முஸ்லிம் மக்கள் மீதான வன்முறையை நிறுத்து –தமிழ் சொலிடாரிட்டி அறிக்கை (ஒளிப்பதிவுகள் இணைக்கப் பட்டுள்ளது)

1,078 . Views .

முஸ்லிம் மக்கள் மீது நடக்கும் தாக்குதல்களைக் கண்டித்து பின்வரும் சிறு அறிக்கையை தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையை வருமாறு:

முஸ்லிம் மக்கள் மேலான தாக்குதலை தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கிறது.
பாதுகாப்பு கமிட்டிகளை கட்டி மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.
ஈஸ்டர் படுகொலையை காட்டி ஒட்டுமொத்த சமூகத்தையும் தாக்குவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒரு சிலரது கொடூர நடவடிக்கைக்கு ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றம் சாட்டும் வெறுப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்துவரும் துவேச சக்திகள் இதற்குப் பொறுப்பெடுக்க வேண்டும்.
இந்தத் தாக்குதல்களை நடத்துபவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இயங்குவதையும் பலர் அவதானித்துள்ளனர். இந்த தாக்குதல்களை நடத்துபவர்களைத் தடுக்க உரிய முயற்சிகளை அரசு எடுக்கவில்லை என்பதும் தெரிய வருகிறது.

இந்தத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும். பாதிக்கப் பட்டோருக்கு உரிய நட்ட ஈடுகள் உடனடியாக வழங்கப் பட வேண்டும்.

மக்களைப் பாதுகாக்க பாதுகாப்பு கமிட்டிகளை அமைக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் அங்கு வாழும் மக்களை உட்படுத்திய – அதே சமயம் தமிழ் சிங்கள முஸ்லிம் உறுபினர்களை உள்வாங்கிய கமிட்டியை கட்டிப் பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். இதை முன்னெடுக்க அனைத்துத் தொழிற் சங்கங்களும் முன்வர வேண்டும். அனைத்து இன, மத உறுப்பினர்களையும் உள்வாங்கி ஒழுங்கமைக்கப் பட்டிருக்கும் தொழிற்சங்கங்கள் தமது உறுப்பினர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். ஒன்றுபட்ட கமிடிட்களைக் கட்டி இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட வேண்டும்.

அரசும் அரச சக்திகளும் பார்த்துக் கொண்டிருக்கத்தான் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. முஸ்லிம் மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை -அரசை நம்பி விட முடியாது. அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த முற்போக்கு சக்திகளும் , அவர்சார் அமைப்புக்களும், தொழிற்சங்கங்களும் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

அனைத்து மக்களையும் உள்வாங்கிய ஒரு ஊர்வலத்தை ஒழுங்கு செய்யவும் நாம் முன்வர வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை பாவித்து இனவாதம் தலை தூக்குவதையும் அதை பாவித்து இனவாத சக்திகள் தமது அதிகாரத்தை வலுப்படுத்துவதையும் நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

அப்படி அவர்கள் பலப்படுவது அனைத்து தொழிலார்களுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரான நிலைமை வளர்ச்சி அடையவே உதவும்.

இதற்கு எதிராக தமிழ் சிங்கள முஸ்லிம் தொழிலாளர்கள் இளையோர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கோருகிறோம்.