உச்சத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை!

1,805 . Views .

உச்சத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை!

– தினசரி விலை நிர்ணய கொள்கையை உடனடியாக திரும்ப பெறு.
– மத்திய, மாநில அரசுகளே பெட்ரோல் டீசல் மீதான மறைமுக வரிகளை ரத்து செய்.
– எண்ணெய் நிறுவனங்களை உழைப்பாளர்கள் கட்டுபாட்டில் பொதுவுடமையாக்கு.

2017 ஜுன் 16-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் பெட்ரோல் டீசலின் விலை தினமும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இம்முறை அமலுக்கு வந்து ஓராண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது.

தினசரி விலைமாற்றம் கொள்கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியபோது சுமார் ரூ.65-ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ஓராண்டில் ரூ.14 அதிகரித்து தற்போது ரூ.79 மேல் கடந்துச் சென்று கொண்டிருக்கிறது.

இதே நிலைதான் டீசல் விலையிலும். சுமார் ரூ.56-ஆக இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.15 அதிகரித்து தற்போது ரூ.71க்கும் மேலே சென்று கொண்டிருக்கிறது.

கடந்த 2008-ல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 147 டாலராக இருந்தபோது இந்தியாவில் பெட்ரோலின் விலை ரூ.48 தான். ஆனால், தற்போது அதே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பாதியாக சரிந்தபோதும் இங்கு விலையேற்றம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒருபுறம் பெருமுதலாளிகள் உழைக்கும் மக்களை உறிஞ்சி கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் அரசு வரிகளைக் கொண்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஆனால், இதே காலகட்டத்தில் உழைக்கும் மக்களின் சம்பளமோ, கூலியோ உயரவே இல்லை.

பெட்ரோல், டீசல் மீதான மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் வரி இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று. இந்த மறைமுக வரியால் (indirect tax) அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

பெட்ரோல், டீசல் பொருட்களின் விலையேற்றத்தால் Ola, Uber கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள், சிறு, குறு வியாபாரிகள் உட்பட பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மறைமுக வரியாக மக்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் மத்திய-மாநில அரசுகள் அனைவருக்குமான தரமான கல்வி, சுகாதாரம் போன்ற மக்கள் நல திட்டங்களையோ, அடிப்படை சேவைகளையோ வழங்காமல், கார்ப்பரேட் வரிச் சலுகைகளாக பெரும் பணக்காரர்களுக்கு அவற்றை வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ. 25 லட்சம் கோடிகளுக்கும் மேல் வரிச்சலுகையை அரசு அளித்துள்ளது. இதை ஈடு செய்ய, 2014-2019 இடையிலான பாஜக ஆட்சியின் 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி பெட்ரோல்-டீசல் கலால் வரி மூலம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை சுமார் ரூ.8 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகளாக பல லட்சம் கோடி ரூபாய்களை வாரி வழங்கும் அரசு, மறுபுறம் வரிகளால் ஏழை – எளிய மக்களை கசக்கிப் பிழிகிறது.

அதேவேளையில், கார்பரேட் நிறுவனங்கள் தினசரி விலையேற்றத்தின் மூலம் மேலும்மேலும் தங்களது இலாபத்தை குவித்துக் கொண்டு இருக்கின்றன. சொல்லப்போனால் அரசாங்கத்தின் முடிவுகளையே கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பெரும்பாலும் தீர்மானிக்கின்றன.

பா.ஜ.க (BJP), காங்கிரஸ் போன்ற அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தினசரி விலை நிர்ணய கொள்கையை கொண்டு வந்தது மோடி அரசு என்றால், இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுதான் தனியார் மயமாக்கலை ஆதரித்தது. இன்று தனியார் நிறுவனங்கள் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் காரணமாக இருக்கின்றன.

இதனை கண்டிப்பதற்கோ எதிர்த்து போராடுவதற்கோ பெரிய கட்சிகளோ அல்லது அமைப்புகளோ முன்வருவதில்லை. சில தனிநபர்கள் கோடிக்கணக்கில் வாரி சுருட்டும் இந்த முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான, மாற்று அரசியலை முன்வைப்பதன் மூலமாகதான் மக்களை இந்த அநியாய விலையேற்றத்தின் பிடியிலிருந்து விடுவிக்க முடியும்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களைக் கொண்டு உற்பத்திக்கு தேவையான ஆற்றலை உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால், லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இந்த முதலாளித்துவ சமூகத்தில் இத்தகைய தொழிற்நுட்ப வளர்ச்சிகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவது இல்லை.

அனைத்து வளங்களையும், பெரும் நிறுவனங்களையும் தொழிலாளர் கட்டுப்பாட்டின் கீழ் பொதுவுடைமை ஆக்குவதுமூலம் மட்டுமே மக்கள் பலன் பெற முடியும். இதன் மூலம்தான் ஒட்டுமொத்த மக்களின் வளர்ச்சியையும், சுற்றுச்சூழல் நலனையும் கருத்தில் கொண்ட அனைவருக்குமான திட்டமிட்ட பொருளாதாரத்தை ஏற்படுத்த முடியும்.

கரம் கோர்ப்போம் தோழர்களே!!!

மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்வைத்து தொழிலாளர் தலைமையில், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைந்து போராடினால்தான் மக்களின் வாழ்வாதாரத்தையும், உரிமைகளையும் வெல்ல முடியும்!

தோழமையுடன்,
புதிய பொதுவுடைமை இயக்கம்
New Socialist Alternative (CWI-INDIA)