ஐரோப்பிய ஒன்றியம் போலியானது! அதிலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் : சேனன்

1,293 . Views .

unnamed

விசா பிரச்சினையின்றி – கடவுச்சீட்டு பரிசோதனை இன்றி- மற்றய நாடுகளுக்குச் சென்று வருவதற்கு அனைவருக்கும் விருப்பம் உண்டு. அதேபோல் உள்துறை அமைச்சுகள் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக ஜரோப்பாவிடம் முறையிடும் உரிமை முதலிய அகதிகளுக்கான உரிமைகளும் பலருக்கு ஜரோப்பிய ஒன்றியம் மேல் கவர்ச்சித்தன்மையை உருவாக்கியிருக்கிறது. ஆனால் உண்மையில் மிகச் சொற்பமான எண்ணிக்கையான அகதிகளுக்கு மட்டுமே ஜரோப்பிய ஒண்றியத்தால் பயன் கிடைத்துள்ளது.

ஒன்றியத்திற்குள்  இருப்பினும் போக்குவரத்து விதிகள் தெற்காசியர்கள் கறுப்பர்கள் அரேபியர்களுக்கு எதிராகவே இருக்கப்போகிறது. பிரெஞ்சு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பிரஞ்சு எல்லைகள் மூடப்பட்டதும் – பெல்ஜியம் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து விசாரனைக் கெடுபிடிகள் மிக அதிகரித்திருப்பதும் அறிவோம். இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் சிறுபான்மையினரே. ஓன்றியம்  இருக்கோ இல்லையோ இந்தக் பாதிப்புக்களில் இருந்தும் கட்டுப்பாடுகளில் இருந்தும் நாம் முற்றாக விடுபட்டுவிட முடியாது. இது தவிர ஜ.ஒன்றியத்தால் சிறுபான்மையருக்கு என்ன நன்மை கிடைத்துள்ளது?

நாடுகளுக்கிடையில் கலாச்சார அரசியற் பொருளாதார ஒண்றுபடுத்தலைக் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டதல்ல ஜரோப்பிய ஒன்றியம். தெற்காசியாவில் இருக்கும் ஆசியான் என்ற அமைப்பைப்போல நாணய ஒன்றியத்தை உருவாக்கி ஒரு பொதுச் சந்தையை கட்டி அமைப்பதே இதன் தலையாய நோக்கம். இந்தப் பொதுச் சந்தையை உருவாக்குவதன் மூலம் பின்தங்கிய நாடுகளில் இருப்போரை குறைந்த சம்பளத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும். தவிர பண்ட விற்பனைக்கான தடையற்ற மக்கள் தொகையும் அதிகரிக்கிறது. இந்த வகை வடிவமைப்பு பலம் பொருந்திய பொருளாதாரங்களான ஜேர்மன் பிரான்ஸ் ஆகிய அரசுகளையும் அங்கியங்கும் பெரும் வியாபாரங்களையும் மட்டுமே பலப்படுத்துகிறது.

ஜரோப்பாவில் வாழ்பவர்களில் மூன்றில் ஒரு பகுதி தொகையினர் கடும் வறுமைக்குள் வாழும் நிலையிருப்பதாக ஒக்ஸ்பாம் ஆய்வு சொல்கிறது. வீட்டை சூடேற்றும் வசதி மற்றும் மூன்று நேர உணவு என அடிப்படை வசதிகளே இல்லாத நிலையில்தான் பெரும்பான்மையான சனத்தொகையினர் வாழப் பணிக்கப்பட்டிருக்கின்றனர்.

2009,இற்கு முன்பு   7.5 மில்லியன் மக்கள் இத்தகய வறுமையில் வாடியதாகவும் அது 2013ல் 50 மில்லியனாக அதிகரித்தாகவும் தற்போது இது மேலும் பல மடங்காக அதிகரித்திருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. 123 மில்லியன் மக்கள் கடும் வறுமைக்குள் தள்ளப்பட்டிருப்பதாக இன்னுமொரு ஆய்வு கூறுகிறது. இதே சமயம் உலகின் பெரும்பான்மையான டொலர் பில்லியனர்கள் வாழும் பிரதேசமாக இருக்கிறது ஜரோப்பா.

2500 பில்லியனர்கள் ஏழரை டிரில்லயனுக்கும் அதிகமான உலகின் குறிப்பிடத்தக்க வளத்தை தம் கைவசம் வைத்திருக்கிறார்கள். இந்த சொத்து இடைவெளி ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. கிறீஸ் முதலிய சிறிய நாடுகளில் வறுமையால் தற்கொலை செய்துகொள்பவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. பின்தங்கிய ஜரோப்பிய நாடுகளில் வாழ்பவர்களின் சம்பளத் தொகை வீழ்ந்துகொண்டே இருக்கிறது. இதே சமயம் பெரும்பான்மையான சமூக சேவைகள் இல்லாமற்செய்யும் நடவடிக்கைகளை அனைத்து அரசுகளும் முடுக்கி விட்டுள்ளன.

ஜ.எம்.எப் மற்றும் உலக வங்கி ஆகிய பெரும் சுரண்டும் ஸ்தாபனங்கள் வறிய நாடுகளில் முற்போக்காளர்களால் வெறுக்கப்பட்டு வருவதற்கு காரணம் அவர்கள் முன்னெடுக்கும் தனியார் மயப்படுத்தல் மற்றும் சேவைகளைக் குறைத்தல் போன்ற நியோ லிபரல் கொள்கைகளே.இதற்கும் ஜரோப்பிய ஒன்றியம் முன்னெடுக்கும் பொருளாதார கொள்கைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஜரோப்பிய பாராளுமன்றத்துக்கு என உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் உண்மையான கட்டுப்பாடு தேர்ந்தெடுக்கப்படாத – ஜரோப்பிய கமிசனின் கையிலேய இருக்கிறது. தமது பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுக்கும் உத்திகளாகவே சனநாயகம் மற்றும் மனித உரிமை பற்றி அவர்கள் பேசுகிறார்கள். இந்த ஒன்றியம் செல்வந்தர்கள் சுரண்டுவதற்கு இலகுபடுத்த என ஏற்படுத்தப்பட்ட ஒழுங்கமைப்பேயன்றி வேறல்ல.

ஜரோப்பிய மக்களின் உண்மையான ஒன்றியமல்ல  இது. ஜரோப்பிய வளங்களை இங்கு வாழும் மக்களுக்கென சரியான முறையில் பங்கிடும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்பல்ல இது. இதனாற்தான் தொழிலாளர்களின் எதிரியாகப் பார்க்கப்படுகிறது ஜரோப்பிய ஒன்றியம். ஒடுக்கப்படும் மக்களுக்கு இந்த “ஒன்றியம்” எதிரியே. இதை உடைத்து உழைக்கும் மக்களுக்கிடையிலான நியாயமான உறவைப் பலப்படுத்தும் ஒன்றியத்தினை உருவாக்கத்துக்காக நாம் பாடுபடவேண்டும். இந்த அர்த்தத்தில் இங்கிலாந்தில் வாழும் ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்கள் உட்பட அனைத்து ஒடுக்கப்படும் மக்களும் இந்த போலி ஒன்றியத்திற்கு எதிராகத்தான் வாக்களிக்க வேண்டும்