பொய்யிலே பிறந்து பொய்யிலே உருளும் பிளேயர்.

A demonstrator wearing a mask to impersonate Tony Blair protests before the release of the John Chilcot report into the Iraq war, at the Queen Elizabeth II centre in London, Britain July 6, 2016. REUTERS/Peter Nicholls

-சேனன்
இந்தக் கதை ஒரு பகற்கொள்ளைக்காரனின் கதை.
பச்சைக் கொலைகள் செய்து பணம் திரட்டியவனின் கதை.

கேட்போரின் உயிரணுவின் ஒவ்வொரு துண்டும் துகளும் துடித்துச் சீறிச் சினக்கும் கதை. கோபம் கொப்பளித்துக் கொதித்து உங்களை உருக்கிவிடும் என்பதால் மனதைத் தேற்றிக்கொண்டு மேலே படியுங்கள்.

சர்வாதிகாரிகளும் மக்கள் நல விரோதிகளும் உலகெங்கும் இருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். இலங்கையில் இராஐபக்ஷ வட கொரியாவில் கிம் யோன்க் அன். மத்திய கிழக்கில் அசாட் முதற்கொண்டு பலர். கசகிஸ்தானின் நசர்பயாவ் என நீண்டிருக்கும் பட்டியலது. அவர்கள் கொலைகாரர் என்பதை உலகறியும். அந்த வரிசையில் இருக்கவேண்டிய இன்னுமொரு சுயநலவாதி உலகக் கதாநாயகனாக –மத்திய கிழக்குக்கான அமைதித் தூதனாக உலாவரும் மாஜாயாலத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? அந்தக் கண்கட்டு வித்தையைச் செய்து வருபவர் டோனி பிளேயர் என்ற இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர். டோனி பிளேயர் மத்திய கிழக்குக்கு அமைதி தூதனாக பதவி ஏற்ற அதே கணத்தில் அங்கதம் ஏளனம் எல்லாம் செத்துப் போச்சு என ஒரு ஊடகவியலாளர் குறிப்பிட்டிருப்பார்.

தொழிலாளர் கட்சி சார்பாக மூன்றுமுறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் டோனி பிளேயர். கொடிய கன்சர்வேட்டிவ் கட்சியின் வரலாற்றைத் திருப்புகிறேன் என்று பொய் சொல்லி முதலாவது முறை தேர்தலில் வென்றார். எனது அரசியல் வாழ்வின் மாபெரும் வெற்றி எனத் தச்சரே புளுகும் அளவுக்குத் தட்சர் நிறைவேற்றத் தயங்கிய கொள்கைகளைக்கூட இவர் நிறைவேற்றி வைத்தார். “எனக்கு முக்கியமாயிருப்பது மூன்று விடயங்கள் – அவை கல்வி –கல்வி – கல்வி” என்ற கோஷத்துடன் இன்னுமொரு தேர்தலை வென்றார். அதன் பிறகு இலவசக் கல்வியின் நாடி நரம்புகளை உடைப்பதற்கான ஆவன அனைத்தையும் தொடக்கி வைத்தார்.

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே ஊறித்திளைத்திருக்கும் புண்ணாக்கான இந்தப் பிரதமர்தான் மத்திய கிழக்கில் நிகழ்ந்த – நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான கொலைகளுக்கும் கொடுமைகளுக்கும் காரணமாக இருக்கிறார். 2001ல் அமெரிக்காவில் நிகழ்ந்த தீவிரவாதிகளின் தாக்குதலானது அங்கிருந்த நியோ கொன்கள் என அழைக்கப்படும் காசுப் பிசாசுகளுக்கு ஒரு அரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. அவர்களின் அதிர்ஷ்டத்துக்கு அவர்களுக்கு நெருக்கமான ஜோர்ஐ; புஷ் அங்கு சனாதிபதியாக இருந்தார். மக்களின் கோப நிலைப்பாட்டைத் தங்களுக்குச் சாதகமாகப் பாவித்து எண்ணெய்க்; கிணறுகள் மற்றும் ஏனைய வளங்களைக் கைப்பற்றி மேலதிக லாபத்தைக் குவிக்க அவர்கள் அவசர அவசரமாக வேலை செய்தனர். இரண்டு வருடத்துக்குள் 2003ல் ஈராக்கின் மேல் படையெடுக்கக் குவைத் மன்னர் ஒரு அரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தரார். ஆமெரிக்காவுக்கு ஓடிச் சென்று இதுபற்றி உரையாடிய டோனி பிளேயருக்கு அங்கிருந்த பண முதலைகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். ஈராக்குக்குள் நுழைவதால் மில்லியன்கள் புரளும் என்பதும் அதில் குறிப்பிடத்தக்க எச்சங்கள் இவர் நோக்கியும் வரும் என்பதும் தெட்டத் தெளிவாக்கப்பட்ட பின் பிளேயர் தனது முடிவை எடுக்கத் தாமதிக்கவில்லை.

ஈராக்குக்கு அடித்தேயாவது என்ற முடிவுக்கு வந்துவிட்ட பிளேயருக்குப் பிரித்தானியப் பாராளுமன்றம் ஒரு பிரச்சினையாக இருந்தது. பண முதலைகளின் கையில் இருக்கும் வலதுசாரிய ரிப்பப்ளிக்கன் கட்சி ஆட்சியில் இருந்தமையால் புஷ்க்கு யுத்த ஆதரவு எடுப்பது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஆறே ஆறு ரிப்பப்பிளிக்ன்கள் தவிர மிகுதி அனைவரும் யுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதே போல் பிரித்தானியப் பாராளுமன்றத்துக்குள் இருந்த வலதுசாரிகள் மத்தியில் பிளேயருக்கு ஆதரவிருந்தது. அவர்களின் பிரதிநிதியாகத்தான் பிளேயர் இயங்கி வந்தார். இரண்டே இரண்டு உறுப்பினர்கள் தவிர அனைத்துப் பழைமைவாதக் கட்சியினரும் (கன்சர்வேட்டிவ் கட்சி) பிளேயருடன் இணைந்து யுத்தத்துக்கு வாக்களித்தனர். ஆனால் தொழிலாளர் கட்சிக்குள் முழுமையான ஆதரவைப் பெறுவது பிளேயருக்குச் சிரமமாக இருந்தமையால் பொய்களை அவிழ்த்துவிடத் தொடங்கினார்.

தனது சுய லாபங்களுக்காக யுத்தத்துக்குச் செல்வதற்கு ஏற்கனவே முடிவெடுத்து விட்ட பிளேயரும் அவரது கையாட்களும் தம்மை எதிர்ப்பவர்களை மிரட்ட அனைத்து வேலைகளையும் செய்தனர். பல்கலைக்கழக ஆய்வு மாணவனின் ஆய்வைக் களவெடுத்த பிளேயரின் கையாhள் அதை “இரகசிய ஆவணமாக” உறுப்பினர்களுக்குக் காட்டி மிரட்டினார். இத்தகைய மேலோட்ட ஆய்வுகளைக் காட்டி பிளேயர் பாராளுமன்றத்தில் அடித்துப் பேசினார். 45 நிமிடத்தில் ஈராக் இங்கிலாந்தைத் தாக்கலாம் எனப் பாராளுமன்றத்தில் அவர் மிரட்டிய சம்பவம் உலகப்புகழ்பெற்ற ஒன்று. இந்த மிரட்டல்களையும் எதிர்த்து ஏறத்தாழ 85 தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதற்கு அப்பால் – பாராளுமன்றத்துக்கு வெளியே யுத்தத்துக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. லேபர் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெரமி கோர்பின் மற்றும் Nஐhன் மக்டொனால்ட் ஆகியோரை இணைத்த யுத்த எதிர்ப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுத் தெருத் தெருவாகப் போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு பாடசாலைகள் மூடப்படும் அளவுக்கு மாணவர் மத்தியிலும் கொந்தளிப்பு வெடித்தது. ஒரு கட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் லண்டன் தெருக்களிற் திரண்டு பேரணியாகப் பாராளுமன்றத்தின் முன்கூடித் தமது யுத்த எதிர்ப்பைத் தெரிவித்தனர். பிளேயரும் அவரைச் சுற்றி நின்ற சிறு குழுவும் இது எதையும் கண்டுகொள்ளவில்லை. யுத்தம் செய்தே ஆகவேண்டும்’ என ஒற்றைக் காலில் நின்றார் பிளேயர். புஷ்-பிளேயர் இணைந்து பிரார்த்தித்த சம்பவங்கள் பற்றிப் பத்திரிகைகள் எழுதின. அவர்கள் எவ்வாறு சதாம் உசேனைச் சாத்தானாகப் பார்க்கிறார்கள் என்றும் புதிய குNருசேட் – சிலுவை யுத்தமாக ஈராக் யுத்தம் கருதப்படுகிறது என்றும் எழுதப்பட்டது. முஸ்லிம்களுக்கு சனநாயகம் தெரியாது என்றும் மேற்குலகினால் மேலிருந்து திணிக்கப்படவேண்டும் என்றும் கூட வாதிடப்பட்டது. சதாம் குசேன் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும் – பயங்கரமான இரசாயனக் குண்டுகள் வைத்திருப்பதாகவும் அனைத்து வலதுசாரியப் பத்திரிகைகளும் எழுதின. தமக்குச் சாதகமாக எழுதாத ஊடகவியலாளர்களை பிளேயரின் கையாள் அலிஸ்டர் காம்பல் மிரட்டிய சம்பவங்களும் நிகழ்ந்தன. அவர்களுக்கு ஏனைய செய்திகள் வழங்கப்படமாட்டாது எனப் புறந்தள்ளப்பட்டனர். ஒரு முறை செய்திக்காகக் குழுமியிருந்த ஊடகவியலாளர்களை நிறைய நேரம் காக்க வைத்த அலிஸ்டர் – மிக ஆக்கிரோஷமாக அவர்களுடன் மோதித் தமது செய்தியை எழுதும்படி தூண்டிய சம்பவமும் நிகழ்ந்தது. இத்தகைய பிளாக்மெயிலுக்கு அடிபணிந்து பி.பி.சி உட்பட அனைத்து ஊடகங்களும் பிளேயரின் பிரச்சாரத்தைச் செய்தன.

பாராளுமன்றம் வாக்களித்த மறுநாளே ஒப்பிரேசன் டெலிக் ஈராக்குக்கு எதிராகத் தொடங்கப்பட்டது. தான் பணத்தை எடுத்தச் செல்ல அனுமதித்தால் எல்லாவற்றையும் விட்டு விட்டுச் செல்வதாகவும் சொல்லிப் பார்த்தார் சதாம் உசேன். தப்புவதற்கு அவர்கள் எடுத்த எந்த வழிமுறையும் பலிக்கவில்லை. ஈராக் அகோரமான குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது. இராணுவம் பின்வாங்கிய பின்பும் துரத்தித் துரத்தி அடி விழுந்தது. 2003 மார்ச் 20ல் ஆரம்பித்த யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக ஏப்பிரல் 30ல் புஷ் அறிவித்த பின்பும் குண்டுமழை பொழிந்து தள்ளியது. யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப் பட்ட பின்புதான் மனிசாரம் தளங்கள் மற்றும் அரச கட்டிடங்கள் மற்றும் குடி தண்ணீர் வளங்கும் இடங்கள் என அனைத்து மக்கள் சேவை இடங்களும் குண்டு போட்டுத் தகர்க்கப்பட்டன. இத்தருணத்தில் ஈராக் இராணுவம் தப்பி ஓடி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உத்தியோக பூர்வக் கணக்கின்படி இந்தக் குறுகிய காலத்துக்குள் 10 000 ஈராக் இராணுவத்தினர் கொலை செய்யப்பட்டிருந்தனர். ஆனால் உண்மையில் இத்தொகை பல மடங்கு உயர்ந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சிவிலியன்கள் கொல்லப்பட்ட விபரங்கள் வேண்டுமென்றே பதியப்படாமல் விடப்பட்டது. ஈராக் இராணுவத்தினரை விட அதிகமாக மக்கள் கொல்லப்பட்டது இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, சி.ஐ.ஏ தலைமையில் திரட்டப்பட்ட குழு சதாமின் சிலையை உடைத்துத் தெருவில் உருட்டிச் செருப்பால் அடித்தது. லெனின் சிலையை உடைத்து – எவ்வாறு ஒரு கால கட்ட முடிவை அறிவித்தார்களோ அiதே முறையில் மக்கள் சந்தோஷப்படுவதாகக் காட்டவேண்டிய தேவையை இச்சம்பவம் நிறைவேற்றியது. தங்களை விடுதலை செய்ததற்காக அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் மக்கள் நன்றி செலுத்துவது போன்ற பிரச்சாரத்தை வலதுசாரிய ஊடகங்கள் அத்தனையும் செய்தன.

“ஈராக் விடுதலை செய்யப்படவில்லை – ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது” எனத் தலையங்கத்தை இடதுசாரிப் பத்திரிகையான சோசலிஸ்ட்தான் முதலில் எழுதியது. ஈராக்கின் மேலான ஏகாதிபத்தியப் படையெடுப்பின் பின்னால் எவ்வித மக்கள் நல நோக்கமும் இல்லை என்றும் எவ்வாறு ஈராக் துண்டு துண்டாக உடைபடப்போகிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். சன்னி-ஷியா மக்களுக்கிடையில் எவ்வாறு முரண் கூர்மைப்படும் என்றும் அது எவ்வாறு சிவில் யுத்தமாக மாற இருக்கிறது என்றும் – அதனால் எவ்வாறு மத்திய கிழக்குப் பிராந்தியம் நிலை குலையப் போகிறது எனவும் அவர்கள் சுட்டிக் காட்டினர். ஈராக்கைத்’ தொடர்ந்து சிரியா முதற்கொண்டு மற்றைய நாட்டு வளங்களிலும் அமெரிக்க நியா கொன்களும் பிளேயரிஸ்டுகளும் கண் போட்டுள்ளனர் என்ற எச்சரிக்கையும் வைக்கப்பட்டது. நதாமால் கொடுமைக்குள்ளான குர்திஸ் மக்கள் எவ்வாறு ஏகாதிபத்தியத்தால் பாவிக்கப்படும் சாத்தியம் இருக்கிறது என்றும் அதனால் குர்திஸ் தேசிய அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவதற்குப் பதிலாக முறியடிக்கப்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் இது பற்றி எந்த வலது சாரிய ஆய்வாளர்களும் கண்டு கொள்ளவில்லை. “எரியிற வீட்டில”; கொள்ளையடிப்பதில் குறியாக இருந்தது வலதுசாரியம்.

இடது சாரிகள் எதிர்பார்த்தது போலவே விரைவிலேயே ஆக்கிரமிப்புக்கு எதிரான கலகம் வெடித்தது. சன்னி ஷியா முஸ்லிம்களுக்கு இடையில் யுத்தம் கிளர்ந்தெழுந்தது. பிராந்தியங்களுக்கு இடையிலான போட்டி ஏராளமான யுத்தப் பிரபுக்களை உருவாக்கி மக்களின் உயிரைக் குடித்தது. ஈராக்கில் எரிந்த தீ ஆப்கானிஸ்தானுக்குத் தாவி – மத்திய கிழக்கு எங்கும் எரிந்து கொண்டிருக்கும் வரலாற்றை முற்றாக எழுத இங்கு பக்கங்கள் போதாது. இவ்வாறு யுத்த தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த போதே லாபம்திரட்டும் வேலைகளும் தொடங்கி விட்டன. கட்டிடங்கள் கட்டும் கம்பனிகளை இறக்குவதற்காகவே கட்டிடங்கள் உடைக்கப்பட்டதும் – பாஸ்ரா முதற்கொண்டு ஏனைய முக்கிய எணணெய்;க் கிணறுகளுக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டவை கடத்தப் பட்டதும் – என ஏராளமான விடயங்கள் நடந்தேறின. இன்று பலர் இவை பற்றி விரிவாக எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்துக்கொண்டிருந்தனர். மறு பக்கம் அமெரிக்க – பிரித்தானியச் சிப்பாய்கள் செத்துக்கொண்டிருந்தனர். நடுவில் யுத்தத்தைத் திணித்த நியோ கொன்களும் பிளேயரிஸ்டுகளும் லாபங்களைத் திரட்டிக்கொண்டிருந்தனர். இவர்களின் பொய்களை யுத்த முடிவு அப்போதே வெளிக்காட்டத் தொடங்கி விட்டது. 45 நிமிசத்தில் பிரித்தானியாவுக்கு அடிக்கும் ஆயுதம் எதுவும் ஈராக்குக்குள் இருக்கவில்லை. அணு ஆயுதம் – படுகொலை செய்யும் பேராயுதம் என்று எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. இலாப நோக்குக்காகக் கண்மூடி நடத்தப்பட்ட படுகொலை நடவடிக்கை இது என்று அனைவருக்கும் தெரியத் தொடங்கி விட்டது. தமது பிள்ளைகள் செத்துக் கொண்டிருந்தமைக்கு எதிராக அமெரிக்க – பிரித்தானிய இராணுவத்தினரின் பெற்றோர்கள் பலரும் கொதித்தனர். பிளேயரிஸ்டுகளின் முகத்திரை கொஞ்சங் கொஞ்சமாகக் கிழிபடத் தொடங்கியது.அவர்கள் எவ்வாறு லாபத்தைத் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்ற விபரம் தெரிய வந்த கையுடன் ஈராக் யுத்தம் பற்றிய பொது விசாரனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பலப்பட்டது.

உண்மைகளை வெளியே கொண்டுவருவதற்காகப் பலர் கடும் யுத்தத்தில் ஈடுபடவேண்டியிருந்தது. பதினான்கு வருசத்துக்குப் பிறகும் ஈராக் யுத்தம் தொடர்வது போல் இன்றும் உண்மை வெளிவருவதற்கான யுத்தம் தொடர்கிறது. யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகளின் பின்பு உருவாக்கப்பட்ட சில்கொட் விசாரணையின் முடிவுகள் தான் தற்போது வெளியாகி இருக்கின்றன. இதற்கு முன்பே விசாரணை என்ற பெயரில் இரண்டு கூத்துகள் நடத்தப்பட்டன. பட்லர் விசாரணை, கட்டன் விசாரணை என்ற விசாரணைகள் வெறும் மூடி மறைப்புகளுக்காக மட்டுமே நடத்தப்பட்டன. கில்ஸ்பரா விசாரணைகள் பற்றி அறிந்தவர்கள் இத்தகைய விசாரணைக் கமிசன்களின் போலி விளையாட்டுகள் பற்றி அறிவர். 1989ல் கில்ஸ்பராவில் நடந்த கொலைகள் பற்றிய விசாரணைகளும் எவ்வாறு மூடிமறைக்கப்படும் நிகழ்வுகளாகவே நிகழ்ந்தது என்பது பலருக்கும் தெரியும். குற்றங்கள் பற்றிய உண்மை வெளிவர முப்பது கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் எடுத்துவிட்டன. ஒரு ஆயுட்காலம் சென்றாலும் ஈராக் யுத்த அநியாயங்களின் முழு உண்மைகள் வெளியில் வராது என்பது பலரதும் கருத்தாக இருக்கிறது. அமெரிக்க – பிரித்தானிய இரகசிய அமைப்புகள-; முன்னாள் பிரதமர்கள் – சனாதிபதிகள் – மற்றும் பெரும் கார்பரேட்டுகளின் உள்வாங்கிய பாதகச் சதியாக இருப்பதால் முழு உண்மை வெளியில் வருவது சாத்தியமில்லை. ஆனால் அதன் பாதகங்களின் ஆழத்தை அறிய பாதி உண்மையே எங்களுக்குப் போதும்.

2009ல் நிறுவப்பட்ட சில்கொட் விசாரணை 2011லேயே முடிந்துவிட்டது. இருப்பினும் இதன் வெளியீடு கடுமையாக எதிர்க்கப்பட்டது. அமெரிக்க அரசு மற்றும் பிரித்தானிய அரசுகள் சார்பில் இயங்கியோர் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. அந்த விசாரணை வெளியிடப்படுவதற்கு எதிராக முன்னாள் இராணுவத் தளபதி வழக்குப் போட்டிருந்தார். இன்று (06-047-2016) அரை குறையாக வெளியாகும் இந்த அறிக்கையே 2.6 மில்லியன் சொற்களைக் கொண்ட அறிக்கையாக இருக்கிறது. மக்களின் வரியில் பத்து மில்லியன் பவுன்சுகளுக்கும் மேலாகக் குடித்துவிட்ட இந்த அறிக்கை கூட முழு உண்மைகளைச் சொல்ல மறுத்து நிற்கிறது, 150 சாட்சிகள் மற்றும் 150 000ம் ஆவணங்களை ஆராய்ந்து வெளிவரும் அறிக்கை என்று சொல்லப்பட்ட போதும் ஏற்கனவே வெளிவந்திருக்கும் முக்கிய உண்மைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஏதே ஒரு விதத்தில் மேற்கு அரசுகளைக் காப்பாற்றுவதாகவும் – பிளேயிரிஸ்டுகள் குற்ற விசாரணையில் இருந்து தப்பவும் கவனத்துடன் அறிக்கை எழுதப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்தது போலவே அனைவருக்கும் தெரிந்த பல உண்மைகளை இந்த அறிக்கை ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஈராக்கில் பயங்கர ஆயதங்கள் இருப்பதற்கு ஆதாரம் இருக்கவில்லை என்பது தொடங்கி எவ்வாறு யுத்தத்துக்கான தேவை இருக்கவில்லை என்பது ஈறாகப் பலருக்கும் தெரிந்த உண்மைகள் முதன் முறையாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இருப்பினும் அறிக்கை குற்றங்களுக்குக் காரணமானவர்களைத் தப்பவிட்டிருக்கிறது. இனிமேல் கதையை நிற்பாட்டுங்கள் என்ற பாணியில் பிளேயரும் உடனடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இதற்கு மிஞ்சி இனி விசாரணை தேவையில்லை என முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

பிளேயர் போர்க் குற்றங்களில் இருந்து தப்பி விடப்பட்டிருக்கிறார். இது மட்டுமின்றி அவர் எவ்வாறு மில்லியராகினார் என்ற விஷயமும் மறைக்கப்பட்டு வருகிறது. டெலிகிராப், டெயிலி மெயில் , கார்டியன், சனல் 5 முதற்கொண்டு பல்வேறு வலது சாரிய ஊடகங்களின் தனிப்பட்ட ஆய்வுகளே கூட பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. இது பற்றிக் கவனிப்பார் இல்லை.

பிரதம மந்திரியாக இருந்த போது அவர் யாருக்காக முக்கி முக்கி வேலை செய்தாரோ அவர்கள் இவர் பதவி விலகியதும் பணத்தை வாரிக்கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். பிரதம மந்திரியாக இருந்த பொழுது நேரடியாகப் பணத்தைப் பெற்றுக்கொள்வது சட்டப்படி குற்றம் ஆனால் இவர் வங்கிக்கு மாற்றிக்கொள்வதற்கு ஆயிரத்தெட்டுக் குறுக்கு வழிகள் இருந்தன. பிளேயர் பதவி துறந்து சில கிழமைகளுக்குள் அவருக்கு 4.5 மில்லியன் பவன்சுகளை வாரி வழங்கினார் மிகப்பெரும் வலது சாரிய ஊடக முதலாளியான மேர்டோக். மேர்டோக்கின் ஊடகங்கள் பிளேயருக்காக தேர்தல் காலங்களில் கடுமையாக உழைத்திருந்தன. பிளேயரும் அவரது சிறு குழுவும் அடிக்கடி மேர்டோக்கை பிரதமர் வீட்டுக்கு அழைத்து உபசரித்திருக்கிறார்கள். அவரைச் சந்திக்க ஒரு முறை அவுஸ்திரேலியா வரை சென்றிருக்கிறார் பிளேயர். உலகெங்கும் வரி செலுத்தாது மிக மோசமான வலதுசாரிய பிரச்சார ஊடகங்களாக இயங்கி வருபவை மேர்டோக்கின் ஊடகங்கள். பிளேயரின் சுயசரிதைக்காக இந்தப் பணம் வழங்குவதாகச் சொல்லப்பட்ட போதும் அதை பலர் நம்பவில்லை. சுயசரிதைக்காக இவ்வளவு பணம் வழங்கப்பட்ட வரலாறு இதற்கு முன் இல்லை.

இது மட்டுமின்றி ஜே.பி மோர்கன் என்ற வங்கி வருசத்துக்கு 2 மில்லயன் தொகையையும் சுவிஸ் காப்புறுதிக் கம்பனி ஒன்று வருசத்துக்கு அரை மில்லியன் பவுன்சுகளையும் அவருக்கு வழங்கியது. உலக விவகாரங்கள் பற்றிய ஆலோசனைக்காக அந்தப் பணம் வழங்கப்படுவதாகச் சொல்லப்பட்டது. மத்திய கிழக்கைச் சின்னாபின்னமாக்கிய பிளேயருக்கு மத்திய கிழக்கு அமைதித் தூதர் பதவி கொடுத்த அமைப்பு Nஐhர்ஜ் புஷ் உடன் தொடர்புடைய அமைப்பு என்று கூறப்படுகிறது. அந்த அமைப்புச் சார்பாக இவருக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை ஆனால் அதற்குப் பதிலாக அவரது செலவுகளை அவர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டனர். கிழக்கு ஜெருசலேமில் அமெரிக்கக் காலனி என அழைக்கப்படும்; இடத்தில் இருக்கும் ஐந்து நட்சத்திர விடுதியின் நாலாம் மாடி முழுவதும் அவருக்கு வழங்கப்பட்டது. வருசத்துக்கு ஒரு மில்லியன் பவுன்சுகள் அதற்காகச் செலவு செய்யப்பட்டது. இது தவிர அவர் தனியார் ஜெட்டில்தான் பயணம் செய்தார். அதி உயர் விலை கூடிய கார்களிற்தான் பயணம் செய்தார். இந்தச் செலவுகளை வெவ்வேறு அமைப்புகள் பொறுப்பெடுத்தன. இத்தாலிக்குப் போனால் பிளேபோய் அரசியல்வாதி என அறியப்படும் பலஸ்கோனியின் மாளிகையில் தங்கினார். இதே போல் போகுமிடமெல்லாம் பில்லியனர்கள் அவரைக் கவனித்துக்கொண்டனர். ஈராக் யுத்தத்தில் நேரடியாகப் பலனடைந்து கொண்ட குவைத்தும் அவருக்கு மில்லியன்களை வழங்கியிருப்பதாக ஆதாரங்கள் வரத்தொடங்கியிருக்கின்றன. யுத்தத்தால் பெரும் இலாபங்களை ஈட்டிக்கொண்டவர்கள் அவரைத் தாங்கித் தாங்கிப் பார்த்துக்கொள்ளுவது ஆச்சரியமில்லை. இந்த விபரங்களை பிளேயர் ரிச் புரnஐக்ட் என்ற பெயரில் சனல் 5 தொகுத்துள்ளது.

இவ்வாறு பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காகப் பல பவுன்டேசன்களை உருவாக்கி வைத்திருக்கிறார் பிளேயர். இது மட்டுமின்றி ஆலோசனை வழங்கும் கம்பனி ஒன்றையும் உருவாக்கி வைத்திருக்கிறார். இந்தக் கம்பனி உலக சர்வாதிகாரிகள் மற்றும் சட்டம் மீறும் கம்பனிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறது. தான் பிரதம மந்திரியாக இருந்தபோது தான் அறிந்திருந்த இரகசியங்களை மூலதனமாக அவர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரின் ஈடுபாடு சர்வாதிகாரிகளுக்கும் கிரிமினல்களுக்கும் தமது கொடும் செயல்களை மூடி மறைப்பதற்கு அரிய வாய்ப்பு ஏற்டுத்திக் கொடுக்கிறது. இதற்காக ஆலோசனை எடுத்தது என்ற பெயரில் அவர்கள் ஏராளமான பணத்தை வாரி வழங்குகிறார்கள். கசக்கிஸ்தானின் சனாதிபதி நசர்பயாவ் பிளேயருக்கு வருசத்துக்கு 5.3 மில்லியன் பணம் வழங்கி வருகிறார். கசகிஸ்தானில் சென்குசேன் என்ற இடத்தில் தொழிலாளர்கள் படுகொலை செய்ததற்கு எதிராக உலகெங்கும் எதிர்ப்புக் கிளம்பியது. கம்பெயின் கசக்கிஸ்தான் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது. கசக்கிஸ்தான் தூதரகத்துக்கு முன்னால் செய்த போராட்டத்தின் போது தூதரக அதிகாரிகள் பலத்த அழுத்ததுக்கு உள்ளாகினர். போலிசை அழைத்துப் போராட்டம் செய்தவர்களைக் கலைக்க முயன்றும் பயனளிக்கவில்லை. நீங்கள் மனித உரிமையை மீறினால் இவ்வாறு போராட்டம் நடக்கும் என ஒரு பொலிஸ் அவர்களுக்குச் சொன்னது ஞாபகமிருக்கிறது. இது இப்படி நடந்து கொண்டிருக்க முன்னாள் பிரதமர் பிளேயர் இந்த அழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி நசர்பயாவுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்திருக்கிறார். நசர்பயாவின் பேச்சைக்கூட இவர்கள் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். இங்கிலாந்து முன்னாள் பிரதமரே தங்கள் பொக்கட்டுக்குள் இருக்கும் பொழுது தாங்கள் ஏன் போராட்ட அழுத்தங்களைக் கவனத்தில் எடுக்க வேண்டும்;? இதே போல் இவர் நைஐPரியப் பிரதமரை பிளாக்மெயில் செய்து மத்திய கிழக்கு முதலீட்டை அவர்கள் ஏற்கச் செய்ய வைத்ததாக மெயில் செய்தி வெளியிட்டிக்கிறது. ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கும் பிரித்தானியத் தூதரகங்களில் இருந்து தகவல்களை வாங்கிச் சென்று தனது இலாபத்துக்காக இவர் உபயோகித்து வந்திருக்கிறார். இலங்கையிலும் போய் நின்று பணம் திரட்ட முயற்சிகள் செய்ததாகவும் குற்றச்சாட்டு உண்டு. ஓய்வுக்காக இலங்கைக்குச் செல்கிறேன் என்ற பாவனையில் சென்றவர் அங்கு அரரசியற் கூட்டங்களில் கலந்துகொண்டு பேச்சுக்கள் வழங்கியது பலருக்கும் தெரிந்ததே.

மத்திய கிழக்கு எண்ணெய்க் கம்பனிகள் முதலீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளுக்கும் உதவி வருகிறார் பிளேயர். முன்பு லிபிய சர்வாதிகாரி கடாபியினைச் சந்தித்து கைகுலுக்கி வியாபார ஒப்பந்தக்கள் போட்டதை அறிவோம். பிரித்தானியாவில் வீடுகள் வியாபாரத்தில் மில்லியன் கணக்கான பணத்தை முதலீடு செய்திருக்கிறார் பிளேயர். அவரிடம் 10 பெரிய வீடுகளும் 27 அடுக்குமாடிக் குடியிருப்புகளும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவரது வீடுகளின் பெறுமதிகளே 27 மில்லியனுக்கும் மேலிருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவரது முழுச் சொத்தும் 100 மில்லியன் பவுன்சுகளுக்கும் அதிகமாக இருக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது. இத்தனையும் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு சம்பாதித்தவை. இத்தனைக்கும் அவருக்கு வருசத்துக்கு 65 000பவுன்சுகள் பென்சனும், செலவுக்கு 84 000 பவுன்சுகளும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிளேயர் அளவுக்கு பணக்கார முன்னாள் பிரதமர்கள் யாரும் கிடையாது. இவர் முன்னாள் பிரதமராக இருந்த ஒரு பில்லியனர் என அறியப்படுவார் என சொல்லிக்கொள்கிறார்கள். குறுக்கு வழியிலும் இலகுவாகவும் எப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கலாமோ அந்த முறையில் “எதை வித்தாவது” பணம் சம்பாதிக்கும் பண்பு உள்ளவர் பிளேயர் என அவரது கரெக்டரைப் பற்றி ஊடகவியலாளர்கள் வெறுப்புடன் எழுதுகிறார்கள். அதிசெல்வந்த கிளப்பில் இணைந்திருக்கும் பிளேயரின் ஒரே ஒரு குறிக்கோள் பணம் மட்டுமே எனப் பலர் இன்று ஏற்றுக்கொள்கிறார்கள்.

தனது சுயநலத்துக்காக பிளேயர் செய்த அநியாயங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. ஈராக் யுத்தத்தின் நேரடி விளைவாக அரை மில்லியனுக்கும் மேற்பட்ட ஈராக்கிய மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டஆப்கானிஸ்தான் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மத்திய கிழக்கின் நிலவரம் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி ஆட்டம் கண்டிருக்கிறது. இத்தனைக்கும் பிளேயர்தான் பொறுப்பெடுக்கவேண்டும். போர்க் குற்ற விசாரணை செய்யப்பட்டு பிளேயர் சிறையில் அடைக்கப்படவேண்டும். அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு வழங்கப்படவேண்டும்.

இந்தக் கேவலத்தில் பிளேயரும் அவரது வால்களும் யுத்த எதிர்ப்பாளர் nஐரமி கோர்பினைப் போட்டுத் தாக்குவதையும் நாம் பார்க்கலாம். nஐரமிக்கு ஆதரவு இதயமுள்ளவர்கள் இதயமாற்றுச் சிகிச்சை செய்து கொள்ளவேண்டும் என்று அவர் முன்பு அறிக்கை விட்டிருந்தார். ஏன் மக்கள் nஐரமிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் எனத் தனக்கு விளங்கவில்லை என முன்பு அவர் ஆச்சரியப்பட்டிருந்தார். மக்கள் பற்றியும் அவர்கள் நிலவரங்கள் பற்றியும் தெரியாத அந்த மில்லியனர் ஆச்சரியப்படாமல் என்ன செய்வார். தற்போது கட்சி சனநாயகத்தை உடைக்கும் படியும் பாராளுமன்ற லேபர் கட்சிக்கு தனிப்பட்ட இறையாண்மை உண்டு என்றும் பிரச்சாரித்து வருகிறார். இவரது நடவடிக்கைகள் மக்களை மேலும் மேலும் கொதிப்புக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன. பிரித்தானியாவில் அதிகம் வெறுக்கப்படும் மனிதராக மாறிக்கொண்டிருக்கிறார் பிளேயர்.