பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியமும் -தெற்காசியாவும்

2,191 . Views .
 1. உலகப் பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியம் நவ காலனித்துவ நாடுகளைச் சுற்றி இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
 2. குறிப்பாக்க சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இது அந்த நாட்டின் அரசியல் நடைமுறைகளிலும் பாரிய மாற்றை கொண்டுவந்து கொண்டிருக்கிறது.
 3. அதே சமயம் வரும் புதிய நெருக்கடி இந்த நாடுகளுக்குள்ளேயே குறுகி நின்று அழிந்து விடும் என எதிர்பார்ப்பதும் தவறு. உலகப் பொருளாதாரத்தின் 58% பகுதி ‘வளர்ந்து வரும்’ நாடுகள் எனச் சொல்லப்படும் நவ காலனித்துவ நாடுகளை சார்ந்ததாக இருக்கிறது. இதனால் இந்த நாடுகளில் ஏற்படும் நெருக்கடி உலக நெருக்கடியை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
 4. மேற்கு நாடுகளில் மக்கள் எதிர் கொண்ட நெருக்கடிகளை விட அதிகமான நெருக்கடிகளை நவ காலனித்துவ நாடுகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மேற்கு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் நவ காலனித்துவ வாழ்க்கைத் தரத்தை நோக்கித் தள்ளப் படும் அதே வேளை நவ காலனித்துவ மக்களின் வாழ்வாதாரம் மேலதிக சீரழிவுக்கு உள்ளாகும் நிலையே உள்ளது.
 5. இத்தகைய கொடூரத் தாக்குதலை மக்களின் வாழ்வாதாரத்தின் மேல் நிகழ்த்த ‘பலமான’ கட்சி அரசதிகாரத்தில் இருக்க வேண்டும் என முதாளித்துவ சக்திகள் விரும்புகின்றன. இந்த பலம் என்பதன் அர்த்தம் மக்களின் எல்லா எதிர்ப்பையும் ‘இரும்புக்கரம்’ கொண்டு முடக்குவது என்பதே. இதனால் மனித உரிமை மீறல்கள் – கொலைகள் – மற்றும் பல்வேறு சனநாயக மறுப்பு நடவடிக்கைகள் மேலும் உக்கிரமடையும். மேற்கு நாடுகளை விட இந்த நாட்டு அரசுகள் இலகுவில் ஒடுகுதல் செய்யக் கூடிய முறையில்தான் அரச நிறுவனங்களின் அதி கூடிய பலம் பெருகிக் கிடக்கிறது. இவர்கள் மணித உரிமை மீறித் தப்புவதை, தமது நலனை முன்னிறுத்தும் மேற்குலகு கண்டும் காணாமல் விட்டுவிடும்.
 6. நவ காலனித்துவ நாடுகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு பல்வேறு பரிமாணங்கள் உண்டு. இவற்றில் ஒரு சில முதன்மையாக இருக்கின்றன. வங்கிகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி, வெளிநாட்டுக் கடன் சுமை, நாணயமாற்று வீழ்ச்சி ஆகியன சில முதன்மைக் காரணிகளாக இருக்கின்றன.
 7. கடன்சுமை அதிகரித்துள்ள நாடுகளில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி மிகவும் ஆழமாக இருக்கும் என்றும் அதே சமயம் நெருக்கடியில் இருந்து விடுபடுவது மிகவும் மெதுவாகவே நிகழும் என்றும் முதலாளித்துவ ஆய்வுகளே குறிப்பிடுவதை கவனிக்க வேண்டும்.
 8. இந்த அடிப்படையில் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி தற்காலிகமானதல்ல என்ற முடிவுக்கு நாம் வர முடியும். மாறாக இது நீண்ட காலத்துக்கு மக்களின் வாழ்வாதாரத்தை நொறுக்கிக் கொண்டிருக்கப் போகிறது. தற்போதைய இளம் சமுதாயம் நல்ல வாழ்க்கை வாழ்வதை நினைத்துப் பார்க்க முடியாத நிலைக்கு உள்ளாக்கப் பட்டிருகிறார்கள்.
 9. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் வேகமாக வளரும் கடன் இந்த நாடுகளின் GDPஐ விட அதிகமாக கூடிக் கொண்டிருக்கிறது. இலங்கை வருவாயின் 96% வீதம் கடனைத் திருப்பி வழங்க செலவிடப்படுவதாக தெரியவருகிறது. ஏற்கனவே 70% வருவாயை கடனுக்கு செலவிடும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் மேலும் மேலும் கடன் சுமைக்குள் மூழ்கும் நிலையே உள்ளது.
 10. பாகிஸ்தான், இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் இந்தக் கடன் சுமை மீள முடியாத சீனப் பிடிக்குள் இந்த நாடுகளை உட்படுத்தி வருவதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. பாகிஸ்தான் CPEC முதலீடு – இலங்கையில் கம்பான்தோட்டை மற்றும் கொழும்பு நகர முதலீடுகள் ஆகியவற்றை உதாரணமாக சொல்லலாம். இந்த சீனக் கடனில் இருந்து மீற முடியாது இந்த நாடுகளின் பல்வேறு கொள்கை கட்டுப்பாடுகள் சீன நலன் நோக்கி திருபப் படும் என்ற நிலை மேற்கு நாடுகளை நேரடியாக தலையிட வைத்துள்ளது. தனியார் மயப்படுத்தலை ஊக்குவித்தல் –பெரும் கார்பறேட்டுகள் முதலீட்டை ஊக்குவித்தல் – IMF மற்றும் worldbank ஆகியவற்றிடம் இருந்து கடன் பெறுதலை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் இந்த நாடுகளின் பொருளாதார கொள்கைகளை கட்டுபடுத்தும் முயற்சிகள் நிகழ்கின்றது.
 11. இலங்கை தனது கடனில் இருந்து தப்புவதற்கு உல்லாசத்துறை வருமானம் உதவும் என முன்பு பேசப்பட்டது. பயணிகள் செலவழிக்கும் பணத்தின் வீழ்ச்சியும், இத்துறையில் தொடர் முதலீடு சாத்தியமின்மையும் வருமானம் அதிகரிப்பதை வெறும் கனவாக்கிக் கொண்டிருக்கிறது. தவிர இந்த வருவாய் அதிகரிப்பினும் கூட கடன் சுமையில் இருந்து மீள முடியாத முறையில் அதன் கனதி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
 12. இலங்கையில் சீன முதலீடு பொருளாதாரத்தை முடக்கி உள்ளதே தவிர எந்த வருவாயையும் வழங்கவில்லை. கம்பான்தோட்டையில் பல மில்லியன் ரூபாயில் கட்டப்பட்ட விமான நிலையம் பாவனைக்கு வர முடியாமல் சமீபத்தில் மூடப்படுள்ளது. இந்த ஒரு பிரயோசனமும் அற்ற விமான நிலையம் கட்ட மட்டும் $210 மில்லியன் செலவிடப்படதாக சொல்லப்படுகிறது. ஹம்பந்தோட்டை கடலோரம் இருந்த ஒரு கல்லை விலக்க மட்டும் $42 செலவிடப்பட்டதாக சொல்லபடுகிறது. மக்கள் பயணிப்பு குறைந்த நெடுஞ்சாலைகள் அமைக்க ஏராளமான பணம் வாரி இறைக்கப் பட்டிருக்கிறது. இந்த நிலையில் 2015 ல் ஆட்சிக்கு வந்த ரணில் – மைத்திரி அரசு எவ்வாறு பொருளாதாரத்தை நடத்துவது என திணறியதைப் பார்த்தோம். வங்கிகளில் பெரும் ஊழல் நிகழ்ந்ததை மூடி மறைக்கும் வேலை செய்த அதே வேளை அரசு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மேலும் மேலும் கடன்களை வாங்கியது. ரணில் ஆட்சிக்கு வந்த கையோடே உள்நாடுக் கடன் 12% வீதமாகவும் வெளிநாடுக் கடன் 25% வீதமாகவும் அதிகரித்துள்ளது. தற்போதைய முழுக் கடன் விபரம் மற்றும் சீனாவுடனான வர்த்தகம் பற்றிய விபரங்கள் எதுவும் முழுமையாக இன்னும் வெளிவிடப்படவில்லை. ‘எவ்வளவு கடன் இருக்கு என்பது எமக்கு இன்னும் தெரியாது’ என பிரதமரே பாராளுமன்றத்தில் அறிவித்தது தெரிந்ததே. மக்களுக்கு தகவல் செல்வதை முடக்குவதன் மூலம், சந்தை மற்றும் தமக்கான வாக்கு ஆதரவு ஆகியவைகளை கட்டுப்படுத்தத முனைகின்றது அரசு.
 13. இந்த நாடுகளில் எஞ்சி இருக்கும் சமூக சேவைகள் – தேசிய மயப்படுத்தப் பட்ட சேவைகள் ஆகியன பெரும் முதலீட்டாளர் கண்களில் ‘அனாவசிய’ செலவுகளாக பார்க்கப் படுகிறது. வங்கி, மருத்துவம், கல்வி ஆகிய துறைகளில் தனியார் முதலீட்டை கொண்டு வருவதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்பது தெளிவு.
 14. இந்திய அரசு 70% வீதத்துக்கும் அதிகமான வங்கி நடவடிக்கைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிய போதும் தெளிவற்ற – மக்கள் நலனை முதன்மைப் படுத்தாத –தனியார் லாபத்தை முதன்மைப் படுத்திய நடவடிக்கைகளே மேலோங்கி இருக்கிறது.
 15. இரட்டைக் கடன் பிரச்சினை – மீளப் பெற முடியாத கடன் பிரச்சினை – போன்ற பல்வேறு பிரச்சினைகளால் அரச கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகள் பெருமளவு பணத்தை இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
 16. 2010, 2011 காலப்பகுதியில் ஊதிப் பெருத்த கடன் வழங்குதலில் இருந்து ஏறத்தாள 17% வீதத்தை வங்கிகள் இழக்கும் எனக் கணிப்பிடப் பட்டுள்ளது. இந்த இழப்பின் வலியை வங்கியோ, பெரும் முதலீட்டாலர்களோ பொறுப்பெடுக்காமல்,- சுமை உழைக்கும் மக்கள் தோள்களில்தான் இறக்கப்படும்.
 17. குறைந்த எண்ணை விலை இருந்த போது இந்திய அரசு சம்பாதித்த பெரும்தொகை பணம் மக்களுக்கு திரும்பி வழங்கப் படவில்லை. எண்ணை விலையும் குறைக்கப் படவில்லை. இந்தப் பணம் மற்றும் நாணய மாற்று, கார்போரேட் வரி சார் அரச கொள்கைகள் பெரும் கார்பரேட்டுகளின் லாபத்தை பாதுகாக்க மட்டுமே உதவி இருக்கிறதன்றி மக்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை.
 18. மேற்கு வளர்ச்சி போதாமையால் கிழக்கு நோக்கி நகர்ந்த பெரும் முதலீட்டாளர்கள் தாம் எதிர்பார்த்த அளவு வருவாயை இந்தியாவில் இருந்து திரட்ட முடியவில்லை. இதை மாற்றி அமைக்கவும், லாபத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை செய்யவும் இந்திய அரசின் மேல் அதிக அழுத்தம் வழங்கப்பட்டு வருகிறது. இதே சமயம் வங்கிகளின் ‘பழுதான கடன்’ இல்லாமற் செய்யப்படுவது பொருளாதரத்தில் மேலும் பலமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
 19. இது தவிர ‘உண்மை நாணயமாற்று’ –சந்தையில் வெளிப்படுவது மேலதிக நெருக்கடிகளை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
 20. அமெரிக்கா தனது ‘பாதுகாப்பு’ பொருளாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கவும் –தற்போதிருக்கும் சிறு பொருளாதார வளர்ச்சியை தற்காத்துக் கொள்ளவும் எத்தகைய ‘வணிக யுத்தத்துக்கும்’ தயாராக இருக்கிறது என்பதையும் ட்ரம்ப் அரசின் நடவடிக்கைகள் தெளிவாக்கி உள்ளது.
 21. அமெரிக்க டாலரானது, சந்தையில் தனது சரியான மதிப்பை நிர்ணயிக்க முயல்வதானது தெற்காசிய ரூபாய்களை மேலும் வீழ்த்தும் அபாயமுள்ளது. ஏற்கனவே இலங்கை ரூபாயின் மதிப்பு வேகமாக விழுந்து வருவதை நாம் அவதானிக்க கூடியதாக இருக்கிறது. இது வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் அதற்காக ஒதுக்கப்படும் நிதி ஆகியவற்றின் மேல் மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.
 22. G7 நாடுகள் மத்தியில் கடுமையான போட்டி முத்தி வருவதை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இந்த ஆண்டின் G7 கூட்டத்தின் இறுதி உடன்படிக்கையில் இருந்து அமேரிக்கா விலத்திக் கொண்டிருப்பது தெரிந்ததே. இதைத் தொடர்ந்து கனடா பிரதமர் ட்ரம்ப்பை விமர்சித்ததும் – பதிலுக்கு அவரை ட்ரம்ப் தாக்கிப் பேசியாதும் தெரிந்ததே. இது தவிர இரும்பு மற்றும் அலுமினியம் முதலானவற்றுக்கான வரியை அமெரிக்க அதிகரித்திருக்கிறது. நேட்டோவுக்கு வழங்கும் பணம் மற்றும் இராணுவ உதவிகளையும் குறைப்பதற்கு நடவடிக்கைகளை ட்ரம்ப் நிர்வாகம் முன்னேடுத்து வருகிறது. மத்திய கிழக்கில் மேற்கின் பிடியை விட இரஸ்யாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதும் முரண்களைக் கூர்மைப்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைகள் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான வணிக யுத்தத்தை துரிதப்படுத்தும் என சொல்லப்படுகிறது.
 23. உலகப் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து நிரந்தரமாக மீளமுடியாத நிலையில் இந்த வணிக யுத்தம் அதிகரிப்பதை அவதானிக்க வேண்டும். இந்த ஆண்டு உலக GDPயின் 225% வீதமாக அதிகரித்திருக்கிறது உலகக் கடன். கடந்த ஆண்டு மட்டும் $20 ரில்லியன் டாலர்கள் கடன் அதிகரித்துள்ளது (ஒட்டுமொத்த கடன் $237 ரில்லியனுக்கு அதிகரித்திருந்தது). உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் என பிரித்துப் பார்த்தல், ஒவ்வொருவரும்  $30 000 டாலர்கள் கடனாளியாக இருக்கிறார்கள். இந்த கடன் தானாக நிவர்த்தியடைவது சாத்தியமில்லை.
 24. இதே சமயம் ஐரோப்பிய ஒன்றியமும் பல நெருக்கடிகளை எதிர்கொடுள்ளது. பிரித்தானிய வெளியேற்றம் ஐ.ஓன்றியத்தை பலவீனப் படுத்தி உள்ளது. தற்போது இத்தாலியில் அரசு பலமற்று இருப்பதற்கு ஐ.ஓ மேலான மக்கள் வெறுப்பும் ஒரு காரணம். கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐ.ஓ எதிரான பல எதிர்ப்புகளை செய்து வருவதும் தெரித்ததே. ஐ.ஓ எல்லைகளில் திரண்டு வாடிக்கொண்டிருக்கும் அகதிகளின் நிலவரமும் ஐ.ஓ வை தீவிர நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது. ஏனைய நாடுகளுக்கு ஒன்றியம் வழங்கிய இலக்கை அந்நாடுகள் நிவர்த்தி செய்ய மறுத்து அகதிகளை உள்வாங்க மறுத்து வருகின்றன பெரும்பான்மை நாடுகள். அதிகூடிய அகதிகளை உள்ளே விட்டார் என்ற பிரச்ச்சாரம் ஜேர்மானிய சான்சிலர் அஞ்செலா மேர்களின் ஆதரவை நிலை குலைய வைத்துள்ளது. யேர்மானிய அரசு பெரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
 25. இத்தகைய நிலைமையை பயன்படுத்தி தமது அதிகாரத்தை தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ள –தீவிர வலதுசாரிகள் பொபுலிச சொல்லாடல்களில் இறங்கி இருப்பதும் தெரிந்ததே. பொபுலிச வாக்குறுதிகளை வழங்குவதன் மூலமும் – தாம் நாடுப்பற்றாளர் என காட்டுவதன் மூலம்– வெளிநாட்டார் வருகையை கடுமையாக எதிர்பதாக காட்டுவதன் மூலமும் – வலதுசாரிய புதிய அமைப்புக்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்க வைத்து வருகின்றன. பழைய வலதுசாரிகளின் பொய் பிரட்டு – ஊழல் ஆகியவற்றாளும் ஊதிய உயர்வு இல்லாமையாலும், சேவைகள் வெட்டப்படுவதாலும் மேலதிக வறுமையை எதிகொண்டுள்ள பல தொழிலாளர் இந்த பொபுலிச அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கும் முறையில் எதிர்ப்பை காட்ட தயாராக இருக்கின்றனர். ஆனால் இந்த வலதுசாரிய பொபுலிச வாக்குறுதிகளை நிறைவேற்றும் வல்லமை இந்த அமைப்புக்களுக்கு கிடையாது. இவர்கள் தேசிய அளவில் – அல்லது பிராந்திய அளவில் அதிகாரத்தை பிடிக்கும் பொழுது தமது இயலாமையை விரைவில் மக்களுக்கு காட்டி நிற்கின்றனர். இது ஒரு தற்காலிக போக்கு மட்டுமே.
 26. முதலீட்டாளர்களுக்கு ‘பலமான’ நிலையை பாதுகாக்கும் ஒன்றாக மோடி அரசு தன்னை காத்துக் கொண்டு அராதிகாரத்தை தொடர்ந்து நிலைநாட்ட விரும்புகிறது. அதே சமயம் வெறும் பொபுலிச சொல்லாடல்கள் மூலமும் – இந்துத்துவ நாடுப்பற்றை தூண்டுவதன் மூலமும் – தமக்கு ஏற்படும் எதிர்ப்பை கட்டுப்படுத்த முனைகிறது. வேலை வாய்ப்பு ஏற்படுத்துவது முதற்கொண்டு மோடி ஆட்சிக்கு வருவதற்கு வழங்கிய எந்த உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் மக்கள் காங்கிரஸ் பாகம் திரும்ப முடியாத அளவில் அக்கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்த கட்சியாக இருப்பது மோடி அரசுக்கு ஒரு விதத்தில் உதவுகிறது. இந்த நிலை நீடிக்க முடியாது. விரைவில் வேறு பொபுலிச இயக்கங்கள் – எழுச்சிகள் தோன்றும் வாய்ப்புண்டு.
 27. இலங்கையிலும் பொபுலிச நூறு நாள் திட்ட அறிமுகத்துடன் ஆட்சியைப் பிடித்த அரசு தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. ஐக்கிய தேசிய கட்சி இந்த வாகுறுதிகளை வழங்கவிலை என அறிவித்து ரணில் அரசு தம்மை நூறு நாள் திட்டத்தில் இருந்து தற்போது விலத்திக் கொண்டுள்ளது.
 28. இந்த நிலை ராஜபக்சவின் ஆதரவு வளர உதவி வருகிறது. நாட்டை கடனுக்குள் முடக்கியதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்ற பாவனையில் பொபுலிச சொல்லாடல்களை –சிங்கள பௌத்த இனவாதத்தோடு கலந்து கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது ராஜபக்ச பகுதி. கடந்த உள்ளூர் தேர்தலின் பின் ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்து ரணில் அரசை கவிழ்க்க அவர்கள் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. ஆனால் அது கடைசி நிமிடத்தில் ஐ.தே.க பாரளுமற்ற உறுப்பினர் ஒன்றுபட்டதால் மட்டுமே நிகழ்ந்தது. தற்போது ஐ.தே.க கிட்டத்தட்ட இரண்டாக உடைந்த நிலையல் இருக்கிறது. விரைவில் கொஞ்ச பா.உ கள் ராஜபக்ச பக்கம் தாவலாம். அத்த்தருனத்தில் ஆட்சி கவிழும் என்ற நிரந்தரமற்ற தன்மை இலங்கை அரச அதிகாரத்தை ஆட்பிடித்துள்ளது. அரசு எந்த நேரமும் கவிழலாம் என்ற நிலைதான் உள்ளது. இந்நிலையில் எதிர்கட்சி தலைவராக இருக்கும் தமிழ்த் தேசிய கூடமைப்பின் தலைவர் சம்பந்தன் மட்டும் அரசுக்கு மிக விசுவாசமாக இருந்து அரசை காப்பாற்றி வருகிறார்.
 29. பெரும்பான்மை மக்கள் தமது வாழ்வாதாரம் நொறுக்கப்படுவதை தொடர்ந்து ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில்தான் பலர் இருக்கிறார்கள். திரும்பிப் பெற முடியாத கடன் ஏற்படுத்தும் இடைவெளியை அடைக்க அரசு முடுக்கி விடக் கூடிய தாக்குதல்களை தாங்கும் பொருளாதார பலம் உழைக்கும் மாக்கள் மத்தியில் இல்லை. இந்நிலையில் கடன் வழங்க மறுக்கும் போராட்டடம் தொடங்கி பல்வேறு போராட்டங்கள் எழவும் –பலப்படவும் சாத்தியமுள்ளது.
 30. தொழிலாளர் தெருவில் இறங்குவது பொபுலிசத்தை பின் தள்ளி புரட்சிகர கட்சிகளை பலப்படுத்தும்.