வளங்களை வேட்டையாடும் வேதாந்தா

1,053 . Views .

சு. கஐமுகன் gajan2050@yahoo.com

அண்மையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், அரசு மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தில்  பதின்மூன்று பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்ததும் இருந்தனர். வேதாந்தா போன்ற காப்ரேட் நிறுவனங்களின் நலனுக்காக தனது சொந்த மக்களையே குருவிகளை சுடுவது போல் சுட்டு கொன்றது மோடி/தமிழ்நாடு அரசு. காப்ரேட்டின் நலனுக்காக எந்த எல்லை வரைக்கும் இவ்வரசு செல்லும் என்பதையே மேற்படி தூத்துக்குடி சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கக் கூடாது, ஒடுக்குமுறைகளை எதிர்க்கக்கூடாது, பிளவுபட்டிருக்கும் மக்கள் ஒன்றிணைந்து வீதிகளில் இறங்கிப் போராடக்கூடாது என்ற நோக்கதிற்காக, மக்கள் மத்தியில் ஒரு பீதியை ஏற்படுத்தும் நோக்கும் கூட அரச படுகொலைக்கு காரணம். யார் இந்த வேதாந்தா?, ஏன் வேதந்தாவிற்காக தனது நாட்டு மக்களையே எதிர்க்கின்றது இவ்வரசு?, வேதாந்தா என்ற நிறுவனத்திற்காக தனது சொந்த நாட்டு மக்களையே சுட்டுக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன?

பிரித்தானியாவிலுள்ள ஆசியப் பணக்காரர்களில், முதல் முப்பது இடத்திற்குள் ஒருவராக காணப்படும் அனில் அகர்வால் வேதாந்தா நிறுவனத்தின் நிறுவனரும், தற்பொழுது  அறுபது வீதத்திற்கும் அதிகமான பங்குகளைக் கொண்ட அதன் தலைவருமாவார். லண்டனில் தலைமை செயலகத்தை கொண்டு காணப்படும் வேதாந்தா நிறுவனமானது தனது சுரங்கத் தொழிலை இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற வறுமை மிக்க நாடுகளில் மேற்கொண்டு, துத்தநாகம், அலுமினியம், வெள்ளி, செம்பு போன்றனவற்றை தோண்டி எடுக்கின்றது. இதன் மூலம் மக்களின் உழைப்பையும் வளத்தையும்  சுரண்டுவது மட்டுமல்லாமல் அவர்களின்  வாழ்வாதாரத்தை சிதைக்கின்றது.

கடந்த வருடம் வேதாந்தா நிறுவனமானது Japan Aranstrate Inc இன் அதிக  பங்குகளை 158 மில்லியன் டாலர்களுக்கு வாங்கி அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த ஜப்பானிய நிறுவனமானது ஸ்மார்ட்போன், கமெரா, தொலைக்காட்சி, டப்ளேட் (Tablet) போன்றனவற்றுக்கு தேவையான மெல்லிய கண்ணாடிகளை உற்பத்தி செய்கின்றது. மேலும் 800 மில்லியன் டாலர் முதலீட்டில் தென்னாபிரிக்காவிலுள்ள ஷாம்பெர்க்( Shaamberg)  மலைக்கு அண்மையில் மிகப் பெரும் உருக்கு ஆலையை உருவாக்கி வருகின்றது. இவ்வாறு இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் பல பாகங்களின் நில வளங்களை சுரண்டும் வேலையை அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனமானது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. வேதாந்தா நிறுவனமானது உலகெங்கும் தனது வியாபாரத்தை விஸ்தரிப்பதனால் அதற்கு கப்பரின் தேவையும் அதிகமாக உள்ளது. அதனால் வளர்ந்து வரும் நாடுகளின் அரசுகளுடன் இணைந்து தனது வளச்சுரண்டலையும் விஸ்தரிக்கின்றது.

மோடி அரசின் பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் பங்குதாரர்களில் ஒருவாராக காணபடுகிறார் அனில் அகர்வால். உலக வளங்களைச் சுரண்டி கொள்ளையடிக்கும் வேதாந்தா, மோடி அரசின் பங்குதாரராக இருப்பது ஆச்சரியமில்லை.  இந்திய மத்திய அரசானது காப்ரேட்களின் நலன்களுக்காகவே இயங்கி வருகிறது என்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த ஓன்று. தனது விசுவாசத்தை வெளிப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் மோடி இங்கிலாந்து வரும்பொழுது அவரை வரவேற்க முழுப்பக்கத்தில் பத்திரிகை விளம்பரம் செய்தது வேதாந்தா நிறுவனம்.

மோடி இங்கிலாந்து வருகை தந்தபொழுது, மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஸ்டெர்லைட் டெக் நிறுவனம் உதவி புரிவதாகவும், அதற்காக தான் பெருமைப்படுவதாகவும் அனில் அகர்வால் ட்வீட் செய்திருந்தார். அனில் அகர்வால் பெருமைப்படும் அதே ஸ்டெர்லைட் நிறுவனம் தான்  தூத்துக்குடியில் இன்று பதின்மூன்று பேர் இறக்கக் காரமணமாக இருந்தது. ஒருபுறம் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டும், சுற்றுப்புறச் சூழல்களை மாசுபடுத்திக் கொண்டும் மறுபுறம் மோடி அரசின் பொருளாதார அபிவிருத்திப் பங்குதாரராக காணப்படுகிறது வேதாந்தா. ஆகவே இங்கு அரசு யாருடைய நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதை மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசும் காப்ரேட்டும் இணைந்து மக்களுக்கு எதிரான அரசியலையே முன்னெடுக்கின்றது.

கடந்த சில வருடங்களாக தன்னைச் சமுக அக்கறை உள்ள ஒரு நிறுவனமாகக் காட்டிக் கொள்ள மக்கள் சார்ந்த கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு நிதி உதவி செய்து வருகின்றது வேதாந்தா நிறுவனம். குறிப்பாக இந்தியக் கலாசார நிகழ்வுகள், ஆவணப் படங்கள் தயாரித்தல் போன்ற சமுக உணர்வுள்ள நிகழ்வுகளுக்கு நிதி அளித்து, அதன் மூலம் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப்  பெற முயல்கிறது. அது மட்டுமல்லாது வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளுக்கு உதவி செய்வதன் மூலம் தன்னை சமுக அக்கறை உள்ள ஒரு காப்ரேட்நிறுவனமாக முன்னிலைபடுத்த விரும்புகிறது. மக்கள் மத்தியில்  கிழிபடும் தனது முகத்திரையை மறைப்பதற்காக வேதந்தா காட்டும் போலி சமூக அக்கறையே இவைகளாகும்.

வேதாந்தா நிறுவனமானது ஒடிசா மாகாணத்தில் உருக்கு சுத்திகரிப்புச் சாலை, மின் ஆலை போன்றவற்றில் ஐம்பது ஆயிரம் கோடிக்கும் மேல் முதலிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மாநில அரசுக்கு சொந்தமான  நிறுவனமான Odisa Mining Corporation Ltd (OMCL) உடன் இணைந்து சுரங்கத் தொழிலில் ஈடுபடுகின்றது. 2013 முதல் இதனை எதிர்த்து மக்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் தமிழ்நாட்டு அரசை போல், ஒடிச அரசையும் தனது  தனது கைக்குள் போட்டுக்கொண்டு தொடர்ந்தும் தனது மக்கள் விரோத நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது வேதாந்தா நிறுவனம். அதிலும் குறிப்பாக, இந்த வருடம் ஜனவரி முதல் ஓடிச அரச நிறுவனமான ஓடிச சுரங்க நிறுவனமானது (Odisa Minging Company) ஒடிசவிலுள்ள கோரபுட் மாவட்டத்திலுள்ள கொடிங்கமலி சுரங்கத்தில் தோண்டி எடுக்கப்படும் அதிகளவான பாக்சைட் கனிமங்களை, சுத்திகரிப்பதற்காக வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்குகின்றது. ஒடிச மக்களின் எதிர்ப்பையும் மீறி அதனைக் கவனத்தில் கொள்ளாமல், வேதந்தாவிற்காகவே சேவகம் செய்கின்றது ஒடிச அரசு

ஒடிசா மாநிலத்தின் நியமகிரி மலைபிரதேசம் மற்றும், லஞ்சிகார் மாவட்டத்தில் 2000 ஆண்டு முதலே வேதந்தா நிறுவனமானது அலுமினியத் தாதுப்பொருள் மற்றும் பாக்சைட் கணிமத்தை  தோண்டி எடுப்பதை மேற்கொண்டது. எனினும் மக்கள் போராட்டத்தின் பின்னர் 2014 இல் முற்றுமுழுதாக நியமகிரி மலைப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டது.

நியமகிரி மலையானது என்பது மில்லியன் டான் அலுமியத் தாதுக்களை கொண்ட ஒரு மலையாகும். அங்கு வாழும் டோங்க்ரியா கோந்த் இன பழங்குடி மக்களுக்கு அம்மலைதான் கடவுள்.அதில் நடனமாடுவதுதான் அவர்களின் வழிபாட்டு முறை. வேதாந்தா நிறுவனம் வந்த பின்னர் அம்மக்களின் பண்பாட்டு முறை மற்றும் வாழ்வாதாரம் முற்றாகச் சிதைவடைந்தது. மக்கள் இதய நோய், தோல் வியாதிகள், சுவாச நோய் போன்றனவருக்கு ஆளாகினார்கள்.இதன் பின்னர் எழுந்த  மக்கள் போராட்டத்தின் பின்னர் அதனை சுற்றி உள்ள 118 கிராமங்களில் 12 கிராமங்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒட்டு மொத்தக் கிராமங்களுமே வேதந்தாவின் சுரங்கத் தொழிலுக்கு எதிராகவே தமது வாக்கை அளித்தனர். ஒரு கிராமம் கூட வேதாந்தா தங்களுக்கு வேண்டும், அதன் உருக்கு ஆலையை தொடரவேண்டும் என வாக்களிக்க வில்லை. இவ்வாறு மகாராஸ்டிரா, குஜாராத், கர்நாடகா போன்ற பல்வேறு இடங்களில் விரட்டி அடிக்கப்பட்ட வேதாந்தா ஒரு மக்கள் விரோத நிறுவனமாகும். இம் மக்கள் விரோத நிறுவனத்துக்குத்தான் ஒடிசா, தமிழ்நாடு போன்ற அரசுகள் தமது தார்மீக ஆதரவை அளிக்கின்றன.

சர்வதேச நிறுவனமான வேதாந்தாவின் லஞ்சிகாரில் உள்ள சுத்திகரிப்புச் சாலையில் வேலை செய்யும் தொழிலாளிகள் பலரின் சம்பளம் நாளொன்றுக்கு  இரு நூறு ரூபாய்களாகும். மேலும் இரசாயனக் கழிவுகளை கையாள பாதுகாப்பான உபரணங்கள் வழங்கப்படுவதில்லை. அத்துடன் இவ்வாலையிலிருந்து சல்பர் டையாக்சைட்டு, நைட்ரஜன், ஒக்சைட்டு, PM10, PM 2.5, கார்பன் டையோக்சைட்டு போன்ற நச்சு வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன.  லஞ்சிகார் சுத்திகரிப்புச் சாலையில் ஐம்பது மில்லியன் டான்( Ton) களுக்கும் மேற்பட்ட சிவப்பு நிறச்சேறு போன்ற நச்சுக் கழிவுப் பொருட்கள் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ளன அல்லது புதைக்கப்படவிருக்கின்றன. பருவ மழைக்காலங்களில் இச் சிவப்பு நிற நச்சுக் கழிவுப் பொருட்கள், சேறாகி, அருகில் உள்ள ஆற்று நீருடன் கலக்கின்றன. குறிப்பாக வம்சத்தாரா நதியுடன் கலக்கும் இக்கழிவுகளினால் ஒடிச மற்றும் ஆந்திர பிரதேச மக்கள் பாதிப்படைகின்றனர்.

லஞ்சிகாரினை சுற்றியுள்ள மக்கள் சுவாசம் மற்றும் தோல் வியாதிகளுக்கு ஆளாகி வருகிறனர். நிலத்தடி நீர், காற்று மற்றும் ஒட்டு மொத்தச் சுழலும் மாசடைவதனால் லஞ்சிகாரிலுள்ள வேதந்தாவின் சுத்திகரிப்புச் சாலையை சுற்றி உள்ள பிரதேசங்கள், மனிதர் வாழ்வதற்கு அருகதையற்ற ஒரு ஆபத்தான இடமாக மாறி வருவதாக ஒரு ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. ஒருபுறம் மக்களின் உழைப்பையும் சுரண்டி மறுபுறம் அவர்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுப்புறச் சூழலையும் சீரழிக்கின்றது வேதந்தாவின் லஞ்சிகார் கிளை.

இவ்வாறு மனித வளத்தையும் இயற்கை வளத்தையும் சுரண்டிக் கொள்ளையடிக்கும் வேதந்தாவிடமிருந்து மத்திய அரசும், மாநில அரசும் நன்கொடை என்ற பெயரில் கோடிக்கணக்கான பணத்தை வாங்கிகொண்டு கண்டும் காணாமல் இருந்துவிடுகின்றன. அவர்களின் மக்கள் விரோத செயல்களுக்கு, வளச் சுரண்டலுக்கு தமது மறைமுக ஆதரவை வழங்கி வருகின்றன. ஏனெனில் பி.ஜே.பி, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் அதிகளாவான நன்கொடை கொடுக்கும் தனி நபர் வரிசையில் முதன்மையானவராகக் காணப்படுகின்றார் அனில் அகர்வால்.

பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் வேதாந்தா நிறுவனத்திடமிருந்து Foreign Contribution Regulation Act (FCRA) – 2010 எனப்படும்  வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றுக் கொள்வது தொடர்பான சட்டத்துக்கு முரணாக நன்கொடை பெற்றுள்ளனர். இரண்டு கட்சிகளும் 5 லட்சம் முதல் 5 கோடி வரையான நிதியை நன்கொடைகளாக பெற்றுள்ளன என டெல்லியை தலைமையாகக் கொண்டு இயங்கும் Association for democratic Reforms- (ADR) எனப்படும் அரச சார்பற்ற நிறுவனமானது தெரிவித்துள்ளது. ADR என்னும் அமைப்பானது தேர்தல் மற்றும் அரசியலில் நிகழும் முறைகேடுகளை வெளிபடுத்தும் ஒரு அமைப்பாக இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தமது கட்சிக்காக நிதி பெற்றுக் கொண்டமையினால்தான் வேதந்தாவை எதிர்த்து மத்திய பி.ஜே.பி அரசால் இயங்க முடியவில்லை. அதனால்தான் தூத்துக்குடியில் இடம்பெற்ற படுகொலையானது மத்திய அரசு, மாநில அரசு, ஸ்டெர்லைட் நிர்வாகம் போன்றன இணைந்து நடத்திய அரச பயங்கரவாதம் என அழைக்கப்படுகிறது

FCRA – 1976  சட்டத்தின் பிரகாரம் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தோ அல்லது வெளிநாட்டு நிறுவங்களால் கட்டுப்படுத்தப்படும் இந்திய நிறுவனங்களிடமிருந்தோ இந்தியக் கட்சிகள் நன்கொடை பெற்றுக் கொள்ளக்கூடாது, அதையும் மீறிப் பெற்றுக் கொண்டால், பெற்றுக் கொண்ட நிதியைப் போல் மூன்று மடங்கு தொகையை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் எனவும், நன்கொடையைப் பெற்றுக் கொண்ட கட்சியின் உயர் அதிகாரிகளுக்கு மூன்று வருடம் வரையிலான சிறைத்தண்டனையும் வழங்கப்படும் எனவும் அச்சட்டம் கூறுகின்றது. ஆனால் இச்சட்டத்தை மீறித்தான் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் பல வருடங்களாக வேதந்தாவிடமிருந்து நிதியைப் பெற்றுக் கொண்டிருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வேதாந்தா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதி பெறுவதை சட்ட ரீதியாக அங்கிகரிப்பதற்காக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 2016 ஆம் ஆண்டு நிதி மசோதாவில் சில மாற்றங்களை மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் இலகுவாக வேதாந்தா மட்டுமல்லாது அமெரிக்க சுவிஸ் நிறுவனங்களிடமிருந்தும் இரண்டு கட்சிகளும் மிகப் பெரும் நிதிகளைப் பெற்றுள்ளது. பல வருடங்களாக வேதாந்த நிறுவனம் மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதும் அது பற்றி எதுவித கரிசனையுமில்லாமல், அதனிடமிருந்து நிதி பெறுவதையே பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் கவனம் செலுத்தியிருந்தன.

ADR ஆனது பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் Representation People Act (RPA-1951), FCRA  ஆகிய இரண்டு சட்டங்களையும் மீறி வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இரண்டு கட்சிகளுக்கும் எதிராக 2013 இல் வழக்குத் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது. இரண்டு கட்சிகளும் FCRA சட்டத்தை மீறியிருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தி அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையகத்திற்கு 2014 ஆம் ஆண்டு டெல்லி உயர் நிதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கட்சிகளுக்கு கிடைக்கும் கட்சி  நிதிகளில் 75 வீதமானவை வெளிப்படையான முறையில் நிகழ்வதில்லை என ADR  குற்றம் சுமத்தியுள்ளது. இதற்கு மேலும் வலுச் சேர்ப்பது போல் கடந்த மார்ச் மாதம் மோடி அரசானது எந்த வித விவாதங்களும் இல்லாமல் சட்டத் திருத்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன் பிரகாரம் 1976ஆம் ஆண்டிலிருந்து கட்சிகள் பெற்றுக் கொண்ட மறைமுக அல்லது  சட்டத்திற்கு புறம்பான நிதிகளைப் பாதுகாக்கின்றது இச்சட்டத் திருத்தம்.  மக்களுக்கு சார்பான சட்டங்களை இயற்றாமல், தம்மை பாதுக்காத்துக் கொள்ள, தாம் வாங்கும் நிதியை அதிகரிக்கவே சட்டத் திருத்தம் மேற்கொள்கின்றது இவ்வரசு.

நன்கொடை மூலம் தமது அரசியல் பொருளாதார நலன்களுக்காக வெளிநாட்டு அரசுகளும், நிறுவனங்களும் இந்திய அரசை பணிய வைத்துவிடும் என்பதனால், Foreign Contribution Regulation Act – 2010, ஆனது வெளிநாட்டு நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி அளிப்பதை தடை செய்கின்றது. ஆனால் தற்பொழுது மோடி அரசு கொண்டு வந்திருக்கும் சட்டச் சீர்திருத்தமானது வெளிநாட்டு நிறுவனங்களின் நிதி வழங்கலை அனுமதிப்பதுடன் முறைகேடான, சட்டத்துக்கு புறம்பான நிதி வழங்கலையும் அனுமதிக்கின்றது. உள்நாட்டு அரசு, வெளிநாட்டு அரசு மற்றும் காப்ரேட் நிறுவங்கள் அனைத்தும் இணைந்து நிதி மோசடிகளையும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றன. அதற்கு ஏற்றாற் போல் சட்டத்தையும் மாற்றுகின்றன. வேதாந்தா போன்ற நிறுவனகளுக்கு இத்தைகைய சட்டங்கள் மேன்மேலும் பலத்தை கூட்டுகின்றன.

சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுவிட்டதால், இதுவரை சட்டத்துக்கு புறம்பாக நிதி நன்கொடை அளித்து வந்த வெளிநாட்டு காப்ரேட் நிறுவனங்கள்,  இனிமேல் சட்ட ரீதியாக நிதி வழங்கி கட்சிகளை தமது கைக்குள் போட்டுகொண்டு மக்கள் விரோத நடவடிக்களை மேற்கொள்ளும். நிதியை வாங்கிய கட்சிகளும் காப்ரேட் நிறுவனங்களின் நலனுக்காகவே தமது அதிகாரத்தைப் பயன்படுத்தும் மக்கள் நலனுக்காக அல்ல. அண்மையில் தூத்துகுடியில் இடம்பெற்ற அரச பயங்கரவாதத்தின் பின்னால் இருக்கும் அரசியலும் இதுவாகும். இது போன்றே  ஸ்டெர்லைட் ஆலையிடமிருந்து நிதியைப் பெற்றுக் கொண்ட பி.ஜே.பி அரசு தானது விசுவாசத்தைக் காட்ட மக்களை சுட்டுத் தள்ளியது.

ADR இன் அறிக்கையின்படி 2015 – 2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில்  பி.ஜே.பியின் வருமானமானது 570.86 கோடிகளாகும். 2016-2017 வரையான காலப்பகுதியில் அதன் வருமானமானது 1034.27 கோடிகளாகும். அதாவது பி.ஜே.பி யின் வருமானமானது என்பது சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதிலும் 75-80  வீதம் வரையிலான நன்கொடை முகமற்றவர்களாலேயே மறைமுகமாக வழங்கப்பட்டுள்ளது. 2014 இல் ஆட்சிக்கு வந்த பி.ஜே.பி யின் பண மதிப்பானது 53 வீதத்தால் அதிகரித்துள்ளது.

2004-2012 வரையான காலப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஊடகங்கள் வழியாக பி.ஜே.பி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் வேதாந்தா நிறுவனத்திடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டன என 2014 இல் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. வேதாந்தா நிறுவனமானது, தனது இந்திய நிறுவனங்களின் ஊடாக பி.ஜே.பி க்கு 790 லட்சங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 879 லட்சங்களும் வழங்கியிருக்கின்றது. ஆகவே இவ்வரசு தனது விசுவாசத்தைக் வெளிபடுத்த , வேதந்தாவின் நலனுக்காக, மக்களை சுட்டுக்கொல்வது, வேதாந்தா போன்ற காப்ரேட் கம்பனிகளின் நலனுக்காக சட்டங்களை மாற்றுவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமில்லை.

ஒரிசாவில் வேதாந்தா பல மக்கள் விரோத நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொழுது ஒரிச சி.பி.ஐ.எம் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தது. பல லட்சம் தொண்டர்களைக் கொண்ட ஒரிசா சி.பி.ஐ.எம் ஒரு மக்கள் போராட்டத்தை கட்டி எழுப்பியிருக்கலாம், ஆனால் அதை அவர்கள் தவற விட்டுள்ளனர். வெறுமனே காப்ரேட் எதிர்ப்பு, அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு, என வாயால் மட்டுமே எதிர்ப்பைக் காட்டும் சி.பி.ஐ.எம், நிஜத்தில் மக்களுக்காக இறங்கிப் போராடுவதில்லை.

அதே போல் வேதந்தாவை எதிர்ப்பதற்கு மாவோயிஸ்ட்டுகள் முன்வைக்கும் வழிமுறைகளும் தவறானவையே. கல்லால் அடித்தால், போலீசாரைத் தாக்குதகல், போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தல் என சகாசவாதங்களையே முன்னிலைப்படுத்துகின்றனர். ஒரு திட்டமிடல் இல்லமால், பாதுகாப்பு வழிமுறை இல்லாமல் வெறுமனே கற்களாலும் தடிகளாலும் தாக்கும் மாவோயிஸ்ட்டுகளின் நடைமுறை ஆக்கபூர்வமான போராட்ட வழிமுறை அல்ல.

வேதாந்தா நிறுவனம் மூடப்பட்டுவிட்டதாக தற்பொழுது கூறப்பட்டாலும், அது நிரந்தராமாக மூடப்படவில்லை. மக்களின் கொந்தளிப்பு அடங்கிய பின்னர் அரச அதிகாரத்தின் ஆதரவுடன் மீண்டும் திறக்கப்படலாம். வேதாந்தா தற்காலிகமாகவே மூடப்பட்டுள்ளது என்றும் வெகு விரைவில் திறக்கப்படும் என்றே வேதாந்தா நிர்வாகமும் தெரிவிக்கின்றது. வேதாந்தா நிரந்தரமாக இழுத்து மூடப்பட்டும் வரை, வேதந்தாவிற்கு எதிரான மக்கள் போராட்டம் முற்றுப் பெறாமல் அது தொடரப்பட வேண்டும். உலகெங்கும் பல நாடுகளில் வேதந்தாவிற்கு எதிரான போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.ஆகவே தூத்துக்குடி மக்கள் உலகெங்கும் நடைபெறும் வேதந்தாவிற்கு எதிரான சக்திகளுடன் இணைந்து தமது போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும். அவ் ஆதரவு சக்திகளுடன்  ஒன்றினைந்து தமது பலத்தைக் கூட்ட வேண்டும் . தனியே தூத்துக்குடிக்குள் மட்டும் தமது போராட்டத்தை கட்டி எழுப்பாமல், அது உலகெங்கும் விரிவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் அதற்கு எதிரான போராட்டம் உலகெங்கும், முன்னை விடப் பல மடங்கு வீரியத்துடன் வெடிக்கும்.

 

சு.கஜமுகன் (லண்டன்)

gajan2050@yahoo.com