சிஏஏ எதிர்ப்பாளர்கள் மேலான வன்முறையை உடனடியாக நிறுத்து.

1,262 . Views .

சுரேஷ் பேரறிவாளன்-

சிஏஏ எதிர்ப்பாளர்கள் மற்றும் முஸ்லிம்கள் மேலான கொடூரமான தாக்குதல்களை புதிய சோஷலிச இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. முற்போக்கு சக்திகள், இடதுசாரிகள், மற்றும் தொழிற்சங்கங்கள் ஓன்று சேர்ந்து பாதுகாப்பு கமிட்டிகளை கட்ட முன்வர வேண்டும். நாம் வாழும் பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் மற்றும் மத வெறியர்கள் தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்க முடியாதபடி பாது காக்கும் கமிட்டிகள் இயங்க வேண்டும்.

சிஏஏ எதிர்ப்பாளர்களின் போராட்ட நடவடிக்கை குறைவதை பாவித்தும் டிரம்ப் வருகையைப் பாவித்தும் தமது கோர முகத்தை காட்ட இந்து மத வெறியர்கள் தெருவில் இறங்கி உள்ளனர். உயிரழப்பு, காயம் சொத்துக்களுக்கு சேதம் என பல பாதிப்புகள் ஏற்படுத்தப் பட்ட பின்பும் – அமைதி காப்பது பற்றி பிரதமர் பேசுகிறார். ஏனைய -தலைவர்கள் என தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்வோரும் அமைதி காக்கின்றனர். தாக்கப்படும் மக்கள் பக்கம் பேச – தொடரும் தாகுதல்களை நிறுத்த அவர்கள் முன்வரப் போவதில்லை. நாம்தான் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

போராட்டம் பின்னடைவு அது தோற்றதால் அல்ல.

சிஏஏ சட்டத்தை கொண்டு வருவது அறிவிக்கப்பட்ட நாள் முதல் இந்தியாவின் பல இடங்களில் மிக தீவிரமாக அதற்கு எதிரான போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டம் தற்போது சிறு தேக்க நிலையை அடைந்துள்ளது. சரியான ஒரு அரசியல் திட்டமிடல் மற்றும் தலமை இல்லாமல் போனது விளைவாக இன்று பெரும்பாலான மக்கள் மற்றும் போராட்டக் காரர்கள் சோர்வடைந்து உள்ளனர்.

ஆனால் பொதுவாக மக்கள் மத்தியில் போராட்டம் ஏற்படுத்திய விழிப்புணர்வு மற்றும் சிஏஏ தொடர்பான உரையாடல் அதிகரித்து இருக்கிறது. வெகுஜன மக்கள் பலர் தங்களது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கும் என்று இந்த ஜனநாயகத்தை நம்புகிறார்கள். அதன் விளைவுதான் நாடுமுழுவதும் தேசிய கொடிகள் ஏந்தி தங்கள் ஜனநாயக உரிமைகளை வெல்ல முடியும் என்று போராடினர். ஆனால் அத்தகைய ஜனநாயகம் எங்குமே இல்லை. மக்களைச் சுரண்டும் வேலையை முதலாளித்துவத்தின் சார்பில் செய்யும் அரசு மக்கள் நலனை முதன்மைப் படுத்தி இயங்கப் போவதில்லை. இதனால்தான் மக்கள் போராட்டம் சரியான அரசியலை திட்டமிடல்களை உள்வாங்க வேண்டும் என நாம் வாதிடுகிறோம்.

சிஏஏ போராட்டம் ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமாக இருந்ததை பார்க்கலாம். அங்கு உள்ள இடதுசாரிகள் பலம் – முதலாளித்துவ கட்சிகளின் பலம் பலவீனம் மற்றும், ஆளும் பாஜக மற்றும் எதிர் திசையில் இருக்கும் எதிர்ப்பு முதலாளித்துவ கட்சிகளின் நடவடிக்கை – என பல்வேறு புற சூழல்களின் அடிப்படையில் போராட்ட நடவடிக்கள் மாறுபட்டு இருந்ததை பார்க்கலாம். இந்தியா முழுக்க இந்த போராட்டத்தை ஒடுக்க பாஜக அரசு பல யுக்திகளை கையாண்டது சில மாநிலத்தில் அரசு வன்முறை செய்து ஒடுக்கியது. சில மாநிலத்தில் அரசு மக்களுக்கு போராடும் உரிமையே மறுத்தது. சில மாநிலத்தில் – குறிப்பாக மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் – அரசு வன்முறை சற்றுக் குறைவுதான். ஆனாலும் வண்ணாரப்பேட்டையில், தொடர்ந்து போராடப் போகிறார்கள் என்ற அச்சத்தில் அரசு வன்முறை செலுத்தியது. அதையும் எதிர்த்து மக்கள் ஒன்றினைந்து வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். டெல்யில் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை கொண்டு அங்கு நடக்கும் போராட்டத்தை ஒடுக்க முயற்ச்சி செய்கிறது. தற்போது ஆர் எஸ் எஸ் குண்டர்களின் தாக்குதலை கண்டும் காணாமல் விட்டுள்ளது.

போராடும் மக்கள் பலர் வாழ்வாதாரப் பிரச்சினைகள் பலதை எதிர்கொண்டு நிற்கிறார்கள். வேலைக்குப் போனால் தான் சாப்பாடு என்ற நிலையில் இருப்பவர்கள் கூட அனைத்தையும் கொஞ்சம் விட்டு கொடுத்து வீதியில் இறங்கி இருக்கிறார்கள். மற்றும் குடும்பச் சூழல் – படிப்பு எனப் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளார்கள். பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி தங்கள் சொந்த நலனையும் இந்த அரசியல் போராட்டத்தையும் ஒரு சேர நகர்த்த வேண்டிய தேவை மக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் சில தொய்வுகள் வரும். அது தான் தற்போது நாம் பார்க்கும் இந்த சிஏஏ போராட்டத் தொய்வு. மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பு மங்கியதாலோ அல்லது கோபம் குறைந்த்ததாலோ அல்லது சிஏஏ வை அவர்கள் ஏற்றுக் கொண்டதாலோ ஏற்பட்ட தொய்வில்ல இது.

சிஏஏ அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் எந்த அரசியல் கட்சிகளும் போராட்த்துக்கு அழைப்பு விடுப்பதற்கு முன் மக்கள் வீதியில் இறங்கி போராடா துணிந்து விட்டார்கள். இனி வரும் காலங்களில் இன்று அமைதியாக வீடு திரும்பியவர்கள் நாளை சற்று அதிக அரசியல் புரிதலுடனும் வீதிக்கு வர வாய்ப்பு உண்டு. இந்த சிஏஏ, மற்றும் பொருளாதார பிரச்சனைகள் தற்போது சாந்த நிலையில் இருக்கிறதே தவிர அது முடிந்து விடவில்லை. இன்னொரு பரிமாணத்தில் எழும் தற்போது நடந்ததை விட மிக வீரியமான முறையில் எழும் என்பது தான் உண்மை.

போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும்

இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எப்படி நகர்த்துவது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். மாணவர்களும் இளையோரும் தனிமையில் போராடுவது அரசைத்தான் வலுப்படுத்தும். பதிலாக நாம் எங்களது பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இந்தியா எங்கும் நடந்து கொண்டு இருக்கும் பல்வேறு போராட்டங்கள் ஒன்றிணைய வேண்டும். பெண்கள் உரிமைக்கான போராட்டம் – சாதி அடிப்படையில் ஒடுக்கப்படுவதற்கு எதிரான போராட்டம் என்பனவும் இந்திய அரசுக்கு எதிரான போராட்டங்களே. எல்லாப் போராட்டங்களும் ஒன்றோடு ஓன்று தொடர்புடையவை. அவைக்குப் பொது எதிரி முதலாளித்துவ அமைப்பும் அதை தாங்கி நிற்கும் அரசுமே. வர்க்க அடிப்படையில் இந்தப் போராட்டங்கள் ஒன்றினைவதுதான் அரசை ஆட்டம் காணச் செய்யும். கடந்த பொது வேலை நிறுத்த நடவடிக்கை அரசுக்கு மிகப் பெரும் அடியாக இருந்தது அறிவோம். இத்தகைய வேலை நிறுத்த நடவடிக்கை ஒரு சில பொருளாதார கோரிக்கைகளோடு முடங்கி விடாது எல்லா எதிர்ப்பு போராட்டத்தையும் ஒன்றிணைக்க முன் வர வேண்டும். மாணவர்களும் இளையோறும் தொழிலாளர் போராட்டத்தோடு ஓன்று சேர வேண்டும்.

சிஏஏ அறிமுகப்படுத்தப் படுவதற்கும் வங்கி தொழிலாளர்கள் தாக்கப் படுவதற்கும் தொடர்பு உண்டு. இந்து அடிப்படைவாதம் முதற்கொண்டு பல்வேறு பிற்போக்குத் தனங்களைத் தூண்டி விட்டு – மக்களை மதம்/இனம்/சாதி/பால் என உடைத்து தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வது அதிகார சக்திகளின் தேவையாக இருக்கிறது. நாங்கள் எமக்குள் அடித்துக் கொள்ள அவர்கள் தமது லாபத்தை பெருக்கும் பொருளாதார மற்றும் சட்ட நடவடிக்கைகளை திணித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாம் தனித் தனியாக நின்று எதிர்ப்பதை விட ஒன்றுபட்ட எதிர்ப்பை கட்டுவது அவசியம். வேலை நிறுத்த நடவடிக்கை என்பது அரசின் அதிகாரத்திற்கு நேரடி தாக்குதலை செய்யும் ஒரு நடவடிக்கை. இதை போராட்ட உத்தியாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். வேலை நிறுத்த நடவடிக்கையுடன் அனைத்து எதிர்ப்பு போராட்டங்களும் ஓன்று திரள வேண்டும். வங்கித் தொழிலாளர்கள் போராட்டமும் எமது போராட்டமே. சிஏஏ எதிர்ப்பு போராட்டம் அதனோடு ஒன்றிணைய வேண்டும்.

இதை சாதிக்க வேண்டுமானால் இத்தகைய தூரப் பார்வை உள்ள அமைப்பாக நாம் திரள வேண்டும். மக்கள் தொடர்ந்து தெருவில் நிற்க முடியாது. இந்திய அரசு மனித உரிமை மற்றும் போராடும் மக்களின் பிரச்சினைகள் பற்றிக் கவலை கொள்ளும் அரசு அல்ல. நாம் இந்த அடக்குமுறை அரசுக்கு எதிரான பலத்தை அதற்கு வெளியில் நிறுவ வேண்டுமானால் எமது நலனை முதன்மைப்படுத்தி இயங்கும் அமைப்பை கட்டி எழுப்ப வேண்டும். இடது சாரிக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஓன்று திரண்டு இந்த வேலையை செய்ய முடியும். ஆனால் அவற்றின் தலைமைகள் மக்கள் நலன் சார்ந்து இயங்கும் பலத்தை திரட்டுவதற்கு முயற்சி எடுக்க வில்லை. மக்கள் நலன்களை முதன்மைப்படுத்திய இடதுசாரி கொள்கை உள்ள – சனநாயக முறையில் ஒழுங்கமைக்கப் பட்ட பொதுசன அமைப்பு பலமாக எழுச்சி கொள்வது முதலாளித்துவ அரசின் பலத்தை தகர்க்கும். அனைவரது நலன்களையும் முதன்மையாக கொண்டு திட்ட மிட்ட பொருளாதார அடிப்படையில் இயங்கும் சோஷலிச சமுதாயத்தை உருவாக்குவதற்கு இது வழி திறந்து விடும்.

இத்தகைய திட்டமிடலை முன்னெடுக்க இடதுசாரிக் கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் – தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம். எமக்கான பொதுசன பலத்தை கட்டி எழுப்ப ஒன்றினைவோம்.

புதிய சோஷலிச இயக்கம், சென்னைக் கிளை

தொடர்புகளுக்கு : 0091 9500111154