆகிய காரணங்களால் மக்கள் மென்மேலும் ஏழ்மை நிலைக்கு செல்ல அதிகாரத்துடன் இணைந்த செல்வந்தர் கூட்டம் மேன் மேலும் செல்வந்தராகிக் கொண்டிருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அவஸ்தைக்கும், பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளாகினார். இதனாலேயே இழப்பதற்கு எதுவுமில்லாத மக்கள் போராட்டத்தில் இறங்கினார்.

மதமும் அரசும் அதன் தலைவர்களும் இணைந்து மக்களை அடக்கி ஒடுக்கியதன் விளைவே இந்தப் போராட்டமாகும். மேலும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக பெண்ணொருவர் தனது முக்காடைக் கழட்டி தடியில் தொங்கவிட்டு போராடிய சம்பவமும் நடந்தேறியது இங்கு குறிப்பிடத்தக்கது. மத ஒடுக்குமுறையில் இருந்தும் இளைஞர் சமுதாயம் விடுபட விரும்புகின்றது என்பதையே மேற்படி நிகழ்வு காட்டுகின்றது. ஈரானில் பெரும்பான்மையான இளையோர் கல்வி கற்றவர்களாகவும், கலாச்சார பண்பாட்டு வளர்ச்சி உடையவர்களாகவும் காணப்படுகிறார்கள். சனநாயகத்துக்கான வேட்கை, மேற்கில் மக்கள் அனுபவிக்கும் வாழ்க்கை தரத்துக்கான வேட்கை என்பன இவர்கள் மத்தியில் முதன்மை பட்டிருப்பது வியப்பில்லை. இந்த மோகம் சில சிறுபான்மை இளையோர் மத்தியில் அமெரிக்கா பற்றிய சாதகமான உணர்வு இருக்க காரணாமாகவும் இருக்கிறது. இதனால் ஒரு சில அமெரிக்க ஆதரவு உரையாடல்களும் இளையோர் மத்தியில் நிகழ்வதைப் பார்க்கலாம். ஆனால் இது பொதுவான ஒன்றல்ல. ஈரானிய அரச எதிர்ப்பு சமன் அமெரிக்க ட்ரம்ப் ஆதரவு என்ற நிலைப்பாடு அங்கு இல்லை. சில குறுங்குழுவாத அமைப்புக்கள் மற்றும் விளக்கமற்ற ‘புத்தி ஜீவிகள்’ எனத் தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளும் ஒரு சிலர்தான் இத்தகையை போலி ‘ஏகாபத்திய எதிர்ப்பு’ பேசுகின்றனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற போர்வைக்குள் பல்வேறு கொடுமைகள் பாதுகாக்கப் படுகிறது. இளையோரின் போராட்டம் கொச்சை படுத்தப் படுகிறது. எல்லாப் போராட்டங்களையும் ‘மேற்கத்தேய சதி’ எனப் பார்க்கும் போக்குகளும் உண்டு. மக்கள் போராட்டத்தை – இளையோர் கொட்டத்தை தாங்கள் நினைத்தபடி திரட்டும் அதிசய சக்தி மேற்கத்தேய அரசுகளுக்கு இருப்பது போல் இவர்கள் எழுதுவதும் பேசுவதும் அவர்தம் தத்துவார்த்த –அரசியற் குறைபாட்டையே சுட்டி நிற்கிறது.

ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம் செய்வது என்பது இலகுவான காரியமல்ல ஏனெனில் ஈரானிய உளவுத்துறை மற்றும் IRGC என்னும் இராணுவப் படை போன்றன எப்பொழுதும் ஈரானிய இஸ்லாமிய அமைப்பு முறையினை பாதுகாக்கவும், வெளிநாட்டு சக்திகள் உள்நுழைய தடுக்கவும் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும். அதனையும் தாண்டி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளமை அங்கிருக்கும் கொதிப்பு நிலவரத்தைக் காட்டுகிறது.

போராட்டம் எழும் தருணமெல்லாம் முடக்கப்பட்ட போதும் ஈரானிய மக்கள் தமது எதிர் போராட்டத்தை அவ்வப்போது செய்து வருகிறார்கள். அதிகார சக்திகள் மக்கள் போராட்டத்தை முடக்கி மீண்டும் தமது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள வேலையில்லாப் பிரச்சனை, விலைவாசி உயர்வு, ஊழல், மதவாதிகளின் அடக்குமுறை என ஒடுக்கு முறைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

மேலும் அரசியல் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளிலிருந்து கைது செய்யப்பட்டவர்கள், கைது செய்யப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பாக உடனடியாக சுயாதீனா, நடுநிலையான, வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். அத்துடன் இறந்தவர்கள் மீது சுதந்திரமான பிரேத பரிசோதனைகளும் செய்யப் படவேண்டும். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். அதற்கான போராட்டம் வலுப்பட வேண்டும்.

இப்போராட்டம் சிதறாமல் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும் எனில் மக்கள் அனைவரும் ஒரு அமைப்பாக திரள வேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் கோரிக்கைகளும் போராட்டமும் வலுப்பெறும். அதிகார சக்திகளை அடிபணிய வைக்க தூர நோக்குள்ள சரியான திட்டமிடலுடன் கூடிய போராட்டம் கட்டப்படுவது அவசியமாகும். அங்குள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் இதர போராட்டச் சக்திக்ள் ஒன்றுபட்ட ஆதரவை போராட்டத்திற்கு வழங்கி அதில் முழுமையாக பங்குபற்ற முன்வரவேண்டும். துனிசியா முதற்கொண்டு சிரியா வரை இருக்கும் பல்வேறு முற்போக்கு சக்திகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி போராட்டத்தைப் பலப்படுத்த முன்வரவேண்டும்.

சவூதி அரேபியா முதற்கொண்டு பல மத்திய கிழக்கு நாடுகள் மக்களை ஒடுக்கும் சர்வாதிகார சக்திகளாக இருக்கின்றன. ஈரானிய எழுச்சிகர நடவடிக்கை –மற்றுமொரு ஈரானியப் புரட்சி அப்பகுதியின் அனைத்து அதிகார சக்திகளுக்கும் சாவுமணி அடிக்கவல்லது.

 

சு. கஜமுகன் (லண்டன் )

gajan2050@yahoo.com