பிரக்சிட் பற்றி ஒரு வலதுசாரியும் இடதுசாரியும்

1,985 . Views .

1

ஜெயமோகன் பிரக்சிட் பற்றிப் புலம்பியிருப்பதை அறிவார்ந்த கட்டுரை மாதிரி இந்து பத்திரிகையும் வெளியிட்டிருக்கிறது. சரியான புரிதலைக் காட்டுகிறது என ஒரு வசனத்தைக்கூட அக்கட்டுரையில் கண்டுபிடிக்க முடியவில்லை.

எதற்காக பிரக்சிட் நடந்தது என்பது முதற்கொண்டு வெளிநாட்டார் வருகை ஈறாக எந்தப் புரிதலும் அற்ற பினாத்தல்களைச் செய்துகொண்டு செல்கிறார் ஜெயமோகன். பிரக்சிட் என்ற பெயரில் வாக்கெடுப்பு நடக்கவில்லை ஜெயமோகன் – மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளிவருவதற்கு மக்கள் விரும்பும் நிலைப்பாடே பிரெக்சிட் என்றழைக்கப்படுகிறது. (பிரித்தானியா பிரிதல் – பிரிட்டிஷ் எக்சிட் என்பதன் சுருக்கம் அது). யுகிப் தலைவரை ஓரங்கட்டவதற்காக வாக்கொடுப்பு நடத்தப்படவில்லை – இந்தக் கண்டுபிடிப்புக்கு ஜெயமோகன் எந்த ஆதாரங்களையும் வைக்கவில்லை. அவருக்கு எப்போது தான் ஆதாரங்கள் தேவைப்பட்டிருக்கின்றன?
இதைவிட வெளிநாட்டவர்கள் பற்றி அவர் அள்ளிக் கொட்டும் கருத்துகள் நகைப்பையும் வெறுப்பையும் ஓருசேர ஏற்படுத்துகின்றன. கிழக்கு ஐரோப்பியர் ஆங்கிலத்தை ஆறு மாதத்துக்குள் கற்றுக்கொண்டு விடுகிறார்கள் என்றும் – அவர்கள் நடுத்தர வேலைகளைப் பறித்துக்கொள்கிறார்கள் என்றும் – வருபவர்கள் கத்தோலிக்கர்களாக இருப்பதாலும் பிரச்சினை வருகிறது என்றும் – தன் பாட்டுக்கு அளந்துகொண்டு போகிறார்.

உனது நண்பர்களைச் சொல் நான் உன்னைப்பற்றிச் சொல்கிறேன் என்ற பேச்சுவழக்கு வசனமுண்டு. கமரோன் பதவி விலகப் போவதாக அறிவித்ததும் நண்பர்கள் சோர்ந்து விட்டனர் என எழுதுகிறார் ஜெயமோகன். என்னே கரிசனை! அந்த வலதுசாரிய நண்பர்களுடன் சேர்ந்து பிரக்சிட்டுக்கான வாக்குக்குக் காரணம் “ஆழத்துக் கசப்புகளும் -சந்தேகங்களும்” என்ற முடிவுக்கு அவர் வருகிறார். உலகெங்கும் வலதுசாரியம் மேலெழுந்திருப்பதற்கு அடையாளம் எனக்கூறும் அவர் இறுதியில் தவறாமல் இஸ்லாமியர்களுக்கும் ஒரு அடிபோட்டு முடிக்கிறார்.

சிறிசா, பொடிமஸ், nஐரமி கோர்பின், பேர்னி சான்டர்ஸ் என உலகெங்கும் நிகழும் அசைவுகள் பற்றிய அறிவையோ அல்லது உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தியிருக்கும் புதிய நிலவரங்களையோ ஜெயமோகன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அதுபற்றிய நுணுக்கமான அறிவை அவரிடம் நாம் எதிர்பார்க்கக் கூடாது. வலதுசாரிய வெற்றியைக் கொண்டாடும் உள்நோக்கத்துடன்தான் இது எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் பிரக்சிட் இடதுசாரியம் சரிந்த நிலைப்பாட்டின் வெளிப்பாடு என அந்தச் சாம்பிராணிக்கு யாராவது விளங்கப்படுத்துங்கள்.

2

இடதுசாரியப் பார்வையில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எழுதி வருபவர் கலையரசன். அவரது பல கருத்துகள் மேம்போக்காக இருப்பதை அவதானித்த போதும் அவரது சமூக அக்கறை நிலைப்பாடு பலரையும் கவர்ந்த ஒன்றே. ஜெயமோகன் போன்ற வலதுசாரிகள் ஆழமற்று அலட்டுவது சகஜம். அதுபோல் எழுந்தமானத்துக்கு அலட்டும் பழக்கம் இடதுசாரிகள் மத்தியில் மிகக்குறைவு. இதைக் கருத்தில் வைத்து சில விஷயங்களை நுணுகிப்பார்த்து அவர் பிரக்சிட் பற்றி எழுதியிருக்கவேண்டும்.
தமிழ் சொலிடாறிற்றி அமைப்பைச் சேர்ந்த பாரதி ஏதோ மந்திரம் ஓதுவதுபோல் வட்டுக்கோட்டை தீர்மானம் பற்றிச் சொல்லிப் பேசத் தொடங்குகிறார் என்ற தாக்குதலோடு ஆரம்பிக்கிறது கட்டுரை (இதற்குள் ஏன் என் பெயரை இழுத்தார் என விளங்கவில்லை). பாராதி மந்திரம் ஓதவில்லை. வட்டுக்கோட்டை தீர்மானம் பற்றிய விவாதம் உள்ளடங்கிய முக்கிய கூட்டம் ஒன்று லண்டனில் நடந்து முடிந்திருந்தது. இது பற்றிய உரையாடலுக்காகத்தான் பாரதியை அந்த ஊடகவியலாளர் செவ்விக்கு அழைத்திருந்தார். இது பற்றி ஆரம்பித்திலேயே குறிப்பிடும் ஊடகவியலாளர் கேட்கும் கேள்விக்குத்தான் பாரதி பதிலளிக்கிறார். பல்வேறு ஊடகங்களுக்குப் பாரதி செவ்வி வழங்கியிருக்கிறார். மேற் சொன்ன கூட்டம் பற்றிய உரையாடல்கள் தவிர்த்து வேறு எங்கு எங்கு இது பற்றி மந்திரம் ஓதி பாரதி தன் செவ்வியைத் தொடங்கினார் எனக் காட்டவேண்டும் கலையரசன். கண்டபாட்டுக்கு எழுதி உங்களை நீங்களே குறைத்துக்கொள்ளாதீர்கள்.

பாரதி சொன்னதன் சுருக்கம் இது. ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் எமது உரிமைகள் முடக்கப்படும். தொழிற்சங்க உரிமைகள் உட்பட்ட பல்வேறு தொழிலாளர் உரிமைகள் ஒன்றியத்தால் முடக்கப்படுகிறது. தேசியமயமாக்கல் கோரிக்கை வைப்பது சாத்தியமில்லை. இங்கும் நாம் அரசை எதிர்க்க வேண்டும். முக்கியமாக டோரி அரசு விழுத்தப்படவேண்டும். சிறுபான்மையர் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் பற்றியும் அவர் பேசினார். இது மட்டுமின்றி கிரேக்கம் மற்ற நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் பற்றியும் அதில் ஒன்றியத்தின் பங்கு பற்றியும் அவர் குறிப்பிட்டுச் சென்றிருந்தார்.

இந்தச் செவ்வியை கலையரசன் மீண்டும் கேட்டு எழுதவேண்டும். ஐரோப்பிய முதலாளிகளுக்குப் பதிலாக இங்கிலாந்து முதலாளிகளை பாரதி விரும்புவது போன்று குறுகிய அர்த்தத்தில் அநாவசியமாக எழுதுவது மலிவான உத்தி. இந்த மலிவான உத்தியைப் பாவித்துக்கொண்டு புரிதலே அற்ற கேள்வி ஒன்று அவரிடம் இருந்து எழுகிறது. புpரித்தானிய, ஐரோப்பிய முதலாளிகள் ஒன்றிணைந்தால் தொழிலாளர்களும் ஒன்றிணைய வேண்டியதுதானே? எனக் கேட்கிறார். முதலாளித்துவத்தின் இயக்கம் பற்றியும் தொழிலாளர்களின் இயக்கம் பற்றியும் அடிப்படை அறிதல் இருக்கிறதா? என்ற பதில் கேள்விதான் எமக்கு எழுகிறது. ஓன்றியம் முதலாளித்துவ நிறுவனம். இதனாற்தான் ஐரோப்பா முழுவதும் இருக்கும் ஸ்டாலினிஸ்டுகள், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என எல்லா வித இடதுசாரிகளும்இதை எதிர்கிறார்கள். இடதுசாரிகள் என்று தங்களைச் சொல்லிக்கொண்டு சமூக சனநாயகவாதிகளாக குறுகி பதவி வாய்புக்களுக்கு ஏங்கி நிற்பவர்கபள் பலர் ஆதரிப்பதுபோல் கலையரசனும் ஆதரிக்கிறார். ஐரோப்பிய முதலாளித்துவம் பற்றியும் – இங்கு நடக்கும் தொழிலாளர்களின் போராட்டங்கள் பற்றியும் எழுதுங்கள் விவாதிப்போம். மலிவான வாதத்தை விட்டுவிடுங்கள்.

வெளிநாட்டார் வருகை பற்றிய கருத்து பற்றி நீங்கள் பாரதியைத் தாக்கி இருக்கும் விதம் மிகக் கேவலமானது தோழர். பாரதி சொன்ன விடயத்தின் ஒரு அடிப்படையையும் புரிந்துகொள்ளாமல் – ஆடு நனையுதென்று ஓநாய் அழுகிறது எனத் தாக்கியிருப்பது மிகத்தவறு. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ? என்ன அவதூறைப் பாரதி நோக்கி எறிகிறீர்கள் எனச் சந்றேனும் யோசித்துப் பார்த்தீர்களா? புhரதி துவேசி என்றும் – வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிரானவர் என்றும் அடிப்படையற்ற அவதூறு பூசும் அநாகரிக நடவடிக்கை இது. விளங்கிப்போட்டு எழுத வந்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது.

பிரித்தானிய முதலாளிகள் எவ்வாறு வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பாவிக்கிறார்கள் சுரண்டுகிறார்கள் – அதன்மூலம் எவ்வாறு ஊதியத்தை அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைக்கிறார்கள் என்பது பற்றிய அறிதலில் இருந்து பிறக்கிறது நமது வாதம். இதற்கு எதிராக எத்தகைய திட்டமிடல்களை நாம் முன்னெடுக்கவேண்டும் என்பதிலிருந்து பிறக்கிறது இந்த விவாதம். எல்லாரும் வரட்டும் போகட்டும் அதிலென்ன பிரச்சினை என்று விட்டு நீங்கள் கீபோர்ட்டைத் தட்டப் போய்விடுவீர்கள். தெருவில் நின்று போராடுபவர்கள் அதுபோன்ற எடுத்தெறிந்த காரியத்தைச் செய்ய முடியாது. அகதிகளின் உரிமைகளுக்காகவும் – துவேசிகளுக்கு எதிராகவும் எத்தனையோ போரட்டங்களில் பங்கு பற்றிய – பங்கு பற்றிக்கொண்டிருக்கும் போராளிகள் நோக்கி வசைபாடித் தப்பிவிட முடியாது நீங்கள். போலந்தில் இருந்து வரும் தொழிலாளர்கள் அடிமையாக நடத்தப்படுவதற்கு அனுமதிக்காது அதே சமயம் அந்தத் தொழிலாளர்கள் தமது விருப்புக்கேற்ப நடமாடும் வசதியேற்படுத்தும் என்ன திட்டமிடல்களை நீங்கள் வைத்திருக்கிறீர்கள்? ஐரோப்பிய ஒன்றியம் எங்களைக் காக்க வரும் என்பதாக ஒரு போடு போட்டீர்களே. தொண்டைக்குள் எச்சில் சிக்கிவிட்டது. அவர்கள் காக்க வருவார்கள் என்று நீங்கள் ஆவென்று பார்த்துக்கொண்டிருங்கள். நாங்கள் ஒன்றிணைந்த போராட்டத்தைக் கட்ட வாழ்ந்து சாவோம்!

குறிப்பு – இமிக்கிரேசன் பற்றி சற்று விரிவாக இங்கு எழுதியிருக்கிறேன் படித்துப் பாருங்கள்.(எதிர்.காம் -http://ethir.org/?p=501).

பிரக்சிட் தொழில் வாயப்பை ஏற்படுத்தும் என்று எங்கு அய்யா நான் விளம்பரம் செய்திருக்கிறேன்? பொய்களை எழுதி ஏன் இடதுசரிகளின் மானத்தை வாங்குகிறீர்கள்? நான் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதி வருகிறேன். பல்வேறு ஊடகங்களுக்கு தொடர்ந்து செவ்வியளித்தும் வருகிறேன். என்னைத் தாக்குவதானால் அதிலிருந்து ஆரம்பியுங்கள். நானிருக்கும் கட்சி பற்றித் தெரிந்து கொள்வதானால் என்னிடம் நேரே கேளுங்கள். ட்ரொட்கிசம் பற்றி விவாதிப்பதானாலும் தயாராகவே இருக்கிறேன். குறுக்கு வழியில்போய் பாரதிக்கு அடிபோடுவதால் எனக்கும் அடிபோடுவதாகக் குளிர் காயாதீர்கள். பாரதி தனது சொந்த மூளையுடன் இயங்குபவர் என்பது ஆச்சரியமானதாக இருக்கலாம். இந்தப் போக்குகளாலும்தான் பல இளந்தமிழ்ப் பெண்கள் அரசியலில் இருந்து விலத்தி நிற்க விரும்புகிறார்கள்!