விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல்த் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் “ஒரு கூர் வாளின் நிழலில்” என்ற நூல் பற்றிய ஒரு பார்வை – நூல் அறிமுக விழாவிலிருந்து

12.03.2016 அன்று லண்டனில் தமிழினி எழுதிய “ஒரு கூர் வாளின் நிழலில் ” என்ற நூலின் அறிமுக விழா இடம்பெற்றது.  இந்த விழாவில் பங்கு கொண்ட  “வேணி”  இப் புத்தகம் தொடர்பாக தன்னுடைய பார்வையை அங்கு பதிவு செய்திருந்தார்.அந்த உரை இங்கே பதிவு செய்யப்படுகின்றது 

அனைவருக்கும் வணக்கம். தமிழினி அக்காவின் இந்த “ஒரு கூர்வாளின் நிழலில்” என்ற இந்த நூலில் சொல்லப்பட்டவற்றைப் பார்க்கும் முன் அவரின் வாழ்க்கைத் தொகுப்பு ஒன்றைச் சுருக்கமாகத் தருகின்றேன்.

சுப்பிரமணியம் சிவகாமி என்ற இயற்பெயரை உடைய தமிழினி அக்கா April 23rd 1972 அன்று பரந்தனில் பிறந்தார். இவர் பரந்தன்  மத்திய மகா வித்தியாலத்தில் உயர்தரம் பயின்று கொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலையின் தேவை உணர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைகின்றார்.

1993 இல் இவர் தனது முதல் கள போரில் அதாவது யாழ் தேவி இராணுவ நடவடிக்கையின் முறியடிப்புச் சமரில் பங்கேற்கின்றார். பின்னர் விடுதலைப் புலிகளின் வரலாற்றில் T- 55 ரக டாங்கி முதன் முதலில் கைப்பற்றப்பட்ட தவளை பாச்சல் நடவடிக்கையில் அதாவது தமிழீழ விடுதலைப் போரின் முதலாவது மரபுவழி வலிந்த போரான தவளைப் பாச்சல் நடவடிக்கையில் களமாடினார். பின்னர் பெண்புலிகளால் நிர்வகிக்கப்பட கயிறு தொழிற்சாலை மற்றும் பண்ணைகளிற்கு பொறுப்பாளராகின்றார்.

“சுதந்திரப் பறவைகள்” என்ற பெண்போராளிகளால் வெளியிடப்பட்டு வந்த இதழின் ஆசிரியர் குழாமிலும் முக்கிய இடம் வகித்தர். சுதந்திரப் பறவைகள் புத்தகத்துடன் வீடுவீடாக சென்று வீட்டிலுள்ள பெண்களுடன் பேசி, அவர்களிற்கு அரசியற் தெளிவூட்டி போராட்டத்தை மக்கள் மயப்படுத்தும் மிக முக்கிய பங்காற்றி வந்தார். பெண்ணியம் குறித்த புரிதல்களைப் பெற்று நேர்மையான பெண்ணியவாதியாகவும் உருவாகினார் தமிழினி அக்கா.

1995-96 இல் நடந்த “ரிவிரச” இராணுவ நடவடிக்கையின் பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு பின்வாங்கிய பின்னர் 1997 இல் நடந்த ஜெயசிக்குறு எதிர்ச் சமரில், மாங்குளம் களமுனையில் உணவுமின்றி உறக்கமுமின்றி களமாடி பாரிய சண்டை அனுபவத்தை தமிழினி அக்கா பெற்றார்.

June 2000 இல் தமிழீழ மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளராக பொறுப்பேற்றார். எனினும் 2001 இல் சிங்களப் பேரினவாதப் படைகள் ஆணையிறவை மீட்க தமது முழு வளத்தையும் பயன்படுத்தி தொடுத்த “அக்கினிகீலா” என்ற உக்கிரமான இராணுவ நடவடிக்கையில் அதாவது மிகவும் உக்கிரமான இந்த முன்னகர்வைத் தடுத்து நிறுத்தும் போரில் தமிழினி அக்கா களமாடினார்.

2002 பெப்ரவரி மாதம் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திட்டதும் கிளிநொச்சியில் தமிழீழ மகளிர் அரசியற்துறை செயலகத்தை நிறுவினார் தமிழினி அக்கா. ஒரு “double cab” வாகனத்தில் மெய்ப்பாதுகாவலருடன் வரும் அவாவின் அந்த மிடுக்கான இராணுவத் தோற்றத்தை உற்று நோக்கிய உலகப் பெண்ணியவாதிகள் எல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண்ணியத்திற்கான பங்களிப்பை பார்த்து மெய்சிலிர்த்து நின்றார்கள். இக்காலப்பகுதியில் தமிழினி அக்கா தலைமையில் பெண் போராளிகள் கொழும்பு சென்று அங்கு நடைபெற்ற பெண்கள் உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல்களிலும் கருத்திட்ட கூட்டங்களிலும் பங்குபெற்றனர்.

2003, 2005 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பியா வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அணியில் இடம் பெற்ற தமிழினி அக்கா, அந்தக்காலப்பகுதியில் புலம் பெயர் மக்களுடன் பழகி அவர்களுடன் நல்ல உறவையும் கொண்டிருந்தார்.

April 4 -5th 2009 இல் ஆனந்தபுரத்தில் நடந்த பெட்டி வடிவிலான முற்றுகையில் சிக்கி சிறு விழுப்புண்ணடந்து தமிழினி அக்கா வெளியேறினார்.

மே15 மக்களோடு மக்களாக தனது குடும்பத்துடன் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் நுழைந்த தமிழினி அக்கா 27 ஆம் திகதி இராணுவத்தால் இனங்காணப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் குற்றப் புலனாய்வுத்துறை, இராணுவப் புலனாய்வுத்துறை மற்றும் தேசிய புலனாய்வுத்துறை போன்ற சிறீலங்காவின் புலனாய்வு அமைப்புக்களால் கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு,  June 17th 2009 அன்று கொழும்பு நீதிமன்றத்தின் முன்னிறுத்தப்பட்டார். தமிழினியின் ஆரம்ப வழக்குரைஞராக இருந்த தமிழ்க் காங்கிரசின் தலைவர் விஞாயகமூர்த்தியால் கைவிடப்பட்ட பின்பு சிங்கள வக்கீலான மஞ்சுல பத்திராஜாவால் (Manjula Pathirajah) மேல்கொண்டு தமிழினியின் வழக்கு எடுத்து செல்லப்பட்டது. 26th 2012 அன்று கொழும்பு நீதிமன்ற நீதவான் இவரை பூந்தோட்டம் புணர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்ப உத்தரவிட்டார். அதன் பின் ஒரு வருட கால புணர்வாழ்வின் பின்னர் June 26th 2013 அன்று விடுதலை செய்யப்பட்டார்.

“ஒரு கூர் வாளின் நிழலில்” என்ற இந்த நூலிற்கான முன்னுரியை தமிழினி அக்காவின் கணவர் எழுதியுள்ளார். என்னுரையில் தமிழினி அக்கா இந்த நூல் எலுதப்பட்டதற்கான காரணங்களைக் கூறியுள்ளார். அதாவது இந்த நூல் ஏன் விடுதலைப் போராட்டம் தோற்றது என்ற கேள்விக்கு விடை தரும் என்று சொல்லியுள்ளார். இது 10 அத்தியாயங்களைக் கொண்டது.

“பாதை திறந்தது” என்ற அத்தியாயத்திலிருந்து ஆரம்பிகின்றது. இதில் யாழ்ப்பான இடம் பெயர்வின் பின் பாதை திறந்தது வரையாக வன்னியில் இடம்பெற்ற மாறங்களை, சண்டைகளை, நோய்களை பற்றி கூறியுள்ளார்.

அத்தியாயம் 2 “போருக்குள் பிறந்தேன்” இல் தன்னுடைய ஆரம்ப வாழ்க்கை எத்தகைய போர்ச் சூழலில் அமைந்தது என்றும், எப்போது போராட்டத்தில் இணைந்தார் என்றும் ஏன் இணைந்தார் என்றும் கூறியுள்ளார்.

அத்தியாயம் 3 “ஆயுதப்பயிற்சி பெற்ற அரசியல் போராளி ” என்பதில் போராட்டத்தில் இணைந்த பின் தான் பெற்ற பயிற்சிகள்,  செய்த அரசியல் செயற்பாடுகள், நிர்வாகப் பணிகள் பற்றியும் பேச்சாளராக ஆற்றிய பணிகள் பற்றியும் விபரித்துள்ளார்.

அத்தியாயம் 4 “ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்” என்பதில் பெண் போராளிகளை தமிழ் சமூகம் விலத்தி வைத்து ஒரு பிரமிப்புடன் பார்த்தார்கள் என்று குறிப்பிட்டு உண்மையான மாற்றத்தின் தேவை அந்த சமூகத்திற்கு இருந்தது என்று கூறியுள்ளார்.

அத்தியாயம் 5 “கிழக்கு மண்ணின் நினைவுகள் ” என்பதில் சுனாமிற்குப் பின் கிழக்கு மாகாணத்தில் உதவிகள் புரியச் சென்றிருந்த வேளையில் அங்குள்ள மக்களிடம் பழகிய நினைவுகளைப் பதிவு செய்துள்ளார்.

அத்தியாயம் 6 “உண்மையற்ற சமாதானமும் உருக்குலைந்த மக்கள் வாழ்வும்” என்பதில் சமாதான காலப் பகுதியில் தலைமையின் முடிவுகளில் ஏற்ப்பட்ட மாற்றங்கள், வன்னி மக்களின் வாழ்வியலில் ஏற்ப்பட்ட சடுதியான மாற்றங்கள் என்பன பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாயம் 7 “நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுகின்றோம் ” என்பதில் கட்டைய ஆட்ச்சேர்ப்பு, போராட்டத்தின் தோல்வி, அதற்கான காரணங்கள் பற்றி தன்னுடைய கருத்துக்களை எழுதியுள்ளார்.

அத்தியாயம் 8 “தமிழ் மக்களும் ஆயுதப் போராட்டமும்” என்பதில் புலிகளின் யுத்தகளங்களில் (பூநகரி, கிளாலி ) போன்ற தனது அனுபவங்களையும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும் காலம் வரையில் நடந்த நிகழ்வுகளையும் பகிர்ந்துள்ளார்.

அத்தியாயம் 9 “சரணடைவும் சிறைச்சாலையும்” ஆனது தமிழினி அக்காவின்  சரணடைந்த பொழுதுகள், புலனாய்வுத் துறையின்  விசாரணைகள், சிறைச்சாலையில் பெற்ற துன்பங்கள் என்பனவற்றை தாங்கி நிற்கின்றது. “புனர்வாழ்வு ” என்ற இறுதி அத்தியாயத்தில்  வவுனியா பூந்தோட்ட முகாமில் தான் பெற்ற பயிற்சி வகுப்புகள் சுற்றுலாக்கள் என்பவற்றை பற்றிக் கூறியுள்ளார். இனி இப் புத்தகம் தொடர்பான என் கருத்துக்களை முன்வைக்கின்றேன்.

தமிழினி அக்கா ஒரு விடுதலைப் போராளி. ஒரு விடுதலைப் போராளி எந்த அளவிற்கு ஒரு விடுதலைப் போராட்டத்தில் பங்களிகின்றார் என்பதைப் பொறுத்தே அவரது ஆளுமையானது வளர்த்தெடுக்கப் படுகின்றது.

அந்த வகையில் தமிழினி அக்காவின் தன் வரலாற்றிலிருந்து தமிழினி அக்கா கள அனுபவம் சம்பந்தமாகவும், கலை இலக்கியம் தொடர்பாகவும், மக்கள் சந்திப்பு மூலமாகவும், ஆரம்ப காலத்தில் விடுதலைப் புலிகள் உன்னதம் பெற்றிருந்த காலத்தில் தமிழ் மக்கள் மூலமான நெருக்கம் மூலமாகவும், மக்களிற்கு அரசியல் அறிவூட்டல் மூலமாகவும், நிர்வாக அனுபவம் மூலமாகவும், கதை சொல்லும் திறன் மூலமாகவும் ஒரு களப் போராளியாக, அரசியல் போராளியாக தியாகம் போராட்ட ஓர்மம் கொண்டு பல ஆளுமைகளைத் தன்னகத்தே வளர்த்தவர். பெண்ணியம் மற்றும் பல துறைகளில் அவர் ஆளுமை பெற்றிருந்தாலும் அவரிடத்தில் பூலோக அரசியல் நலன் சார் அரசியல் ஆய்வானது இருக்கவில்லை. திறனாய்வுகள் செய்யவில்லை புலனாய்வுகள் செய்ததாக எதுவும் இங்கு கூறப்படவில்லை.

சிங்கள கோட்டைக்குள் மறைவாய் வாழ்ந்த அனுபவம் இருந்ததில்லை. அனைத்துத் துன்பத்தையும் தாங்கி தலை மறைவாய் உரு மாற்றி கத்தியில் நடக்கும் போராட்டப் பணியும் செய்ததாயில்லை. தன்னையே பெயரிலந்து தனது சுயமிழந்து விடுதலைப் பணி செய்து விட்டு எவருக்கும் தெரியாமல் இருளுக்குள் ஒழிந்த தீபமாய் அவர் இருந்ததுமில்லை.

ஆகவே ஒரு போராளி தான் சார்ந்த விடயங்களை தனது பங்களிப்பு மூலமாகப் பெற்ற ஆளுமைத்திறன் ஆனது அந்த சமூகத்திற்குமானதும் அந்தச் சமூகத்தினது விடுதலைக்குமானதாகும். எனவே ஒரு போராளியின் கூட்டு முயற்சி, கூட்டு வெற்றி, சமூகப் புரட்சி, தேச விடுதலை என்றவாறு தான் ஒரு மக்கள் மயப்பட்ட அமைப்பு இயங்க முடியும்.

இதில் தமிழினி அக்க அனைவருக்கும் இலகுவாகத் தெரிந்து விடக்கூடிய சூழலைத் தன்னகத்தே கொண்ட ஒரு பெரும் பணியை ஒரு பெரும் பகுதியில் செய்துள்ளார். எனவே தமிழினி அக்காவால் சொல்லப்படும் விடயங்கள் எத்தகைய வரம்பு வீச்சுக்குட்பட்டது என்பதை வைத்தே அதன் செம்மையை நாம் விளங்கிக் கூற முடியும். அதைச் சமூகதிற்கும் எடுத்துச் செல்ல முடியும்.

தமிழினி அக்கா “என்னுரை” யில் “எதிர் கால சந்ததி தனது அறிவாற்றலால் உலகத்தை வென்றெடுக்க வேண்டும்” எனவும் பின் “ஆயுதப் போராட்டம் என்ற வகையில் எமது அடுத்த சந்ததி சிந்திக்கப்பட கூடாது” எனவும் இதை தான் ஆத்மாத்தமாக கூறுகின்றேன்” எனவும் சொல்லியிருக்கின்றார்.

தமிழினி அக்கா தன் இறுதி நாட்களில் தனது சமூக வாஞ்சையாக குறிப்பிட்ட அறிவுமைய உரிமைப் போராட்டம் என்பதற்கமைய, ஒரு அறிவு மையச்சமூகம் ஒரு போதும் எதனையும் ஒரு முடிந்த முடிவாகக் கருதாமல் பல்லாயிரம் ஆய்வுகளையும் மாறேறுப் பரிசோதனைகளையும், விஞ்ஞான ரீதியில் ஆராயாமல் அப்படியே அதுவும் ஒரு தன் வரலாறை முடிந்த ஒரு முடிவாக எடுத்துக் கொள்ளும் ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் அமையக் கூடாது. அது ஒரு நாகரீகமான அறிவுடமைச் சமூகத்திற்கு அழகும் அல்ல. ஆகவே தமிழினி அக்கா விரும்பிய அறிவுடமைச் சமூகம் இதையும் ஒரு முடிந்த முடிவாக எடுத்துக் கொள்ளது.

ஆகவே இதை வெறுமனே ஓர் பாடப்புத்தகமாக அத்தியாயங்களாகப் பிரித்து படிமுறைகளாக மனனம் செய்யும் ஒரு தீர்க்க நூலாக இதை அணுக முடியாது. ஆனால் மக்களோடு மக்களாக நின்று களமாடி அவர் பெற்ற அனுபவங்கள் ஆளுமைகளை இந்த நூல் தாங்கி நிற்பதனால் இதை ஒரு ஆய்விற்குரிய பால பாடமாக கட்டாயம் நோக்க வேண்டும்.

இதில் சொல்லப்பட்ட விடயங்களை (மக்களில் இருந்து போராட்டம் விலகிச் சென்றது என ) தமிழினி அக்கா என்றைக்குமே தன் போராட்ட காலத்தில் சொல்லவில்லை. இயக்கம் அழிந்து கொண்டிருக்கும் போதும் சொல்லவில்லை. அழிந்தவுடனும் சொல்லவில்லை. ஆனால் தடுப்பு முகாமில், (so-called rehabilitation centre) புனர்வாழ்வு முகாம் என கூறப்படும் முகாமில் இருக்கும் போது CID, TID, SIS போன்ற புலனாய்வு அமைப்புக்களால் கடும் விசாரணைகளை அனுபவித்த பின் போராட்ட சம்பந்தமான எந்தளவு சிறிய விடயத்திற்கும் நான் வரப்போவதில்லையென்றும் குமரன் பத்மனாதனால் வழங்கப்பட்ட நிர்வாகப் பொறுப்பு ஒன்றையும் ஏற்க மறுத்து அம்மாவுடன் காலத்தைக் கழிக்க வேண்டும் என்ற மன நிலையில் இருந்த போதே இவரால் இத் தன் வரலாறானது எழுதப்பட்டுள்ளது.

ஒரு படைப்பாளி இலங்கை போன்ற நாடுகளில் எவ்வாறு மனம் திறந்து பேச முடியும் என்பதை Amnesty International, Freedom of expression போன்றவற்றைப் பேசும் பல அமைப்புக்கள் கூறும் அறிக்கையிலிருந்து நாம் சிலவற்றைத் தெளிவாக முடிவெடுக்கலாம். ஆகவே தமிழினி அக்கா விமர்சனமாக முன் வைக்கும் தனது போராட்ட வாழ்வை தலைமை மீதான பல விமர்சனக்களை அன்றைய காலத்தில் பேசாமலிருந்தது போல் அன்று பேசியவற்றை இன்று பேசாமல் இருப்பதாகக் கொள்ளலாம். இந்த புத்தகத்தை தமிழினி அக்கா

சமூக வாஞ்சையுடன் எழுதினாவா ??

தோல்வி மனப் பான்மையில் எழுதினாவா ???

மன மாற்றத்தினால் எழுதினாவா ??

ஏதேனும் உந்துதல் காரணமாக எழுதினாவா???

உளவியல் தாக்கத்தினால் எழுதினாவா ???

என்ற பல கேள்விகள் இங்கு முன் வைக்கப்படுகின்றன

இந்த கேள்விகளுக்கான பதில்களை நாம் அந்த களத்தில் இருந்து கொண்டு இன விடுதலையை நெஞ்சில் நிறுத்தி இறுதி வரை மண்ணின் விடுதலைக்காய் பாடுபட்ட மக்களிடமும் சக போராளிகளிடமும் நேர்மையான சமூக ஆய்வாளர்களிடமும் தான் பெற முடியும்.

ஒரு முக்கிய விடயத்தை இங்கு இறுதியாக கூற விரும்புகிறேன் அதாவது தமிழினி அக்கா விடுதலையடையும் போது அது தேர்தல் காலம் என்பதால் இவர் தேர்தலில் நிற்கும் நோக்கத்துடன் வெளி வந்ததாக புலம்பெயர் ஊடகங்கள் பொய்யான பரப்புரை செய்தன. இதே போல் இன்னும் பல போராட்டத்துக்காக தம்மை அர்ப்பணித்த பின் சரணடைந்தோ கைதகியோ விடுதலையடைந்த பல போராளிகளுக்கு ( பதுமன் அண்ணா உட்பட ) இப்படியான துரோகிப் பட்டம் கட்டும் செயற்ப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் உண்மையான விடுதலைப் போராளி சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப் பட்டு அவர்களின் விடுதலை வேட்கையானது தணிக்கப் படுகின்றது. இதற்கு துணை போகின்றவர்களாக நாம் அமையலாகாது.

தமிழினி அக்காவின் அனைத்து விமர்சனங்களையும் உள்வாங்கி ஆயுதப் போர் சாத்தியமற்றது என்பதனை ஆத்மாதமாக கூறுகின்றேன் என்று கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை தமிழினி அக்கா மட்டும் அல்ல தலைவர் பிரபாகரன் கூறினாலோ, சே குவேரா கூறினாலோ இதை ஏற்க முடியாது. ஏன் என்றால் இது இயங்கவியலுக்கு முரணானது…ஒரு மக்கள் மயப்படுத்தப் பட்ட போராட்டத்தில் மக்கள் தான் தங்கள் போராட வடிவத்தை காலதற்கு அமைய தீர்மானிப்பார்கள்.

இத்துடன் எனது கருத்துக்களை நிறைவு செய்கின்றேன். ஒலிப்பதிவு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.