கொரோனா வைரஸ் நெருக்கடி – ஆட்சியை உலுக்குகிறது

-நன்றி www.akhilam.org

கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எணிக்கை உச்சத்தை அடைந்து உள்ளது. இருப்பினும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை உடனே கண்டு அறிய முடியாத அபாயத்தால் இன்னும் பலர் இறக்க கூடும் எனும் அச்சம் நிலவுகிறது.

ஆரம்ப காலகட்டத்தில் அதிகாரிகள் செயல்படுவதற்கு தாமதித்த காரணத்தினால் சீனாவில் இறப்புகள் அதிகரித்தன. 2020 ஆம் ஆண்டின் முதல் ஆறு வாரங்களில், சுமார் 1,800 பேர் இறந்தனர், மேலும் 68,000 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இறந்தோர் எண்ணிக்கை 3000 ஐ தாண்டிச் சென்று கொண்டு இருக்கிறது. ஆரம்பத்தில் COVID-19 என்று அழைக்கப்பட்ட இந்த வைரஸ் பிப்ரவரி இரண்டாவது வாரத்தின் இறுதியில் ஏற்பட்ட மறுவரையறையின் காரணமாக தற்பொழுது கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. சீனாவில் நிகழும் இறப்பு விகிதம் இப்போது குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், முகமூடிகள் போன்ற அடிப்படை உபகரணங்களின் பற்றாக்குறை, சிக்கலை அதிகரிக்கின்றது. ஹாங்காங்கில், சீன ஆட்சிக்கு எதிரான கோபம் அதிகரித்து வருகின்றது, சீனாவின் எல்லைகளை முழுமையாக சீல் வைக்க வேண்டும் என்று கோரி வெகுஜன ஆர்ப்பாட்டங்களும் மருத்துவ ஊழியர்களின் வேலைநிறுத்தங்களும் நடந்துவருகின்றது.

பொருளாதாரம்

கொரோனா வைரஸ் நெருக்கடி சீனாவிலும் உலகளவிலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இது முன்னரே சீனாவில் தொடங்கிய 2002-2003 ஆம் ஆண்டின் சார்ஸ் தொற்றுநோயை விட அதிக அளவிலான இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பல நிகழ்வுகள், மாநாடுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. சீனப் பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளில் தேக்கநிலை ஏற்பட்டது மட்டும் அல்லாமல் மற்ற நாடுகளில் உள்ள தொழில்கள் மற்றும் செம்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் உலக விலைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்தே மீளாத உலக முதலாளித்துவத்தின் மீது ஏற்படவுள்ள பாதிப்புகளின் மீதான நியாயமான அச்சங்கள் நிகழ்கின்றது.

சீனப் பொருளாதாரம் அளவு மற்றும் செல்வாக்கில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது, ஆனால் தற்போதைய முடக்கத்திற்கு முன்பே அதன் பொருளாதார செயல்பாடு மற்றும் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகின்றது. கொரோனா வைரஸ் அவசரநிலை அரசு வளங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் அரசு கஜானாவில் பெரியளவிலான ஊடுருவல்கள் ஏற்படும்.

ஒரு அரசாங்கம் பேரழிவு (இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட) காலகட்டத்தில் ஆதனை கையாளும் விதம் அதை உருவாக்கும் அல்லது உடைக்கும். சீனா உலகின் மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட ஒரு பரந்த நாடு, ஆனால், இந்த அரசு இயந்திரம் முன்முயற்சியை எடுக்க தயங்குகிறது மற்றும் மக்களின் குரலுக்கு அஞ்சுகிறது. ஒரு சிறிய ஆனால் மிகவும் பணம்படைத்த உயரடுக்கு ‘கம்யூனிசம்’ என்ற பெயரில் ஆட்சி செய்கிறது, ஆனால் இந்த அரசு பொதுவாக சந்தையின் சட்டங்களின்படி செயல்படுகிறது. தனது நிலையை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில், இந்த செல்வந்தர்கள் ஆளும் அரசு ஜனநாயகத்தையும், போராட்டத்தையும் தவிர்ப்பது மட்டும் இல்லாமல், கீழிருந்து எந்தவொரு விமர்சனத்தையும் ஏற்க மறுக்கின்றது. கடந்த ஆண்டு வுஹானில், மக்களின் வீடுகளுக்கு அருகில் ஒரு எரியூட்டி அமர்ந்திருப்பது தொடர்பாக நடைபெற்ற வீதி ஆர்பாட்டத்தின்போது மக்கள் அரச படைகளால் தாக்கப்பட்டனர்.

தாமதம் நெருக்கடியை அதிகரிக்கிறது

கடந்த ஆண்டு இறுதியில், ஒரு மருத்துவ நிபுணர் ஒரு ஆபத்தான தொற்றுநோய் உருவாகிறது என்று எச்சரித்தார். அவரது கண்டுபிடிப்புகளை பொருட்படுத்தாமல் வுஹானில் உள்ள சக மருத்துவர்களையும் மௌனித்தனர். வைரஸைக் கட்டுப்படுத்த வளங்களை உடனடியாக அணிதிரட்டவில்லை. இந்த நிகழ்வு நடைபெற்ற ஏழே வாரங்களில் 58 மில்லியன் மக்கள்தொகை கொண்ட லண்டனைப் போன்ற பெரிய நகரமான வுஹானும் ஹூபேவும் முழுமையாக அடைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் குறித்து எச்சரித்த டாக்டர் லி வென்லியாங், இந்த நோயால் பாதிக்கப்பட்டு பிப்ரவரி 7 அன்று இறந்தபோது, மக்கள் கோபம் வெடித்தது. ஆன்லைனில் எச்சரிக்கை அளித்ததற்காக டாக்டர் லி மற்றும் ஏழு மருத்துவர்களை தண்டித்ததற்காக நாட்டின் உச்ச நீதிமன்றம் கூட வுஹான் பொலிஸை விமர்சித்தது. வெய்போவில் பெரும்பாலான பதிவுகளில் “எங்களுக்கு பேச்சு சுதந்திரம் வேண்டும்” மற்றும் “பேச்சு சுதந்திரத்தை நாங்கள் கோருகிறோம்” என்ற ஹேஷ்டேக்குகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினார்கள்.

லெஸ் மிசரபிள்ஸின் நன்கு அறியப்பட்ட புரட்சிகர பாடல் – “டு யு ஹியர் தா பீபள் சிங்” லியின் மரணம் மற்றும் அதிகாரிகளின் இயலாமை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இப்பாடல் வைரலாகியது. முன்னணி கல்வியாளர்கள் மற்றும் விமர்சகர்கள் செய்தியின் தாமதம் மற்றும் நாட்டின் ஜனாதிபதியின் செயலின்மையை எதிர்த்து கண்டனங்களை எழுப்பினர். சர்வாதிகார சமூகங்களில் எப்பொழுதும் கீழ்நிலை அதிகாரிகளின் வேலைகளே பறிபோகின்றது.

இது செயல்பாட்டுக்கு வந்தவுடன், மருத்துவமனைகள் கட்ட மனித மற்றும் பொருள் வளங்களை அணிதிரட்ட முடிந்த வேகம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றால் பலர் ஈர்க்கப்பட்டனர். இதனை அதிகாரத்துவ கட்டளைகளாலும் அச்சத்தினாலும் சாத்தியப்படுத்தினாலும், இதில் சிலவற்றை ஒரு சோசலிச திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தில் ஜனநாயகரீதியில் தொழிலாளர் நலனிற்கு இடையூறு இல்லாமல் சாத்தியப்படுத்தமுடியும்.

ஆனால், அரசாங்கம் ஆரம்ப காலத்தில் இப்பிரச்சனையை மறுத்தும், எச்சரிக்கை எழுப்பியவர்களுக்கு தண்டனை வழங்கியதும் பெரிய அரசியல் விளைவுகளை ஏற்படுத்துமா எனும் கேள்வி பலரின் மனதில் உள்ளது.

சாதம் ஹவுஸின் ஆராய்ச்சியாளர் யூ ஜீ ஃபைனான்சியல் டைம்ஸில் எழுதியது போல் : “அதிகாரிகளிடையே நெருக்கடிகளை வெளிக்காட்டாமல் இருக்கும் போக்கு ஆழமாகப் பதிந்துள்ளது. “கொரோனா வைரஸின் விளைவாக சீனாவில் பெரும் சமூக மற்றும் அரசியல் மாற்றத்தைப் பற்றிய கணிப்புகளைச் செய்ய ஒருவர் தயாராகஇருப்பர்” என்று சண்டே டைம்ஸின் பீட்டர் ஃபிராங்கோபன் எச்சரிக்கிறார்.

செர்னோபில்?

ஏப்ரல் 26, 1986 அன்று உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கரமான பேரழிவின் போது நிகழ்ந்த தவறுகளுடனும் மறைப்புகளுடனும் இதனை ஒப்பிடுகிறார்கள். உக்ரைன் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்தது, இது மாஸ்கோவின் ஒரு பெரிய அதிகாரவர்க்கத்தால் வழிநடத்தப்பட்டது.

மதிப்பீடுகள் பல்லாயிரக்கணக்கானவர்களின் இறப்பு சதவிகிதம் மற்றும் மற்றும் நீண்டகால சுகாதார குறைபாடுகளின் எண்ணிக்கையை வெளிகொண்டுவந்திருக்கின்றது. ஒருபுறம், பரவலான குறைபாடுள்ள பாதுகாப்பு கலாச்சாரம் அம்பலப்படுத்தப்பட்டது. மறுபுறம், ஒரு மில்லியன் கட்டுமானத் தொழிலாளர்களில் கால் பகுதியினரை உள்ளடக்கிய ஒரு தூய்மைப்படுத்தும் நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் சோவியத் யூனியனின் அரசாங்கத் தலைவரான மைக்கேல் கோர்பச்சேவின் கூற்றுப்படி, தீர்வுக்கான செலவு 35.7 பில்லியன் டாலருக்கு சமமானது, இது சோவியத் ஒன்றியத்தை கிட்டத்தட்ட திவாலாக்கியது.

சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவ அரசின் முடிவிற்கு இது துவக்கமாக இருந்தது. நிச்சயமாக, இன்றைய சீனாவைப் போலவே, கணக்கிட முடியாத தவறுகளும், ஆதிக்க சக்த்தியின் ஆட்சியும் நடந்துகொண்டிருந்தது. ஆனால் பல குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்தது. கோர்பச்சேவ் ஒரு அரசுக்கு சொந்தமான பொருளாதாரத்திற்கு தலைமை தாங்கினார், அது ஒரு இக்கட்டான நிலையில் – பல தசாப்தங்களாக தொழிலாளர்களின் கட்டுப்பாடு மற்றும் திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தின் நிர்வாகத்திற்காக காத்திருந்தது.

இன்று சீனாவில், புள்ளிவிவரங்கள் இன்னும் நம்பும்படியாக இல்லை வங்கி, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் குறித்து சர்வாதிகார அரசு என்ன தீர்மானிக்கிறது என்பதில் தெளிவில்லை. ஆனால், தேசியமயமாக்கப்பட்ட பொருளாதாரத்துடன், மாவோ சே துங் ஆட்சிக்கு வந்த பல தசாப்தங்களாக சீனாவின் பொருளாதாரம் முன்பை போல் இல்லை. தனியார்மயமாக்கல் விரிவாக்கப்பட்டது. மிகவும் பணம் படைத்தவர்களே நாட்டின் நிர்வாகத்தை ஆக்கரமித்தனர். அதிகாரத்தை தங்களது பிடியில் வைத்துகொள்வதே அவர்களது குறிக்கோளாக இருந்தது.

கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயருக்கு பின்னால் ஒளிந்துகொண்டு கொரோனா வைரஸை சரியாக கையாளாத சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்களின் கோபம் அதிகரித்துள்ளது. சமீப காலத்தில், அறிவிக்கப்படும் அறிவிக்கப்படாமலும் பல வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்தது. உள்நாட்டில் போதுமான அளவிற்கு ஜனநாயகம் இல்லாத காரணத்தினால் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சீனச் சமூகம் இன்று செர்னோபிலின் காலத்தில் சோவியத் ஒன்றியத்திலிருந்து வேறுபட்ட வர்க்க தன்மையைக் கொண்டிருந்தாலும், கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அது கையாளப்பட்ட விதம் சீன அரசியலில் ஒரு திருப்புமுனையாக செயல்படக்கூடும். ஜி ஜின்பிங் அரசாங்கம் ஏற்கனவே கடுமையாக மதிப்பிழந்துள்ளது. ஆர்ப்பாட்டம் ஆன்லைன் ஊடக நிறுவனங்களிலிருந்து சீனாவின் பரந்த நகரங்களின் வீதிகளுக்குச் சென்று- இந்த பொருளாதார நிர்வாகத்தை எதிர்க்க தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கும்.

ஒரு கடுமையான பொருளாதார வீழ்ச்சியும் தொற்றுநோயைக் கையாள்வதில் இருக்கும் இயலாமையும் வரவிருக்கும் வாரங்கள் தற்போதைய ஆட்சிக்கு முடிவிற்கு கொண்டுவரும். ஜனநாயக உரிமைகளுக்கான ஒரு பரவலான போராட்டம் தொடர்கிறதா அல்லது வேலைநிறுத்தங்களில் ஒரு எழுச்சி உருவாகுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வரலாற்று முடிச்சு

வுஹான் நகரம் சீனாவின் மையத்தில் பெரிய யாங்சே ஆற்றின் கரையில் உள்ளது. இதற்கு ஒரு பெருமைமிக்க வரலாறு உள்ளது.1911 இல் சீனப் பேரரசைக் கவிழ்த்தபோது இங்கே தான் முதல் குண்டுகள் வீசப்பட்டன. ஸ்டாலினால் சியாங் ஷேக்கின் கைகளில் ஆட்சி போவதற்கு முன்னர் இங்கேதான் 1926-27 புரட்சியின் போது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பொது வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மாவோவால் மேற்கொள்ளப்பட்ட முதலாளித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ அகற்றலையும் இவர்கள்தான் கொண்டாடினார்கள். வுஹானில் உள்ள தொழிலாளர்கள் ‘60 களில் ‘கலாச்சாரப் புரட்சி’ நேரத்தில் தொழிலாளர் ஜனநாயகத்திற்காக போராடினர்.

இன்று திறமையற்ற, சுயநல பெய்ஜிங் அரசை எதிர்க்க ஒரு வாய்ப்பிற்காக அவர்கள் போராடி வருகின்றனர். அவர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் கூடி முதலாளித்துவத்தை எதிர்க்கும் சுதந்திர தொழிற்சங்கங்களை உருவாக்க வேண்டும். பேச்சு சுதந்திரம், பத்திரிகை உரிமை போன்ற கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும். அவர்கள் தேர்தலின்போது உண்மையான ஜனநாயக சோசலிசத்தை முன்வைக்க முடியும்.

இந்த வகையிலான ஒரு போராட்டம் அனைத்து மட்ட அதிகாரத்தினரையும் ஒழுங்குபடுத்த மிகவும் முக்கியமானது. ஜனநாயக கடமைகளை ஆற்றாத போது பதவிவிலகச்செய்யவும், தொழிலாளரின் சராசரி ஊதியத்தை அதிகாரிகள் பெற்றுக்கொள்ளவும் இவ்வகை போராட்டம் அவசியம். இந்த முறை ஜனநாயக தொழிலாளர்களின் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தின் கீழ், பொது உரிமையை மீட்டெடுப்பதற்காக இந்த போராட்டத்தை தைரியமாக முன்னெடுக்க வேண்டும்.

மேற்கத்தேய முதலாளித்துவ நாடுகளின் போலித்தன்மை

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாது இருப்பதற்கு சீன அரசை தொடர்ந்து தாக்கி வந்த மேற்கு அரசுகள் தற்போது சீன அரசிலும் மோசமான வேலைகளை செய்து வருவதை பார்க்கலாம். யார் யார் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் – நாட்டின் எந்த பகுதிகளுக்கு இவை பரவுகிறது என்ற தகவல்களை வெளியிடாது இரகசியம் காத்து மக்க்களை அந்தரத்தில் விட்டுள்ளது இங்கிலாந்து அரசு.

பொருளாதார நெருக்கடியை மக்கள் மேல் திணிக்க அரசு சமூக மற்றும் சுகாதார சேவைகளை வெட்டி வந்தது நெருக்கடியை மேலும் அதிகரித்து உள்ளது. சமூக சேவைகள் மற்றும் சுகாதார சேவைகள் போதிய வசதி இன்றி தின்றுகின்றன. அப்படி இருந்தும் மேலதிக பணத்தை ஒதுக்கி சேவையை அதிகரிக்கும் நடவடிக்கையை செய்ய இவர்கள் தயங்கு கின்றனர்.

சுகாதார சேவையில் இருக்கும் தொழிலாளர்கள்தான் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு உரிய வசதி மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்க தவறி வருகின்றன இவ்வரசுகள்.

ஆனால் மக்கள் மத்தியில் இருக்கும் அச்சத்தை பாவித்து தமது நலன்களை முன்னெடுக்கும் வேலைகளை செய்ய இவர்கள் தயங்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை பாவித்து பிரான்சு அரசு தனது மோசமான பென்சன் திட்டத்தை அமுலுக்கு கொண்டு வர துடிக்கிறது. பிரான்சில் இதற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நிகழ்ந்ததை நாம் அறிவோம். தற்போது கொரோனா வைரசை பாவித்து போராட்டம் மற்றும் ஒன்றுகூடுதலை தடை செய்து தமது மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடக்கி விட்டு வருகின்றனர்.

அதே போல் அகதிகளை அவர்தம் உரிமைகளைக் கடுமையாக தாக்கும் நடவடிக்கைகளை முடக்கி விட்டுள்ளனர். பயணிப்போர் இடம் இருந்து இந்த வைரஸ் பரவும் என்ற மக்கள் அச்சத்தை பாவித்து எல்லைகளை பலப்படுத்துவதும் அகதிகளை தாக்குவதும் நடக்கிறது. துருக்கி மற்றும் கிரேக்க அரசுகள் வல்றலாறு காணாத தாக்குதலை இந்த மிகவும் ஒடுக்கப்படும் அகதிகள் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இந்த நிலவரத்தைப் பாவித்து தீவிர வலது சாரிகளும் தமக்கு ஆதரவு சேர்க்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். துவேச அடிப்படைகளில் சீன மக்க்களை தாக்குவது. வெளிநாட்டாரைத் தாக்குவது – அகதிகளை தாக்குவது என பல்வேறு நடவடிகைகளை தூண்டி விட்டு தமக்கு ஆதரவு சேர்க்க முயன்று வருகின்றனர்.

மோடி அரசின் – கொலைவெறி

சீன – மேற்கத்தேய அரசுகளே இந்த வைரசை கட்டுப்படுத்த திணறிக் கொண்டு இருக்கும் தற்போதைய நிலையில் – இந்தியாவில் இறப்பை தவிர்க்கும் என்ன நடவடிக்கையை மோடி அரசு எடுக்கும்? மக்கள் மத்தியில் மத அடிப்படையில் கலவரத்தை தூண்டி – கொலைகளை ஊக்குவிக்கும் சக்திகளை பின்னணியாக கொண்டு இயங்கும் இந்திய அரசு மக்களை காப்பாற்ற கோடிக்கணக்கில் செலவு செய்ய தயாராகுமா? எத்தனை பேர் பாதிக்கப் பட்டுள்ளனர் – எத்தனை பேர் இறந்து விட்டனர் என்ற சரியான விபரங்கள் கூட மக்களுக்குத் தெரியப் போவதில்லை. இந்த வைரஸ் மோசமாக பரவ விடப்பட்டு மக்கள் இறந்தால் அதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டியது இந்திய அரசே.

எமது கோரிக்கைகள்

  • தனியார் வைத்தியசாலைகள் பணம் அறவிடுதலை தடை செய். சுகாதாரத்துறையை முழுமையாக சனநாயக அடிப்படையில் அரச/சுகாதார தொழிலாளர் கட்டுப்பாடில் கொண்டுவா.
  • சுகாதார துறைக்கு என தனிப்பட மேலதிக செலவை அரசு அங்கீகரிக்க வேண்டும்.
  • சுகாதார தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேலதிக செலவு/மற்றும் நடவடிக்களைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
  • வேலைக்கு போக முடியாத தொழிலாளர்களின் ஊதியத்தை வெட்டுவது தடை செய்யப்பட வேண்டும்.
  • பாடசாலைகள் மற்றும் பொதுத் தளங்களில் இயங்குவோருக்கு மேலதிக உதவிகள் – உதவித் தொகை வழங்கப் படவேண்டும். அவர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கப் படவேண்டும்.
  • தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு தர மறுக்கும் அனைத்து தனியார் கம்பனிகளையும் தேசிய மயப்படுத்து – அவற்றை சனநாயக முறைப்படி அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் கட்டுப்பாடில் கொண்டுவா.
  • தேவையான அனைத்து வைத்திய சேவைகளையும் முற்றிலும் இலவசமாக வழங்கு. மேலதிக சுகாதார தொழிலாளர்களை உரிய ஊதியத்தில் வேலைக்கு எடு.
  • அவசர கால நிதி மற்றும் நடவடிக்களை மேற்பார்வை செய்ய தொழிற்சங்கம் மாற்றம் மக்கள் அமைப்புக்களைக் கொண்ட தேசிய /மாநில கமிட்டிகளை நிறுவு.

கொரோனா வைரஸ் போன்ற கொடிய இயற்கைசார் அழிவுகளை எவ்வாறு நாம் எதிர்கொள்வது என்பதற்கும் அரச பொருளாதார நடைமுறைக்கும் நேரடித் தொடர்பு உண்டு. அழிவுகளை தவிர்க்கும் போக்கில் அன்றி லாபத்தை மட்டும் முதன்மைப் படுத்தும் முதலாளித்துவ அமைப்பு முறையில் எல்லா அழிவுகளும் பேரழிவை நோக்கி செல்லும் சாத்தியமே உண்டு. மக்களை முதன்மைப் படுத்தாத பொருளாதார அமைப்பில் இயற்கை அழிவுகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். அனைவரது நலன்களையும் முதன்மைப்படுத்தும் சோசலிச திட்டமிட்ட பொருளாதாரத்தை நிறுவாமல் நாம் நிரந்தர தீர்வை நோக்கி நகர முடியாது. அதற்கான போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள். மனித குல விடுதலைக்கு உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்.

கிலாயா டாயில் அவர்களின் கட்டுரையை தழுவி எழுதப்பட்டது (ரஷ்மி, சேனன்)

புதிய சோசலிச இயக்கம்