மனிதகுலம் மாபெரும் படுகொலைகள் மற்றும் அவர்தம் வாழ்வாதாரத்தின் மேலான கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டு நின்ற காலப் பகுதியில் லியோன் டிராட்ஸ்கியின் தலைமையின் கீழ் கட்டப்பட்ட நான்காம் அகிலம் முன் வைத்த இடைக்கால திட்டத்தின் சுருக்கம் இது (1938). தற்போது சமூகம் பெரும் அழிவை எதிர் கொண்டு நிற்கும் சந்தர்பத்தில் அன்று முன் வைக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் தற்போதைய சூழ்நிலைக்கும் மிகவும் பொருந்துவதாக இருக்கிறது. இதனால் இதை இங்கு பதிவு செய்கிறோம்.
இதை நாம் வெளியிட்டுள்ள அவசரகால செயற்திட்டஅறிக்கையுடன்
இணைத்துப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய சோஷலிச இயக்கம் – தொழிலாளர் சர்வதேசத்துக்கான கமிட்டியின் இந்திய பிரிவு.
சோஷலிச புரட்சிக்கான புறநிலைச் சுழல்:
- பாட்டாளிவர்க்கத்துக்கான தலைமையின்மையே தற்போதைய பிரதான அரசியல் சூழல்.
- பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பொருளாதார சூழல் உச்சகட்ட முதிர்ச்சியை எட்டிவிட்டது.
- உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியால் சொத்து மதிப்பைக் கூட்ட முடியவில்லை.
- பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம் நிதிநெருக்கடியை தீவிரப்படுத்தி, பணமதிப்பையும் அரசுகளின் நிலைப்புத்தன்மையையும் கேள்விக்குறியாக்குகின்றது.
- உலகம் முழுவதும், முதலாளி வர்க்கமும், அவர்களது கட்சிகளும் குழப்பத்திலும், எதிர்காலம் குறித்த பயத்திலும் உள்ளனர்.
- பாட்டாளிவர்க்க புரட்சிக்கான சூழல் ஏற்கனவே முதிர்ச்சியடைந்து, தற்போது அழுகிக் கொண்டிருக்கிறது. சோஷலிச புரட்சி என்ற அடுத்தக் கட்டத்துக்கு செல்லாவிட்டால், மனித குலம் பேரழிவை சந்திக்க நேரிடும்.
- புரட்சிகர தலைமையில் நிலவும் நெருக்கடியே மனிதகுலத்தின் வரலாற்று நெருக்கடியாகும்.
பாட்டாளிவர்க்கமும், அதன் தலைமையும்
- முதலாளி வர்க்கத்தின் பொருளாதாரம், அரசியல், அரசு, சர்வதேச உறவுகள் ஆகிய அனைத்தும் புரட்சிக்கு முந்தைய ஒரு சமூக சூழலை ஒத்திருக்கும் சமூக நெருக்கடியால் முற்றிலும் ஆட்டம் கண்டுள்ளது.
- இப்புரட்சிக்கு முந்தைய சமூக சூழலை, புரட்சிகர சூழலாக மாறவிடாமல் தடுப்பது, பாட்டாளி வர்க்கத்தின் சந்தர்ப்பவாத தலைமையே: மரண விளிம்பில் தவிக்கும் முதலாளித்துவத்தை, மிதித்து கொல்வதற்கு பதிலாக, அதன் மீது அச்சம் கொண்டு, அதனுடன் போலி உறவை வைத்திருக்கிறது.
- அனைத்து நாடுகளிலும் கோடான கோடி மக்கள் புரட்சிக்கான சாலையில் இறங்கும் போது, அவர்களது அதிகாரத்துவ தலைமையே, அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கிறது.
- ஏப்ரல் 1931இல் ஸ்பானிய பாட்டாளி வர்க்கம், சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்க களமிறங்கிய போது, கம்யூனிச அகிலத்தின் தலைமையும், சமூக ஜனநாயகவாதிகளும் அவர்களை தடுத்து நிறுத்தி, Francoவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
- ஜூன் 1936இல் பிரான்சில், பெருமளவில் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்திய தொழிலாளர்கள், புரட்சிக்கு தயாரான மனநிலையில் இருந்த போது, கம்யூனிச அகிலத்தின் தலைமையும், தொழிற்சங்கவாதிகளும் அவர்களை தடுத்தி நிறுத்தி, சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
- அமெரிக்காவிலும் இத்தகைய உள்ளிருப்பு போராட்டங்களில் “தொழிற்சங்க அமைப்புகளின் காங்கிரஸ்” தலையிட்டு, தொழிலாளர்களின் புரட்சிகர அழுத்தத்தை முடக்கிப் போட்டது.
- முதலாளித்துவ அணிக்கு தாவிய கம்யூனிச அகிலம், உலகம் முழுவதும், குறிப்பாக, ஸ்பெயினிலும், ஃபிரான்ஸிலும், அமெரிக்காவிலும் தனது எதிர்புரட்சி நடவடிக்கைகளின் மூலம் பாட்டாளிவர்க்கத்தை முடக்கியது.
- அக்டோபர் புரட்சி என்ற பதாகையின் கீழ், வெகுஜன முன்னணி என்ற சமரச அரசியலின் மூலம், பாட்டாளி வர்க்கத்தின் கைகளை கட்டிப்போட்டு, பாசிசத்துக்கான பாதைகளை திறந்துவிடுகிறது.
- ஒருபுறம் வெகுஜன முன்னணியும், மறுபுறம், பாசிசமும் பாட்டாளிவர்க்க புரட்சிகளை தடுத்து நிறுத்த கடைசி ஆயுதங்களாக ஏகாதிபத்தியத்திற்கு பயன்படுகின்றன.
- வெகுஜன மக்களின் தலைவிதி, ஒருபுறம் அழுகிவரும் முதலாளித்துவ புறநிலை சூழல்களாலும், மறுபுறம், பாட்டாளிவர்க்கத்தின் பழைய ஸ்தாபனங்களின் குழிபறிக்கும் அரசியலாலும் தீர்மானிக்கப்பட போகின்றன.
- வரலாற்று சக்கரத்தை சுழலவிடாமல் தடுக்கும் இவர்களின் கடுமையான முயற்சியே, பாட்டாளிவர்க்க தலைமையில் நிலவும் நெருக்கடியையும், நான்காம் அகிலத்தால் மட்டுமே அந்நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டியுள்ளதையும் எடுத்துரைக்கின்றன.
குறைந்தபட்ச செயல்திட்டமும், இடைக்கால செயல்திட்டமும்
- போராட்டங்கள், பிரச்சாரங்கள், அமைப்புருவாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய, புரட்சிக்கு முந்தைய சூழலில், நாம் பின்பற்ற வேண்டிய செயலுத்தியானது, புரட்சிகர புறநிலை சூழலின் முதிர்ச்சிக்கும், பாட்டாளிவர்க்க முன்னணியின் முதிர்ச்சியற்ற நிலைக்கும் இடையிலான முரண்பாட்டை களைவதை நோக்கமாக கொண்டது.
- தினசரி போராட்டங்களுக்கான செயல்பாட்டில் தங்களது கோரிக்கைகளுக்கும், சோஷலிச புரட்சிக்கான வேலைத்திட்டத்திற்கும் இடையேயான தொடர்பை அறிந்து கொள்ள மக்களுக்கு உதவ வேண்டியது அவசியமாகும்.
- இன்றைய சூழலில், தொழிலாளர் வர்க்கத்தின் பரந்த பிரிவினரின் விழிப்புணர்வு நிலையிலிருந்து துவங்கி, பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும் என்ற ஒற்றை இறுதி முடிவை நோக்கி இட்டுச் செல்லக் கூடிய இடைக்கால கோரிக்கைகளை முன் வைப்பது அவசியம்.
- சமூக ஜனநாயக கட்சிகள் தங்களது வேலைத் திட்டத்தை ஒன்றோடொன்று தொடர்பில்லாத இரண்டு பகுதிகளாக பிரித்து வைத்திருப்பார்கள். முதல் பகுதி, முதலாளித்துவ சமூக கட்டமைப்புக்குள்ளால் சில சீர்திருத்தங்களை வென்றெடுத்துக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளும் குறைந்தபட்ச செயல்திட்டம். இரண்டாவது பகுதி, வரையறுக்கப்படாத ஒரு எதிர்காலத்தில், முதலாளித்துவத்துக்கு மாற்றாக சோஷலிசத்தை அமைத்துக் கொடுக்கும் அதிகபட்ச செயல்திட்டம்.
- இவ்விரண்டு செயல்திட்டங்களையும் இணைக்கும் பாலம் எதுவும் அவர்களிடம் கிடையாது. சோசலிசத்தை ஒரு பொழுதுபோக்கு சொல்லாகப் பயன்படுத்தும் சமூக ஜனநாயக கட்சிக்கு இத்தகைய பாலங்கள் எதுவும் தேவைப்படவும் இல்லை. கம்யூனிச அகிலமும் இதே பாதையையே தேர்ந்தெடுத்துவிட்டது.
- உழைக்கும் வர்க்கத்தின் கோரிக்கைகளையும், குட்டி முதலாளிவர்க்கத்தின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு தேவைப்படும் செயல்பாடுகள் முதலாளித்துவ சொத்துறவுகளின் வரம்புகளை தாண்டிச் செல்லும் போது, முதலாளித்துவத்துக்கு உட்பட்டு சமூக சீர்த்திருத்தங்களின் வாயிலாக, வெகுஜனத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்ற பேச்சுக்கே இடமிருக்க முடியாது.
- நான்காம் அகிலத்தின் செயலுத்தி, முதலாளித்துவத்தை சீர்த்திருத்துவதல்ல. அதனை வீழ்த்துவதே. ஆனால், இதற்கு பாட்டாளி வர்க்கத்தின் அனைத்து பிரிவினரையும் புரட்சிகர இயக்கத்தின் கீழ் திரட்ட வேண்டியுள்ளது.
- நான்காம் அகிலம், பழைய குறைந்தபட்ச வேலைத்திட்டத்தை கைவிடவில்லை. மாறாக, அதற்கு ஒரு புரட்சிகர கண்ணோட்டத்தை வழங்குகின்றது. பாட்டாளிவர்க்க புரட்சிக்காக வெகுஜனத்தை முறைப்படி திரட்டக் கூடிய இடைக்கால வேலைத்திட்டமாக அதனை மாற்றுகிறது.
ஊதிய அளவீட்டையும், வேலை நேர அளவீட்டையும் மாற்றியமைப்பது
- முதலாளித்துவம் சிதைந்து வரும் இச்சூழலில், தொழிலாளர்கள் தங்களது மூன்று வேளை உணவையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என்ற முதலாளித்துவத்தின் இருபெரும் அடாவடித்தனத்திற்கு எதிரான பொதுவான முழக்கங்களும், போராட்ட முறைகளும் முன்னெடுப்பது தேவைப்படுகின்றது.
- மரண விளிம்பிலிருக்கும் முதலாளித்துவ நெருக்கடியின் விளைவுகளான, இராணுவமயம், நிதிநெருக்கடி, பணமுறையின் சீரழிவு ஆகியவற்றின் மொத்த சுமையையும் உழைக்கும் மக்களின் முதுகில் ஏற்றும் முதலாளித்துவ அரசியலின் மீது சமரசமற்ற போரை அறிவிக்கும் நான்காம் அகிலம், அனைவருக்கும் வேலை வாய்ப்பையும், நியாயமான வாழ்க்கை தரத்தையும் கோருகிறது.
- பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுவதோ, பணமுறையை ஸ்திரப்படுத்த வேண்டுவதோ தொழிலாளர்களுக்கு உதவாத முழக்கங்களாகும். விலைவாசி உயர்வுக்கு எதிராக, விலைவாசிக்கேற்ப தானியங்கி ஊதிய உயர்வு முறையை கோரும் முழக்கங்கள் முன்வைக்கப்பட வேண்டும்.
- வேலைவாய்ப்புக்கான உரிமை எளிதாக பறிபோகும் இன்றைய சூழலில், பொதுப்பணிகளை மேற்கொள்வதன் மூலம் வேலை வாய்ப்பை அதிகரிக்க முழக்கமிட வேண்டும்.
- ஊதியத்தை குறைக்காமல், வேலை நேரத்தை குறைத்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பலரை கூடுதலாக பணியமர்த்த கோரி முழக்கங்களை எழுப்ப வேண்டும்.
- இதற்கான போராட்டங்களில் தொழிற்சங்கங்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களையும் ஈடுபடுத்தி, வேலை நேரக் குறைப்புக்கான கோஷத்தை வெகுஜன முழக்கமாக்க வேண்டும்.
- சீரழிந்த நிலையிலிருக்கும் முதலாளிகளும், அவர்களுக்கு வக்காலத்து வாங்குவோரும், அவர்களின் கணக்குப் பதிவேட்டை காண்பித்து, கோரிக்கைகளை நிறைவேற்றுவது சாத்தியமல்ல என்று வாதிடுவார்கள். அதற்கு பதிலடியாக, தொழிலாளர்கள், தங்களுக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையே ஒத்துழைப்பை தேடுவதைக் காட்டிலும், விரக்தியிலிருந்தும், சீரழிவிலிருந்தும் தொழிலாளர்களை காப்பாற்றுவதே முக்கியம். முதலாளி வர்க்கத்தின் சுயநலத்தால் உருவான நெருக்கடியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே இக்கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். உங்களால் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாவிட்டால், முதலாளித்துவம் சிதைந்துப் போவதை தவிர வேறுவழியில்லை என்று நேரடியாக கூற வேண்டும்.
இடைக்கால சகாப்தத்தில் தொழிற்சங்கங்கள்
- இடைக்கால வேலைத்திட்டத்திற்கான செயல்பாட்டில் தொழிலாளர்களுக்கு, வெகுஜன அமைப்புக்கள், அதிலும் முதன்மையாக, தொழிற்சங்கங்கள், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேவைப்படுகின்றன. தொழிற்சங்களின் வரலாற்றுக் கடமை முடிந்து விட்டது என்ற கம்யூனிச அகிலத்தின் போதனையை நாம் நிராகரிக்க வேண்டும்.
- தொழிலாளர்களின் அனைத்துவிதமான பொருளாதார மற்றும் ஜனநாயகக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களில் போல்ஷ்விக்-லெனினிஸ்டுகளான நாம் முன் வரிசையில் நிற்க வேண்டும். தொழிற்சங்க செயல்பாடுகளில் உற்சாகமாக செயல்பட்டு, அதன் போர்க்குணம் மிக்க உத்வேகத்தை மேலோங்கச் செய்ய வேண்டும். புரட்சிகர தொழிற்சங்கங்களை உருவாக்கும் பெயரில், அவற்றை உடைத்து தங்களை சுயத்தனிமைப்படுத்திக் கொள்ளும் குறுங்குழுவாத செயல், நான்காம் அகிலத்துக்கு எதிரான துரோகச் செயலாகும்.
- அதே சமயம் தொழிற்சங்கங்களை புனிதப்படுத்துவதையும் நான்காம் அகிலம் உறுதியாகக் கண்டிக்கிறது.
- தொழிற்சங்ககளால் வெகுஜன ஆள்சேர்ப்பை மேற்கொள்ளவோ, புரட்சிகர வேலைத்திட்டத்தை உருவாக்கவோ முடியாது என்பதால், அவை கட்சிக்கு மாற்றுத் தீர்வாக முடியாது.
- மிகப்பலமான தொழிற்சங்கங்கள் கூட பாட்டாளி வர்க்கத்தின் மேலடுக்கில் இருக்கும் 20 முதல் 25% மக்களுக்கு மேல் கொண்டிருக்காது. காலப்போக்கில் தொழிலாளர் இயக்கத்தின் கீழ் திரளும், பெரும்பாலான ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களை ஒருங்கிணைக்க, வேலை நிறுத்தக் கமிட்டி, ஆலைக் கமிட்டி, சோவியத்துக்கள் போன்ற சிறப்பு ஸ்தாபனங்களை உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
- வர்க்கப் போர் தீவிரமடையும் போது, பாட்டாளி வர்க்கத்தின் மேலடுக்கை பிரதிபலிக்கும் தொழிற்சங்கங்கள் வெகுஜன இயக்கத்தை தலைமையேற்று, அதனை நீர்த்துப் போகச்செய்ய முனையும். புரட்சிக்காலத்தில், முதலாளிவர்க்கம் நெருக்கடியில் மூழ்கும் தருவாயில், தொழிற்சங்க தலைவர்கள், முதலாளித்துவ அமைச்சர்களாக நியமிக்கப்படுவது வழக்கம்.
- இக்காரணங்களுக்காகவே, போர்க்குணம் மிக்க சமரசமற்ற போராளிகளை தலைமையில் அமர்த்தி, தொழிற்சங்க தலைமையை புதுப்பிக்க நான்காம் அகிலம் பாடுபடும்.
ஆலைக்கமிட்டி
- உள்ளிருப்புப் போராட்டம், முதலாளித்துவ நடைமுறைகளின் வரம்புகளை தாண்டிச் செல்லும் புதியவகை முன்னெடுப்பாகும். இத்தகைய போராட்டங்கள் ஒவ்வொன்றும், நிறுவனம் யார் தலைமையில் இயங்குகின்றது என்பதையே கேள்விக்குள்ளாக்குகின்றது.
- இக்கேள்விக்கு பதிலளிக்கும் ஆலைக் கமிட்டி, நிர்வாகத்துக்கு மாற்றான ஒரு ஜனநாயக அமைப்பை உருவாக்குகின்றது.
- இக்கமிட்டி உருவாக்கப்படுவதற்கு தொழிற்சங்க அதிகார வர்க்கத்திடம் இயல்பாகவே எதிர்ப்பு கிளம்பினாலும், பெரும்பாலான தொழிலாளர்களின் ஆதரவைத் திரட்டுவதன் மூலம், எதிர்ப்புகளை முறியடித்து, அமைதிக்காலத்திலேயே இவற்றை உருவாக்க வேண்டும்.
- ஆலைக் கமிட்டி உருவாக்கப்படுகின்ற நொடியிலிருந்தே, நிர்வாகத்திற்கு போட்டியான ஒரு அதிகார மையமாக அது உருவாகத் துவங்கிவிடுகிறது. சுய தியாகமும், போர்க்குணமும் மிக்க தொழிலாளர்களால் இக்கமிட்டி நிரப்பப்பட வேண்டும்.
வியாபார இரகசியங்களும், தொழிற்துறையை தொழிலாளர்கள் கட்டுப்படுத்துவதும்.
- வணிக இரகசியங்களை ஒழிப்பதே, நிறுவனங்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முதல் படியாகும். வங்கிகளையும், கனரக தொழிற்துறையையும், மையப்படுத்தப்பட்ட போக்குவரத்தையும் முதலில் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும்.
- தனிப்பட்ட தொழில் நிறுவனம் துவங்கி, தொழிற்துறையின் வரவு செலவுகளை சமூகத்துக்கு விளக்க வேண்டும்; நாட்டு வருமானத்தில் ஒரு தனிப்பட்ட முதலாளியும், ஒட்டுமொத்த முதலாளி வர்க்கமும் கொள்ளையடிக்கும் பங்கையும், வங்கிகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும் இடையிலான திரைமறைவு ஒப்பந்தங்களையும் அம்பலப்படுத்த வேண்டும்; முதலாளித்துவ இலாப வெறிக்காக, தனிமனித உழைப்பு எந்த அளவுக்கு அராஜகமாக சூறையாடப்படுகிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
- முதலாளித்துவ நெருக்கடியால் சீரழிந்த தனியார் நிறுவனங்களை, அரசுடமையாக்கி, பொதுப்பணியாக கருதி, நிதி ஒதுக்கி தொடர்ந்து நடத்த கோரி போராட வேண்டும். இத்தகைய நிறுவனங்கள் ஆலைக்கமிட்டியின் நேரடி நிர்வாகத்தின் கீழ், தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாடில் இயங்க வேண்டும்.
- இவ்வாறு தொழிற்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் இயங்கும் ஆலைக் கமிட்டிகள், தேசிய அளவில் ஒன்று கூடி, அவ்வப்போது மாநாடுகளை நடத்தி, தங்களது தொழிற்துறை செயல்பாடுகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு, தேசிய அளவிலான பொருளாதார திட்டமிடுதலுக்கான அடிப்படையை உருவாக்கி, தேவைப்படும் போது நாட்டின் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்க தயாராக வேண்டும்.
பெருமுதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வது
- அமெரிக்காவின் 60 குடும்பங்களும், பிரான்சின் 200 குடும்பங்களும் ஒட்டுமொத்த மக்களையும் சூறையாடியதற்கு ஈடாக, வெறும் 60 அல்லது 200 முதலாளித்துவ குடும்பங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம். அவ்வண்ணமே, அனைத்து தனியார் நிறுவனங்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று கோருகிறோம்.
- எங்களது அரசுடமை கோரிக்கைக்கும், திரிபுவாதிகளின் அரசுடமை கோரிக்கைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
- அரசுடமையாக்கப்படும் நிறுவனங்களின் முதலாளிகளுக்கு நட்ட ஈடு தருவதை நாங்கள் எதிர்க்கின்றோம்.
- மூலதனத்தின் முகவர்களாக, அரசுடமையை கண் துடைப்பு அளவில் செய்யும் வெகுஜன முன்னணியாளர்களின் பாசாங்கிற்கு இரையாகிவிடக் வேண்டாம் என்று வெகுஜனத்தை நாங்கள் எச்சரிக்கின்றோம்.
- தங்களது புரட்சிகர பலத்தின் மீது நம்பிக்கை வைக்கும் படி மக்களை வேண்டுகிறோம்.
- முதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதை, தொழிலாளர்களும், விவசாயிகளும் அரசு அதிகாரத்தை கையிலெடுப்பதோடு நாங்கள் தொடர்புபடுத்துகிறோம்.
தனியார் வங்கிகளை கைப்பற்றுவதும், கடன் அமைப்பை அரசுமயமாக்குவதும்
- அரசுடமையாக்கப்பட்ட வங்கியால் மட்டுமே சாமானிய மக்களின் வைப்பு தொகைக்கு பாதுகாப்பு கொடுக்கவும், விவசாயிகளுக்கும், சிறுதொழில் புரிபவர்களுக்கும் சாதகமான சூழலையும், மலிவான கடன் வசதிகளையும் ஏற்படுத்தி தரமுடியும்.
- பெரிய அளவிலான தொழிற்துறைகள், போக்குவரத்து உள்ளிட்ட ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் இயக்கிக் கொண்டிருக்கும் வங்கிகள், அதன் தொழிலாளர்களால் கட்டுப்படுத்தப்படும் போது மட்டுமே உழைக்கும் மக்களது நலன்களுக்கு உகந்ததாக இருக்கும்.
- ஆனால், அரசு அதிகாரம் உழைக்கும் மக்களின் கரங்களில் இருந்தால் மட்டுமே வங்கிகளின் அரசுடமை பலனளிக்கும்.
ஆர்பாட்ட அணியும், பாதுகாப்பு அரணும், பாட்டாளிகளை ஆயுதமயமாக்குவதும்
- பாட்டாளி வர்க்க போராட்டங்கள் கூர்மையாகும் போது, மூலதனத்தின் பதில் தாக்குதலும் தீவிரமடையும். பெரு நிறுவனங்களில் இதற்கான தயாரிப்புகள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டன. இதை அறியாத பாட்டாளியும், புரட்சிகர ஸ்தாபனங்களும் தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடும்.
- காவல் துறை மற்றும் இராணுவத்தோடு திருப்தியடையாத முதலாளி வர்க்கம், அமெரிக்கா போன்ற நாடுகளில் அமைதிக்காலத்தில் கூட ஆயுதம் தாங்கிய குண்டர் படையை நிறுத்தியுள்ளனர். இது போக, சட்டத்திற்கு புறம்பான பாசிச கும்பல்களும் அவர்களை பாதுகாத்து நிற்கின்றன. தற்போதைய நெருக்கடியான சூழலில், வர்க்கப்போர் உள்நாட்டுப் போராக எளிதில் உருவெடுக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
- லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஆதரவை பெற்ற, ஆயுதம் ஏந்திய தொழிலாளர் படையால் மட்டுமே பாசிச கூட்டத்தை எதிர்த்து நிற்க முடியும். ஒவ்வொரு வேலை நிறுத்தத்தின் போதும், தெருமுனை ஆர்ப்பாட்டங்களின் போதும், தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக்காக, தற்காப்பு குழுக்களை ஏற்படுத்தி அவற்றை தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். இளைஞர் குழுக்களில் துவங்கி, தற்காப்பு குழுக்களை அமைக்க வேண்டியதும், ஆயுதங்களை கையாளும் யுக்திகளையும், சண்டை பயிற்சியும் அளித்து அவர்களை தயார் படுத்த வேண்டியதும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தொழிலாளர்கள்–விவசாயிகள் கூட்டணி
- சுயாதீனமான சிறு உற்பத்தியாளரான விவசாயிக்கு மலிவான கடனும், விவசாய எந்திரங்களும், மலிவு விலை உரமும், நல்ல போக்குவரத்தும், விளைபொருளுக்கான நியாயமான சந்தையும் தேவைப்படுகிறது. ஆனால், வங்கிகளும், வியாபாரிகளும், பெருநிறுவனங்களும் விவசாயிகளை சூறையாடுகின்றன.
- தொழிலாளர்களின் உதவியால் மட்டுமே விவசாயிகள் இக்கொள்ளையிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள இயலும். சிறு விவசாயிகளால் தேர்வு செய்யப்பட்ட கமிட்டிகள், தொழிலாளர்களின் கமிட்டிக்களுடனும், வங்கி ஊழியர் கமிட்டிக்களுடனும் கைக்கோர்த்துக் கொண்டு, போக்குவரத்தையும், கடனையும், விவசாயம் தொடர்பான விநியோக பணிகளையும் கையிலெடுக்க வேண்டும்.
- விவசாயிகளும், கைவினைஞர்களும், சிறுவணிகர்களும் முன் வந்து, தொழிலாளர்களோடு கைக்கோர்த்துக் கொண்டு விலைநிர்ணய அரசியலில் களமிறங்க வேண்டும். ஆலைகள், தொழிற்சங்கங்கள், இல்லத்தரசிகள், விவசாய அமைப்புகள் போன்றவர்களின் பிரதிநிதிகளை கொண்டு, விலை நிர்ணய கமிட்டிகளை அமைத்து, விவசாய பொருட்களுக்கான நியாயமான விலையை அறிவிக்க வேண்டும். இதன்மூலம், விலைவாசி உயர்வுக்கான காரணம், தொழிலாளர்களின் ஊதியமல்ல, முதலாளிகளின் அநியாய இலாபமே என்பது நிரூபணமாகும்.
- விவசாய நிலங்களின் சமூகவுடமை, சிறு விவசாயிகளின் நிலத்தை பலவந்தமாக பறிக்காத வண்ணம் நிகழ்த்தப்பட வேண்டும். தனித்து நிற்பதை விட கூட்டுப்பண்ணையில் சேருவதே அதிக நன்மை என்ற நிலை வரும் வரை, சிறு விவசாயியை தனித்து செயல்பட அனுமதிக்க வேண்டும். சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை, சிறு கடை உரிமையாளருக்கும், கைவினைஞர்களுக்கும் பொருந்தாது. மாறாக, நியாயமான கடன், முற்றுரிமையிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட அனுகூலமான சூழலே நிலவும்.
- இத்தகைய வாக்குறுதிகளை விளக்கி, இரு தரப்பாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேலைத்திட்டத்தை மையப்புள்ளியாக வைத்து ஒரு தன்னார்வ ஒப்புகையின் பேரில் விவசாய வர்க்கமும், தொழிலாளர் வர்க்கமும் கைக்கோர்க்க வேண்டும்.
சோவியத்துக்கள்
- வர்க்கப்போர் தீவிரமடைகையில், பல்வேறு போராட்டக் குழுக்களும், வெவ்வேறு விதமான கோரிக்கைகளுடன் களமிறங்கும். இப்போராட்டக் குழுக்களின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து உருவாகும் ஸ்தாபனமே சோவியத்துக்களாகும்.
- வெகுஜன இயக்கம் ஒரு வெளிப்படையான புரட்சிகர நிலையை அடையும் போது மட்டுமே சோவியத்துக்கள் எழ முடியும். ஒரு நிறுவனத்துக்குள், ஆலை கமிட்டி எப்படி நிர்வாகத்துக்கு போட்டியான அதிகார மையத்தை உருவாக்குகிறதோ, அவ்வாறே, ஒரு நாட்டில், அரசு நிர்வாகத்துக்கு போட்டியாக சோவியத்துக்கள் உருவாகின்றன.
- இவ்விரு போட்டி அதிகார மையங்களும் ஒரு கட்டத்தில் ஒன்றோடொன்று மோதலில் ஈடுபடுகின்றன. அதன் விளைவைப் பொருத்தே சமூகத்தின் எதிர்காலம் அமையும்.
- புரட்சி தோற்கடிக்கப்பட்டால், முதலாளித்துவத்தின் பாசிச சர்வாதிகாரம் அமையும். புரட்சி வெற்றிபெற்றால், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உருவாகி, சமூகத்தின் சோஷலிச மறுக்கட்டமைப்பு நிகழும்.