ஐரோப்பிய ஒன்றியமும் புலம்பெயர் மக்களும் – நடேசன்

926 . Views .

unnamedபுலத்தில் வாழும் மக்கள் மத்தியில் பெரும்பாலும் குடிவரவு பிரச்சினைகளையும் வேலைவாய்ப்புக்களையும் தொடர்பு படுத்தியே பார்க்கப்படுகின்றது ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதன் மூலம் குடிவரவுச் சட்ட்ங்களிலுள்ள இறுக்கங்கள் தளர்வடையலாம் என்ற எண்ணம் புலம்பெயர்ந்த மக்களிடையே நிலவுகின்றதுஅது ஒரு மாயத் தோற்றம் என்பதை புலம்பெயர் மக்கள் புரிந்து கொள்ளல் வேண்டும். 

பிரித்தானியாவின் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் உறுப்பினராய் தொடர்வதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கின்றன. ஆளும் கட்சியான கான்செர்வ்டிவ் கட்சி மிகவும் பிற்போக்குத்தனமான நிலைப்பாடைக் கொண்டு செயற்படுவதால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து இருப்பதன் மூலம் இக்கட்சியின் நெருக்கடிகளை    குறிப்பாக உள்துறை அமைச்சின் நெருக்கட்டிகளையும், அடிப்படைத் தேவைகள் சம்பந்தமான உதவிகளைப் பெறுவதில் உள்ள நெருக்கடிகளையும் கடந்து செல்லலாம் என்ற உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை விதைத்து வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதற்கான நிலைப்பாடை அதிகரிக்கும் இந்த அடக்குமுறை ஆளும் வர்க்கத்தினர் இன்றளவும் இந்த நாட்டில் வாழும் அடக்கப்படட சிறுபான்மை இன மக்களுக்கும், எளிய விளிம்பு நிலை மக்களுக்குமான வாழ்க்கை மேம்படுத்தலை ஊக்குவிக்கும் சட்டங்களைப் பெருமளவுக்கு நீந்து போகச் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை நீந்து போகச் செய்துள்ளார்கள்.

உதாரணமாக டேவிட் காமெரூன்   தலைமையிலான பிரித்தானியாவின் ஆளும் கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைச் சட்ட்ங்களை நீர்த்து செய்ய முற்படுவதன் மூலம் இந்த நாட்டின் குடிவரவுச் சட்ட்ங்களை மிகவும் நெருக்கடியான சூழலுக்கு கொண்டு வர முயற்சிக்கின்றது. இதன் அடிப்படையில் நோக்கின் பிரித்தானியா இவ்வொன்றியத்தில் இணைந்திருப்பதன் மூலம் அதன் எல்லாச் சட்ட மூலங்களுக்கும் கட்டுப்படாது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இவ்வொன்றியத்தின் உருவாக்கமானது சோவியத்யூனியனின் சோசலிசம் பரவாமல்த் தடுப்பதற்காக ஐரோப்பாவில் சக்திவாய்ந்த நாடுகள் முதலாளித்துவ சக்திகளுடனும் வலதுசாரிய வசதிகளுடனும் இணைந்து உருவாக்கப்பட்டது ஆகும். இங்கே நடைபெறுவது ஒரு தனிச்சந்தை என ஆளும் கட்சியால் திரும்பத் திரும்ப சொல்வதன் நோக்கம் இது மக்களுக்கான வாழ்க்கைச் செலவீனத்தைக் குறைக்கும் பிரச்சாரத்தை வலுவாக்கவே ஆகும். ஆனால் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாதம் சாதாரண மக்களின் வாழ்வில் எதிர்மறையாகவே காணப்படுகின்றது

மேலும் இச் சந்தையானது முதலாளிகளுக்கு நன்மை பயக்கும் விதமாகவே காணப்படுகின்றது. ஐரோப்பாவின் வறிய நாடுகளிலுள்ள மக்களை பிரித்தானியா உள்வாங்குவதன் மூலம் அவர்களின் ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி உரிமைகள் மறுக்கப்படட அடிமைகளாக மாற்றப்பட்டு சுரண்டப்படுகின்றார்கள். மிகப்பெரிய நிறுவனங்களிலும், பல்பொருள் வர்த்தகநிலையங்கள். பார ஊர்தி ஓட்டுனர்கள், பண்ணைகள், கட்டுமானப் பணிகள்  போன்ற கடுமையான வேலைப்பளு உள்ள இடங்களில் இவ்வாறான மக்களையே வேலைக்கு அமர்த்தி கொள்ளை இலாபம் அடைகின்றார்கள் இந்த பண முதலைகள். இவ்வாறானவர்களிடம் இருந்து கிடைக்கும் நன்கொடைகள், சலுகைகள் மூலம் இயங்கும் அரச இயந்திரம் இதற்கு துணை போகின்றது. புலம் பெயர் மக்கள் மத்தியில் நம்பிக்கையானதாக கருதப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் மிக அண்மையில் வழங்கிய குழந்தை நலன் காக்கும் உதவிச் சடடத்தில் வழங்கிய தீர்ப்பானது பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அரணாகவே உள்ளது. மேலும் இந்த முடிவில் உள்ளடக்கப்பட்ட இன்னொரு விடயம் இந்த முடிவானது அரசாங்கத்தின் பொருளாதார நலனைக் கருத்தில்க் கொண்டு எடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அத்துடன் ஐரோப்பியாவிலிருந்து இங்கு வருபவர்கள் வேலைவாய்ப்பு இல்லாவிட்டால் இங்கு இருப்பதற்கான உரிமை அற்றவர்கள் என்ற கூற்றும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பானது இவ்வொன்றியம் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதைத் தவிர்த்து அதிகார வர்க்கங்களுக்கு துணை போவதாக செயற்படுகின்றது என்பதைக் காட்டுகின்றது. இத்தீர்ப்பு மூலம் இவ்வொன்றியம் நம்மைக் கட்டுப்படுத்த முடியாது என்ற தோற்றப்பாட்டை ஆளும் வர்க்கத்தினர் பிரித்தானிய மக்களிடம் கொண்டு செல்லும் விதமாகவே அளிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நோக்கின் இந்த நீதிமன்றத்தில் புகலிடக்கோரிக்கையாளர்களின் வழக்கு நிலுவையிலுள்ள போதே பிரித்தானிய உள்துறை அமைச்சு சம்பந்தப்படடவர்களை அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளது. ஆகவே இவையாவும் அதிகார வர்க்கத்தின் நலன்களுக்காகவே செயற்படுகின்றதே தவிர மக்களின் நலன்களுக்காக அல்ல.

இதற்கிடையில் பெரிய நிறுவனங்களும் முதலாளிகளும் முதலாளித்துவ அடிமைகளாக செயற்படும் திறன் ஆய்வாளர்களும் அவர் தம் ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு வேலைவாய்ப்பின்மை, வரி அதிகரிப்பு, பொருளாதார முதலீடுகள் போன்ற விடயங்கள் மூலமாக மக்களிடையே மிரட்டல் தொனி மூலம் இணைந்திருப்பதை வலியுறுத்துகின்றது. இன்று இருக்கும் நிலையிலும் வேலையில்லா திண்டாட்டமும் வாழ்க்கைச் செலவு வீதமும் அதிகரித்தே காணப்படுகின்றது. அடித்தட்டு மக்களிற்கான சுகாதார கல்வி வீட்டு திட்டங்கள் போன்ற வாழ்வாதார சலுகைகளைத் தொடர்ந்து தடை செய்து வரும் இதை ஆளும் வர்க்கமானது ஒன்றியத்தில் இணைந்திருப்பது இம்மக்களின் நலன் காக்கவே என்பது முரணானது ஆகும்.

இந்த ஒன்றியத்தில் இணைந்திருப்பதற்கு ஆதரவாக பலநாட்டு வல்லாதிக்க சக்திகளும் வலியுறுத்துகின்றன. அமெரிக்கா, பிரான்ஸ் ஜேர்மன் என எல்லா வல்லாதிக்க அரசுகளும் இதனையே வலியுறுத்துகின்றன, மேலும் இந்த வாரம் இலங்கை அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ, தயாசிறி ஐயசேகர பிரதி அமைச்சரான  டீ சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனநாயக்க போன்றவர்கள் இவ்வொன்றியத்தில் இணைந்திருப்பதில்  உள்ள நலன்களை வலியுறுத்தி பிரித்தானிய வாழ் இலங்கை மக்களிடம் பிரச்சாரங்களை மேற்கொள்ளுகின்றனர். சுசில் பிரேமா ஜயந்த,  செயலாளர் டிலான் பெரேராவும் இவர்களுடன் இணைந்து செயற்படுகின்றனர். இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே பிரித்தானிய அரச ஊடகதிற்கு வழங்கிய செவ்வியில் இவ்வொன்றியத்தில்  இணைந்து இருப்பதை வலியுறுத்தி அதன் நலங்களைப் பற்றிப் பேசுகின்றார். இலங்கையில் சிறுபான்மை இன மக்களுக்கு இழைக்கப்படட கொடுமைகளுக்கு நீதி கிடைக்கவோ போருக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரங்களை முன்னேற்ற எந்தவித முன்னெடுப்பும் இல்லாமல் பாராமுகமாக செயற்படும் இந்த ஆளும் கட்சியும், அதன் அமைச்சர்களும் பிரித்தானிய மக்களின் நலன் காக்க மைல்கள் கடந்து வந்து பாடுபடுவது வியப்பிற்குரியதே. தன் நாட்டில் விலை வாசி உயர்வையும் வேலையில்லாத  பற்றாக்  குறையையும் கட்டுப்படுத்த முடியாமலும் மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தனியார்மயப்படுத்தி எளிய மக்களின் வாழ்வியலை கேள்விக்குறியாக்கிச் செயற்படும் இந்த இலங்கை அரசு பிரித்தானிய மக்களின் மேம்பாட்டிற்கு உழைப்பதில் எவ்வாறு சரியான பாதையை எடுக்க முடியும்? இலங்கையில் நடைபெற்ற போர் குற்ற விசாரணைகளுக்கு சுயாதீன பன்னாட்டு விசாரணையை வலியுறுத்திய டேவிட் காமரூனும் எங்கள் நாட்டினுள் எந்த நாட்டு விசாரணைகளையும் அனுமதிக்க முடியாது என்று சொல்லும் ரணில் விக்கிரமசிங்கவும் எவ்வாறு ஒரு புள்ளியில் இணைகின்றார்கள் என்பது புலம்பெயர் தமிழர்கள் உற்று நோக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வொன்றியத்திற்கான தேர்தல் உலக கூட்டு வல்லாதிக்க சக்திகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துவதோடு ஈழத்தில் நடை பெற்ற படுகொலைக்கு நீதி வேண்டி செல்லும் மக்கள் இவ்வலாதிக்க கூட்டு உறவாளிகளின் உண்மை முகத்தை காட்டுவதற்கான சந்தர்ப்பமாக அமைகின்றது. இவ்வாறான ஒன்றியங்களும் சலுகைகளும் அமைப்புக்களும் மக்களின் நலன் கொண்டவையல்ல என்பதும் அவை வல்லாதிக்க அதிகாரங்களின் நலன் சார்ந்து அவர்களின் கைப்பொம்மைகளாகி செயற்படுகின்றன என்பதும் தெளிவாகின்றது. இதனடிப்படையில் இந்த போலி ஆதிக்க சக்திகளின் நலன் கருதிச் செயற்படும் இவ்வாறான ஒன்றியத்திலிருந்து விலகுதல் எளிய மக்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்கு அடிப்படையானதாகும்.