பாகிஸ்தானின் புதிய அரசு எதிர்நோக்கவுள்ள சவால்கள

1,129 . Views .

சு. கஜமுகன் (லண்டன்)

gajan2050@yahoo.com

பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு இம்ரான் கானின் பி.ரி.ஐ கட்சியானது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பிரதமாராக பதவி ஏற்றுக்கொண்ட இம்ரான் கானின் புதிய அரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் காத்திருக்கின்றன.

ஜனநாயகத்தை காப்பாற்றுதல், ஊழலுக்கு எதிராக போராடுதல், மக்களின் கடனை நீக்குதல் ,கல்வி மற்றும் மருத்துவத்தை அரசு வழங்குதல், மத அடிப்படை வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தல், இஸ்லாமிய நலன்புரி அரசை உருவக்குதல் என பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சியைக் கைப்பற்றி உள்ள பி.ரி.ஐ கட்சியானது தனது உறுதிமொழிகளை நிறைவேற்ற உள்ளுரிலும் சர்வதேசத்திலும் பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

அணு ஆயுத பலத்தைக் கொண்டிருக்கும் நாடான பாகிஸ்தானானது, மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்கா நாடுகள் என் பல்வேறு நாடுகளை தொடர்புபடுத்தும் ஒரு முக்கிய கேந்திர நிலையமாகக் காணப்படுகிறது. எழுபது வீதமான உலக வர்த்தகங்கள், அதிலும்  குறிப்பாக எண்ணெய் விநியோகங்கள் பாரசீக வளைகுடா ஊடாக நடை பெறுவதை அறிவோம். ஆகவே பாரசீக வளைகுடாவின் முகத்துவாரத்தில் காணப்படும் பாகிஸ்தானின் புவியியல் அமைவானது பாகிஸ்தான் முக்கியம் பெறுவதற்கு இன்னுமொரு காரணமாகும். இதன் காரணமாக தமது அரசியல் பொருளாதார சுயநலன்களுக்காக இந்தியா , சீனா போன்ற அதனை சுற்றி உள்ள நாடுகளும், மேற்கத்தைய நாடுகளும் பாகிஸ்தானில் தமது ஆதிக்கத்தை செலுத்த முனைகின்றன. அதனால் பயங்கராவதம், மத அடிப்படைவாதம், மத மற்றும் இன ரீதியான பிளவுகளை மறைமுகமாக ஏற்படுத்துகின்றன. இந் நடவடிக்கைகள்  பாகிஸ்தானின் பொருளாதரத்தை சிதைவடையச் செய்கின்றது. பாகிஸ்தானின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்த முனையும், பாகிஸ்தானின் வளங்ககளை சுரண்டிக் கொண்டிருக்கும் பிற நாடுகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டியது இம்ரானின் கான் அரசு எதிர்நோக்கும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றாகும்.

பாகிஸ்தானின் பொருளாதாரமானது நெருக்கடி நிலையிலேயே உள்ளது. வெளிநாட்டுக் கடன்கள் அதிகமாகவும், வெளிநாட்டு முதலீடுகள், வருமானங்கள் குறைவாகவும், இறக்குமதிகளுக்கு அதிகமாக செலவழிக்கப்படும் நிலையுமே  காணப்படுகின்றது. கடந்த எட்டு மாதங்களில் பாகிஸ்தான் நாணயத்தின் பெறுமதியானது நான்கு தடவை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆகவே வெகுவிரைவில் பொருளாதார வெடிப்பு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளே காணப்படுகின்றன. மேலும், பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது அண்ணளவாக வெறும் ஐந்து சதவீதமாகவே காணப்படுகின்றது. 2018 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.8 வீதமாகக் காணப்பட்ட போதிலும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு அதன் வளர்ச்சியானது மூன்று சதவீதத்தை தாண்டாது என்றும் எதிர்வு கூறப்படுகின்றது.  

அமெரிக்கா, தற்பொழுது பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியைக் குறைத்துள்ளது. ஆகவே பாகிஸ்தானானது அதன் உள்கட்டுமான வளர்ச்சிக்கு முதலீடு செய்யும் சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளது. சீன அரசானது, தனது புதிய பட்டுப்பாதை( New silk Route) திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக, சீபெக் (CPEC- china Pakistan Economic Corriodor) என அழைக்கப்படும் திட்டத்தின் கீழ், பாகிஸ்தானின் வீதிகள், பெரும் தெருக்கள், துறைமுகங்கள் போன்ற அபிவிருத்திக்கு 57 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களில், பாகிஸ்தான் 7 பில்லியன் டொலர்களை சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளது. இத்திட்டமானது பாகிஸ்தானில் கட்டுமானப் பொருட்களின் இறக்குமதியை அதிகரிக்கின்றதோடு மட்டுமல்லாமல், கடனையும் அதிகரிக்கச் செய்கின்றது. மேலும் பணப் பற்றாக்குறையையும், நாணயப் பெறுமதி வீழ்ச்சியையும், பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றது. ஏற்கனவே கடன் மற்றும் செலவீனங்களை தாக்குப் பிடிக்க முடியாமல் ஐ.எம்.எப் பிடம் கடன் கேட்டு நிற்கின்றது பாகிஸ்தான் அரசு. ஆகவே கல்வி, மருத்துவம், சுகாதாரம், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு போன்ற மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவு செய்யாமல் வெறுமனே கட்டுமானங்களுக்கு மட்டுமே செலவு செய்கின்றமையானது, பாகிஸ்தான் அரசை மேலும் கடனுக்குள் தள்ளி விடும் முயற்சி ஆகும். இது ஒரு திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி அல்ல, மாறாக பாகிஸ்தானை தனது சுய அரசியல் பொருளாதார லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ள முனையும் சீன அரசின் நடவடிக்கை சார்ந்ததாகும்.

சவூதி அரேபிய அரசானது பாகிஸ்தானில் முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. பல்வேறு சர்வதேச நிதி நிறுவனங்களும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளன. சர்வதேச நாடுகளும், சர்வதேச நிறுவனங்களும் தமது சுய லாபங்களுக்காக பாகிஸ்தானில் முதலிட முண்டியடிக்கிறார்களே தவிர இங்கு மக்கள் நலத் திட்டங்களை அமுல்படுத்த, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள எவரும் தயாராகவில்லை. ஆகவே இம்ரான் கானின் அரசானாது, வெளிநாட்டு நிதிகளைப் பெற்றுக் கொண்டு வெறுமனே வியாபாரத்தை மட்டும் விஸ்தரித்து, நாட்டின் கடனை அதிகரிக்கச் செய்யப் போகின்றதா அல்லது திட்டமிட்ட பொருளாதாரக்கொள்கைகளை அமுல்படுத்தி மக்கள் நல திட்டங்களை முன்னெடுக்கப் போகின்றதா என்பது மிக முக்கியமான கேள்வியாகும்.

ஆசியாவிலுள்ள மிகவும் வறுமையான, அபிவிருத்தி குறைந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும். அதன் பொருளாதாரமானது விவசாயத்துறை , ஆடை மற்றும் தோல் உற்பத்தித்துறை போன்றனவற்றிலேயே தங்கியுள்ளது. இவற்றில் முதலீடு செய்யாமல், இத்தகைய துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் வெறுமனே பெருந்தெருக்கள், துறைமுகங்கள், போன்ற  உள்கட்டுமானங்களை மட்டுமே அபிவிருத்தி செய்வதனால் பாகிஸ்தான் மக்களுக்கு என்ன பலன்?. பாகிஸ்தான் மற்றும் சீன நாட்டின் அதிகார சக்திகளே இதனால் பயன் அடைவார்களே தவிர, சாதாரண பாகிஸ்தானின் மக்கள் அல்ல.

1980 முதல் இன்று வரை பாகிஸ்தான் அரசானது பதின்நான்கு தடவை ஐ.எம்.எப் மிடமிருந்து நிதி உதவியைப் பெற்றுக் கொண்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு 7.6 பில்லியன் டொலர்களையும், 2013 ஆம் ஆண்டு 6.6 பில்லியன் டொலர் களையும், ஐ.எம்.எப் பிடமிருந்து கடனாகப்  பெற்றுக் கொண்டது. இம்ரான் கானின் அரசானது பத்து முதல் பதினைந்து பில்லியன் டொலர்கள் வரையான கடனை பெறும் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது. ஐ.எம்.எப் ஆனது கடன்களை வழங்கும்பொழுது அதன் கொள்கைகளான கல்வி மருத்துவம் சுகாதாரத்துக்கான அரச செலவைக் குறைத்தல், பொதுத் துறைகளின் செலவைக் குறைத்து அவற்றைத் தனியார் மயபப்படுத்தல் போன்றனவற்றை அமுல்ப்படுத்த கோரி கடன் பெற்ற நாடுகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும். ஆகவே ஐ எம் எப் பின் அழுத்தம் காரணமாக தேர்தல் பிரசாரத்தின் போது இம்ரான் கான் வழங்கிய வாக்குறுதிகளான கல்வி சுகாதாரம் மருத்துவத்தை அரசே வழங்கும், மக்களின் கடன்கள் நீக்கப்படும், இஸ்லாமிய நலன்புரி அரசு உருவாக்கப்படும் போன்ற வாக்குறுதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டி வரலாம்.

சர்வதேச சக்திகள், பாகிஸ்தான் இராணுவத்திற்கு நேரிடையாகவே நிதி உதவி வழங்குகின்றது. இங்கு மக்கள் நலன் என்பது இரண்டாம் பட்சமே. இராணுவத்தையும் மீறி வெளி விவகாரக் கொள்கைகளை இம்ரான் அரசு கையாள்வதென்பது மிகப் பெரும் சவாலான விடயமாகும். சதாரி ஜனாதிபதியாக இருந்தபோது பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ யினை உள்துறை அமைச்சின் கீழ் கொண்டு வரவேண்டும் என கட்டளையிட்டார். பின்னர் ஐ.எஸ்.ஐ யின் அழுத்தம் காரணமாக இருபத்து நான்கு மணித்தியாலங்களில் அவ்வறிவித்தலை மீளப் பெற்றுக் கொண்டார் என்பது கடந்த கால வரலாறு. ஆகவே இம்ரான் கானின் அரசு, மக்கள் நலனுக்காக இராணுவத்தை மீறி செயற்படுமா என்பது கேள்விக்குறியே.

மேலும், பாகிஸ்தான் இராணுவமானது ஆப்கானிஸ்தான், காஸ்மீர் போன்ற பிரதேசங்களில் தனது படை பலத்தை விஸ்தரிக்கவே முயலும். யுத்தத்தை முன்னெடுக்க முனையும். ஆகவே இம்ரான் கானைப் பொறுத்தவரை, அதனைக் கட்டுபடுத்தி, அதன் போர் செலவைக் குறைத்து அதனை மக்களுக்கு பயன்படுத்தல் என்பது மிகப் பெரும் சவாலாகவே காணப்படும். பாகிஸ்தான் அரசையும் அதன் வெளியுறவுக் கொள்கையையும் கட்டுபடுத்தும் ஒரு அதிகார சக்தியாகவே காணப்படுகின்றது ஐ எஸ் ஐ. ஆகவே இம்ரான் கான் மக்கள் நலன் சார்ந்த, இராணுவத்திற்கு எதிரான கொள்கைகளை முன்னெடுக்க முயன்றால் பல தடைகளை சந்திக்க வேண்டி வரும்.

மேலும், மின்சாரப் பற்றாக்குறை, பண வீக்கம், ஊழல், நீர் பற்றாக் குறை, சுத்தமான குடி நீர் இன்மை, கறுப்பு பணப்புலங்கள், வறுமை, வேலையில்லாப் பிரச்சனை, பாடசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்களுக்கு நிதி பற்றாக்குறை, பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் போன்ற பிரதேசங்களில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் எழுச்சி என பல்வேறு நெருக்கடிகள் பாகிஸ்தானில் காணப்படுகின்றன. இவற்றினைத் தீர்ப்பதற்கும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் இம்ரான் அரசு முயற்சி எடுக்க வேண்டும். புதிய பாகிஸ்தானை உருவாக்குவோம் என்ற கோசத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் இம்ரான் கான் 2018 முதல் 2023 வரையிலான தனது ஆட்சிக் காலத்தில் இப் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவாரா என்பது கேள்விக்குறியாகும். மக்கள் அமைப்பாக திரண்டு போராட்டங்களை முன்னேடுத்தாலே இவை சாத்தியப்படும்.