விடுதலைக்கான போராட்டத்தில் மரணித்த எல்லோரையும் நினைவு கூர்வது வெறும் துக்கம் கொண்டாடும் நடைமுறை மட்டுமல்ல –அது போராட்ட வரலாற்றைத் தக்க வைக்கும் ஒரு நடவடிக்கையுமே. ஆனால் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்பது நினைவு நிகழ்வுகளோடு மட்டும் நின்று விட முடியாது. மாவீரர் நாள் போராளிகளை நினைவுப்படுத்தும் நாளாகவும் – இழந்தோருக்கு வணக்கம் செலுத்தும் நாளாகவும் கருதி அதில் ஆயிரக் கணக்கான மக்கள் பங்கு பற்றி வருகிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தால் நடத்தப்பட்டு வந்த இந்த நிகழ்வு தொடர்ந்தும் அந்த இயக்க வரலாறை முன் வைத்தே நடந்து வருகிறது. மாற்று இயக்கங்களில் இருந்து அநியாயமாக இறந்துபோனவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என நாம் கருதினாலும் தற்போதிருக்கும் உடைவுகளின் அடிப்படையில் அதன் சாத்தியம் இல்லை. ஆனால் இந்த நிகழ்வு டாம்பீகமாக ஆயிரக்கணக்கில் பணச் செலவுடன் நடத்தப் படுவதை நாம் திட்ட வட்டமாக எதிர்த்து வருகிறோம். சேர்க்கப்படும் பணம் துன்ப வாழ்வில் உழன்று கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளுக்கும், போராளி குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இந்த நினைவு நாள் வியாபாரத்தன்மை உடைய நடைமுறையாக மாறாமல் பொதுவாக அனைத்து மக்களும் பங்கு பற்றக் கூடிய நாளாக இருக்க வேண்டும். புலிகள் இலச்சினைகளுக்கு யார் சொந்தக்காரர் – யார் உண்மையான வாரிசுகள் என்ற அரசியல் நீக்கம் செய்யப்பட்ட அடிபாடுகளால் வெவ்வேறு மாவீரர் நாள் நடத்தப்படுவதை கடுமையாக எதிர்க்கின்றோம். யார் இந்த நிகழ்வை நடத்துகிறார்கள் என்ற அடிப்படையில் மக்கள் இந்நாளில் திரள்வதில்லை. இந்த நிகழ்வை நடத்தும் அமைப்பு அதன்மூலம் மக்கள் மத்தியில் தனி அங்கீகாரம் பெற்றுவிட்டது என்ற போலிக் கற்பனை வாதங்களும் தவறு. ஒரு அமைப்பின் அரசியல் நிலைப்பாட்டை பார்த்துச் செல்ல மக்கள் இந்நாளில் திரள்வதில்லை. இவற்றைப் புரிந்து கொள்வது அவசியம்.
முள்ளிவாய்க்கால் நாள் இன்னொரு மாவீரர் நாள் இல்லை. முள்ளிவாய்க்கால் என்ற இடத்தின் பெயர் இன்று ஒரு அரசியற் சொல். இந்நாள் மாபெரும் படுகொலையின் அடையாளம் மட்டுமின்றி போராட்டத்தின் முடிவு/தொடக்கம் பற்றிய குறியீடாகவும் இருக்கிறது. போராட்டத்தின் திட்டமிடல்கள், அதன் வரலாறு , அது நகர வேண்டிய திசை போன்ற கேள்விகளையும் தாங்கி நிற்கிறது. ஒரு போராட்டத்தை எப்படி அடக்கி ஒடுக்குவது என்பதற்கான சிறந்த உதாரணமாக இதை உபயோகிக்கிறது இலங்கை அரசு. “தீவிர வாதத்தை தோற்கடித்தோம்” என்ற கொண்டாட்ட நாளாக இதை பார்க்கிறது இனவாத அரசு.
இது மட்டுமின்றி யுத்தத்துக்கு எதிராக மக்கள் ஆயிரக் கணக்கில் திரண்ட வரலாற்றையும் இது குறித்து நிற்கிறது. ஈழம், தமிழ் நாடு, மற்றும் உலக நாடுகள் எங்கும் வாழ்ந்த மக்கள் ஆயிரக் கணக்கில் ஒன்று திரண்டு 2009ல் தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இது வரை வரலாற்றில் அப்படி ஒரு திரட்சி ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. முள்ளிவாய்க்கால் என்பது ஒரு வீழ்ச்சியின் நினைவு மட்டுமல்ல – ஒரு எழுச்சியின் வரலாறும் கூட.
முள்ளிவாய்க்கால் குறியிட்டு நிற்கும் மாபெரும் படுகொலையைத் தொடர்ந்து பெரும்பான்மை மக்கள் மத்தியில் எழுந்த முதன்மைக் கேள்வி எவ்வாறு போராட்டம் தொடரும் என்பதே. இந்தக் கேள்விக்கு இன்றுவரை தெளிவான பதிலை வைக்க தவறி வருகின்றன பெரும்பான்மை அமைப்புக்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் கோரிக்கைகளை முன் வைத்து இயங்கி வருகிறது என்ற பேச்சை நம்ப இன்று பெரும்பான்மை மக்கள் தயாரில்லை. அவர்களின் தேர்தல் வெற்றி என்பதற்கும், அவர்களின் கொள்கைக்கு ஆதரவு வழங்குவதற்கும் இடையில் மிகப்பெரும் இடைவெளி உண்டு. பெரும்பான்மை புலம் பெயர் அமைப்புக்களும் சர்வதேச விசாரணை என்பதை இன்னும் தாண்டிச் செல்ல வில்லை. ஐக்கிய நாடுகள் மூலம் கோரிக்கை நிறைவேறும் என்ற எதிர்பார்ப்புகள் தகரத் தொடங்கி விட்டது.
மக்கள் எழுச்சியின் அடிப்படையில் கட்டப்படும் பலத்தில் இருந்துதான் நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். எத்தகைய அரசியல் கொள்கை அடிப்படையில் இயங்குகிறோம் – அதற்காக எத்தகைய திட்டமிடல்களை வைக்கிறோம் – அந்த திட்டமிடல்கள் மூலம் என்ன வேலைகளைச் செய்கிறோம் – என்ன சாதிக்கிறோம் –என்ற விபரங்களை எல்லா அமைப்புக்களும் மக்கள் முன் வைக்க வேண்டும்.
முள்ளிவாய்க்கால் நாள் ஒரு எழுச்சி நாளாக இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டுமாயின் இது ஒரு அரசியல் நாளாகவும் இருக்க வேண்டும். அரசியல் நீக்கம் செய்யப்பட்டமையால் முள்ளிவாய்க்கால் நாளில் மக்கள் பங்கு பற்றுவது மிகவும் குறைந்து விட்டது அனைவருக்கும் தெரியும். மக்கள் இந்த நிகழவில் பங்கு பற்ற வேண்டுமாயின் அதற்கான காரணத்தை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும். முள்ளிவாய்க்கால் நாள் அரசியல் ரீதியாக மக்களை திரட்டும் எழுச்சி நாளாக இருக்க வேண்டும்.
அப்படி ஒரு நிகழ்வை அமைப்புக்கள் ஒன்று பட்டு நடத்துவது சாத்தியமில்லை. வெவ்வேறு அரசியல் காரணங்களால் பிளவு பட்டு இருக்கும் அமைப்புக்கள் எழுந்தமானமாக ஒன்று பட்டு வரப்போவதில்லை. பிளவுக்கு காரணாமாக இருக்கும் அரசியற் காரணங்கள் அவற்றைத் தடுக்கும். இவற்றைக் கருத்திற் கொண்டே நாம் பின்வரும் திட்டத்தை முன் வைக்கிறோம்.
முள்ளிவாய்க்கால் நாளை நடத்துவதற்காக ஒரு கமிட்டியை கூட்ட வேண்டும். எல்லா அமைப்புக்களினதும் (மக்கள் மத்தியில் போராட்ட அரசியலை எடுத்துச் செல்லும் அமைப்புக்கள்) பிரதி நிதிகள் இந்த கமிட்டியில் பங்கு பற்ற அழைக்கப்பட வேண்டும். இந்த நிகழ்வு முடிந்தபின் கமிட்டி கலைக்கப்பட்டு விட வேண்டும். அந்தக் கமிட்டி நிகழ்வு நடக்கும் இடம் மற்றும் நடக்கும் முறை முதலிய நிர்வாக ஒழுங்குகளை செய்யவேண்டுமே தவிர நாளின் அரசியல் தன்மையை தீர்மானிக்க முயலக்கூடாது.
ஒவ்வொரு அமைப்பும் தமது அரசியல் நிலைப்பாட்டை மக்கள் முன் வைக்க குறைந்தது முப்பது நிமிடங்களாவது வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு அமைப்பும் தத் தமது வேலைத் திட்டம் மற்றும் நடவடிக்கைகள் முதலியவற்றை முன் வைக்க தனிப்பட்ட இடம் ஒதுக்கி கொடுக்கப் பட வேண்டும். எந்த குறிப்பிட்ட அமைப்புக்கும் முதன்மை இடம் வழங்குவது தவிர்க்கப் பட வேண்டும். வரும் மக்கள் ஒவ்வொரு அமைப்பின் அரசியல் நிலைப்பாடு பற்றி உரையாட, கேள்வி கேட்க, தகுந்த நேரம் வழங்கப் பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட அமைப்பின் அரசியலை முதன்மைப்படுத்திய நடவடிக்கைகள் தவிர்க்கப் பட வேண்டும். வியாபர நடவடிக்கைகள் – விளம்பர நடவடிக்கைகள் இந்நிகழ்வில் நடப்பது தவிர்க்கப் படவேண்டும்.
நிகழ்வுச் செலவுகள் பற்றிய கணக்கு வழக்குகள் மக்கள் முன் வைக்கப்பட வேண்டும். தனிப்பட்ட முறையில் அமைப்புக்கள் நிதி திரட்டலாம். ஆனால் நிகழ்வு சார்ந்து நிதி திரட்டல் நடந்தால் அந்த நிதி ஈழத்தில் சிரமத்தில் வாழுவோருக்கு வழங்கப்பட்டு அந்த விபரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.
அரசியல் முரண்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் – தமது அரசியல் நிலைப்பாட்டுக்காக மக்கள் மத்தியில் ஒழுங்கு முறையுடன் வாதிடும் துணிவு- தமது அரசியலை வலிந்து திணிக்கும் அடாவடித்தனம் நிறுத்தப்படுதல் – ஆகியன கைகூடாமல் இத்தகைய நிகழ்வு நடத்தப்படுதல் சாத்தியமில்லை. அதுவரை பல்வேறு முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் நடப்பது தவிர்க்க முடியாது. ஒவ்வொரு அமைப்பும் தத்தமது முள்ளிவாய்க்கால் நாளை நடத்தும் நிலைதான் தொடரும். சனநாயக முறையில் உடன்பட முடியாதவர்கள் மற்றவர்கள் இந்த நிகழ்வை நடத்தக் கூடாது என அடம் பிடிப்பது அராஜகம்.
நாம் மேற்சொன்னபடி ஒரு நிகழ்வு சாத்தியமாயின் அதில் கலந்து கொள்வதற்கு மக்களுக்கு ஒரு காரணம் கிடைத்து விடுகிறது. தமது சார்பில் இயங்குவதாக சொல்லும் அமைப்புக்கள் என்ன அடிப்படையில் இயங்குகின்றன – என்ன செய்கின்றன என பார்க்க வருடத்துக்கு ஒருநாள் மக்கள் திரளும் நாளாக இது மாறும்.
நாம் இங்கு முன் வைக்கும் கருத்துக்களோடு உங்களுக்கு உடன்பாடு இருந்தால் தயவு செய்து இதற்கான ஆதரவை தாருங்கள். இந்த கோரிக்கையை வெளிப்படையாக முன் வைத்து ஆதரவை திரட்டுங்கள். உங்கள் பெயரையும் இந்த கோரிக்கையோடு இணைத்துக் கொள்ளுங்கள்.