காவல்துறை அதிகாரியின் ஸ்காட்லாந்து பயணம் ரத்து

1,109 . Views .

சு.கஜமுகன் (லண்டன்)
gajan2050@yahoo.com
கடந்த சனிக்கிழமை (செப்டெம்பர் 29) பிரித்தானியாயவிற்கு வருகை தரவிருந்த, இலங்கை பொலிஸ்
திணைக்களத்தின் உயர் அதிகாரியான புஜித் ஜெயசுந்தரவின் பயணமானது இறுதி நேரத்தில் ரத்து
செய்யப்பட்டது. ஸ்காட்லாந்திலுள்ள, ஸ்காட்டிஷ் போலீஸ் கல்லூரியில் ஒரு வாரம் தங்கியிருந்து
பிரத்தியோக பயிற்சி எடுக்கவிருந்த நிலையிலேயே இப் பயணமானது ரத்து செய்யப்பட்டது.
ஸ்காட்லாந்து போலீஸ் கல்லூரியானது 2௦13 முதல் கல்லூரியாக மட்டுமல்லாமல் ஸ்காட்லாந்து
காவல்துறையின் தலைமையகமாகவும் விளங்குகின்றது. உளவுத்துறை பகுப்பாய்வு, துப்பறிதல்,
தொழில்நுட்பங்களைக் கையாளுதல், என பல்வேறு பயிற்சிகள் இங்கு காவல்துறையினருக்கு
வழங்கப்படுகின்றது. ஆகவே ஒருவார காலம் அங்கு தங்கி பிரத்தியோக பயிற்சி எடுக்க புஜித்
ஜெயசுந்தர எண்ணியிருந்தார். எனினும் அவரின் வருகைக்கு முதலே எதிர்ப்பு அலைகள் கிளம்பத்
தொடங்க அவரின் பயணமானது ரத்து செய்யப்பட்டது. புஜித் ஜெயசுந்தர வுடன் இணைந்து, சட்டம்
மற்றும் ஒழுங்கு துணை அமைச்சர் நளின் பண்டார மற்றும் மேலும் பல உயர் அதிகாரிகள் வருகை
தரவிருந்தனர்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஸ்காட்லாந்து போலீஸ் கல்லுரியிலிருந்து இரண்டு அதிகாரிகள்
இலங்கை சென்று புஜித் ஜெயசுந்தரவை சந்தித்துள்ளமை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய
முக்கிய விடயமாகும். ஆகவே இதற்கான அடித்தளம் கடந்த வருடமே போடப்பட்டுவிட்டதோ என
மக்கள் சந்தேகம் கொள்கின்றனர்.
புஜித் ஜெயசுந்தரவின் வருகையின் போது தமிழ் சொலிடாரிட்டி அமைப்பானது ஆர்பாட்டம் ஒன்றை
செய்ய திட்டமிட்டிருந்தது என ஸ்காட்லாந்திலிருந்து வெளியாகும் பத்திரிகையான ஸ்காட்லான்ட் ஒன்
சண்டே ( Scotland On Sunday) தெரிவித்துள்ளது. அத்துடன் பிரித்தானிய தமிழ் பொப் இசைப்
பாடகியான மாயாவும் போராட்டத்திற்கு அழைப்பு விட இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் யுத்தம் இடம்பற்ற காலத்தில் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப் படையினர்
இணைந்து பல்வேறு போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்டிருந்தனர்.
அதனால் அவர்களுக்கு ஸ்காட்லாந்தில் பயிற்சி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாடகி
மாயா,மற்றும் தமிழ் சொலிடரிட்டி போன்ற அமைப்புகள் போராட்டம் நடத்த தயாராகவிருந்தன.
கடந்த ஏப்ரல் மாதம், சர்வதேச உண்மைமற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP – International Truth and
Justice Project) என்னும் அமைப்பானது போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட 56
இலங்கை விசேட அதிரடிப் படையினரின் இரகசியப்பட்டியல் ஒன்றை வெளியிட்டு, அவர்களை
ஐ.நாவின் அமைதி காக்கும் பணிக்கு தெரிவு செய்யக் கூடாது என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் மாயாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக் கொண்டு உருவாக்கப்பட்ட
திரைப்படமான ‘’மாதங்கி/ மாயா/ எம். ஐ. ஏ ’’ என்னும் திரைப்படமானது ஸ்காட்லாந்தில்
வெளியிடப்பட்டது. மாயா என அழைக்கப்படும் மாதங்கி அருட்பிரகாசம் இலங்கையில் இடம்பெற்ற
யுத்தத்திலிருந்து தப்பி அகதியாக பிருத்தானியாவில் தஞ்சமடைந்து பின்னர் எவ்வாறு தனது
இலட்சியமான இசைத்துறையை நோக்கி பயணித்தார் என்பதே படத்தின் மையக் கருத்தாகும். அதில்
கலந்து கொண்டு பேசிய பொப்பிசைப் பாடகி மாயா தமிழ் மக்களுக்கு இடம்பபெற்றது இனப்
படுகொலை என்றும், புஜித் ஜெயசுந்தரவின் வருகையின் போது ஸ்காட்லாந்து மக்கள் மற்றும் மக்கள்
அமைப்புகள், சுதந்திர மக்கள் இயங்கங்கள் போன்றன அவரின் வருகையை எதிர்த்து போராட்டத்தில்

ஈடுபடவேண்டும் எனவும் அறைகூவல் விடுத்தார். இனப்படுகொலை செய்த அரசுடன், ஸ்காட்லாந்து
அரசு கை கோர்ப்பதை ஸ்காட்லாந்து மக்கள் விரும்ப மாட்டார்கள் எனவும் மாயா மேலும்
தெரிவித்திருந்தார்.
பெரும்பாலான ஸ்காட்லாந்து மக்கள் புஜித் ஜெயசுந்தர வின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க தயாராக
இருந்ததாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ரில்லி கிப்போர்ட் தெரிவித்திருந்தார். ஸ்காட்லாந்து மக்கள் தமிழ்
மக்களுக்கு தமது ஆதரவை தெரிவிக்க முன்வந்தமையானது, அதிகாரத்திற்கு எதிராக பல்லின மக்கள்
ஒன்று சேரும்போது போராட்ட சக்திகள் வலுப் பெறுகின்றமையைக் காட்டுகின்றது.