வட்டுக்கோட்டை தீர்மானமும் – இன்றய நிலவரமும்

1,121 . Views .
04-06-2016ல் நடந்த சொலிடாரிற்றி நாளில் பேசிய கருத்துக்களின் தொகுப்பு – சேனன்

1976ல் உருவான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்(வ.கோ.தீ) முக்கியத்துவம் என்ன? நாற்பது வருடங்களின் பின் அந்த வரலாற்றுக் கட்டத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியவை என்ன?

 • வ.கோ.தீர்மானம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. இத்தீர்மானம் உருவாகுவதற்கு முன் நிகழ்ந்த செயற்பாடுகள் அக்காலத்து பெரும்பான்மை தமிழ் அரசியலமைப்புக்களை ஒண்றினைத்தது இன்றும் பலருக்கு கவர்சிகரமாக இருக்கும் ஒரு விசயம். இத்தீர்மானத்தை தொடர்ந்து தமிழ் அரசியல் மையம் தனிநாடு கோரிக்கை நோக்கி நகர்ந்தது இன்னுமொரு முக்கிய விடயம். அக்கால கட்டம் தமிழ் அரசியல் ஓட்டத்தில் முக்கிய திருப்புமுனையாக இருந்தது என்பது மிகையான கூற்றல்ல.
 • வ.கோ.தீ பலருக்கு தெளிவான திசையைக் காட்டுவதாக இருந்தது. பல்வேறு உரிமைகளுக்கான கோரிக்கைகள் மற்றும் சிறந்த சமூகத்தை கட்டமைப்பதற்கான வேட்கை என்பன ‘சோசலிச தமிழ் ஈழம்’ என்ற தனிக்கோரிக்கை நோக்கி குவிக்கப்பட்டது. இக்கோரிக்கைகளை அடைவதற்கான ஒரேவழி பிரிந்துபோவதே என்ற இலகுபடுத்தலைச் செய்தது இது. இந்த ஆபத்தான இலகுபடுத்தலின் தொடர்ச்சியாக ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்த ஆயதப் போராட்டம் எழுவதற்கு வழியேற்படுத்தியது.
 • 30 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்த யுத்தம் கொடிய முறையில் 2009ல் முடிவுக்கு வந்த பிறகு வரலாற்றில் பின்னோக்கி இழுக்கப்பட்ட உணர்வே பலருக்கும் எழும்பியது. போராட்டத்தின் ஆரம்ப புள்ளிக்கு மீண்டும் திரும்பி விட்டோம் என்று பலர் உணரத் தலைப்பட்டனர். இந்தச் சூழ் நிலையில் மீண்டும் வ.கோ.தீ முன்னிலைக்கு வந்தது ஆச்சரியமான விடயமில்லை. வ.கோ.தீர்மானத்தை முன் வைத்து நாடு கடந்த தமிழ் ஈழ அமைப்பு நடத்திய தேர்தலில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆதரரித்து வாக்களித்தனர். இருப்பினும் இத் தீர்மானத்தின் உள்ளடக்கம் மற்றும் அதன் வரலாற்றுப் பின்னனிகள் பற்றிய விவாதங்கள் அப்போது நடத்தப்படவில்லை.
 • வரலாற்றுப் பின்னனியை விட்டுவிட்டு இத்தீர்மானத்தை நாம் புரிந்துகொள்ள முடியாது. 50 மற்றும் 60ம் ஆண்டுகளில் நிகழ்ந்த பல முக்கிய போராட்டங்கள் வலது சாரியக் கட்சிகளின் பலத்தை குறைத்திருந்தன. 1970ம் ஆண்டு நிகழ்ந்த தேர்தல் அதற்கான ஒரு சாட்சி. சமூகத்தில் நிகழும் மாற்றங்களை முழுமையாக அறிவதற்கு தேர்தல் நிகழ்வுகள் மட்டும் போதாது. இருப்பினும் சில தேர்தல்கள் சமூக அசைவின் தன்மையை குறைந்தளவிலேனும் வெளிக்காட்ட வல்லன. இத்தேர்தலில் 130 இடங்களிற் போட்டியிட்ட வலது சாரிய ஜக்கிய தேசியக் கட்சி (ஜ.தே.க) 17 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று கடும் தோழ்வியைத் தழுவிக்கொண்டது. 19 இடங்களிற் போட்டியிட்ட பிடரல் கட்சி 13 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. தமது நலன்களை முன்வைத்த திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்ற ஆழமான எதிர்பார்ப்பு பெரும்பான்மை சிங்கள மக்களுக்கிருந்தது. எல்லா மக்கள் மத்தியிலும் உறுதியான நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் நிரம்பியிருந்தது. 23 இடங்களில் போட்டியிட்ட முற்போக்கு இடதுசாரிய கட்சியான லங்கா சம சமாஜ கட்சி (ல.ச.ச.க) 19 இடங்களில் வெற்றிபெற்று மரபு வலதுசாரிய கட்சியைவிட பலமான கட்சியாக உருவாகியிருந்தது. அடித்தளத்தில் மக்களுக்கு இருந்த வேட்கை இந்த தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்தது.
 • இந்த அலையை திட்டவட்டமாக எதிர்க்காது தாம் தமது அரசியலை நிலைநாட்ட முடியாது என்பதை தெளிவாக உணர்ந்து கொண்ட வலதுசாரிகள் சிங்கள பேரினவாத கதையாடலை மக்கள் மத்தியில் வலிந்து முன்தள்ளினர். இந்த ஆபத்தில் இருந்து தப்புவதாயின் மக்கள் நலன்களை முன்வைத்த கொள்கைகளை சமரசமின்றி முன்னெடுக்கவேண்டிய அவசியம் இடதுசாரிகளுக்கு இருந்தது. சமரசமற்ற முறையில் அக்கோரிக்கைகள் நோக்கி நகரவும் – அதற்காக அதிகாரத்தை கையில் எடுப்பதற்கும் அவர்கள் தயாராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக அவர்கள் சமரசத்துக்கு அடிபணிந்தனர். மக்கள் நலனுக்கு எதிரான வலுதுசாரிகளுடன் கூட்டு வைத்தது போதாது என்று அவர்களின் அழுத்தத்துக்கு அடி பணிந்து சிங்கள இனவாதத்துக்கான கதவுகளையும் திறந்து விட்டனர்
 • இந்தக் கைவிடல் தமிழ் மக்களின் அபிலாசைகளையும் நசுக்கியது. இதை எதிர்த்த தமிழ் தலைவர்களின் செல்வாக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரிதாகியது. 1972ம் ஆண்டு சட்ட திருத்தத்தை எதிர்த்து ராஜினாமா செய்த செல்வநாகத்துக்கு வடக்கில் கிடைத்த வரவேற்புபோல் இன்று வரை எந்த கட்சித் தலைவர்களுக்கும் வரவேற்பு நிகழ்த்தப்படவில்லை. கூட்டரசால் கைவிடப்பட்ட தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அந்த அரசுடன் முறித்துக்கொள்வதறங்கான உணர்வு வளர்ந்தது ஆச்சரியமானதல்ல. அவர்களுடன் உடைத்துக்கொண்டு எங்கள் உரிமைகளை முன்தள்ளுவோம் என்ற உணர்வு வலுப்பட்டது. இவ்வாறு உடைவு – பிரிவினை தமிழ் பேசும் மக்களின் கோரிக்கைகளின் குவியமாக மாறியது. இதன் பகுதியை வ.கோ.தீர்மானத்தின் பக்கங்களில் நாம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
 • தமிழ் மக்கள் பிரிவினை சார்ந்த கருத்தின் பின் திரண்ட அதே வேளை சிங்கள மக்களுக்கு வேறு மாற்று திரட்சி சாத்தியப்படவில்லை. கைவிடப்பட்டதாக உணர்ந்த அவர்களுக்கு வழங்கப்பட்ட மாற்று சிங்கள இனவாதமும் – வலதுசாரிய அரசியலுமாகவே இருந்தது. இது வலது சாரிகளை பலப்படுத்தவும் – அதன் மூலம் இனவாதம் பலப்படவும் வழியேற்படுத்தியது. பின்பு 1977ல் நடந்த தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்து வலதுசாரிய அரசியல், முற்போக்குச் சக்திகளின் முதுகெலும்பை நிரந்தரமாக முறிக்கும் வேலைகளைச் செய்தன. குறிப்பிடத் தக்க வெறிறியும் பெற்றன. அது ஒட்டுமொத்த போராட்ட அரசியலையே பலவீனப்படுத்தியது.
 • நாடு இருவேறு திசைகளில் நகரத் தொடங்கியதை நாம் இங்கு அவதானிக்க வேண்டும். தெற்கு பாராளுமன்ற அரசியல் வலதுசாரிகளின் பலம் திரளும் திசை நோக்கி நகர்ந்த அதே வேளை வடக்கு கிழக்கு நிலவரம் அதிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. வடக்கு கிழக்கு உரிமைகளையும் சுதந்திரத்தையும் முன்தள்ளி நகர்ந்தது. இந்த முரன்நிலை 1977 தேர்தலிலும் பிரதிபலித்தது. 23 பகுதிகளில் போட்டியிட்ட கூட்டனி 18 இடங்களில் வென்று எதிர்கட்சி பதவியை எடுத்துக்கொண்டது. அதேசமயம் வலதுசாரியம் தெற்கில் தனது பலத்த அரசை நிறுவியது.
 • பிளவு பழுத்து முரன்நிலை உச்சநிலையில் இருந்தபோதும் – களத்துக் கோபங்களும் விடுதலை வேட்கையும் கூட்டனியை உச்சத்துக்கு தூக்கியிருந்த போதும் – இந்த சமூக அசைவை கிரகிக்கும் கூர்மை தமிழ் தலைவர்களுக்கு வாலாயப்பட்டிருக்கவில்லை. கூட்டனித் தலைவர்கள் தங்கள் “சொந்த திறமையால்” சாதிப்பு செய்வதாக தம்மைத் தாமே நம்ப வைத்துக்கொண்டிருந்தனர். தங்கங் தங்கள் இராஜதந்திரத்தைப் பற்றி கதைத்துப் பூரித்துக்கொண்டனர். வட்டுக்கோட்டையில் கொழுத்தி வைச்ச நெருப்பு எதிர்கட்சி கதிரையில் உட்கார்ந்தவுடன் தணிந்துவிடும் என்ற தெனாவட்டு போக்குடன் அவர்கள் வ.கோ.தீ முற்பட்ட அரசியல் நடைமுறைக்கு தாவினர். தாம் ஏற்படுத்திக்கொண்ட புதிய அரசியல் அறிதலால் அல்லாது சந்தர்ப்பவதத்தாலும் – கீழிருந்து உந்தப்பட்டதாலுமே இந்த தலைவர்கள் வ.கோ.தீ கோரிக்கைகள் நோக்கி நகர்ந்தார்கள். தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவர்கள் மீண்டும் தங்களுக்கு தெரிந்த பழய கதிரை அரசியலுக்கே திரும்பினர். இந்த தலைவர்கள் எவருக்குமே வ.கோ.தீ மேல் அக்கறையோ அதன்மூலம் எழுந்த உணர்வலை பற்றிய அக்கறையோ இருக்கவில்லை. இவர்களைப் பொறுத்த வரையில் கோரிக்கைகள் வெறும் தேர்தல் வெற்றிக்கான “இராஜதந்திர” உத்திகள் மட்டுமே. தலை ஒருப்பக்கம் சரிய வால் ஒரு பக்கம் சரிந்ததுதான் கூட்டனியின் சரிவையும் துவக்கி வைத்தது. எதிர்கட்சியாக செயற்பட வேண்டியவர்கள் வெற்றுப் பாவனை மட்டுமே செய்தனர். உண்மையில் அரசியல் ரீதியாக – பொருளாதார ரீதியாக-  வலது சாரிய அரசின் கூட்டாளிகளாகவே செயற்படத் தொடங்கினர். இதன்பலனாக நிலத்தடி நீரோட்டம் கூட்டனித் தலைமையுடன் முறித்துக்கொண்டு தனித்த மாற்றை நோக்கி நகர்ந்தது. இதுவே சிவில் யுத்தத்தை நோக்கி மக்களை நகர்த்தியது
 • தற்போது நடப்பதும் இதுதான். ஆச்சரியப்படத்தக்க வரலாற்று சமாந்திரத்தை நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. களத்தில் இருந்து எழும் அரச எதிர்ப்புணர்வு – உரிமைகளுக்கான கோரிக்கைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை (த.தே.கூ) மிகப்பலம் பொருந்திய கட்சியாக மாற்றி எதிர் கட்சியாக தூக்கி நிறுத்தியுள்ளது. இதே சமயம் நூறுநாள் திட்ட பிரபல வாக்குறிதிகளுடன் அரசமைத்திருக்கிறது வலதுசாரிய ஜ.தே.க. ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான உணர்வு- ஊழலுக்கு எதிர்ப்பு – சிறந்த சமூக அரசியல் நிலவரத்துக்கான வேட்கை ஆகிய பல போக்குகளும் எதிர்பார்ப்புகளும் இணைந்து ஜ.தே.கட்சிக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது.
 • ஆனால் இச்சந்தர்ப்பத்தை தமது வர்க்கத்தின் சார்பாக பயன்படுத்துவதற்கு முழு மூச்சுடன் இயங்கத் தொடங்கியுள்ளது ஜ.தே.க. நியோ லிபரல் கொள்கைகள் மும்முரமாக முடக்கிவிடப்பட்டுள்ளது. உலக வங்கி ஜ.எம்.எப் மற்றும் மேற்கத்தேய அரசுகளின் நலன்கள் முதன்மையாக தலை தூக்கி நிற்கிறது. நல்லாட்சி வெறும் சொற்பதமாக சுருங்கி சிதைந்துபோய்விட்டது. இந்தத் தோழ்வியைச் சிங்களச் சமூகம் சந்தித்துக்கொண்டிருக்கும் இதே வேளை எதிர் கட்சிப் பதவியில் இருக்கும் தமிழ் தலமை -அரசுடன் தனது நெருக்கத்தை பலப்படுத்தி வருகிறது. அவர்களது சொந்த நலன்களும் அரசின் வலதுசாரிய நலன்களும் இயல்பாக ஒத்துப்போவதை நாம் பார்க்கலாம். தமக்கு பலத்தைக் கொடுத்த நீரோட்டத்துக்கு எதிர் திசையில் ஓடுகிறது தமிழ் தலைமை. தேர்தலுக்குப் பிறகு கூட்டனியினர் எவ்வாறு வ.கோ.தீ பின்னான வரலாற்றுக் கட்டத்தில் போய் நின்றனரோ – அதேபோல்தான் கூட்டமைப்பினரும் பழய அரசியலைத் தழுவி வரலாற்றின் எதிர் திiசியில் நகர்கின்றனர். இதனால் களத்து அசைவுகள் தலையுடன் முண்டி முறித்துக்கொள்ளும் நிலை மீண்டும் எழுந்துள்ளது. மீண்டும் அரசில் மாற்றுக்கான கோரிக்கை மக்கள் மத்தியில் பலப்படத் தொடங்கியுள்ளது. இது தற்போது ஏற்பட்டிருக்கும் புது நிலவரம் என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.
 • ஆனால் இம்முறை வரலாற்றில் இருந்து பல பாடங்களை கற்றுக்கொண்டு நகரக்கூடிய அனுகூலமான நிலையில் நாம் இருக்கிறோம். நாம் தற்போதய தலைமைகளில் அரசியற் போக்கை திட்ட வட்டமாக முறியடிக்க வேண்டும். எக்காரனம் கொண்டும் அரசுடன் கூட்டு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜ.தே. கட்சியின் கொள்கைகள் செயற்பாடுகளும் கடுமையாக எதிர்க்கப்படவேண்டும். இந்த எதிர்ப்பை நாம் கட்டாவிட்டால் 80களிலும் 83களிலும் நடந்தது போல் எமது முதுகெலும்பு முறிக்கப்படும் தாக்குதல்களும் கொலைகளும் நிகழ்வதற்கான வாய்புக்கள்தான் அதிகரிக்கும்.
 • இதே சமயம் சிங்கள மக்கள் மத்தியிலும் மாற்று அரசியல் எழுவது அவசியம். அது ஜே.வி.பி போன்ற அமைப்புக்களுக்குள்ளால் வரப்போவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். மாறாக அங்கிருக்கும் முற்போக்கு சக்திகள் – இடதுசாரிகள் -முற்போக்கு தொழிற் சங்கங்கள் – புத்திஜீவிகள் ஒன்று திரள்வது அவசியம். இதற்காக நாம் காத்திருக்காது அதை செயற்படுத்தும் செயல்களில் இறங்கவேண்டும். இந்தப் பணியில் தமி;ழ் பேசும் மக்களும் பங்களிக்க வேண்டும். வளரும் அலையைத் தள்ளி நின்று பார்த்துக்கொண்டு நின்றால் வளர்ந்தபின் அந்த அலை எம்மை அள்ளிச் சென்றுவிடும் அபாயம்தான் உள்ளது. நியோ லிபரல் தாக்குதல்களுக்கு எதிரான எல்லா எதிர்ப்புகளிலும் எம் பங்கும் இருக்கவேண்டும்.
 • இதே சமயம் தெட்டத் தெளிவான முன்னோக்கு – திட்டமிடல்கள் – உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்து நாம் ஒரு மாற்று அரசியலைக் கட்டி எழுப்ப வேண்டும். இந்த அரசியல் சிங்கள பேரினவாதத்தின் பிரதிபலிப்பாகவோ – அதற்கான வெறும் எதிர்வினையாகவோ மட்டும் குறுகிவிடக்கூடாது. இந்தப் புரிதல் தற்சமய ‘தமிழ் தேசிய’ அரசியலையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
 • தமிழ் தேசியம் என்பது ஒருமுகப்பட்ட ஒற்றைத்தன்மையான நிலைப்பாடு அல்ல. அதற்குள் குறைந்தபட்சம் இரு முக்கிய பிரிவுகள் உண்டு. உரிமைக் கோரிக்கைகளின் குவியமாக எழும் தமிழ் தேசியம் ஒன்று. மற்றது உரிமைசார் மூலத்தை கழற்றி எறிந்துவிட்டு வெறும் கோசமாகவும் அரூபமாகவும் பேசப்படும் தமிழ் தேசியம். இந்த அரூப தமிழ் தேசியவாதிகள்தான் இன்று “தலைவர்களாக” மலிந்து கானப்படுகிறார்கள். அரூப கோசத்தை வைத்துவிட்டு அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இவர்கள் தப்பி ஓடுகிறார்கள். தமது பிற்போக்கு அரசியலை மறைக்கும் மூடியாக இந்த அரூப கோசம் அவர்களுக்குப் பயன்படுகிறது. ஆழும் உரிமை என்பதை தமது சொந்த – தனிப்பட்ட உரிமையாக இவர்கள் நினைக்கிறார்கள். ஆழும் உரிமை என்பது மக்களுக்கானது. மக்களின் ஆட்சி என்பது இவர்கள் முன்வைக்கும் அரசியலுடன் முரன்பட்டது. தங்களைத் தாங்களே ஆழும் அதிகாரிகளாக வரித்துக்கொள்ளும் இவர்கள் இனவாத இலங்கை அரச அதிகாரத்தையும் மேற்கத்தேய அரசுகளையும் நட்புடன் அணுகுவது ஆச்சரியமானதல்ல. அவர்களின் நட்புச்சக்திகள் அதிகாரம் சார்ந்தவையாகவும் அடக்குமுறைகள் சார்ந்தவையாகவும் இருப்பது ஆச்சரியமானதல்ல. இந்த வகை அரூப தேசியவாத கோசத்துக்கும் மக்களின் கோரிக்கைகளுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. அத்தகய பிற்போக்கு வாத தேசியம் தமிழ் மக்களுக்கு எந்த உரிமைகளையும் வென்று தரப்போவதில்லை. மாறாக தமிழ் பேசும் மக்களின் மேலான தாக்ககுதல்களைச் செய்பவர்களைத்தான் அது பலப்படுத்துகிறது.
 • தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் இருத்தல்சார் கேள்விக்கு இது பதில் அல்ல. அதனாற்தான் அவர்களின் பிடி முறியடிக்கப்படவேண்டும் என நாம் கூறுகிறோம். முற்போக்கு கோரிக்கைகள் நோக்கிச் சரியாத தமிழ் தேசியத்துக்கு எதிர்காலமில்லை. களத்து கோரிக்கைகளுடன் இனையாத தேசியத்துக்கு அர்த்தமில்லை. மக்களை முன்னிலைப்படுத்தாத எந்த அரசியலும் புறந்தள்ளப்படவேண்டியதே.
 • தமிழ் ஈழம் என்று கூறும்பொழுது எத்தகய சமூகத்தைப் பற்றி நாம் பேசுகிறோம் என்ற தெளிவு எமக்கு வேண்டும். இத ஒரு அரூபச் சொல்லாடல் அல்ல. வெற்றுக்கோசமாக பேசுவது அர்த்தமற்ற செயல். உரிமைகளுடனும் – புதிய சமூக உறவுகளை ஏற்படுத்துவதாகவும் – வாழ்க்கைத்தரமுள்ள சமூகத்தை கட்டி எழுப்பும் நோக்குடனும் – தேசிய கோரிக்கை சம்மந்தப்படும்பொழுதுதான் அதற்கான அர்த்தத்தையும் தேவையையும் மக்கள் புரிந்துகொள்வர். மக்களின் பிரங்ஞை அதை நோக்கி நகர வேண்டும். நாம் எமது நேரத்தையும் உயிரையும் கொடுத்துப் போராட தயாராக இருக்கும் ஒன்று எவ்வகையிற் பெறுமதியானது? அடக்குமுறை கொள்கைகளும் செயற்பாடுகளும் அப்படியே இருக்க – எம்மை ஆழுபவர்களின் “இன அடையாளத்தை” மாற்றுவதற்காக மட்டுமா நாம் போராடிக்கொண்டிருக்கிறோம்? ரணிலுக்குப் பதில் சம்மந்தன் ஆழுவதால் மட்டும் நமது வாழ்நிலை மாறிவிடப்போவதில்லை. ஆட்சி எமது கைக்கு வரவேண்டும். எங்களை ஆழுபவரின் இன – பால் அடையாளமல்ல எமக்கு முக்கியம். மக்கள் நலன்களை முன்னிறுத்தாத கொள்கைகளை முன்னெடுக்கும் அரசை உடைப்பது பற்றி நாம் பேசுவதன் அர்த்தம் என்ன? இன்னுமொரு வகை அரசை –மக்கள் நலன்களை முன்னிலைப்படுத்திய அதிகாரத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதே அதன் அர்தம்.
 • இங்கு “நலன்கள்” என நாம் குறிப்பிடுவது என்ன என்பது பற்றி கவனிக்கவேண்டும். இலங்கை அரசு தமது சொந்த நலன்களை மீறிச் செயற்படப்போவதில்லை என்ற புரிதலுடன்தான் நாம் அந்த அரசுடனான உடன்பாட்டுக்கு முரன்நிலையில் நிற்கிறோம். அவர்கள் தமது இன விசுவாசத்தால் மட்டும் தமிழர்களுக்கு எதிர் நிலையில் நிற்கவில்லை. சிங்கள இனவாத அரசுக்கும் தமிழ்நாட்டு வலதுசாரிய அரசுக்கும் வேற்றுமைகளை விட ஒற்றுமைகளே அதிகம். சுpங்கள அரசு என்பது சிங்கள மக்களின் நலனக்களை முதன்மைப்படுத்திய இன விசுவாச அரசு அல்ல. அவர்களின் விசுவாசம் வர்க்கம் சார்ந்தது. இலங்கை வளங்களின் கட்டுப்பாடு பற்றிய மேற்கத்தேய அரசுகளின் அக்கறை- பெரும் வியாபாரிகளின் நலன்கள் – பூகோள அரசியலின் தேவைகள் – என அரசு விசுவாசமாயிருக்கும் நலன்கள் மக்கள் நலன்களில் இருந்து முற்றும் முரனானவை. இந்த அடிப்படை அரசியலை நாம் உள்வாங்காமல் எந்த அரசியற் போராட்டத்தையும் கட்டி நிமிர்த்திவிட முடியாது. அரசு-மக்கள்-வர்க்கம் – ஆகியவற்றுக்கிடையிலான உறவுகள் பற்றிய நுனுக்கமான அறிதல் தளம் நோக்கி நாம் நகரவேண்டும். அரசின் பண்புகளைத் தெரிந்துகொள்ளாமல் அரசை உடைப்பது பற்றித் திட்டமிட முடியாது.
 • தமிழ் மக்கள் மேலான ஆதிக்கம் சிங்கள மக்களின் நலன் சார்ந்தது என்ற போலிப் பிரமையை இனவாத அரசு உருவாக்கிப் பராமரித்து வருகிறது. இந்தப் பச்சைப் பொய்யை நாம் அம்பலப்படுத்த வேண்டும். சிங்கள இனவாதாத்தை மறுத்து முற்போக்கு நோக்கிச் சரியும் சக்திகளை நாம் நட்புச் சக்திகளாக்கிக்கொள்ள வேண்டும். இந்தச் சக்திகளுடன் எமது போராட்டம் இணையவேண்டும். “எமது கோரிக்கைகள் எமது உரிமைகளைக் காத்துக்கொள்வது சம்மந்தப்பட்டது. இவை சிங்கள இனத்துக்கோ அல்லது எந்த இனத்துக்குமோ எதிரானதல்ல. மாறாக உங்களையும் ஒடுக்கும் அரசுக்கு எதிர் நிலையில் நிற்கும் கோரிக்கைகள் இவை. இந்த அர்த்தத்தில் உங்கள் போராட்டத்துடனும்தான் நாம் இணைந்து நிற்கிறோம். நாம் ஒரு நல்ல சமூகமொண்றை உருவாக்குவதற்கான போராட்டத்தை செய்கிறோம். நீங்களும்தான் அத்தகய சமூகத்தில் வாழ வேண்டும். உங்கள் தலைவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் – அரசு ஆகியன அதற்கு எதிர்திசையில் நிற்கிறது – அத்தகய சமூகம் உருவாகுவதற்று அவர்கள் அனுமதிக்கப்போவதில்லை. அவர்கள் மாற்றுச் சமூகத்துக்கு எதிரானவர்கள். ஆதனால் எங்கள் கோரிக்கைகளுடன் இனைவதும் – எங்கள் போராட்டத்துடன் இனைவதும் உங்கள் நலன் சார்ந்த விசயமே” – என்ற குரல் பலமாக ஒலிக்க வேண்டும். இக்குரல்தான் எமது அரசியல் திட்டமிடலின் அடிப்படையாக இருக்கிறது. இது இலங்கையின் எல்லையைத் தாண்டி தெற்காசியா மற்றும் மேற்குலகு எங்கும் பரவ வேண்டும். போராடும் காஸ்மீர், குர்திஸ், பலஸ்தீனிய மக்களுடன் எங்களுக்கு இருக்கும் ஒற்றுமை அதிகம்.
 • எமக்கு முன்னால் இரண்டு முக்கிய கடமைகள் உண்டு. ஒண்று உடைப்பது மற்றது இணைப்பது. நாம் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அடக்குமுறை அதிகார சக்திகளுடன் எவ்வித உறவும் சாத்தியமில்லை என்பதை அடித்துச் சொல்கிறோம். அவர்களை மக்களிடம் இருந்து பிரித்தெடுப்தும் – அவர்களை உடைப்பதும் எங்கள் அரசியற் பணியாக இருக்கிறது. அந்தச் செயற்பாடு ஊடாக போராட்டச் சக்திகளை இணைத்து எம்மைப் பலப்படுத்தவேண்டும். இந்த சக்திகள்தான் எமது “இயல்பான கூட்டாளிகள்”. இந்த இயல்பான கூட்டுக்கு அமைப்பு வடிவம் கொடுத்தலும் அரசியல் உடன்பாட்டைக் கட்டி எழுப்புதலும் எம்முன்னிருக்கும் முக்கிய பணி. இதன் மூலமாகத்தான் நாம் நிரந்தரத் தீர்வை நோக்கி நகர முடியும். எல்லாவகை இடைக்காலச் சலுகைகளும் நிரந்தரமற்றவை. அவை தரப்பட்ட வேகத்தில் பறிக்கப்பட்டுவிடும். சலுகைகளை பெறுவதோடு நிறுத்தாது – அத்துடன் மட்டும் திருப்திப் பட்டு சோராது – தொடர் போராட்டத்தை நிரந்தர வெற்றி நோக்கி நகர்த்த வேண்டும். இது இலகுவான பணி அல்ல. குறுகிய காலத்தில் சாதிக்க கூடியதல்ல. இந்தப் போராட்டத்துக்கு விடாப்பிடி மனப்பக்குவமும் அவசியம். கடந்த முப்பது வருட போராட்ட வரலாற்றின் மூலம் கற்றுக்கொண்ட பல பாடங்கள் உண்டு. அதைவிடப் பலமான அரசியற் போராட்டத்தை கட்டி நிமிர்த்த வேண்டிய பொறுப்பை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவும் முக்கியமான படிப்பினைகளில் ஒன்று. அதன் ஆரம்பத்தை தொடங்கி வைப்போம்.