இம்ரான் கானின் வெற்றியின் பின்னணியில் இராணுவம்!!

சு.கஜமுகன் (லண்டன்)

gajan2050@yahoo.com

கடந்த மாதம் பாகிஸ்தானில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் முன்னால் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பி.ரி.ஐ ( தெஹ்ரீக் – இ- இன்சாப்) கட்சி வெற்றி பெற்றுள்ளது அல்லது வெல்ல வைக்கப்பட்டுள்ளது எனலாம். பாகிஸ்தானின் இருபத்திரண்டாவது பிரதமராக ஆட்சி அமைத்திருக்கும் இம்ரான் கானின் பி.ரி.ஐ கட்சியானது 1996 ஆம் ஆண்டு உருவாகப்பட்டு, 22 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான் தேசிய சபையானது 342 ஆசனங்களைக் கொண்டது அதில் 272 ஆசனங்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகின்றன. நடந்து முடிந்த தேர்தலில் எவரும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையான ஆசனங்களைப் பெறவில்லை அதாவது 137ஆசனங்களை எவரும் பெறவில்லை . பி.ரி.ஐ கட்சியானது 117 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளது. எனவே வேறு பலருடன் இணைந்து கூட்டணி வைத்தே இம்ரான் கான் ஆட்சியை அமைத்துள்ளார்.   

இதுவரை பாகிஸ்தான் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான மோசடியான தேர்தல் இது என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. நீதியானது அதிகாரங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது அதனை மக்களிடம் கொண்டுவர வேண்டும் என பிரச்சாரம் செய்த இம்ரான் கான் இராணுவ அதிகாரத்தின் துணையுடனேயே ஆட்சிக்கு வந்துள்ளமை வேடிக்கையான முரண் நகையாகும்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP), மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (PML-N) போன்ற கட்சிகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக, அவற்றினைத் தவிர்த்து இதுவரை ஆட்சியமைக்காத இம்ரான் கானை தமது கைப் பொம்மையாகத் தெரிவு செய்துள்ளது பாகிஸ்தான் ராணுவம் எனப் பேசப்படுகிறது. உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ உடன் இணைந்து பி.ரி.ஐ கட்சிக்கு எதிரானவர்களை ஒடுக்கும் வேலைகளை, அதிலும் குறிப்பாகப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியினை சிதைக்கும் வேலையினைத் இராணுவம் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்தது.

அதன் முதற் கட்டமாக, கடந்த வருடம், பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நாவாஸ் ஷெரிப்பின், லண்டனில் சொத்து வாங்கியமை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டை விசாரணை செய்து, அவரின் ஊழலை நிரூபித்து அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியது பாகிஸ்தான் நீதிமன்றம். 2016 இல் வெளியான பனாமா பேப்பரில், வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கிய பல்வேறு பிரபலங்களின் பெயர்கள் வெளியாகி இருந்தது. அதில் நவாஸ் ஷெரிப்பின் பெயரும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்தலில் நிற்பதற்கு தடை விதித்துள்ளதோடு மட்டுமல்லாமல், கடந்த மாதம் அவருக்கு சிறைத் தண்டனையும் வழங்கியுள்ளது நீதிமன்றம். மேலும் நவாஸ் ஷெரிப் பாகிஸ்தானிய இராணுவத்துடன் முரண்பட்ட ஒரு போக்கையே கடைப்பிடித்தார். குறிப்பாக இராணுவத்தின் அதிகாரங்களைக் குறைத்து மக்களுக்கான அதிகாரங்களை அதிகரிக்க முயற்சி செய்தார். இராணுவத்தை மக்கள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது பற்றிப் பேசினார். நவாஸ் ஷெரிப்பினைக் கைது செய்து சிறையில் அடைத்தமைக்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாகும் எனச் சொல்லப்படுகிறது.    

நவாஸ் ஷெரிப்பிற்கு சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என ஐ.எஸ்.ஐ தனக்கு அழுத்தம் கொடுத்தாதாகவும், நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கைகளிலும் தலையிட்டதாகவும் , இஸ்லாமாபாத் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆசிஸ் சித்திக்  தெரிவித்திருந்தார். இதன் மூலம் பாகிஸ்தானின் மிகபெரும் கட்சிளில் ஒன்றான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் தலைவரான நவாஸ் ஷெரிப்பினை சிறையில் தள்ளி, அவரது கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் வாக்கு வங்கியை சிதைத்து, தேர்தலில் இம்ரான் கானுக்கான ஆதரவை அதிகரிக்கச் செய்தது   பாகிஸ்தானிய இராணுவம் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

நவாஸ் ஷெரிப் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றார் என மேடைக்கு மேடை பிரச்சாரம் செய்து வந்தார்  இம்ரான் கான். ஆனால் இதுவரை அவரைக் கைது செய்யாத பாகிஸ்தானிய நீதிமன்றம் இப்போதுதான் கைது செய்து சிறையில் அடைத்தது எனின் அதன் பின்னணியில் இருப்பது இம்ரான் கானுக்காக சேவை செய்யும் பாகிஸ்தானிய இராணுவம் ஆகும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். பாகிஸ்தானைக் காப்பாற்றுங்கள் என்ற கோசத்தை முன்வைத்து 2011 இல் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான லாககூரில் ஊழலுக்கு எதிரான பேரணி ஒன்றை நடத்தியிருந்தார் இம்ரான் கான். தான் நடாத்திய பேரணியின் வெற்றியே நவாஸ் ஷெரிப்பின் கைது என அதைத் தனக்கு சாதமாகப் பயன்படுத்தியும் கொண்டார் இம்ரான் கான்.

இது தவிர, நவாஸ் ஷெரிப் பின் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கிய உறுபினர்களை இம்ரான் கானின் கட்சிக்கு சேரச் சொல்லி பல்வேறு மிரட்டல்களை விடுத்தது இராணுவம். அது மட்டுமல்லாது, அக்கட்சியின் சார்பாக நின்ற வேட்பாளர்கள் மிரட்டப்பட்டார்கள். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவராகிய ரனா இக்பால் சிராஜ், பாகிஸ்தான் இராணுவத்தினால்தான் மிரட்டப்பட்டதாகவும், துன்புறுத்தப்பட்டதாகவும் வீடியோ ஒளிப்பதிவு ஒன்றை அண்மையில் வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், பி.ரி.ஐ கட்சியை சாராத பிற கட்சி வேட்பாளர்களது வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளாமல் வேண்டுமென்றே இழுத்தடிப்புச் செய்தது பாகிஸ்தானிய தேர்தல் ஆணையகம். மேலும் வேட்பாளர்களைக் குறி வைத்து குண்டுத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டது. ஏனெனில் ராணுவத்தைப் பொறுத்தவரை பி.ரி.ஐ ஆட்சிக்கு வர வேண்டும் அல்லது தொங்கு பாராளுமன்றம் அல்லது பலவீனமான கூட்டணியுடன் கூடிய ஆட்சி அமைய வேண்டும் என்பதே நோக்கமாகும்.

வேறு எந்தக் குற்றமும் செய்யாமல் நவாஸ் ஷெரிப்பிற்கு ஆதரவு தெரிவித்தமைக்காக மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். அதுவும் குறிப்பாக கடந்த ஜூலை 13 ம் திகதி, நவாஸ் ஷெரிப் கைது செய்யப்படுவதற்கு முதல் நாள் தடாலடியாக அறுநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யபப்பட்டனர். நவாஸ் கைது செய்யப்படும்பொழுது இவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கலாம் அல்லது போராட்டம் நடத்தலாம் என்ற அச்சத்திலேயே இவர்களள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 17,000 க்கும் மேற்பட்ட நவாஸ் ஷெரிப்பின் ஆதரவாளர்களின் மேல் கிரிமினல் வழக்கும் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், பல முக்கிய தலைவர்களுக்கு எதிராக ஊழல் விசாரணையையும் ஆரம்பிக்கப்பட்டது. இம்ரான் கானுக்கு எதிராக களமிறங்கியிருப்பவர்களை அச்சுறுத்தும் நோக்கில் பாகிஸ்தான் இராணுவம், ஐ.எஸ்.ஐ மற்றும் நீதிமன்றம் ஆகியன ஒன்றிணைந்து பல்வேறு ஒடுக்குமுறைகளை மேற்கொண்டது. அதிகாரம் என்பது மக்களுக்காக அல்ல அது மக்களை ஒடுக்குவதற்காக என்பதை பாகிஸ்தான் அதிகார சக்திகள் நிரூபித்துள்ளன.

பாகிஸ்தானின் முன்னணி பத்திரிகைகளான டோன் (Dawn) என்னும் ஆங்கிலப் பத்திரிகையும், ஜங் (Jang) என்னும் உருதுமொழிப்  பத்திரிகையும், நவாஸ் ஷெரிப் பிற்கு தனது ஆதரவை தெரிவித்தமையால் அதன் விநியோகம் முடக்கப்பட்டது. அத்துடன் பி.ரி.ஐ க்கு எதிராக பிரச்சாரம் செய்த பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மிரட்டப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக பாகிஸ்தானின் பிரபல கட்டுரையாளர்களாகிய பாபர் சத்தார்க், முஷராப் சைதி போன்றோரின் கட்டுரைகளைப் பிரசுரிக்கக்கூடாது என த நியூஸ் (The News) என்னும் பத்திரிகைக்கு உத்தரவு பிறப்பித்தது இராணுவம்.

கடந்த பெப்ரவரி மாதம் மீடியாலாஜிக் வெளிட்ட அறிக்கையின் படி, பாகிஸ்தானில் அதிகளாவான மக்களால் பார்க்கப்படுகின்ற தொலைக்காட்சி  சேவைகளில் முதலிடத்தைப் பெற்றிருப்பது ஜியோ டிவி ஆகும். ஜியோ டிவி யானது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் பிரச்சாரங்களினை ஒளிபரப்பியமையாலும், நவாஸ் ஷெரிப்பினை ஆதரித்து செய்திகளை வெளியிட்டமையினாலும் அதன் சேவை பாகிஸ்தானிய இராணுவத்தினால் முடக்கப்பட்டது. அதனால் நாட்டின் எண்பது வீதமான பிரதேசங்களில் அதன் ஒளிபரப்பு தடைப்பட்டது. அதுதவிர ஜியோ டிவி யினை அவர்களது கேபிள் சானல்களிலிருந்து நீக்கக்கோரி கேபிள் டிவி உரிமையாளர்களுக்கு ஐ.எஸ்.ஐ யானது அழுத்தம் கொடுத்தது. எனினும் தாம் எந்த ஒளிபரப்பு சேவையினையும் தடை செய்யவோ அல்லது முடக்கவோ இல்லை என பாகிஸ்தானிய அரசின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்திருந்தது. பாகிஸ்தான் அரசின் ஊடக ஆணையத்தையும் மீறி ஊடக சுதந்திரத்தை முடக்கியுள்ளது ஐ.எஸ்.ஐ மற்றும் பாகிஸ்தான் இராணுவம்.  

பின்னர் ஜியோ நிர்வாகம் இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்  அதன் போது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாவும் அதற்கு நிர்வாகம் உடன்பட்டதாலேயே  தொலைகாட்சி சேவையினை மீள ஒளிபரப்பு செய்ய இராணுவம் அனுமதி அளித்தது என்றும் கூறப்படுகின்றது. எனினும் சேவை நிறுத்தப்பட்டதிற்கும் ராணுவத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றிய அல்லது என்ன வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது என்பது பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் ஜியோ தொலைகாட்சியின் தலைவர் அஸ்லாம். ஊடகங்களை மிரட்டி, ஊடக சுதந்திரத்தைக் கேள்விக்குறிக்குள்ளாக்கி, கருத்துச் சுதந்திரத்தை சிதைத்து, பத்திரிகைச் சுதந்திரத்தை குழி தோண்டிப் புதைத்து அதன் மேல் தனது வெற்றியை நிலை நாட்டி இருக்கின்றார் இம்ரான் கான்.

சில வாக்குச்சாவடி நிலையங்களினுள் பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது என்பது மேலிடத்து உத்தரவு. மீறி செல்ல வேண்டும் எனின் இராணுவ உயர் அதிகாரியிடமிருந்து  கடிதம் வாங்கி வரவேண்டும் என அங்கு கடமையிலிருந்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் .வாக்குச்சாவடியினுள் நிகழும் மோசடிகளை வெளி உலகிற்கு அம்பலப்படுத்துவார்கள் என்ற அச்சத்தினிலேயே பத்திரிகையாளர்கள் உள் அனுமதிக்கப்படவில்லை.

தனது கொள்கைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றாமல் அதிகாரத்தின் துணை கொண்டு ஒடுக்கு முறைகளைப் பிரயோகித்தே ஆட்சியைக் கைப்பற்றி உள்ளார் இம்ரான் கான். இவ்வாறு ராணுவ அதிகாரத்தின் துணையுடன் ஆட்சிக்கு வந்த இம்ரான் கான் மக்கள் நலனை விட ராணுவத்தின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுப்பார் என்பது வெளிப்படை. ஆகவே மீண்டும் மக்கள் ஒடுக்கப்படும் நிகழ்வே தொடர்ந்த வண்ணமிருக்கும்.  

பாகிஸ்தானிய இராணுவமானது அதிகாரங்களையும் சொத்துகளையும் தன்னகத்தே கொண்ட மிகப் பெரும் சக்தியாகும். பொதுவாக தன் நாட்டிலுள்ள  நிறுவனங்களையும் இராணுவத்தையும் அரசே கட்டுபடுத்தும் ஆனால் பாகிஸ்தானில், நிறுவனங்களையும், அரசையும் கட்டுபடுத்தும் ஒரு சக்தியாக பாகிஸ்தானிய இராணுவமே விளங்குகின்றது. நாட்டின் மொத்த உற்பத்தித்துறையின் மூன்றிலொரு பங்கை இராணுவம் கட்டுப்படுத்துகிறது.  ராணுவத் துறையிலுள்ள தனியார் சொத்துக்களின் பெறுமதி 20 பில்லியன் டாலர்களாகும். அதில் பத்து பில்லியன் நிலமாகவும், பத்து பில்லியன் அசையும் அசையாச் சொத்துகளாகவும் காணப்படுகின்றது.

பாகிஸ்தானில் உள்ள மிகப் பெரும் உற்பத்தி  நிறுவனங்கள், பேக்கரிகள், பல் பொருள் அங்காடிகள், எரி பொருள் நிரப்பு நிலையங்கள், கோல்ப் மைதானங்கள் என்பன பாகிஸ்தானிய ராணுவத்தின் கட்டுப்பாடின் கீழேயே உள்ளது. அதாவது பெரும்பான்மையானவற்றின் உரிமையாளர்களாக இராணுவ அதிகாரிகள், தளபதிகள், முன்னால் இராணுவ பிரிகேடியர் போன்றவர்களே காணப்படுகின்றனர். பல ராணுவ அதிகாரிகள் பில்லியனர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு புறம் வறுமை, ஊழல், வேலையில்லாப் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. மறுபுறம் இராணுவ அதிகாரிகள் செல்வச் செழிப்பில் மிதக்கின்றனர்.

பாகிஸ்தானின் அதிகாரமானது அரசின் கையிலும் இராணுவத்தின் கையிலும் மாறி மாறி சென்ற வண்ணமுள்ளன. அதிலும் குறிப்பாக, 1947 இல் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றதற்குப் பின்னரான காலகட்டங்களில், முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக பாகிஸ்தானானது நேரடியான இராணுவ ஆட்சியிலும் மிகுதி காலத்தில் மறைமுகமான இராணுவ ஆட்சியின் கீழேயும் இருந்து வந்துள்ளது. ஆகவே இவ் ஒடுக்குமுறையிலிருந்து விடுபட பாகிஸ்தானிய ஓடுக்கப்படும் மக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் ஒரு அமைப்பாகத் திரண்டு தமது போராட்டத்தை கட்டியெழுப்ப வேண்டும். மேலும் இந்தியா, இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் ஒடுக்கப்படும் மக்களுக்காக இயங்கும் மக்கள் அமைப்புகள், தொழிலாளர்கள் அமைப்புகளுடன் இணைந்து தமது பிராந்திய பலத்தைக் விஸ்தரிக்க வேண்டும். அம்மக்களுக்கு ஒரு பிரச்சனை எனின் தெற்காசிய பிராந்தியம் எங்கும் அவர்களுக்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்க வேண்டும். பாகிஸ்தான் மக்களின் பிரச்சனைகள் சர்வதேசமயப்படுத்தப் படவேண்டும். பாகிஸ்தானின் வளங்களை இராணுவத்திற்குப் பதிலாக மக்கள் கட்டுப்படுத்த வேண்டும். அதன் மூலம் திட்டமிட்ட பொருளாதாரக்கொள்கை அமுல்ப்படுத்தப்படவேண்டும். அதற்காக, பாகிஸ்தான் மக்கள்       பாகிஸ்தானிற்குள் மட்டுமல்லாது, பாகிஸ்தானிற்கு வெளியிலும் தமது நட்பு சக்திகளுடன் இணைந்து தமது போராட்டத்தை கட்டி எழுப்ப வேண்டும். அதனை நோக்கிய வேலைதிட்டங்கள் ஆரம்பிக்கப்படவேண்டும்.