இன்னும் ஒரு சில மாதங்களில் வர இருக்கின்ற தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் பற்றிய கள நிலவரத்தை இக்கட்டுரை அலசி ஆராய்கின்றது. திமுக, அதிமுக, மக்கள் நலக் கூட்டணி, பாமக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக போன்ற முக்கிய கட்சிகள் போட்டியில் களமிறங்கி உள்ளது. கடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவி கொண்ட திமுக இம்முறை காங்கிரஸ் உடன் கட்டணி அமைத்து களம் இறங்கி உள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி,மதிமுக,இந்தியன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் காங்கிரஸ் என்ற நான்கு கட்சியும் ஒன்றாக இணைந்து மக்கள் நல கூட்டணியை உருவாக்கி ஒரு மூன்றாவது பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளது. நாம் தமிழர் கட்சி, பாமக போன்றன தனித்தனியாக போட்டியிடுகின்றன.
திமுக, அதிமுக என்ற இரு திராவிடக் கட்சிகளுக்கு சற்று கலக்கத்தை ஏறப்படுத்தும் கூட்டணியாகவே மக்கள் நலக் கூட்டணி பார்க்கப்படுகின்றது. அதற்கு மிக முக்கிய காரணியாகப் பார்க்கப்படுவது வைகோ, திருமாவளனின் வாக்கு வங்கியும், நல்லகண்ணு மற்றும் இடது சாரிய தலைவர்களின் முற்போக்கு கொள்கைகளும் ஆகும். இவை தவிர திமுக அதிமுக போன்ற ஊழல் அரசின் மீது வெறுப்புக் கொண்டோர் ஆதரவு வழங்கக் கூடிய மாற்றுக் கட்சியாக இந்த “ம.ந,கூ“ காணப்படுகின்றது. ஏனெனில் திமுக ஆட்சிக்கு வந்தால் அது ஒரு மாற்று ஆட்சியாகவே இருக்குமே தவிர ஒரு மாற்று அரசியலாக இருக்காது. திராவிடக் கட்சிகள் இரண்டும் லஞ்சம் ஊழல் நிலா அபகரிப்பு சுரண்டல் கருத்துச் சுதந்திரம் இல்லாமை என ஜனநாயகம் இல்லாத வெறும் பண நாயக அரசாகவே செயற்படும்.
“ம.ந,கூ” தமது தேர்தல் விஞ்ஞாபத்தில் (கொள்கைகளில்) ஊழலுக்கு எதிரான ஆட்சி, நேர்மையான ஜனநாய ஆட்சி, மது விலக்களிக்கப்பட்ட ஆட்சி என சில முற்போக்குக் கொள்கைகளை முன் வைத்துள்ளனர். வைகோ, திருமாவளவன், நல்லகண்ணு போன்றோரால் அத்தைகைய ஆட்சி தரப்படும் என ஒரு சில மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். முக்கியமாக நெல்லைக் கண்ணன், ஞானி, பத்ரி, தமிழருவி மணியன் போன்ற இலக்கிய ஆர்வலர்களும், எழுத்தாளர்களும் “ம.ந,கூ”வை ஆதரிக்கின்றனர். “ஆகவேதங்களால்” ஆட்சியைப் பிடிக்க முடியும், ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என வைகோ, திருமாவளவன் போன்றோர் பகற்கனவு கண்டு கொண்டிருக்கின்றனர்.
திமுகாவின் கள நிலவரத்தை உற்று நோக்கில் மீதேன் திட்டத்திற்கு ஸ்டாலின் அனுமதி வழங்கியமை, குடும்ப
அரசியல்,வாரிசு அரசியல், நில அபகரிப்பு 2G அலைகற்றை ஊழல், ஈழப்போர் சமயத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி போன்றன கடந்த காலத்தில் அவர்களுக்கு எதிரான ஒரு மன நிலைமையை தோற்றுவித்தாலும் தற்போதைய அம்மாவின் அராஜக ஆட்சி அவர்களுக்கு ஒரு சாதகமான அலையையே உருவாக்கயிருக்கின்றது எனலாம். “கடந்த கால தவறுக்கு மன்னிப்பு கோருகிறோம்” என வெளிப்படையாகவே அறிவித்து மீண்டும் தமக்கு ஆட்சியை வழங்கும் படி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். ஆகவே மீண்டும் திமுகா விற்கு என ஒரு சிலர் நம்புகின்றனர். எனினும் சட்ட மன்றத் தேர்தலுக்காக மறுபடியும், ஈழத்து கொலைகளுக்குப் பின்னிருந்த காங்கிரஸ் உடனான திமுக கூட்டணி தீவிர தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும் மதச்சார்பான பாஜக வுடனா கூட்டணியிலும் பார்க்க இது பரவாயில்லை எனச் சிலர் தேற்றிக்கொள்கின்றனர். தலித் மக்களுக்கு எதிரான மனநிலை , இந்துத்துவத்தைப் பரப்புதல் , முஸ்லிம் எதிர்ப்பு போன்றன தமிழ்நாட்டில் பா.ஜ.க வுக்குப் பாதகமான கள நிலைமையையே ஏற்படுத்தியுள்ளன எனலாம்.
மதுவுக்கு எதிராகப் போராடிய சசிபெருமாள் கொலை , கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக கோவலன் கைது செய்யப் பட்டமை , சொத்துக் குவிப்பு வழக்கு , சென்னை வெள்ளப் பேரிடர் ஏற்படுத்திய தாக்கம்,மூலைக்கு மூலை அரச டாஸ்மாக் கடை , 20 தமிழர்க்ள ஆந்திராவில் கொல்லப்பட்ட போது வேடிக்கை மட்டுமே பார்த்தமை போன்றன அதிமுக விற்கு எதிரான நிலைமையை தற்பொழுது தோற்றுவித்திருக்கின்றது. இவ்வாறான பஜாக மற்றும் அதிமுக எதிர்ப்பு அலை ஒன்றாகத் திரண்டு திமுகாவுக்குச் சாதகமான சூழ்நிலைமை ஏற்படுத்தலாம். எனினும் இன்னும் மூன்று மாதங்கள் இருப்பதனால்கடைசி நேரங்களில் களநிலைமைகள் மாறக் கூடிய சாத்தியக் கூறுகளும் உண்டு.
தற்போதுள்ள கட்சிகளில் எதுவுமே மக்கள் நலன் சார்ந்து ,நேர்மையான கொள்கையுடன் இயங்கும் கட்சிகள் அல்ல. அனைத்துக் கட்சிக்களுமே சுய நல அரசியலையே நடத்துகின்றன. தாம் ஆட்சியைப்பிடிப்பதற்க்கு யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்று நாக்கைத் தொங்கப் போட்டுகொண்டு அலையும் நாய் போல அலைகிறார்களே தவிர ஒடுக்கப்படும் மக்களுக்காக ஓரணியில் திரள்பவர்கள் எவருமில்லை. இத்தைகைய அரசியல்வாதிகளால் புரட்சிகரமான மாற்றங்களையோ அல்லது உருப்படியான திட்டங்களையோ கொண்டுவரக் கூடிய சாத்தியம் துளியளவும் இல்லை என்பதே ஆணித்தரமானஉண்மை. ஆட்சியைப் பிடிக்கும் ஒரே ஒரு நோக்கத்தில் ஒரு சில கட்சிகள் சில முற்போக்கான திட்டங்களை தெரிவிக்கின்றன. ஊழலற்ற ஆட்சி , மதுவற்ற மாநிலம் , லஞ்ச ஒழிப்பு என்பன அவற்றுள் சிலவாகும்.ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த எந்தவொரு செயற் திட்டங்களும் அவர்களிடம் இல்லை , இது வெறுமனே மக்களை முட்டாளாக்கும் செயற்பாடே தவிர வேறொன்றுமில்லை. ஏனெனில் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தேர்தலின் பின் எந்த ஒரு விசர் வாக்களனும் வந்து நீங்கள் சொன்ன திட்டங்களை ஏன் நடைமுறைபடுத்தவில்லை என்று அவர்களிடம் கேட்கப் போவதில்லை. கேட்டாலும் அவர்கள்அதற்கு பதில் சொல்லப் போவதில்லை. மக்கள் வெறும் முட்டாள்கள் என்று நம்பி வாழும் அரசியல்வாதிகள் இவர்கள்.
கடந்த கால தவறுக்கு மன்னிப்பு கோருகிறோம் என்று கூறுகிறார் ஸ்டாலின் அய்யா அவர்கள் . அய்யா ஸ்டாலின் அவர்களே நாங்கள் உங்களை மன்னித்து விடுகிறோம் , ஆனால் பதிலுக்கு நீங்கள் 2ஜிஅலைக்கற்றை மூலம் கொள்ளை அடித்ததை மக்களுக்கு கொடுத்து விடுகிறீர்களா?, அபகரித்த நிலங்களை நிலமில்லாத வறிய என் மக்களுக்கு கொடுத்து விடுகிறீர்களா ?, குடும்பமாக சேர்ந்து கொளையடித்தகோடிக்கணக்கான பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுதுகிறீர்களா ?,இதுவொன்றையும் செய்யாமல் வெறுமனே மன்னிப்பு கோருகிறோம் என்று வாயால் சொன்னால் அதன் அர்த்தம் என்ன? ,மக்களை முட்டாளாக்கும் முயற்சியன்றி வேறொன்றுமில்லை. திமுக கொள்ளையடித்த பணத்தைக் கொண்டே சென்னையை லண்டன் மாநகரம் போல் மிளிரச் செய்யலாம் , ஆகவே நீங்கள் கொள்ளையடித்தஎங்கள் பணத்தை கொண்டு எங்கள் நகரை கட்டமையுங்கள், எங்களுக்கு அடிப்படை வசதியை செய்து தாருங்கள், நாங்கள் உங்களை மன்னித்து விடுகிறோம். அதனை விடுத்து இந்த வாய்ச்சாடல் யாரைமுட்டாளாக்கும் முயற்சி திரு ஸ்டாலின் அவர்களே!
அனைத்துக் கட்சிகளும் வாக்குகளைப் பெற மக்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை விட , யாருடன் கூட்டணி அமைத்தால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதிலையே குறியாக உள்ளன. இத்தையஅரசியல்வாதிகள் நாளைக்கு ஆட்சிக்கு வந்தால் மக்களின் நலன் கருதி இயங்குவார்களா ?, ஒடுக்கப்படும் மக்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பார்களா ?. நிச்சயமாக இல்லை என்பதே உண்மை. இத்தகைய“கறுப்பு ஆடுகள்” இனங்காணப்பட்டு முற்றிலுமாக அகற்றப் படவேண்டும். இல்லையேல் ஒடுக்கப்படும் மக்கள் மீண்டும் மீண்டும் ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அதிகாரவர்க்கம் அவர்களை அடக்கிக்கொண்டே இருக்கும்.
“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்துடுவோம்” என்றான் பாரதி. ஓரு பிடி சோத்துக்கு வழியின்றி எத்தகையாயிரம் மக்கள் இன்றும் வாடி வதங்கிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும்மூன்று வேளை உணவுக்கு வழியில்லாமல்தான் பெரும்பான்மை மக்கள் வாழ்கின்றனர். ஒரு நாளுக்கு ஒருவேளை உண்ணும் எத்தனயோ மக்கள் இன்னும் நகர்ப் புறங்களில் உள்ளனர். இத்தனை ஆண்டு கால திராவிட ஆட்சியால் இதனை மாற்ற முடிந்ததா? இல்லையே ?, வெக்கங் கெட்ட அரசியல்வாதிகள் இவர்கள் , இவர்களை இனியும் நம்பி மோசம் போக மக்கள் தயாரில்லை, இவர்களுக்கு மீண்டும் மீண்டும்வாக்கு போடுவது மூடத்தனம். இந்த மூடத்தனத்தை பரப்பி காத்துக்கொள்வதற்கென்று பாடுபடுபவர்கள் வறியோர் அல்லர். எங்களைச் சுறண்டி வாழும் வர்க்கம்தான் மூடத்தனத்தை கட்டிக் காப்பதில் பலனடைகிறது. அந்த மூடர்கூட்டத்தினுள் பிரபலமான இலக்கியவாதிகளும், புத்திஜீவிகளும் உள்ளனர் என்பதுதான் மிகப்பெரிய காலக் கொடுமை.
தமிழ்நாட்டில் எந்த முதலும் போடாமல் இலகுவாக தொடங்கக்கூடிய ஒரே தொழில் சாமியார் தொழில்தான் .எந்த வியாபாரத்திலும் நட்டம் ஏற்படலாம் ஆனால் இந்த சாமியார் தொழில் நட்டமே ஏற்படாது. முதலில் சித்து வேடிக்கைகள் காட்டி பிரபலம் ஆகவேண்டியது. பின்னர் பிரபலம் ஆன கையுடன் சாமியார் முதலாவதாக தொடங்குவது, வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக வியாபாரங்கள்தான். அனைத்து அரசியல்வாதிகளும் அந்த சாமியார்க்கு மண்டியிட்டு சலாம் போட்டுக்கொண்டே இருப்பர் மறுபக்கத்தில் சாமியார் வருமானத்தை கூட்டிக்கொண்டே இருப்பார். கல்வி சுகாதாரம் என்ற மக்களின்அத்தியாவசிய தேவைகள் இவ்வாறு பந்தாடப்படுகிறது. சாமியார்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பணம் சேர்க்கும் வியாபாரமாக இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்ய வந்த இந்த அரசியல்வாதிகளும் ,மக்கள் பிரச்சனைகளை தீர்க்கின்றோம் எனச் சொல்லும் இந்த காப்ரேட் சாமியார்களும் கல்வி , மருத்துவ சேவைகளை இலவச சேவைகளாக வழங்க வேண்டியதுதானே? ஏன் வழங்குகிறார்கள் இல்லை? ஏனெனில் இவர்கள் யாரும் மக்கள் நலன் சார்ந்து இயங்குபவர்கள் இல்லை. பணத்தை நோக்கி ஓடும் அதிகார வர்க்கமும் அதன் ஒத்தோடிகளும் தான் இவர்கள். மக்களிடமிருந்து எவ்வாறு பணத்தைபிடுங்கலாம் என்று காத்துக்கொண்டிருக்கும் பிணம்தின்னிகள் இவர்கள்.
அரசியல்வாதிகள் மேல் மிகுந்த கோபத்துடனும் ஆத்திரத்துடனும் , வேதனையுடனும் நான் இதனை இங்கு எழுதுகின்றேன் ஏனெனில் ஒடுக்கப்பட்டுள்ள மக்கள் மீதுள்ள அன்பும் அக்கறையும் தான் இந்ததார்மீகக் கோபத்தை என்னுள் ஏற்படுத்துகின்றன. இந்தக் கோபம் எந்த அரசியல்வாதிக்கவது இருக்கின்றதா?, இருந்தால் எப்படி மீண்டும் காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைக்கும். மாபெரும் ஊழலைச் செய்த, மாபெரும் இனப் படுகொலையை முன்னின்று நடத்திய காங்கிரசின் கறை கழுவப்பட்டு விட்டதா?, இல்லையே ஆனால் அதற்குள் மீண்டும் கூட்டணி வைக்கும் திமுகா வை விட கேவலமானவர்கள் யாரவது இருப்பர்களா?, அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மிக மோசமான விச ஜந்துக்கள் என்று பார்ப்பதில் என்ன தவறு?
மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்த காங்கிரசுடன் எதற்கு கூட்டணி என்று கேட்க எந்த திமுக அரசியவாதிக்கோ அல்லது திமுக ஆதரவாளர்களுக்கோ திராணி உண்டா?, நெஞ்சத் துணிவு உண்டா?இல்லையே!, காங்கரஸின் எலும்புத் துண்டுக்கு ஆசைப்படுபவர்கள் இவர்கள், அந்த பிணம்தின்னி பிசாசுகளை நக்கிப் பிழைக்கும் ஒட்டுண்ணிகள் தான் இந்த திமுக ஆதரவாளர்கள். அதிகாரத்தை நக்கிப்பிழைக்கும் தொழிலைத்தான் ஒரு சில இலக்கியவாதிகளும் திமுகவுடன் இணைந்து செய்கின்றனர். கோமணத்தின் சுவை என்ன என்பத்தை இவர்களிடம் தான் கேட்க வேண்டும். பலாப்பழச் சுவையை விட இனிமையானது என்று தயங்காமல் கூறுவார்கள் இந்த மானிட ஜென்மங்கள்.
அண்மையில் நடந்த சென்னை வெள்ளப் பேரிடரை எடுத்துக் கொண்டாலே தெரியும் அரசியல்வாதிகளின் லட்சணம் என்னவென்று?, எந்தக் கட்சியும் மக்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கத்தில் வரவில்லை , அனைவரும் தமது கட்சியின் பெயரை , கட்சியின் சின்னத்தை மக்கள் மத்தியில் விளம்பரம் செய்யவே வந்தனர், அதாவது கட்சிப் பிரச்சாரத்துக்கே வந்தனர். மக்கள் மீது உண்மையான அன்பும்அக்கறையும் கொண்டு எந்த அரசியல்வாதியும் வரவில்லை.
அடுத்து இங்கிருக்கும் இடதுசாரி அமைப்புகளை கருத்தில் கொள்வோமானால்,பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவு அளிக்கும் இந்த போக்கிரி இடதுசாரிகள் ஈழ விடுதலைக்கு தங்கள் ஆதரவைவழங்குவதில்லை. உலகத் தொழிலாளர்களுக்கு குரலெழுப்புவதாக பாசாங்கு காட்டும் இவர்கள் உலகத் தொழிலாளர்கள் பற்றியோ உள்நாட்டு தொழிலாளர்கள் பற்றியோ உருப்படியான அக்கறைகொண்டவர்கள் அல்ல. இங்கிருக்கும் மீனவரின் பிரச்சனைகளுக்கும் , விவசாயிகளின் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பதில்லை. முதலாளித்துவத்துக்கு எதிராக போராடுவதாக சொல்லும் இவர்கள் தமிழ்நாட்டு அணு உலைகளுக்கு எதிராக போராடுவதில்லை. சுற்றுப்புறச் சூழல் பற்றி எதுவித அக்கறையும் கொள்ளாத இவர்களை எவ்வாறு இடதுசாரிகள் என்பது?, எமது வளங்களை முதலாளித்துவ நிறுவனங்கள்கொள்ளையடிப்பதற்கு எதிராக போராடாத இவர்கள் , எதிர்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் பறிபோகும் சமயத்தில் இவ்வாறே கை கட்டி வாய் பொத்தி நிற்பார்கள் இந்த வாய்ச்சொல் வீரர்கள். இதில் தா. பாண்டியன் முதன்மையானவர் ஜெயா அம்மாவின் பின் ஒளிந்து கொள்வதில் வல்லவர். இவர்களை எல்லாம் இடதுசாரி என்றால் கார்ல்மார்க்ஸ் வாந்தி எடுப்பார். இவர்களை எல்லாம் மார்க்கசிய-லெனினியவாதிகள் என்றால் லெனின் தற்கொலை செய்து விடுவார். இடதுசாரி என்னும் புலித்தோல் போர்த்திய வலதுசாரிகள் இவர்கள். வலதுசாரிய போக்குடன் காணப்படும் இவ்வாறான இடது சாரிய அமைப்புகளாலும் எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படமாட்டாது,
அப்படியானால் இதற்கு தீர்வுதான் என்ன ?, விதியே என மக்கள் நொந்துகொண்டு சாவதுதானா?, இல்லை நிச்சயமாக இல்லை. முதலில் உண்மையாக மக்கள் நலன் கருதி இயங்கும் அரசியல் கட்சிகள் , மக்கள்இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும். அவர்களுடன் மாணவர்களும் ஒன்றிணைய வேண்டும். மேலும் போக்கிரித்தனமான இடதுசாரிகள் அல்லாது , உண்மையான ஒடுக்கப்படுபவர்களுக்காக இயங்கும் இடதுசாரிகள் ஒன்றிணைய வேண்டும் . இவ்வாறு ஒருங்கினைந்த சமுதாயம் அரசியலில் ஈடுபடும்போதுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான பிரச்னைகள் தீர்க்கப்படும். இல்லாதோர்க்கும், இருப்போர்க்குமான இடைவெளி குறைக்கப்படும். இல்லையேல் வரவிருக்கும் வெற்று அரசு வெறுமனே டாட்டா பிர்லாக்களுக்கும்,அம்பானிகளுக்கும் மட்டுமே சேவை செய்யுமே தவிர, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அல்ல. இவைதவிர தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் அவ்வரசை பதவி இறக்க மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும். இவ்வாறானதொரு மக்கள் சார்ந்த,மக்களால் இயங்கும் அரசு இருக்கும் பட்சத்தில்தான் தமிழ்நாட்டுக்கு விடிவு உண்டு , இல்லையேல் நிச்சயமாக விடிவு இல்லை. திராவிட கட்சிகளால் எந்தவொரு சாப விமோசனமும் தமிழ்நாட்டுக்கு கிடைக்கப்போவது இல்லை என்பது அசைக்க முடியாத உண்மை. அதற்கு கடந்த கால அவர்களின் இத்தனை ஆண்டுகால ஆட்சியே உதாரணமாகும்.
கெளதம்